Saturday, January 30, 2010
வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் - காலத்தின் துயர் எரியும் அம்மாவின் பாடல்கள்
தீபச்செல்வன்
01.
யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத்தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. தீயில் எரியும் அம்மாவை முத்தமிட வரமுடியாத துயரத்தை ஜெயபாலன் எதிர்கொண்டவர். யுத்தம் நிறையப் போரை நோயாளியாக்கியிருக்கிறது. பிரித்திருக்கிறது. தொடர்புகளை துண்டித்திருக்கிறது. தோற்றுப்போனவர்களின் பாடல் என்ற கவிதையும் அம்மா கவிதைகளின் தொடர்ச்சியாகவும் எல்லா அம்மாக்களின் திரண்ட துயரமாகவும் எழுச்சியாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
ஈழத்து கவிதைகள் இரத்தமும் சதையுமான அனுபவங்களை கொண்டிருக்கின்றன. அவலமும் நெருக்கடியும் அச்சுறுத்தலும் என்று தொடர்ந்து கொண்டிருக்கிற வாழ்வில் மனத்துயர்களை வெளிப்படுத்தும் கவிதைகள் வெளிப்பிட்டன. மஹாகவி, நீலாவணணன் போன்றவர்களிடமிருந்து எழுபதுகளின் இறுதியில் எழுந்த கவிதைகள் இப்படித்தான் வேறுபட்டு நின்றன. அறுபதுகளில் மண்ணின் வாசனையை வாழ்வுத் தேவைகளையும் சித்திரிக்கிற தா.இராமலிங்கம் போன்றவர்களின் கவிதைப் போக்கு ஈழத்து நவீன கவிதைகளின் ஆரம்பமாக இருக்கிறது. பின்னர் வந்த எழுபதுகளின் தலை முறையில் வ.ஐ.ச.ஜெயபாலன், அ.யேசுராசா, மு.புஸ்பராஜன் போன்றவர்கள் ஈழ அரசியல் நெருக்கடிகளையும் வாழ்வுப்போராட்டத்தையும் அச்சத்தையும் எழுதியிருந்தார்கள்.
எண்பதுகளில் ஈழக் கவிதைகள் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இயக்க முரண்பாடுகள் மக்களின் வாழ்வுத் துயரங்கள் மரணத்துள்ளான வாழ்வு என்பன எண்பதுகளின் கவிதைகளில் மிகுந்த எழுச்சியும் தீவிரமும் கொண்டிருந்தன. சேரன், சங்கரி, நிலாந்தன், நுஃமான், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்களி, புதுவை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம், அ.யேசுராசா, ஒளவை, ஊர்வசி, இளவாலை விஜயேந்திரன், கி.பி. அரவிந்தன், சிவசேகரம் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன.
தொண்ணூறுகளில் மாறி மாறி நடைபெற்ற போரின் துயரங்களையும் போருக்கு எதிரான எழுச்சியையும் கருணாகரன், பா.அகிலன், முல்லை கோணேஷ், நிலாந்தன், சி.ஜெயசங்கர், சிவசேகரம், எஸ்.போஸ், அமரதாஸ், உமாஜிப்ரான், போராளிகளான கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி, அம்புலி, போனறவர்;களுடன் செல்வி., சிவரமணி, அனார், பஹீமஜஹான், றஷ்மி, சித்தாந்தன், தானா.விஷ்ணு, புதுவை இரத்தினதுரை வ.ஐ.ச.ஜெயபாலன், சிவசேகரம், சேரன் மஜித், ஓட்டமாவடி அறபாத், போன்றவர்களும் எழுதியிருக்கிறார்கள்.
இரண்டாயிரத்தின் பின்னரான கவிதை நிலவரத்தில் எஸ்.போஸ், சித்தாந்தன், கருணாகரன், அலறி, மலர்ச்செல்வன், பொன்காந்தன், த.அகிலன், அனார், பஹீமஜஹான், றஷ்மி, துவாரகன், தமிழ்நதி, மாதுமை, பிரதீபா, நிவேதா, திருமாவளவன், தீபச்செல்வன், பா.ஐ. ஜெயகரன், றஞ்சனி, போராளிகளான அம்புலி, உலமங்கை, சூரியநிலா, ஈரத்தீ, இளநிலா, தமிழினி, வெற்றிச்செல்வி வீரா, ராணிமைந்தன், செந்தோழன் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. போராளிக் கவிஞர்களின் கவிதைகள் போர் தருகிற இழப்பையும் போருக்கு எதிரான எழுச்சியையும் விபரிக்கின்றன. கருணாகரன், அமரதாஸ், எஸ்.போஸ், சித்தாந்தன், தானா.விஷ்ணு, முல்லைக்கோணேஷ் முதலியவர்கள் போரை யார் தொடுத்தாலும் மனிதர்களுக்கு எதிராக அழிவு தருகிறதாகவே எழுதியிருக்கிறர்கள்.
நிலாந்தன், புதுவை இரத்தினதுரை மற்றும் போராளிக் கவிஞர்களின் கவிதைகள் முக்கியமாக போருக்கு எதிராக மக்களை அணிவகுக்க தூண்டியிருக்கின்றன.
02.
புதியவர்களின் கவிதை நிலவரங்களை அறிந்து கொள்ளுவதிலும் அவர்களை தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்துபவர்களிலும் ஜெயபாலன் முன் நிற்பவர். கருணாகரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி.ஜெயசங்கர் போன்ற மிகச் சிலரே இப்படி புதியவர்களை தேடி உற்சாகப்படுத்துகிறார்கள் புதியவர்களை செம்மைப்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். களத்தின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என எப்பொழுதும் ஜெயபாலன் என்னை கேட்டுக் கொண்டிருப்பார். எனது வாசிப்பின்படி ஈழத்தின் நான்காம் கட்டப் போரின் பொழுது இன்றைய நிலவரத்திலும் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்திலும் களத்தில் கவிதைகளை எழுதியவர்கள் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன்.
கருணாகரன் யுத்தம் தீவிரம் அடைந்த தொடக்க நாட்களில் சில கவிதைகளை எழுதியிருந்தார். அவர் இராணுவத்தினரிடம் தனது குடும்பத்துடன் சரணடைகிற பொழுது எந்தக் குறிப்பையும் வைத்திருக்கவில்லை. இது கருணாகரனுடன் தானா.விஷ்ணு, அமரதாஸ், பொன்காந்தன், முல்லைக்கோணேஷ், மற்றும் போராளிக் கவிஞர்களுக்கும் நடந்த துயரம். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த பொழுது தங்கள் கவிதைகளையும் புகைப்படங்களையும் இழந்திருந்தார்கள். 2008 ஆண் ஆண்டில் கருணாகரன் எழுதிய கவிதை ஒன்றில்
“நிழலை விலக்க முடியாதபோது
தோற்றுப் போன போர் வீரன்
பாதுகாப்பில்லாத வெளியில்
தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்
மூடியிருந்த கதவுகள்
அவனை அச்சமடையச் செய்தன
திறந்திருந்த கதவுகளும்
அபாயமாகவே தோன்றின
…”
என்று போர் மீதான வெறுப்பை எழுதியிருக்கிறார். கிளிநொச்சி நகரத்தில் வாழ்ந்து போரை தன் வாழ்வு முழுவதும் அனுபவித்தவர் மற்றொரு கவிஞர் பொன்காந்தன். கருணாகரனும் பொன்காந்தனும் எந்தக் குறிப்பையும் எழுதுகிற அவகாசத்தை போர் தரவில்;லை என்கிறார்கள். எதற்கும் அவகாசமற்று ஓடிக்கொண்டேயிருந்ததாக கூறுகிறார்கள். போராளிகளான வீரா, செந்தோழன், ராணிமைந்தன், வெற்றிச்செல்வி, இளநிலா, ஈரத்தீ போன்றவர்களும் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கவிதைகள் எதுவும் கைவசம் இப்பொழுது இல்லாதிருக்கின்றன. அவை முழுவதும் தொலைந்துபோயிருக்கலாம் என அச்சமடைகிறேன். 2007 ஆம் ஆண்டு பொன்காந்தன் எழுதிய ‘நமது கடன்’ என்ற இந்தக் கவிதை ஒருநாள் நிகழ்ந்த பதற்றமான விமானத் தாக்குதலில் பின்னர் எழுதப்பட்டிருந்தது.
“…
இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக் கணக்குத்தான் தேவையாய் இருந்தது.
…”
பொன்காந்தனின் கவிதைகள் குரூர நினைவுகளை அப்படியே திரட்டித் தருபவை. 2007 ஆம் ஆண்டு வரை வன்னிப் போருக்குள் வாழ்ந்துவிட்டு தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த த.அகிலன் வன்னியின் போர்த்துயரங்களை அழிவுகளை போர்க்காலத்தின் மீதான விமர்சனங்களை எழுதி வந்திருக்கிறார். வன்னி இறுதி யுத்தத்தில் அவரது சகோதரன் பலவந்தமாக போராளிகளால் கொண்டு சென்று மரணம் எய்திய பொழுது ‘மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள்’ என்ற இந்தக் கவிதையை எழுதியிருந்தார்.
“…
அவனுக்கு மூன்றாம் பெயரை
அவர்கள் வழங்கினர்
அந்த மூன்றாம் பெயர்
அவனது புன்னகையைப்
பிடுங்கிவைத்துக்கொண்டு
துவக்குகளைப் பரிசளித்தது.
அவனது விருப்புகளின்
மீதேறிநின்று பல்லிளித்தது.
அவனது தாயைப் பைத்தியமாயத்
தெருவில் அலைத்தது.
…’’
கிளிநொச்சியில் பிறந்த எனக்கு வன்னிப் போருக்குள்ளும் அதற்கு வெளியில் இராணுவ ஆட்சிக்குள்ளும் வாழ நேர்ந்தது. போர் குழந்தைகளின் உலகத்தை அழிப்பவை என்று கருகிற எனக்கு பதுக்குழியொன்றில் பிறந்த குழந்தை குறித்து எழுத நேர்ந்தது.
“…
குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன
…
நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்.
எனது குழந்தையை
நான் இந்த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்
…”
‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற இந்தக் கவிதை 2007ஆம் ஆண்டு கிளிநொச்சியில் வாழும் பொழுது எழுதப்பட்டது. இராணுவ ஆட்சிக்குள்ளான வாழ்வு எவ்வளவு அச்சம் தரும் என்பதை நான் அறிவேன். துப்பாக்கிகள் எல்லாவற்றையும் மூடி எதையும் பேசாது தன் ஆளுகைக்குள் புதைத்துவிடும். உன்னை சுடுவோம் என்ற அப்படியான வாழ்விலிருந்து அதை எழுத வேண்டி நேர்ந்தது. ‘பாழ் நகரத்தின் பொழுது’ என்ற என்னுடைய கவிதையிலிருந்து பின்வரும் வரிகளை தருகிறேன்.
“…
பாழடைந்து போயிருக்கிற நகரத்தில்
மண் தின்கிற கால்களை
ஊடுருவி
ஒற்றை நாய் வந்து கால்களை நக்கிச் செல்லுகிறது.
வரிசையாக புன்னகைகளால்
துவக்கு
சோதனையிட்டு பிடுங்கிக்கொண்டிருக்கிறது
இயல்பான வாழ்வை.
கூர்மையான துவக்கு
எதை வேண்டுமானாலும் செய்யும்.
என்னை உருவி எடுத்துக்கொண்டு
அனுப்புகிற பழுதடைந்த பொழுதில்
தெருவிளக்குகள் அணைந்துபோய்விட்டன
…”
இந்தக் கவிதை 10.02.2009 அன்று எழுதப்பட்டது. ‘பாழடைந்த நகரம்’ என்று யாழ்ப்பாணம் எனக்கு படுவதைப்போல ‘மூடுண்ட நகரம்’ என்று சித்தாந்தன் எழுதியியுள்ளார். இந்த நகரம் அல்லது யாழ்குடா நாடு அச்சம் தருகிற ஆட்சியால் மூடுண்டிருந்ததால் எதிர்கொண்ட துயரங்கள் அச்சங்கள் அச்சுறுத்தல்கள் மரணங்கள் மிகவும் கொடுமையானவை.
இராணுவ அச்சுறுத்தல்கள் பல கவிஞர்களின் கவிதைகள் எழுவதை தடை செய்திருந்தன. அவர்கள் எதையும் எழுதாத நிலையில் அமர்த்தி கைகளை கட்டி வைத்திருந்தன. சித்தாந்தன், துவாரகன் போன்றவர்கள் அந்த அச்சுறுத்தலான வாழ்வைத்தான் கவிதைகளாக எழுதியிருக்கிறார்கள். சித்தாந்தனின் ‘தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்’ என்ற கவிதையில்
“…
முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன
....”
இப்படிக் குறிப்பிடுகிறார். துவாரகனின் ‘தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ என்ற கவிதையில்
“...
வீதிகளும் வெளிகளும்
வெறுமையாகிப் போன
நம் கதைகளையே
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன
வரிசை கட்டிக் கொள்வதும்
நேரம் கடத்தும் காத்திருப்பும்
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும்
காற்றுப் பைகளாக்குகின்றன.
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில்
இருக்கும் ஈர்ப்புக் கூட
இந்த நடைப்பிணங்களில் இல்லை
..”
என்று குறிப்பிடுகிறார். இந்தக் காலப்பகுதியியல் நா.சத்தியபாலன் எழுதிய ‘இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது’ என்ற கவிதையில்
“…
ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று
…”
என்று எழுதுகிறார். த.அஜந்தகுமார் என்ற கவிஞர் தனது ‘ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீh’; என்ற கவிதையில்
“நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.
ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக்கிடந்து
அவனின் இறுதிச் சொற்களைத்
தம்மோடு எடுத்துச் சென்றன
…”
என்று மரணம் நிரம்பிய குடாநட்டு வாழ்வை எழுதுகிறார். யாழ்பபாணத்தைச் சேர்ந்த மருதம்கேதீஸ் என்ற கவிஞர்
“அழுகிய பிணத்தைத் தின்று நிணம் வழிய
ஐந்து மொட்டைகள் வந்தன
அதில் பேச்சிழந்த மொட்டைகளின் கைகளில் உருவகங்கள்
உருவகங்கள் நெளிகின்றன சர்ப்பங்களாக.”
என்று எழுதுகிறார். பள்ளி மாணவியான தேஜஸ்வினி யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் உருவாகி வருகிற பெண் கவிஞர் அவரது ‘கனாக்காலம்’ என்ற கலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் எழுதப்பட்டுள்ள கவிதையில் இப்படி எழுதுகிறார்.
“…
புன்னைச் சருகுகள்
இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன
அன்றொருநாள்
அக்குருதியின் நெடியில்
எங்கள் கனாக்காலத்தின
வசந்தங்கள் கரைந்திருந்தன
…”
என்று எழுதியவர் அதே இதழில் ‘நானும் நீயும’; என்ற கவிதையில் குறிப்பிகிற இரவு எதிர்பார்ப்பகுக்ளை நிரப்பி மிகவும் இருண்டதாயிருக்கிறது.
“…
ஆந்தைகளின் அலறல்களில
புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில
நீ வருவாய
சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து
ஒற்றை முத்தம் தருவாய்
…”
என்று குறிப்படுகிறார். மனமுரண்பாடுகளையும் பாலியல் முரண்பாடுகளையும் குருதி தோய்ந்த வாழ்வையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வேல்நந்தன், கலியுகன், தபின் போன்றவர்களும் தங்கள் வாழ்வு குறித்து ஓரளவு எழுதியிருக்கிறார்கள். ஈழத்தின் கிழக்கில் பஹீமாஜஹான், அனார், அலறி, கலைச்செல்வி, சி.ஜெயசங்கர், அநுராதபுரத்தைச் சேர்ந்த இளையவரான வஸீம்அக்கரம் போன்றவர்கள் எழுதுகிறார்கள். கிழக்கில் நிகழும் ஆக்கிரமிப்பை வஸீம்அக்ரம் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியி;ட ‘ஆக்கிரமிப்பின் கால்த்தடம்’ என்ற தொகுப்பில் உள்ள ‘சுதேச உரிமையை தொலைத்தல்;’ கவிதையில்
“…
வெறியின் கண்சுளைகள் நித்தமும்
பிதுங்கித் தெரியும் வீரமும்
அதிகாரம் தொடுத்த வில்லின் வரைபடமும்
குடைபோல் விரித்த எனது
மரங்களின் நிழற் பரப்பில்
போர்ப் பயிற்சி செய்கிறது
…”
என்று எழுதுகிறார். வவுனியா திருகோணமலை மண்ணின் கவிதைகள் குறித்து அறிய முடியவில்லை. போர்க் காலம் மற்றும் இராணுவ ஆட்சி எல்லாவற்றையும் துண்டித்தும் தணிக்கை செய்துமிருந்தபடியால் குறைநிலையான வாசிப்பையை செய்ய முடிகிறது.
03.
ஈழத்திற்குரிய புலம்பெயர் கவிதைகள் கொண்டிருக்கிற அனுபவ வெளிகள் மிகவும் விரிந்தவை. யுத்தத்திற்கும் அலைச்சலுக்கும் இடையிலான வாழ்வை நிலத்தின் கவிதைகள் சித்திரிக்க யுத்தத்தின் தாக்கத்துடன் நீண்ட அலைச்சல்களையும் பல்லின நெருக்கடிகளையும் புலம்பெயர் கவிதைகள் பேசுகின்றன. அந்நிய நாட்டு வாழ்வையும் சொந்த நாட்டு நினைவையும் இணைக்கின்றன. தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்த கவிதை நிலவரத்தில் ஜெயபாலன் முக்கியமானவர். கி.பி.அரவிந்தன், சேரன், செழியன், திருமாவளவளன், இளவாலை விஜயேந்திரன், மைத்திரேயி, வாசுதேவன், நளாயினி, பாமினி, நிரூபா, செல்வம், ஆழியாள், தான்யா, போன்றவர்கள் முக்கியம் பெறுகிறார்கள். இன்றைய சூழலில் ஜெயபாலனுடன் இளங்கோ, திருமாவளவன், பிரதீபா, நிவேதா, பா.ஐ.ஜெயகரன், தமிழ்நதி, மாதுமை போன்றவர்கள் எழுதி வருகிறார்கள்.
புலம்பெயர் கவிதைகள் உள்ளடக்கி வைத்திருக்கிற உணர்வுகள் மிகவும் தீவிரமானவை. பாலியல் நெருக்கடி, ஜனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்து என்பன புலம்பெயர் கவிதைகளில் வலிமை கொண்டிருக்கின்றன.
புதிய தேசத்தில் எதிர்கொள்ளுகிற அனுபவங்கள்தான் புலம்பெயர் கவிதைகளுக்கு வலுவளிக்கின்றன. அந்நிய மொழி அந்நிய வாழ்வு கலாசாரம் என்பவற்றின் தாக்கத்தால் ஈழ வாழ்வு குறித்த ஏக்கம் ஈழக்கவிதைகளின் இன்னொரு குரல்களாக வெளிப்படுகின்றன. அவர்கள் அலையும் தெருக்களும் பேருந்துகளும் கடற்கரைகளும் படகுகளும் ஈழக்கவிதையில் இடம்பெறுகின்றன. எப்பொழுதும் தாக்கி;கொண்டிருக்கிற யுத்தம் நிலத்தின் நினைவுகள் என்பன குறித்து அவர்கள் பேச வேண்டியிருந்தது. மரண களங்களுக்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அந்தப் பதற்றம் எப்பொழுதும் அவர்களை பின் தொடர்ந்து உலுப்பிக்கொண்டிருக்கிறது.
புலம்பெயர் கவிதைகள் நீணட அலைச்லையும் தாயகத்தலிருந்து பிரிந்து தொலைவிலிருத்தலையும்தான் அதிகம் சித்திரிக்கின்றன. வாசுதேவனின் ‘தொலைவிருத்தல்’ இதில் முக்கியமான தொகுப்புகளில் ஒன்று. ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ என்ற திருநாவுக்கரசு தொகுத்த கவிதைப் புத்தகத்தில் அநேகமான புலம்பெயர்நத கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் தேசத்தில் கிட்டத்தட்ட 63 இதழ்கள் வெளிவநதிருப்பதையும் அந்தத் தொகுப்பு பதிவு செய்திருக்கிறது. இதழ்களை வெளியிடுகிற வசதி அல்லது தேவை மற்றும் தேவைக்கு ஏற்ற வசதியான இணையத்தளப் பாவனை என்பன புலம்பெயர் கவிதைகள் வெளி வருவதற்கும் பரவலடைவதற்கும் உதவுகின்றன.
04.
வ.ஐ.ச. ஜெயபாலன், ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நிலத்தில் வாழ்ந்து அந்த செழுமையான அனுபவங்களையும் குருதி தோய்ந்த வாழ்வையும் துப்பாக்கிகளின் அச்சுறுத்தல்களையும் பேராட்டத்தையும் எழுதியிருக்கிறார். எழுபதுகளின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த ஜெயபாலன் நான்காவது தலைமுறைக் காலத்திலும் அல்லது நான்காவது தசாப்தத்திலும் எழுதிக்கொண்டிருக்கிறார். 1988ஆம் ஆண்டில் ஈழத்தைவிட்டு புலம்பெயர்ந்த ஜெயபாலன் போர் ஓய்கிற நாட்களில் அதற்கு இடையில் 2006 ஆம் ஆண்டு யுத்தம் தீவிரம் அடையும் வரை தாயகத்திற்கு வந்து போயிருக்கிறார். யுத்தமும் அலைச்சலும் இனக்கொலைகளும் நான்காவது தலைமுறை வரை தொடருகிறது என்ற குரூரமான யதார்த்தம் இதில் வெளிப்பட்டுக் கிடக்கிறது.
ஈழத்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார். ‘பாலியாறு நகருகிறது’ என்ற அவரது கவிதை வன்னியின் ஆன்ம உண்ர்வையும் இன எழுச்சியையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கவிதைகள் பேசுகிற வெளிகள் விடுதலை பற்றியவானவாக இருக்கின்றன. இன்னும் நம்பிக்கையை தந்துகொண்டிருப்பதுதான் ஜெயபாலனின் கவிதைகளின் சாத்தியமாக இருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையில் பங்களித்திருக்கிற ஜெயபாலனால் போராளிகளையும் போராட்டத்தையும் காப்பதற்காய் கூறப்பட்ட ஆலோசனைகள் எவையும் உரிய காலத்தில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இன்று நேர்ந்திருக்கிற ஈழ மக்களின் வீழ்ச்சி குறித்து காலத்திற்கு முன்பாகவே எச்சரிக்கை செய்திருந்ததை நான் அறிந்திருக்கிறேன்.
தீராத சோகத்தை தந்த யுத்தம் உலகம் எங்கிலும் சிதறிப்போயிருக்கிற ஈழத் தமிழ் மக்களை எல்லாம் வதைத்துப் போட்டிருக்கிறது. தாயகத்தை பிரிந்த துக்கமும் தாயக்கத்தில் நிகழும் இனக் கொலைகளும் புலம்பெயர்ந்த தமிழர்களை மிகக்கெடுமையாக பாதித்திருக்கின்றன. ஈழப் போராட்டத்திற்காகவும் ஈழ அபிவிருத்திக்காகவும் அவர்கள் செய்த உழைப்பு சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலைச்சலும் அவலமும் ஏமாற்றமும் நிறைந்த மனிதர்களின் மனச்சொற்களை ஜெயபாலனின் கவிதைகளில் காண முடிகிறது. எமது இனத்திற்கு ஏற்பட்ட இந்த அவலம் அரசியல் இருள் நிலை என்பவற்றை தோற்றுப் போனவர்களின் பாடல்கள் சித்திரிக்கின்றன.
நம்பிக்கைகளையும் பண்பாட்டையும் நிலத்தின் வாசனையையும் முழு அளவில் பிரதிபலிக்கிற இந்தக் கவிதைகள் தாய் மண் குறித்து கனவாகவும் அதன் மீதான சொற்களாகவும் இருக்கின்றன. ஜெயபாலனின் அழைப்பு சிதைந்துபோன தாயகத்தை மீள கட்டி எழுப்புகிற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. தோற்றவர்களை அடுத்த கட்டத்திற்கு உற்சாகப்படுத்துகிறது. ஈழக்கவிதைகளில் தோல்வியை அதன் எல்லை வரை சொல்லும் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. வரலாற்றின் மீதான இந்தப் பெரிய பாடல்கள் ஆச்சரியப்பட வைக்கிற நம்பிக்கை கொண்டிருக்கின்றன. ஆலயங்களையும் மசூதிகளையும் ஆறுகளையும் நிலத்தையும் இந்தச் சொற்கள் சுற்றி;கொண்டிருக்கின்றன. ஈழ மக்களின் புழங்கு பொருட்களையும் வளங்களையும் சித்திரிக்கின்றன. நாம் இழந்தபோயிருக்கிற வாழ்வை இந்தக் கவிதைகள் முழுமையாக கோருகின்றன.
பழைய கதைகளையும் முதிர்ந்த சொற்களையும் கொண்டு ஈழ மக்களுக்கான அரசியலை முன்வைக்கிற தோற்றுப் போனவர்களின் பாடல்கள் இந்திய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கண்டிக்கின்றன. ஈழ மக்களின் வாழ்வுரிமையை பெற்றுக்கொள்ள இந்தியாவிடம் கோருகின்றன. வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம் தொடர்பாக பேசிய மிகச்சிலரில் ஜெயபாலனும் ஒருவர். வடக்கு முஸ்லீம் மக்களின் அகதித் துயரத்தையும் அலைச்சலும் தனது முன்னைய கவிதைகளில் பிரதிபலித்திருக்கிறார். கோயில்களும் மசூதிகளும் நிறைந்த ஊரில் தமிழ் பேசும் மக்கள் சேர்ந்து வாழுகிற வாழ்வையும் தனது தோற்றுப்போனவர்களின் பாடல்களில் பேசுவதன் வாயிலாக தமிழ் முஸ்லீம் சமூகங்களது இணைந்த வாழ்வை அவசியப்படுத்துகிறார்.
எந்த மனிதகர்ளுடன் நட்புடன் பழகுகிற இவர் எல்லோருடனும் தொடர்பு கொள்ள விரும்புகிறவர். தன்னை ஒரு சனங்களின் போராளி எனக் குறிப்பிடுகிற ஜெயபாலன் போராடுகிற மக்களின் சாடசியாக வாழ விரும்புகிறார். இவரது பிரகடனங்களில் சனங்களது குரல்கள் மட்டுமே அடங்கியிருக்கின்றன. போராளிகளை மிகவும் ஆழமாக நேசிக்கிற தாயாகவும், தாயகத்தின் குழந்தையாகவும் தன்னை வெளிப்படுத்துகிறார். அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன் என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப்போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.
கிளிநொச்சி,
22.11.2009
Sunday, November 15, 2009
தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ சிதிலமாகி உறைந்த காலம்
கருணாகரன்
01
பத்து மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கவிதைகள் நூலாக்கப்படவுள்ளதாக தெரிவித்து அதற்கு முன்னுரை தரவேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தீபச்செல்வன். அப்போது நான் கிளிநொச்சியிலிருந்தேன். கிளிநொச்சியை நெருங்கியதாக யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. எனினும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது. ஒரு இடத்தில் இணைய வசதியும் கிடைத்தது. என்றபோதும் யுத்தத்தின் தீவிரம் எதையும் நிதானிக்க முடியாத அளவிற்கு நிச்சயமின்மையை உருவாக்கிகொண்டிருந்தது. அதைவிட எப்போதும் அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும் அபாய நிலை சடுதியாக மாறும் அல்லது வீழ்ச்சியடையும் சூழல். தீபச்செல்வனுக்கு ஒப்புக்கொண்டபடி அவருடைய கவிதைகளுக்கான முன்னுரையினை அனுப்ப முடியவில்லை.
யுத்தம் திடீரென வேகமெடுத்த போது எழுதிய குறையுடன் இருந்த முன்னுரையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டே இடம்பெயரத் தொடங்கினோம். எல்லாவற்றையும் அள்ளிப்போட்டுக்கொண்டு, பெயர்க்கப்பட்ட வீட்டோடு ஒவ்வொரு இடமாக பெயர்ந்து கொண்டிருக்கும் போது எல்லாமே தொலையத் தொடங்கின. எதிலும் நிதானம் கொள்ள முடியாத நிலை. யுத்தத்தின் வேகத்திற்கு எதனாலும் யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. சிதைவுகள,; சேதங்கள், அழிவுகள் இழப்புக்கள் தொடர்புகள் கிடையாது. எல்லாமே தடைப்பட்டன. மிஞ்சியவை தடுக்கப்பட்டன. தகவல் யுகத்தில் எந்தத் தகவல் அமைப்பிலும் நுளைய முடியாமலும் எந்த தகவல்களாலும் தீண்டப்படாமலும் இருந்தோம். வாழ்க்கை முற்றாக மாறியது. நாங்கள் மனிதர்கள்தானா என்று நம்பவே கடினமாகியது. இறந்தவர்களை புதைப்பதற்கோ அவர்களுக்கு ஒரு சிறு சடங்கை செய்யவோ இறுதி மரியாதையை செலுத்தவோ கூட அவகாசமில்லாத வாழ்க்கை.
அபாயவலை எங்கும் பிரமாண்டமாக விரிந்து இறுக்கியது மூச்சை. எதையும் நினைவு கொள்ள முடியாது. எதைப்பற்றியும் சிந்திக்கவும் இயலாது. யுத்தத்தை தவிர அதன் உக்கிர நடனத்தை தவிர வேறொன்றுமில்லை. உயிர் பிழைத்தலுக்கான நிகழ்தகவில் எதிர்மறைக்கூறுகளே கணமும் பெருகிக் கொண்டிருந்தன. வன்னியிலிருந்து எப்படித் தப்புவது என்ற ஒரே எண்ணமே எல்லோருக்கமிருந்தது. தீபச்செல்வனின் கவிதைகளும் ஏறக்குறைய யுத்தத்தின் குரல்களாகவே இருக்கின்றன. அதுவும் இந்த நிலமைகளைப் பேசுவனவாக இருக்கின்றன. வன்னியின் இறுதி யுத்தம் நடந்தபோது அவர் வெளியே யாழ்பாணத்திலிருந்தார். இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை அவர் கிளிநொச்சியில் இருந்தபோது எழுதியவை. சில வன்னி நிலமைகளை அவர் யாழ்ப்பாணத்தலிருந்து எழுதியபவை. யுத்த்தின் நெருக்குவாரம், தீவிரம் பற்றிய அனுபவம் அவருக்குண்டு. வன்னி யுத்தம் யாழ்ப்பாணத்தலிலும் தன் அதிர்வுகளையும் தீவிரத்தையும் காட்டியிருந்தது. (இன்றும் யாழ்ப்hணம் தன்னுடைய இறுக்கத்தலிருந்து மீள வில்லை. இயல்புக்குத் திரும்பவில்லை) எனவே அவர் தன்னுடைய கவிதைகளை எதிர்பார்த்த முன்னுரை இல்லாமலே வெளியிடத் தீர்மானித்து விட்டார்.
இப்போது தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’யைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னுரைக்குப் பதிலா இந்த அறிமுகத்தை எழுதலாம் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அப்போது யுத்த்தின் தீரத்தை அகதி வாழ்வை உயிர் பிழைத்தலு;கான போராட்டம் இவையின்றி வேறில்லை என்ற நிலை. இப்போது எப்போது முடியும் இந்த தடுப்பு முகாம் அவலங்கள் என்ற வாழ்க்கை. எப்படி வெளியே போவது? எப்போது செல்வது? அப்படி தப்பிச் சென்றால் எங்கே போவது? என்று எதைப் பற்றியும் திர்மானிக்க முடியாத நிலை. முடிவற்ற இருட்பரப்பின் நடுவே ஒவ்வொருவரும் நிறுத்தப்பட்டிருக்கிறோம். 10ù10 என்ற அளவிலான முட்கம்பிகளால் சூழப்பட்ட இந்த பிரமாண்டமான முகாம்களிற்குளிலிருந்து கொண்டு எதை எழுதுவது? இன்றும் துப்hக்கியுடன் படையினர் வெளியே சூழவும் காவலிருக்கின்றனர். இந்த நிலையில் இதை மட்முமல்ல எதையும் எப்படி எழுதுவது?
தீபச்செல்வனின் யுத்தக் கவிதைகள் இங்கே முன் சொல்லப்பட்டவற்றின் விவரணை அல்லது சாரம். எனவே அவை எல்லாவற்றையும் நினைவூட்டுகின்றன. மறக்க நினைக்கும் நினைவுகளை ஆறாக்காயங்களை அவை மீண்டும் புதுப்பிக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகிறது துளிர்க்க மறுக்கும் கனவுகளுக்கு முன்னே, நிறங்கொள்ள மறுக்கும் அவற்றின் சாயல்களுக்கு முன்னே தீயோடும் வலியோடும் தம் குரலை உயர்த்தி வைத்திருக்கின்றன இந்தக் கவிதைகள். அதாவது ஈழப்போராட்டத்தின் இறுதிக்கால நிகழ்ச்சிகளை மென் விமர்சனமாகவும் விபரணையாகவும் கண்டனமாகவும் விவரிக்கும் இயல்பை இந்தக் கவிதைகளில் உருவாக்கி வைத்திருக்கிறார் தீபச்செல்வன். இந்தக் கவிதைகளுக்கும் இங்கே முன் சொல்லப்பட்ட நிலமைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் இந்தக் கவிதைகளை ஒரு கால கட்டத்தின் உண்மை வரலாற்றுடன் இறுகப் பிணைத்ததாக உள்ளன.
02
1986இல்- 23 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அதில் 52பேரின் கவிதைகள் இடம்பொற்றிருந்தன. எல்லாமே அரசியற் கவிதைகள். அன்று ஈழத்தில் நிலவிய இராணுவ அடக்குமுறையை, அரசியல் வன்முறையை, அரச பயங்கரவாத்தை, இவற்றுக்கெதிரான விடுதலை வேட்கையை வெளிப்படுத்தின இந்தக் கவிதைகள். ஈழத்தமிழரின் அன்றைய வாழ்க்கையை, அது எதிர்கொண்ட சவால்களை, அந்தச் சூழலின் கொந்தளிப்பை, அதன் உணர்வை வெளிப்படுத்திய கவிதைகள் அவை. இந்தக் காலப்பகுதியை நெருங்கியதாக முன்- பின்னாக இன்றும் பல கவிதைகளும் தொகுப்புகளும் வெளி வந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழக்விஞர்களில் ஒருவரேனும் தன் காலச் சூழலையும் நிகழ்ச்சிகளையும் பற்றி எழுதாமல் இருந்ததில்லை. எனவே இந்தக் காலப் பகுதியில் வெளிவந்த எல்லாக் கவிதை நூல்களிலும் அரசியல் கவிதைகள் அல்லது இந்தக் காலப்பதிவுக் கவிதைகள் - கால நிகழ்ச்சிகளின் விவரணை- விமர்சனக் கவிதைகள் தவறாமல் இடம்பெற்றுள்ளன.
ஈழக்கவிதைகள் வெளிச்சூழலில் தீவிர கவனத்தை பெற்றதற்கு இந்தப் பண்புகளும் தொனியும் முதன்மைக்காரணமாகி அமைந்தன. இதேவேளை பின்னர் வெளிவந்த கவிதைகளில் அரச பயங்கரவாதத்தின்மீதான எதிர்ப்புணர்வுடன் விடுதலை அமைப்பக்களிடையே ஏற்பட்ட சிதைவுகள், சகோதரப் படுகொலைகள், அவை உருவாக்கிய அதிகாரக் குவிவு, ஜனநாயக விரோதம் என்பவற்றுக்கு எதிரான குரலும் சேர்ந்தொலித்தன. தமழ்க்கவிதை- தமிழ்த்தேசியம்- தன்னுள் விமர்சனக் கண்ணோட்டத்தை பகிரங்கப்படுத்தவும் ஜனநாயகக்குரலை ஒலிக்கக்கூடிய ஒரு முன் கண்ணோட்டமாக இந்தக் கவிதைகள் அமைந்தன. எதிர்ப்புக் கவிதைகளில் நிச்சயமாக இருக்க வேண்டிய ஜனநாயகக்கூறுகள் இவற்றில் இருந்தது இன்னொரு முக்கிய அம்சம். இது ஈழக் கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தன. ஆனால் அதேவேளை இங்கே இரண்டு விதமான நிறங்களும் உருவாகின. ஓன்று சார்பு மற்றது எதிர். புலிகளின் போராட்டை நிபந்தனையின்றி ஆதரித்தவை ஒரு வகையாகவும் (இதில் அரச எதிர்ப்புக்கரலும் சிங்கள தேசியத்திற்கு எதிரான கண்டனமும் தூக்கலாக இருந்தன) அதை விமர்சித்த கவிதைகள் (ஜனநாயகம் பன்மைத்துவத்தை வலியுறுத்தின) இன்னொரு வகையிலும் இருந்தன இந்தப் பண்பு மாற்றத்தின் சிறப்பு அடையாளத்தை நாம் சேரன், சி.சிவசேகரம், இளவாலை விஜயேந்திரன், செல்வி, றஷ்மி, நட்சத்திரன் செவ்விந்தியன், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்களின் கவிதைகளை காணலாம். எல்லாமே முன்னர் குறிப்பட்டதைப்போல ஆயுத வன்றுறையை, ஜனநாயக மறுப்பை, மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் கவிதைகள்.
கடந்த 30 வருடங்களாக ஈழத்தமிழரின் வாழ்க்கை கொந்தளிப்பு மிக்கதாகவே இருக்கிறது. வன்மறை சப்பித்துப்பிய வாழ்க்கையின் துயரம் மிகக் கொடியது. ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறைக் கவிஞர்களிடத்தில் இந்த வன்முறை அரசியலின் தாக்கம் உண்டு. குருதியும் நிணமும் தீயும் புகையும், கண்ணீரும், ஓலமும், அலைதலின் விசும்பலும் கொந்தளித்துத் ததும்பும் ஓரூலகத்தை இந்தக் கவிஞர்கள் தங்களின் கவிதைகளில் காண்பிக்கின்றனர். தொடக்கத்தில் சிங்கள இனவாதம்- பேரினவாதம்- அரச பயங்கரவாதம் எனபதற்கெதிரான எதிர்ப்புக் குரலாக வெளிக்கிளமபிய எதிர்ப்புக்குரலாக வெளிக்கிளம்பிய கவிதைக்குரல், விடுதலைப் போரட்டத்தினுள்ளும் விடுதலை அமைப்புகளினுள்ளும் நிகழ்ந்த உள் நெருக்கடிகள், ஜனநாயக மறுப்புகள், மனித உரிமை மீறல்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள், தமிழ் இனவாதம் என்பவற்றுக்கு எதிராகவும் ஒலித்தன.
கடந்த முப்பதாண்டு கால தமிழ்கவிதைகளில் அதிகமதிகம் ஜனநாயகக்குரலை உயர்ததிய கவிதைகளாக ஈழக் கவிதைகள் இருக்கக்கூடுமென நம்புகிறேன். ஆனால் ஒரு வகையில் இது மிக்கொடியது. மிக மிகத் துயரமானது. அவலம் நிரம்பியது. ஏனெனில், ஜனநாயக மறுப்புச் சூழலில் நமது வாழ்க்கை சிக்கியுள்ளதையிட்டு நாம் எப்படி மகிழ முடியும்? ஒரு பக்கம் சிங்கள இனவாத்தினாலும் அரச பயங்கரவாதத்தினாலும் பாதிப்பும் நெருக்கடியும் மறுபக்கம் தமிழ்த்தேசியம் என்ற சுலோகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலின் நெருக்கடி.களும் பயங்கரவாதமும். சனங்கள் இரண்டு தரப்பினாலும் கிழிபட்டனர். எனவே ஈழ விடுதலை போராட்டம் எப்படிச் சிதைந்தது என்பதற்கான தக்க சாட்சியமாகவும் இந்த கவிதைகள் உள்ளன.
முப்பதாண்டு கால ஈழத்தமிழரின் (முஸ்லிம்கள் உட்பட) வாழ்க்கை சிதைவையும் இன்றைய அவலநிலையையும் இந்த கவிதைகளில் உணர முடியும். அரச பயங்கரவாதம் இன்னும் அப்படியே உயர் வளர்ச்சி நிலையில் உள்ளதையும் விடுதலை போராட்டமும் போராட்ட அமைப்புகளும் எவ்வாறு உருச்சிதைந்து குரூர வெளியில் பிரவேசித்தன என்பதையும் சாட்சி நிலையில் காட்டுகின்றன. இந்த கவிதைகள் ஈழத்தின் குச்சொழுங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அவர்கள் வாழும் ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேலிய பெருநகரங்கள் வரையில் இந்தத் தொனிமாற்றத்தையும், வளர்ச்சியையும் அடையாளம் காணலாம். யார் யார் எங்கெங்கு இருந்தாலும் ஈழத்தமிழ் கவிதைகளின் மையம் அனேகமாக ஒன்றாகவே இருக்கின்றது. ஈது ஊன்றிக் கவனிக்க வேண்டியதொரு முக்கிய அம்சம். ஏவரெவர் எங்கெங்கு எப்படியெப்படி வாழ்ந்தாலும் அவர்கள் எல்லோருடைய கவனமும் பிரச்சினையும் தங்கள் தாய்நிலத்தில் எப்படி வாழ்வது? அல்லது அங்கு தமிழ் மக்களின் - தமது உறவுகளின் (இது புலம்பெயர்களின் உணர்வுகளுடன் நேரடித் தொடர்புடைய சங்கதி) வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என்பதையிட்டது. எனவே எல்லோருடைய பிரச்சினையும் ஒரே மையத்திற் குவிவது தவிர்க்க முடியாத ஒரு நியதியானது. இந்த சூழலமைவு என்பது எப்படி திக்குகள் எட்டிலும் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அவ்வாறே ஒவ்வொரு தலைமுறைகளிலும் பாதித்தது.
எனவேதான் முருகையன், சண்முகம் சிவலிங்கம், சி.சிவசேகரம், எம்.ஏ.நுஃமான், மு.பொ, சு.வி, சேரன், ஜெயபாலன், ஊர்வசி, ஒளவை, நட்சத்திரன், செவ்விந்தியன், இளவாலை வியஜேந்திரன், பா.அகிலன், றஷ்மி, அனார், கற்சுதா சோலைக்கிளி, சித்தாந்தன், நிலாந்தன், எஸ்.போஸ் என சகல தரப்பினரையும், சகல தலைமுறையினரையும் ஒரே மையத்தில் குவிய இந்த சூழலமைவும் இந்த நிகழ்ச்சிப் போக்குகளும் காரணமாய் அமைந்தன. இங்கே தீபச்செல்வனும் தவிர்க்க முடியாமல் இந்த மையத்திலேயே தன்னைக்குவிக்கிறார். இஙகே இதை இலகுவாக புரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம், 1986ல் வெளிவந்த கவிதை நூலொன்றின் தலைப்பு “மரணத்தில் வாழ்வோம்” 2009ல் வெளிவந்திருக்கும் தீபச்செல்வனின் கவிதை நூலின் தலைப்பு “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” இரண்டு நூல்களும் மரண வளையங்களால் சூழப்பட்ட தமிழ் வாழ்வை குறியாக உணர்த்துகின்றன. எனவே இந்தக் காலப்பதிவாகவே இந்த நூல்கள் உள்ளன என்பதை நாம் இலகுவாக உணர முடியும். அதன்படியே நாம் இந்த கவிதைகளை அணுகவேண்டிய ஒரு நிலையும் உள்ளது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால வெளியில் இரண்டு நூல்களும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் சூழலின் கொந்தளிப்பு மாறாமல் அப்படியே இன்னும் தீவிர நிலையிலேயே இருக்கின்றது.
மரணத்துள் வாழ்க்கை அதில் என்றால், இதில் பதுங்கு குழியில் பிறக்கின்றது குழந்தை. ஆக தொடரும் போர், அவலம், நெருக்கடி, துயரம், அச்சம், இருள் என்றவாறே வாழ்வும் அதன் நிகழ்ச்சிகளும் தொடர்ந்திருக்கின்றன. இந்த இரண்டு நூல்களுக்குமிடையே அடிப்படையில் எந்தப் பெரிய வேறுபாட்டையும் காணமுடியவில்லை. அதாவது ஈழ நிலமைகளில் வேறுபடில்லாத நிலையை போன்றே இந்தக் கவிதைகளிலும் ஒரே அரசியற் சூழலும், வாழ்க்கை சூழலும் காணப்படுகின்றன. ஆக ஒரு வளர்ச்சி மட்டுமல்ல இது யுத்தத்தின் உக்கிரத்தோடு இணைந்தது. மரணத்தில் வாழ்வோம் கவிதைகள் யுத்தத்தின் தொடக்க நிலையிலானவை. அவ்வளவுதான். இதேவேளை இந்தக்கால வெளியில் ஈழச்சூழலிலேயே – குறிப்பாக ஈழ அரசியற் சூழலின் உள்ளே நிறைய மாற்றங்களும் பிரச்சினைகளும் உருவாகி விட்டன. அவற்றை பலரின் பல கவிதைகளும் தம்முள் தீவிரத்துடன் பிரதிபலித்துள்ளன என்பதையும் நாம் தனியாக அவதானிக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு கவிஞர்களுக்கும் உள்ள வெளிப்பாட்டு முறமை, மொழிப்பிரயோகம், பார்வை என்பவற்றிலும் வேறுபாடுகள் உண்டு. அவையும் தனியான அவதானத்திற்குரியவை. தீபச்செல்வனின் கவிதைகளை வாசிக்கும் போது தவிர்க்க முடியாதவாறு இந்தக் காலவெளியின் நிகழ்ச்சிகள் இந்தமாதிரியான மதிப்பீட்டுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.
முன்னரே குறிப்பி;ட்டு இருப்பதை போல ஈழத்தில் நிலவிய இனவாத அரசியற் சூழலும் போராட்டமும் யுத்தமும் இவற்றின் விளைவுகளான உயிர் அச்சம், ஒவ்வொரு மனிதரையும் எப்போதும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் அபாய நிலை என்பவற்றையும் இந்த கால வெளிக் கவிதைகள் எளிதில் காட்டுகின்றன. யமன், போரின் முகங்கள், எலும்புக் கூடுகளின் ஊர்வலம், காவுகொள்ளப்பட்ட வாழ்வு, யுத்த சஞ்யாசம், ஆணி அறுந்த வேர், இயல்பினை அவாவுதல், தரப்பட்ட அவகாசம், வாழ்ந்து வருதல், முகங்கொள், எல்லை கடத்தல், இப்படிப் பல. ஆக முன் சொன்னதைப் போன்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தின் வாழ் நிலை எப்படி அமைந்திருந்தது, அமைந்திருக்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கவிதைகள்.
மரணத்தில் வாழ்வோம் கவிதைகள் தொகுக்கப்பட்ட போது தீபச்செல்வனுக்கு வயது மூன்று. அந்தக் கவிதைகளில் பல எழுதப்பட்ட போது தீபச்செல்வன் பிறந்திருக்கவேயில்லை. ஆனால் தீச்செல்வன் இளைஞராகி கவிதை எழுதும் போதும் அதே மாதிரியான பிரச்சினைகளையே அவரும் எழுதவேண்டியிருக்கின்றது. எனவே இதற்கு மேல் ஈழநிலவரத்தை பற்றிய விளக்கங்கள் தேவையில்லை. தவிரவும் இப்போது போரும் முடிந்துவி;ட்டது. ஆனால் இன்னும் போரின் வடுக்கள் தீரவில்லை. அரசியற் பிணக்குகள் தீரவில்லை. அகதி வாழ்க்கை மாறவில்லை. முட்கம்பிகளும் துப்பாக்கிகளும் அகலவில்லை. அகற்றப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே இத்தகைய சுருக்கமான வரலாற்றுப் பிண்ணணியில் தீபச்செல்வனையும் அவருடைய பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகளைப் பற்றியும் நோக்கலாம். இதுவும் ஒரு சுருக்க நிலையிலேயே.
03.
தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சி நகரில் பிறந்து வளர்ந்தவர். இன்னொரு வகையில் சொன்னால் யுத்தத்திற்குள் பிறந்து வளர்ந்தவர். இலங்கைத் தீவிலேயே அதிகமதிகம் அழிவுக்குள்ளான நகரம் கிளிநொச்சி. ஒன்றிரண்டு தடவையல்ல. 1983, 1986, 1990, 1996, 2008, என பல தடைவ அழிந்த நகரம். புல தடவைகள் நடந்த படையெடுப்புக்களில் (சிறிலங்கா இராணுவம், இந்திய இராணுவம், விடுதலைப்புலிகள்) கிளிநொச்சி அழிவுக்கும் மீள்எழுச்சிக்கும் அழிவுக்கும் என்றானது. வன்னி யுத்தம் (ஈழப்போராட்டம்) முடிந்து இப்போது இந்தக் குறிப்பக்களை எழுதிக் கொண்டிருக்கும் போது 46 நாட்களே ஆகின்றன. இந்த யுத்தத்திற் பிறந்த குழந்தைகளில் ஒன்று தன்னுடைய கதையை, உணர்வகளை, எண்ணங்களை, அனுபவங்களை, தான் வளர்ந்த சூழலை, வாழும் காலத்தில் தனக்கு வாய்த்த மொழியில் அல்லது இது வாழும் காலமும் சூழலும் இதற்களித்த மொழியில் பேச முனைகிறது. இவையே இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைகளை படிக்கும் போது ஏனோ த.அகிலனின் கவிதைகளை பற்றிய நினைவுகள் வருகின்றன.
தீபச்செல்வனும் த.அகிலனும் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு இளம் கவிஞர்கள். இருவரும் ஒரெ வயதுடையவர்கள். ஏறக்குறைய ஒத்த வாழ்க்கை சூழலையும் அனுபவத்தொகுதியையும் கொண்டவர்கள். அத்துடன் ஒரே பள்ளியில் படித்தவர்கள். (கடந்த கால யுத்தத்தின் சின்னமாக – எச்சமாக - இவர்கள் படித்த கல்லூரியின் பெரிய கட்டிடத்தொகுதியொன்று அங்கே விடப்பட்டிருக்கின்றது.) எனவே இவர்கள் இருவரின் கவிதைகளிலும் சில அடிப்படை விசயங்கள் ஒத்ததாக இருக்கின்றன. அதேவேளை சில இடங்களில் சில முறமைகளில் இருவரும் தத்தமது பார்வை ஆளுமை என்பவற்றிற்கு ஏற்ப வேறுபடுகிறார்கள். த.அகிலனின் கவிதைகள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புவதையும் விட மனித உணர்வு சார்ந்த விடயங்களையும் விடுதலைப்புலிகளின் நடைமுறைகள் மற்றும் அவர்களுயை கோட்பாடுகளுக்கெதிரான விமர்சனங்களையுமே அதிகமாக கொண்டவை. தொடக்க நிலையில் அகிலனும் அரச பயங்கரவாதம் சிங்கள இனவாதம் என்பவற்றிற்கு எதிராகவே எழுதியவர்.
ஈழத்தின் பெரும்பாலான கவிஞர்களும் படைப்பாளிகளும் ஆரம்பத்திலோ அல்லது ஏதோ ஒரு கட்டத்திலோ அரச பயங்கரவாதத்திற்கும் சிங்கள இனவாதத்திற்கும் எதிரான படைப்பியக்கத்தில் ஈடுபட்டிருப்பது யதார்த்தம். அதேவேளை இவர்களில் அநேகர் பின்னாட்களில் விடுதலை அமைப்புக்களின் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சிதைவுகளையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஜனநாயக மறுப்பையும் விமர்சித்து எழுதுகின்றனர். அகிலனும் இவ்வாறுதான் தன்னுடைய பயணத்தில் திகழ்கின்றார். அரச பயங்கரவாத்திற்கு எதிராக ஆரம்பித்து விடுதலை அமைப்புக்களின் அராஜகத்திற்கு எதிராக இயங்குகின்றார். ஆனாலும் சிவசேகரம், சேரன், நட்சத்திரன், செவ்விந்தியன், இளவாலை விஜயேந்திரன், சிவரமணி, தீவிரநிலையிலும் உயர்தொனியிலும் எழுதவில்லை அகிலன். அவருடைய தொனி மென்னிலையானது. அவ்வாறே அவருடைய விமர்சனங்களும் கண்டனங்களும் அவருடைய ஒரே சகோதரரை (இவர் பொறியியற் துறையில் உயர்கல்வியை படிப்பதற்கு தேர்வாகியிருந்தார். பின்னர் கொல்லப்பட்டு விட்டார்.) விடுதலைப் புலிகள் கட்டாயப் போர் நடவடிக்கைகளுக்காக பிடித்துச் சென்ற போது (அப்போதுதான் அகிலனும் ஈழத்தை விட்டு தமிழத்திற்கு சென்றார்) எழுதிய கவிதை இதற்கு அகிலனின் கவிதைகளின் இயல்புக்கு ஒரு ஆதாரமாக இதைக் குறிப்படலாம்.
----------
வெறுமனே
எதிர்முனை இரையும்
என் கேள்விகளின் போது
நீ
எச்சிலை விழுங்குகிறாயா?
எதைப்பற்றியும்
சொல்லவியலாச்
சொற்களைச் சபித்தபடி
ஒன்றுக்கும் யோசிக்காதே
என்கிறாய்..
உன்னிடம்
திணிக்கப்பட்ட
துப்பாக்கிகளை நீ
எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்
வாய் வரை வந்த
கேள்வியை விழுங்கிக்கொண்டு
மௌனிக்கிறேன்.
தணிக்கையாளர்களாலும்
ஒலிப்பதிவாளர்களாலும்
கண்டுகொள்ளமுடியாத
ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்
உதிர்கிறது..
தொலைபேசிகளை
நிறைக்கிறது
ஒரு நிம்மதிப்பெருமூச்சு..
நீ நிம்மதியாப் போ..
-----------
இதேபோல தீபச்செல்வனின் தங்கையை – அதிலும் அவள் பதின்மூன்று வயதுச்சிறுமியாக – பள்ளி மாணவியாக இருந்தபோது புலிகள் அவளை பிடித்துச் சென்றதையும் தீபச்செல்வன் தன்னுடைய
--------------------------------
இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?
ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.
குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.
-----------------------------------
(நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு)
என்ற கவிதையில் வெளிப்படுத்துகின்றார். இந்தக் கவிதை அவரது நூலில் இல்லை. அவருடைய இணையத்தளத்தில் இதைப் படிக்க முடியும். இவ்வளவுக்கும் தீபச்செல்வனின் சகோதரர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சாவடைந்தவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ நூலே இந்த சகோதரனுக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.
தீபச்செல்வனின் கவிதைகள் போரையும் இராணுவ அழுத்தத்தையும் பொதுவான தமிழ் மனநிலை நின்று நோக்குகின்றன. தமிழ் பொதுமனநிலை என்பது உடனடியாக அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே முதற்பார்வையாக கொள்ளும் இயல்பைக் கொண்டது. இதற்கு தமிழ் மக்களின் பேரால் இயங்கிய அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், அரசியலாளர்களும், இந்த நோக்குநிலை ஊடகங்களும் ஒரு பிரதான காரணமாகும். அதிலும் குறிப்பாக பின்னர் தமிழ் மைய ஊடகங்கள் விமர்சனம், மாற்றுப்பார்வை, ஜனநாயகமின்மை, என்று ஒற்றைப் படைத்தன்மையில் - சார்பு எதிர்ப்பு- ஒரு நண்பர் சொல்வதைப்போல கறுப்பு வெள்ளை என்ற பிரிப்பில் இயங்கியதால் பெரும்பாலான இளைய தலைமுறைப்படைப்பாளிகள் அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே தமது பார்வைத்தெரிவில் கொண்டனர். நட்சத்திரன், செவ்விந்தியன், சிவரமணி போன்றோர் இதில் விதிவிலக்கு. இந்த ஊடகங்கள் கட்டமைக்கும் கருத்துலகுக்கு வாய்ப்பானதாக சிங்கள இனவாதிகளும் அரசும் காரணமாக இருப்பதையும் இங்கே நாம் நோக்கவேண்டும்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒரு தடைவ குறிப்பிட்டதை போல ‘தமிழ் மக்களின் போராட்டத்திலுள்ள ஜனநாயகமின்மை, அதன் நீதி மறுப்பு என்பனவெல்லாம் சிங்கள இனவாதத்தினால் மிக லாவகமாக மறைக்கப்படுகின்றன என்பது இந்த வாய்ப்பை இன்னும் தமிழ் அரசியலாளர்களுக்கும் சார்பு ஊடகங்களுக்கும் அளித்தது. இன்னும் இந்த ஊடகங்கள் தமிழ் மக்களின் அரசியற் பாதை குறித்து தெளிவாக சிந்திக்க தயாராக இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகால அதேமனநிலை, அணுகுமுறை, போக்கு என்பவற்றினடியாகவே இயங்குகின்றன. சர்வதேச அரசியல், பொருளாதாரம், இவற்றுக்கான இராஜதந்திரப் பொறிமுறை, அறிவியல் வளர்ச்சி, அதன் விளைவான தகவல் தொழில்நுட்ப ஆதிக்கம், போன்ற இன்னோரன்ன அம்சங்களையும் இவற்றின் செல்வாக்கு மற்றும் பாதிப்புக்களையும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.
யதார்த்தை உணர மறுக்கும் கற்பனாவாதப் போக்கும் அந்த மனநிலையில் மக்களை தொடர்ந்தும் வைக்கும் நோக்குமே இந்த ஊடகங்களின் இயங்கு முறையாக உள்ளது. உண்மையைக் கண்டறிய தயங்கும் இந்த நிலை உண்மையிலிருந்து சனங்களை வெகு தொலைவில் நிறுத்தும் காரியத்தையே செய்கின்றது. உண்மையிலிருந்து மக்களை பிரித்து தூரவைப்பதன் மூலம் மக்களை அறியாமையில் வைக்க முயல்கின்றன. இதை விரும்பியோ விரும்பாமலோ தெளிவில்லாமலோ தெளிந்தோ இந்த ஊடகங்கள் செய்யலாம். ஆனால் இந்த ஊடகங்களும் இவற்றில் இயங்கும் பல ஊடகவியலாளர்களும் தமிழ் மேலாதிக்க மனோபாவத்தால் கட்டமைக்கப்பட்டவர்கள். (இந்த ஊடக கலாச்சாரத்திற்கெதிரான முயற்சிகளில் ஈடுபட்ட கசப்பனுபவங்கள் எனக்குண்டு என்பதால் இதனை இங்க அழுத்தமாக குறிப்பிட முடியும்.) எனவே இவர்களாலும் இந்த ஊடகங்களாலும் கட்டமைக்கப்படுகின்ற உலகத்தில் (வன்னியில் எல்லாவற்றிகும் தடை வேறு) இருந்தகொண்டு எழுதும் அல்லது எழுதத் தொடங்கும் இளந்தலைமுறையின் எழுத்துக்கள் ஆரம்பத்தில் இவை உருவாக்கும் போது மனநிலையில் - படிமத்தில் - இருந்தே பிறக்கும். ஆனால் பின்னர் ஆளுமையும் சுயமும் உள்ள படைப்பாளிகள் இவற்றில் இருந்து விலகிச்சென்று விடுகின்றனர்.
இதுவே அகிலனுக்கும் தீபச்செல்வனுக்கும் நிகழ்ந்தது. இதுவே சேரனுக்கும், ஜெயபாலனுக்கும் ஏனையோருக்கும் நிகழ்ந்தது. அதாவது காலப்போக்கில் தன்னுடைய அனுபவத்திலுலிருந்தும் நோக்கு நிலையிலிருந்தும் இன்னும் விசாலிக்கும் போதும் தமிழ்ச் சூழலிலேயே நிலவுகின்ற ஜனநாயக மறுப்பையும் அதிகாரத்துவத்தையும் கண்டு அதிர்ச்சியடைகின்றார் ஒரு படைப்பாளி. இது இந்தச் சூழலில் ஏதோ திடீரென முளைத்துள்ள நிலமைகள் அல்ல. தொடர்ந்து நீண்ட காலமாக வளர்ந்திருக்கும் இத்தகைய எதிர்நிலைகள் சிங்கள இனவாதத்தினாலும் அரச பயங்கரவாதத்தினாலும் போர்த்தி மறைக்கப்பட்டிருந்தன என்பதே இங்கு சோகம். (இதற்கு பலியானோரில் நானும் ஒருத்தன்) எனவே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இனவாதத்திற்கு எதிராகவும் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விடுதலைக் குரலை உயர்த்திய பல கவிஞர்கள் பின்னாட்களில் தமிழ்ச்சூழலில் நிலவும் ஜனநாயக விரோத சூழலையும் தமிழ் இனவாதத்தையும் விமர்சிப்பதில் வந்து நின்றனர். இதற்கு நல்ல உதாரணம் “மரணத்தில் வாழ்வோம்” கவிஞர்கள்.
இங்கே தீபச்செல்வனும் சரி அகிலனும் சரி இந்த வகையிலேயே உள்ளனர். ஆனால் நட்சத்திரன், செவ்விந்தியன் போன்றோர் இதற்கு விதிவிலக்கு எனக் கண்டோம். தீபச்செல்வனின் முதல்நிலை அனுபவம் வன்னிச் சூழலும் அங்கு நிகழ்ந்த போருமே. வன்னிப் போர் பற்றிய விமர்சனங்களும் கண்டனங்களுமே அவருடைய முதற்கட்ட கவிதைகள். குறிப்பாக பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைகள். ஆனால் தீபச்செல்வனின் இணையத்தளத்திற் காணப்படுகின்ற கவிதைகள்; பலவும் வன்னியின் இறுதிக்கால நிலவரம் தொடர்பானவை. ஏனையவை யாழ்ப்பாண நிலமைகளின் பதிவுகள் அல்லது வெளிப்பாடு.
“எனது அறையை சூழ்ந்து வந்தன
பல மிருகங்கள்
-------------------------------------
--------------------------------
அறைகளை முழுக்க
மோப்பமிடுகிறது அந்த நாய்
புத்தகங்களையும்
பேனாக்களையும்
ட்ரக்கில் நிரப்பி விடுகின்றது.
ஆந்த மிருகங்கள்
என்னை நெருங்கி அறைந்த விடுகின்றன
கைகள் கழன்று விட
நான் முண்டமாகி கிடந்தேன்.
தணிக்கை செய்யப்பட்ட செய்தியை
வானொலி வாசிக்கிறது.
சொற்கள் கொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்ட
துப்பாக்கிகள் விழுங்கிய இரவின்
மறுநாள்
குருதி வடியும் புத்தகங்களை சுமந்து
நானும் அவளும் வகுப்பறைக்கு போனோம்.
(துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்)
இத்தகைய கவிதைகள் ஈழக்கவிதைகளுடன் பரிச்சயமானவர்களுக்கு புதுமையல்ல. சேரனின் கவிதை ஒன்றும் ஏறக்குறைய இதேபோன்றுதான் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அது சிறைச்சாலை வரை நீழ்கிறது. உண்மையில் தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாற்றீடாகவே இந்தக் கவிதைக் குரல்கள் முன்னெழுகின்றன. இந்தப் படைப்புக்களின் முக்கியத்தவம் என்பது முதல் நிலையில் இவை மறைக்கப்பட்டவற்றிற்கு எதிரான தடைகளுக்கெதிரான ஒலிப்புக்களே. (ஆனால் இத்தகைய எழுத்துக்கள் பிற விவகாரங்கள் பலவற்றை மறைத்ததையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். குறிப்பாக ஜனநாயகமற்ற சூழல், முஸ்லிம் விவாதம், தலித்துக்களின் பிரச்சனை போன்றன) எப்படியோ தணிக்கை செய்யப்பட்ட செய்திகளுக்கு மாற்றீடாக தன் கவிதைகளை முன்வைக்கும்.
தீபச்செல்வன் அதிகமாக நிகழ்வகளை பதிவாக்கும், ஆதாரப்படுத்தும் ஓர் உபாய முறையில் அதிகமாத் தன்னுடைய கவனத்தை குவித்திருக்கிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஒரு கவிதைகளில் எட்டுக் கவிதைகளுக்கு அடிக்குறிப்புக்கள் உள்ளன. இந்தக் குறிப்புக்கள் இந்தக் கவிதை எழுந்ததற்கான பின்ணணியை விபரிப்பன. நிகழ்ச்சியை கூறுவன. நூலின் அறிமுகத்தில் சொல்லப்படுவதைப் போன்று ‘நோக்கம் சார்ந்து வெளிப்படையாக பேசும்’ பண்பைக் கொண்டவை இந்தக் கவிதைகள். இதுதான் தீபச்செல்வனுக்கு இப்போது அவசியமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வெளிப்படை சாதாரணமானதல்ல. அசாதாரணமானது. குறிப்பாக “யாழ் நகரம்” என்ற கவிதை,
ஒரு கொத்துரொட்டிக் கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி: யாழ் நகரம்
யாழ்ப்பாணத்தின் ஒருகாலகட்ட நிலவரத்தையும நிகழ்ச்சிகளையும் இந்த மூன்று வரிகளும் சாதாரணமாக சொல்லிவிடுகின்றன. ஆனால் இவை சொல்லும் அல்லது மனதுள் விரிக்கும் அசாதாரண நிலை மிகப் பெரியது. யுத்தம் முடிந்த பின்னரும் - இவ்வளவுக்கும் யுத்தம் நடந்தது வன்னியில் - இன்னும் யாழ்ப்பாணம் உறை நிலையில் இருந்து மீளவில்லை. அச்சப் பிராந்தியத்துள் அது அமிழ்ந்தேயிருக்கிறது. கிலி நீங்கவில்லை. அவ்வளவுக்கு இரவுக்கொலைகள், இனந்தெரியாத கொலைகள் யாழ்ப்பாணத்தின் இரத்தவோட்டத்தை உறைய வைத்தன. இன்றும் ஊரடங்கு நீங்காத நகரமாகவே இருக்கிறது யாழ்ப்பாணம்.
யாழ் நகரம் பற்றி கடந்த முப்பது ஆண்டுகளில் ஏராளம் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. நுஃமான், அ.யேசுராசா, சோ.பத்மநாதன், சேரன், மைதிலி, நிலாந்தன், சத்தியபாலன், இயல்வாணன், பா.அகிலன், புதுவை இரத்தினதுரை எனப்பலர் யுத்தகால யாழ்நகரை எழுதியிருக்கின்றனர். ஆனால் என்னுடைய வாசிப்பில் பா.அகிலனின் (யாழ்ப்பாணம் 1996 நத்தார்) என்ற கவிதையும் தீபச்செல்வனின் யாழ் நகரமும் ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம் என்பேன். பா.அகிலனின் கவிதைகள் கலை எழுச்சியுடன் அமையப்பெற்றது. தீவிர உணர்தளத்தை நோக்கி ஊடுருவும் வீச்சையுடையது. தீபச்செல்வனின் கவிதை காட்சி விபரிப்பாக எழுந்து மனதில் அழுத்தமாக இந்தக் காட்சியை உறைய வைப்பது. காட்சிப்படிமத்தை உருவாக்கும் வகையில் தீபச்செல்வன் சொற்களை இணைக்கும் உத்தியை – தொழில்நுட்பத்தை – கையாள்கிறார். சொற்களை ஒரு காட்சி சாதனமாக்குகிறார் என்றும் சொல்லலாம்.
வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூண்கள் உயிரை குடிக்கின்றன
யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்து ரொட்டிகடை திறந்திருக்கிறது.
(யாழ் நகரம்)
இந்தச சித்தரிப்பு நாமகளின் ‘யதார்த்தம்’ கவிதையை ஒத்திருக்கிறது. அதேபோல ‘காகங்கள் கரைகின்றன மரணம் நிகழ்கின்றது’ என்றவாறாக செல்லும் அஷ்வகோஸின் கவிதையையும் ஒத்திருக்கிறது. சாவும் அவலமும் துயரமும் இயல்பாகிப்போயிருக்கிறது என்பதையே இவை சொல்கின்றன. ஆனால் தீபச்செல்வன் இந்த இயல்பை சிதைத்த விடுகின்றார். இதில் அதிர்ச்சியூட்டும் இன்னொரு இடம்,
நீங்கள் சாப்பிடும் கொத்துரொட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்
(யாழ் நகரம்)
எவ்வளவு குரூரமான யதார்த்தம் இது.
இந்தத் தொகுதியில் உள்ள இன்னொர கவனத்திற்குரிய கவிதை ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ இந்தக் கவிதையின் அரசியல் பற்றி பல முரண்பாடுகள் உண்டு.
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்’
என்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான தீபச்செல்வனின் எதிர்ப்புணர்வு நிபந்தனையற்று, கேள்விகளற்று சதாமை ஆதரிக்க வைக்கிறது. சதாமின் ஜனநாயக மறுப்புகளும் வரலாற்று குருட்டுத்தனங்களும் குர்திஷ்களுக்கு சதாம் இளைத்த அநீதியும் இங்கே கண்டுகொள்ளப்படவில்லை. இதே வேளை இந்தக்கவிதையில் வரும்
நான்
கடும் யுத்தப்பேரழிவில் பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்த பதுங்கு குழியில்
பிரசவித்திருக்கிறேன்.
(பதுங்கு குழியில் பிறந்த குழந்தை)
என்ற அடிகள் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டதை போல ஈழத்தின் தொடர் யுத்தச் சூழலை இலகுவாகவும் துல்லியமாகவும் சொல்கிறது. ஆனால் ஈழக்கவிதைகளில் பின்னாட்களில் உருவாகியிருக்கும் ஈழ்ப்போராட்டம் பற்றிய விமர்சனங்கள் தீபச்செல்வனிடம் இங்கு முழு அளவில் இல்லை. நிகழ்ச்சிகளை பதிவுசெய்தல், அவற்றின அடியாக எழும் உணர்வுகளை வெளிப்படுத்தல் என்பவற்றை தனது அக்கறையாகவும் முறைமையாகவும் கொள்கிறார் தீபச்செல்வன்.
இது அவரை விமர்சன பூர்வமாக எதையும் அணுக வேண்டும் என்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு ஆயத்த நிலை என்று கருதலாம். ஏனெனில் தீபச்செல்வன் வரிசைப்படுத்தும் நிகழ்ச்சிகள் அவரை அப்படியொரு நிலைக்கே கொண்டு போகும். ஈழப்போராட்டத்தை ஆதரித்த படைப்பாளிகளில் பலரும் இத்தகைய ஒரு பரிணாம நிலையையே எட்டியுமிருக்கின்றனர். இப்போது இணையங்களில் காணப்படுகின்ற தீபச்செல்வனின் கவிதைகளும் பிற எழுத்துக்களும் அதை நிரூபிக்கின்றன. இது புலிகளின் வீழ்ச்சியுடன் ஏற்பட்ட மாற்றமல்ல. ஏற்கனவே அவருடன் தொடர்புடையோருக்கு அவரிடம் நிகழ்ந்து வந்த இந்த வளர்ச்சியைத் தெரியும். அவர் தொடர்பு கொள்ளத்தொடங்கிய இணையங்கள் இதற்கு இன்னொரு ஆதாரம்.
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை நூலில் இரவு நதி, முட்களுக்காக முளைத்திருக்கும் கால்;கள், கத்தி, அம்மாவின் வீடு கட்டும் திட்டம், இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்பு பறவை, இரவு நட்சத்திரங்கள், சாபத்தின் நிழல், யாழ் நகரம், பதுங்கு குழியில் பிறந்த குழந்தை ஆகிய கவிதைகள் கவனத்திற்குரியன. நம் மனதில் துக்கத்தையும் அதிர்ச்சியையும் நிகழ்த்துவன. மூடுண்ட ஈழச் சூழலின் உள்ளரங்க நிகழ்ச்சிகளில் ஒரு தொகுதியை பதுங்கு குழியில் பிறந்த குழந்தை சொல்கின்றது. ஆனால் பல தொகுதிகள் சொல்லப்படவிருக்கு. அதைச் சொல்லத் தெடங்கியிருக்கிறார் தீபச்செல்வன் தன்னுடைய இன்றைய கவிதைகளில்.
-----------------------
Sunday, August 23, 2009
காலத்தின் ஓளியை அவாவுகிற கவிதைகளின் இதழ்- நடுகை

இதழ் 01
இருள் படிந்த காலத்தையும் கனக்கிற துயர்களையும் அநேகம் கவிதைகள் புலப்படுத்துகின்றன. நடுகை இரண்டில் வந்த கவிதைகளில் சித்தாந்தனின் ‘வெறுமையின் மீது வலி’ நெய்யும் பாடல் என்ற கவிதை வெறுமையான காலம் பற்றி சித்திரமாக இருக்கிறது. சொற்களின் நெருக்கடிகளது காலத்தை அது பேசுகிறது.
“நிரவி அடைக்கவியலா வெற்றிடத்தை
சோற்களால் துயரெழுப்பிச் சூழ்கின்ற
எண்ணற்ற குரல்களையும்
கௌவித்தின்கின்றது காத்திருந்த மிருகம்”
முற்றுகையின் நெருக்குவாரத்தையும் சிதைந்த நகரத்தின் ஏக்கத்தையும் ஆபத்து நிலைகளையும் பேசி வருகிறது சித்தாந்தன் கவிதைகள். இது காலம் பற்றிய ஏக்கமாகவும் அது பற்றி உணர்ந்த ஆபத்து நிலையாகவும் வருகிறது.
அடுத்து சி.ரமேஷ் எழுதிய ‘ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா.இராமலிங்கம்’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். வாழ்வின் முற்ககால நெருக்கடி அனுபவநிலைகளை வெளிப்படுத்திய தா.இராமலிங்கம் சொற்களை கையாளுகிற முறையில் தனித்துவமானவர். அவருடைய சொற்கள் வாழ்நிலையுடனும் மண் நிறத்துடனும் மணந்து கொண்டிருப்பவை. தா.இராமலிங்கத்தின் மரணம் நெருக்கடிகளின் மத்தியில் நிகழ்ந்திருந்தது. அவரது இடம் குறித்தும் சொற்களின் இழப்புக் குறித்தும் கவனம் கொள்ளப்படாத நிலையில் சி.ரமேஷ் எழுதிய பதிவு முக்கியம் பெறுகிறது. தூ.இராமலிங்கத்தின் கவிதைகள் பற்றிய வாசிப்பாகவும் தகவல்களின் திரட்hகவும் இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது.
அடுத்து ஆபிரிக்க கவிஞர் பிலிப் ஜூவாவோவின் ‘உலோகக் கழிவு’ என்ற கவிதையும் பிலிப் ஜூவாவோ பற்றிய குறிப்பும் ‘ஒரு கவிஞன் ஒரு கவிதை’ என்று இடம்பெறுகிறது. மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த யோ.கௌதமி என்ற உயர்தர வகுப்பு மாணவியின் ‘விண்ணப்பம்’ என்ற கவிதை இடம்பெறுகிறது.
“தொல்லைகள் துரத்தும்
துயரக்கதை
முடிவே இல்லாமல்
முடிச்சிடும் பிரச்சினைகள்
பலவீனம் மேலெழ
அழுகை பலமாகிறது”
முடிவற்ற நெருக்கடி பற்றி ஒரளவு நேர்த்தியுடன் பேசுகிறது இந்தக் கவிதை. இவற்றுடன் ‘காமாணற்போன வாசம்’ தாட்சாயணி கவிதை, ‘விம்பத்துடன் வாழ்தல்’ தபின் கவிதை என்பனவும் இடம்பெறுகிறது. ந.சத்தியபாலனின் ‘விருந்தயரும் காங்கள்’ என்ற கவிதை புண்ணை கிளறும் வலிகளை தவிப்பு நிலையில் வெளிப்படுத்துகிறது. சலனியின் ‘காத்திருப்பின் வலி’ காத்திருத்தலின் மனநிலை குறித்து பேசுகிறது.
கவிதை உருவாக்கும் முறை அமிலோவல் கட்டுரையை தமிழில் பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். சீனாவின் முதலாவது கவிதைத் தொகுதி நர்த்தகன் எழுதிய குறிப்பும் இடம்பெறுகிறது. ஒரு கனவின் துயரிசை என்ற கவிதையை ஜி.எம்.ரி.ருத்ரா எழுதியிருக்கிறார்.
அடுத்து கோகுலராகவனின் ‘இழத்தலின் பாடல்’ கவிதை இடம்பெறுகிறது. கனவின் இழப்புப் பற்றிய பெருந் தவிப்புடன் சமுத்திரத்தில் தாழ்க்கப்படுகிற சொற்களாக இந்தக்கவிதையின் சொற்கள் இடம்பெறுகிறது. கவிதையின் இடையில் வருகிற சொற்களைத் தவிர பொழுதின் இழப்புப் பற்றிய துயர்ச் சித்திரமாயிருக்கிறது.
“ஆயிரம் கனவுகளை
தெருவில் எறிந்து பின்
ஒரு கணத்தில்
சிறகுகளை வெட்டி வீசிவிட்டு
உலாப்போக நினைக்கிறன்றது
சிறுபறவை
என் கனவுகள் முழுச் சாக்கில்
கட்டப்பட்டு நதியில்
வீசப்பட்டன”
அடுத்து ‘ஜெபஙகளின் மீதெழுகிற அழுகை’ என்ற தீபச்செல்வன் கவிதை இடம்பெறுகிறது.
இதழ் 02
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் படருகிற துயரை பிழைத்த உலகத்தை பேசுகிற ‘வாயடைத்துப் போனோம்’ கவிதை இ.முருகையனின் இழப்பினை முன்னிட்டு இரண்டாவது இதழின் முகப்பில் வெளியாகியுள்ளது.
“ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை
திக் கென்ற மோதல்
திடுக்கிட்டுப் போனோம்
வராதாம் ஒரு சொல்லும்”
என்று நெருக்கடியின் கையறு நிலையைப் புலப்படுத்துகிறது இந்தக்கவிதை. ர்pஷான்ஷெரிப்பின் ‘சிதைந்த நாட்களோடு ஓய்தல்’ கவிதை மரணத் தருவாயிலிருந்து மீண்ட நஞ்சு படிந்த நினைவுகளை மீட்டுகிறது. அடுத்து அம்மனின் ‘மிதப்பு’ கவிதை இடம்பெறுகிறது. புத்தகங்களோடு ஒரு சில பொழுது என்ற கவிதையை மல்லாகம் மகா வித்தியாலய உயர்தர மாணவி யமுனா செல்வராஜா எழுதியிருக்கிறார். ஊரெழு கணேச வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கறகும் மாணவி நீ.சுகன்யாவின் சுதந்திரம் கவிதையும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 11ஆம் தரத்தில் கற்கும் மாணவி க.சாதனாவின் பூக்க மறுக்கின்றது ஒரு பூஞ்செடி என்ற கவிதையும் இடம்பெறுகிறது. இதில் சாதனாவின் சொற்கள் நம்பிக்கையை தருகின்றன.
“கறை படிந்த ஒற்றயடிப் பாதையில்
மீண்டும் ஓர் பயணம்
நசுக்கப்பட்டு
வதைக்கப்பட்ட பெண்கைக்கு
உதிர்ந்த இதழ்கள்
வண்டின் வரகவ்காக ஏங்குதல்போல்
உடைந்த என் மனமும்
ஏதோ ஒன்றைத் தேடுகின்றது”
என்று அவர் உடைந்த மனதின் பெருக்கத்தை எழுதுகிறார். பிரிவு என்ற கவிதையை வடமராச்சி மத்திய மகளிர் கல்லூரி உயர்தர மாணவி இ.திசாந்தினி எழுதியிருக்கிறார். அடுத்து உடுவில் மகளிர் கல்லூரி உயர்தர மாணவி எழுதிய பாசத்தைத்தேடல் என்ற கவிதையும் இடம்பெறுகிறது. மரணம் முடிவு கொள்ளுகிற வாழ்வை மரணமற்ற இயற்கையிடம் ஒப்பிட்டு பொருளைத் தொடுகிறது பண்ணாகம் மெய் கண்டான் மகாவித்தியாலய உயர்தர மாணவி இ.யசோதாவின் கவிதை.
“நித்தமும் உலகில்
பூக்கள் மலரும்
அலையும் காற்றும்
ஆட்டம் போடும்
புவியில் நிலைப்பவை இவையே”
என்று தொடருகிறது அந்தக் கவிதை. இங்கு பள்ளி மாணவர்களின் கவிதைகளில் சில கவிதைகள் ஆரம்ப நிலைகளையும் முளைவிடு பருவத்தையும் கொண்டிருக்கிறது. பின்பக்கம் கவிழ்ந்தும் மறைந்திருக்கிற பிம்பங்களையும் எந்தக் கவிதைகளும் கொண்டிருக்காமல் மிகவும் இயல்பாக இருக்கின்றன. கோட்பாட்டு நிலை பெறாத யதார்த்த்தின் வெளி;பாடாக இளைவர்களின் கவிதைகள் வருகிறது.
திருமறைக்கலா மன்னறத்தினரால் ஒரு முறை கவிதைப் போட்டி நடத்தப்பட்டபோது அதனை வாசிப்புச் செய்ய நேர்ந்தது. அங்கு என்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கவிதைகளை எழுதியிருந்தார்கள். எல்லோருடைய கவிதைகளும் யாழ்ப்பாணத்தினதும் ஈழ மக்களினதும் மனங்களின் நெருக்கடிகளையும் துயர்களையும் வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருந்தன. எனவே நெருக்கடியான காலத்தில் சிதைவுகளுக்குள்ளாகிற நிலத்தில் வருகிற குழந்தைகளின் சொற்கள் மனம்பொருந்திய உணர்வுப்பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. அப்படி அவர்கள் எழுதுவதற்கு நடுகை வாய்பபாக இருக்கிறது.
கிண்ணியா பாயிஸா அலியின் தசைரோபோ என்ற கவிதையுடன் மருதம் கேதிஸின் ‘தவறியிருக்கின்றது ஒரு துளி நெருப்பு’ கவிதையும் இடம்பெறுகிறது.
“உள்ளிருந்து எல்லா அதியற்புதங்களையும்
நிகழ்த்திய ஒரு துளி நெருப்பு
தவறியிருக்கிறது”
என்ற சொற்களுடன் தொடங்கும் கவிதை மனதின் பெரு உணர்வெழுச்சியை வெளிப்படுத்துகிறது. கவிதை உருவாக்கம் முறை’ கட்டுரையின் தொடர்ச்சியுடன் கவிஞர் இ.முருகையன் பற்றிய சி.ரமேஷின் ‘காலத்தை வென்ற கவிஞர்க்குக் கவிஞன் இ.முருகையன்’ என்ற கட்டுரையும் ‘சித்தாந்த சார்பொன்றின் ஆத்ம கீதம்’ என்ற த.அஜந்தகுமாரின் கட்டுரையையும் இந்த இதழில் வந்திருக்கிறது. ரமேஷின் கட்டரை முருகையன் பற்றிய முழுமையான தகவல்களுடன் அவரது இடத்தை நிறுவுகிறது. அஜந்தகுமாரின் கட்டுரை முருகையனின் கவிதைகளை முற்போக்கு, பொதுவுடமை, விடுதலை போன்ற சமூக எழுச்சித் தளங்களை சுருக்கமாக குறிப்படுகிறது.
நடுகை இதழின் இந்த மீள் வருகையும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக கவிதை- சொற்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதுடன் எல்லாக் குரல்களையும் இணைத்துத் தருகிறது. எளிமையான வடிவமைப்புடன் 5 ரூபா விலையில் சொற்களை சனங்களிடம் கொண்டு போகிறது.
- தீபச்செல்வன்
Friday, July 10, 2009
அம்பலம்: ஒடுங்கிய காலத்தில் உட்க்கொதிக்கிற நகரத்தில் வெளிவந்த இதழ்

ஈழத்தில் வருகிற இதழ்கள் சனங்களைப்போலவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. துணிச்சலாக கருத்துச் சொல்லும் ஒரு இதழாக வெளிவருவதென்பது சாத்தியமற்றிருக்கறிது. இருப்பினும் ஒரு சில இதழ்கள் அப்படி வருகின்றன. ஆனால் பல இதழ்கள் காலத்தின் நெருக்கடி குறித்து எந்த கருத்துமற்று வருகின்றன. காலத்திற்கும் சமூகத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்ற எழுத்துகளை நிரப்பி தணிக்கைகளை ஏற்று வருகின்றன. வடக்கில் முழுமையான தேக்கத்தினை சிறு பத்திரிகைகள் அடைந்து விட்டன. அவை பெரிய இடைவெளிகளுடனும், காலமாகியும் வந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தலிருந்து வந்த அம்பலம் என்ற இந்த இதழ் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘தெரிதல்’ என்ற பத்திரிகை நின்றுபோனது படைப்பிலக்கிய சூழலில் ஒரு கனதியான பத்திரிகையின் இழப்பாக இருக்கிறது. ‘தாயகம்’ என்ற தேசிய கலை இலக்கியப்பேரவையின் இதழ் தொடர்ந்து அதிகாரங்களை எதிர்த்து காலத்துக்காக குரலிட்டுக்கொண்டிருக்கிறது. ‘கலைமுகம்’ என்ற திருமறைக் கலாமன்றம் வெளியிடுகிற இதழ் நிறுவனத்தின் போக்குகளிற்கு உட்பட்டு அமைதியாக தகர்ந்த சூழலை பிரதிபலிக்கிறது. ‘ஜீவநதி’ என்ற சிறுபத்திரிகை கடந்த இரண்டு வருடமாக வந்துகொண்டிருக்கிறது. மோசமான தணிக்கைகளுக்கு உட்படுத்துவதுடன் படைப்பின் பகுதிகளை வெட்டி அவற்றிற்குள் தமது ஆதிக்கத்தை இடைச் செறுகி கட்டமைக்கப்படுகிறது. காலத்தை எந்த வித்திலும் பிரதிபலிக்காது உயிரற்ற இதழாக வருகிறது. கலைமுகம், தாயகம் என்பன வடிவமைப்பில் நேர்த்தியாக இருக்கிறது. ஜீவநதி வடிவமைப்பில் படு மோசமாக இருக்கிறது. தனிநபர் நலன்களுக்காக அது கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கிறது.
தமிழக இதழ்கள் எல்லாம் ஈழத்துப் பிரச்சினைகளை முன்னிருத்தி ஈழத்து சிறப்பிதழ்கள் என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் தமிழக மக்களோ இந்திய மக்களோ எந்த மன மாற்றத்திற்கும் உள்ளாக இடமில்லை. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதனால் எங்களுக்கு எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற மற்றும் ஈழத்து-இலங்கை இதழ்கள் வேறு ஒரு உலகத்து கதைகளை பேசியபடியிருக்கின்றன. அவை தங்களுக்கு அச்சுறுத்துல்கள் ஏற்படலாம் என அப்படி வருகிற நெருக்கடியை நாம் உணருவோம். காலம் குறித்த பதிவுகளின்றி இந்த இதழ்கள் ஈழத்தில் வெளிவந்து கொண்டிருப்பது காலத்தை இருட்டடிப்பு செய்கிற நடவடிக்கைகளுக்கு சாதகமாயிருக்கிறது.
‘மூன்றாவது மனிதன்’ என்று பௌசரால் கொண்டு வரப்பட்ட இதழ் ‘சரிநிகர்’ என்று சிவக்குமாரால் கொண்டு வரப்பட்ட இதழ் என்பன ஈழத்து சமூக அரசியலை எல்லாவிதமான பார்வைகளுடனும் பேச களம் அமைத்திருந்தன. அவை பல்வேறு நெருக்கடிகளால் நின்றுபோய்விட்டது. விடுதலைப்புலிகளின் ‘வெளிச்சம்’ என்ற பத்திரிகை கூடுதலாக வன்னிப் படைப்புக்களுடன் மிகவும் காத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் கருணாகரனும் பிறகு புதுவைஇரத்தினதுரையும் அதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஷ்ணுவால் கொண்டு வரப்பட்ட ‘தவிர’ செல்வமனோகரனால் கொண்டு வரப்பட்ட ‘தூண்டி’ என்பனவும் தற்பொழுது நின்றுவிட்டன. அனுராதபுரத்தலிருந்து வஸிம்அக்கரம் வெளிக்கொண்டு வரும் ‘படிகள்’ இதழ் ஓரளவு நேர்த்தியாக வருகிறது. எஸ்.போஸ் கவிதை இதழாக வெளியிட்ட ‘நிலம்’ இதழ் அவரது படுகொலையுடன் நின்றுவிட்டது. ‘நடுகை’, ‘ஆற்றுகை’, ‘கூத்தரங்கம்’ என்பன தற்போது வருகின்றன. இவைகளுடன் தி.ஞானசேகரனின் ‘ஞானம்’ டொமினிக்ஜீவாவின் ‘மல்லிகை’ முஸ்லீம்களின் மனவோட்டத்துடன் ‘பெருவெளி’ என்பனவும் ஈழத்து சிறு பத்திரிகைகளாக வருகின்றன.
புலம்பெயர் சூழலில் ‘உயிர்நிழல்’, ‘காலம்’, ‘எதுவரை’, ‘வடு’, ‘கலப்பை’, ‘காற்றுவெளி’ போன்ற பத்திரிகைகள் நுண் அரசியல் மற்றும் சமூக மனப்போராட்டங்களை பேசுவதற்கு திறந்த களம் அமைத்து கொண்டிருக்கிறது.
சிறு பத்திரிகைகள் சமூக அரசியலை மிகவும் நுட்பமாக பேசி அவற்றில் செல்வாக்கு செலுத்தியிருந்தன. பல நல்ல சிறுஇதழ்கள் நின்றுபோனது ஈழத்து படைப்பிலக்கிய சூழலை பாதிக்கிறது. காலம் குறித்த விவாதங்களுடன் நெருக்கடிகளை பதிவு செய்வதில் சிறுபத்திரிகையின் பங்கு முக்கியமானது. படைப்பாளிகளினதும் சிறு பத்திரிகைகளினதும் அரசியல்கூட அவற்றின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகின்றன. வணிக மற்றும் தன்னரசியல் கொண்டு வருகிற சிறுபத்திரிகையினை வெகு சுலபமாக புரிந்துகொள்ள முடியும். பிரக்ஞை பூர்வமான அடிப்படையுடன் திறந்த கருத்துக் களத்துடன் அவை வெளிவர வேண்டியது சமூகத் தேவையாக இருக்கிறது.
அம்பலம் என்ற இதழின் மீள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வடிவமைப்பில் நேர்த்தியான தன்மையுடன் வந்திருக்கும் இந்த இதழ்கூட ஒடுங்கிய காலத்தில் கொதித்து உட்கொதிக்கிற நகரத்தலிருந்து வந்தமைக்கான பெரிய மௌனம் கொண்டிருக்கிறது. பயங்கரமான மௌனமும் அடிப்படையற்ற காலத்தையும் நிரப்பி வைத்திருக்கிறது. ஈழத்து அருபமான சூழலையும் நுண் படைப்பிலக்கிய போக்கையும் பிரதிபலிக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு இதழை கொண்டு வருவது பெரிய பிரச்சினையாக இருக்க பிரபாகரன் அம்பலம் இதழை வெளிக் கொண்டு வருவது ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய நிலையை தருகிறது.
பா.அகிலனால் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தின் முகப்பு இருட்டு நகரத்தின் கொதிக்கிற அவலத்தை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக விசாகரூபன் எழுதிய புலம்பெயர் கவிதைகள் உருவம் உள்ளடக்கம் என்ற புத்தகம் பற்றிய சாங்கிருத்தியனின் விமர்சனம் இடம்பெறுகிறது. குறைபாடான, பல ஆய்வுகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட தொகுப்பை விசாகரூபன் செய்திருப்பதாக சாங்கிருத்தியன் ஆதரா பூர்வமாக காட்டுகிறார். ‘பசுவே பசுவே பசுவய்யா’ என்ற கட்டுரையில் குப்பிளான்.ஐ.சண்முகன் சுந்தரராமசாமி தொடர்பாக தனது நினைவுகளை எழுதியிருக்கிறார். தி.சதிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் மரணச்சடங்கில் பாடுதல் மரபும் இசையும் என்ற ஆய்வில் யாழ்ப்பாணத்தில் நிலவுகிற மரண சடங்கின் பாடல் இசை மரபுகளை அழகியல்தனத்துடனும் ஆய்வுப்போக்குடனும் செய்திருக்கிறார். நிலான் ஆகிருத்தியனின் ‘ஈழத்துப் பெண்களின் கவிதைப் புலத்தில் அனாரின் கவிதைகள் எனக்கு கவிதை முகம் தொகுப்பை முன்வைத்து’ என்ற கலாபூர்வமான பார்வையை செலுத்தியிருக்கிறார்.
சி.ஜெயசங்கர் கூத்தில் ஊறிய கலைஞன் என்ற கட்டுரையில் கூத்துக் கலைஞன் க.நாகப்பு பற்றி பதிவு செய்திருக்கிறார். பயணியின் ‘ஜொலிக்கும் விருதுகள்: குளறுபடிகளும் இருட்டடிப்பகளும்’ என்ற கட்டுரையில் ஈழத்து விருதுகள் குறித்த அரசியல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.துவாரகன் கலையும் வாழ்வும் என்ற கட்டுரையில் மருத்துவரும் கலைஞருமான சிவதாஸின் கலை மற்றம் வாழ்வு குறித்து எழுதியிருக்கிறார். ஆற்றக்கலையின் அவசியம் பற்றி அருணாசலம் சத்தியானந்தன் ‘ஆற்றலுக்கான ஆற்றுகைக் கலை அல்லது ஆறுதலுக்கான ஆற்றுகை’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.
சிறுகதைகளில் தாட்சாயணியின் ‘கிழக்கின் வெளிச்சம’; யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கிற வாழ்வு நெருக்கடி குறித்து பேசுகிறது. தேஜோமயனின் ‘(130 லட்சம் 25 பவுண் நகை) பெண்ணுடல்- 5 ஆயிரம்’ என்ற சிறுகதை சீதனம் பற்றியும் அதனுடன் பெண்ணுடல் பறறியும் இணைத்துச் சொல்லுகிறது. இவற்றுடன் சத்தியபாலனின் ‘ஈசு’ என்ற கதையும் இடம்பெறுகிறது. கவிதைகளை அனார், மருதம் கேதீஸ், ஸப்தமி, கோகுலராகவன், மாசிதன், கல்லூரான், நிஷா, தேஜஸ்வினி முதலியோர் எழுதியிருக்கிறார்கள். தேஜஸ்வினியின் 'அந்நியமொழியில் பேசுதல்' கவிதை மனமுரண்களை பேசுகிறது. யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய பெண் கவிஞராக தேஜஸ்வினியயை இனங்காணமுடிகிறது.
கலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் அவர் எழுதிய நான்கு கவிதைளில் சிலவற்றை கொண்டு அதை மேலும் உணர முடிகிறது. “புன்னைச் சருகுகள்/ இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன/ அன்றொருநாள்/ அக்குருதியின் நெடியில்/ எங்கள் கனாக்காலத்தின்/ வசந்தங்கள் கரைந்திருந்தன” (கனாக்காலம்), “ஆந்தைகளின் அலறல்களில்/ புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில்/ நீ வருவாய்/ சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து/ ஒற்றை முத்தம் தருவாய்” (நானும் நீயும்) பள்ளி உயர்தர மாணவியான தேஜஸ்வினியின் மேற்குறித்த சொற்கள் நம்பிக்கை தரக்கூயடி முன்னீடாக இருக்கின்றன.
இவைகளுடன் பா.துவாரகனின் கடிதம், குறிப்புகள், நூல் அறிமுகங்கள், பதிவுகள் என்பனவும் இடம்பெறுகின்றன. அம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற இதழ் என்ற வகையில் தற்போது அதன் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அது உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களும் பேசவேண்டிய சொற்கள் செல்ல வேண்டிய வெளிகள் இன்னும் இருக்கின்றன. மனந்திறந்த உரையாடல்களுக்கும் காலத்தின் சொற்களுக்குமான வெளியுடன் அம்பலம் மிகவும் காத்திரமாக தொடர்ந்து வருகிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது
.
Friday, June 12, 2009
சலனப்படுகிற வாழ்வின் கதி ð ந.சத்தியபாலன் கவிதைகள்
சலனப்படுகிற வாழ்வின் கதியினை ந.சத்தியபாலனின் கவிதைகள் காண்பிக்கின்றன. இயல்பான வாழ்க்கையினால் வடிவமைக்கப்பட்ட சூழலை வேண்டுகிறதையும் குழம்பியிருக்கிற இயல்பினை கண்டு மௌனமாக துயருருவதையும் உணர முடிகிறது. ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சத்தியபாலனின் 'இப்படியாயிற்று நூற்றொராவது தடவையும்' கவிதை நூல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தை அப்படியே பிரதிபலிக்கிற படைப்புக்கள் எழுகிறதென்பது அதன் இன்றைய வடிவமைப்பிலும் ஆளுகையிலும் சாத்தியமற்ற தொன்று என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும். இப்பாடியாயிருக்கிறது என் வாழ்வின் கதி என்பதைப்போல சத்தியபாலன் கவிதைகள் வெளியாகியிருப்பது நம்பிக்கை தரக்கூடிய படைப்பின் சூழலை வெளிப்டுத்துகிறது.
விமர்சனம் என்பது ஒரு வகையில் படைப்பு பறறிய இன்னொரு படைப்பு என்கிற மாதிரி அருந்தாகரன் கூறுகிறார். சத்தியபாலனின் கவிதைகளை உடைத்து வாசிப்பதன் ஊடாக அவரின் கவிதையின் வெளியை உணர வேண்டும் என்று நினைக்கிறேன். அவரது கவிதைகளின் சிறிய வடிவங்களும் இறுகிய சொற்களும் பின்னால் மறைந்திருக்கிற மௌனங்களும் விரித்து வாசிக்கபட வேண்டியிருக்கிறது.
சத்தியபாலனின் கவிதைகள் வெறும் தன்னுணர்வு சார்ந்த கவிதைகள் என்ற கருத்தை புறக்கணிப்பதுடன் அப்பால் எல்லாவற்றுக்குமான வெளியை இவை கொண்டிருக்கின்றன. இன்று கவனம் பெறாவிட்டாலும் பின்னரொரு காலத்துக்கான கவிதைகளாக கவனம் பெறும் என்று அவரது காலத்தை இன்றைக்கு தள்ளிவிட முடியாது. அவர் இன்றைக்குத்தான் இப்படியாயிற்று என்று எழுதுகிறார். இருப்பினும் சத்தியபாலன் ஏன்., இப்படி எழுதுகிறார். இவ்வாறான சொற்களை தெரிவு செய்திருக்கிறார். அவரது இடைவெளிகளும் மௌனங்களும் எதையுணர்த்துகின்றன. என்ற கேள்விகள் கவிதைகளை சுற்றியபடியிருக்கின்றன. அவர் பேசாத சென்றிருக்காத அவருக்குரிய சொற்களின் கதியை இப்படியாயிற்று நூற்றியொராவது தடவையும் கவிதைகளில் உணர முடிகிறது.
சத்தியபாலனின் கவிதைகள் பற்றி சி.ரமேஷ் மற்றும் அ.யேசுராசா ஆய்வுகளை முன் வைத்திருந்தார்கள். அவர்களின் கருத்துப்படி சத்தியபாலனின் கவிதைகள் இன்றைய கால அரசியலை முன் வைப்பதை விட தன்னுணர்வை முன்வைப்பதாக அமைந்திருந்தது. அரசியலை பேசுகிறதாக ஒரு இரு கவிதைகளை யேசுராசா வாசித்திருந்தார். எனது வாசிப்பின்படி சத்தியபாலன் தான் வாழுகிற சமூகத்தை அப்படியே பிரதிபலிப்பதாக படுகிறது. அவர் தனது வாழ்வின் ஒடுங்கியிருக்கிற பாங்கில் குருட்டுத்தனமான அரசியலை பின்னியிருக்கிறார்.
மனித குணங்கள் மாறுகிற சக மனிதர்களை வதைக்கிற வாழ்வின் தன்மை கொண்டது. அது பிரிவுகளாலும் இணைவுகளாலும் சக மனிதர்களை கொண்டு சென்றுகொண்டேயிருக்கிற உலகமாயுமிருக்கிறது. சத்தியபாலனின் கவிதைகள் மனிதர்களின் குணங்களின்., அவர்களின் அரசியலால் சூழ்ந்திருக்கிற வாழ்க்கையின் பின்னாலிருக்கிற வெளிகள் பற்றி அவாவிக்கொண்டிருக்கிறது.
போரும் அரசியலும் இயற்கையை சிதைத்துக்கொண்டிருக்கிறது. அரசியலால் சிதைந்திருக்கிற இயற்கையினை அதனால் சிதைந்திருக்கிற கவனங்களை எல்லாம் நிருமூலமாயிருக்கிற வாழ்வை ஆணி அறையப்பட்ட தலைகளை அதிகாரம் குத்திக் கொண்டிருக்கிற கனவை தன்னை சுற்றியிருக்கிற வாழ்வை அடக்கி பேசுகிறன்றன சத்தியபாலனின் கவிதைகள். இவை எல்லாவற்றையும் கண்டு அதற்கூடாக நுழைந்து வந்து எல்லாவற்றின் மீதான தனது சொற்களையும் எதன் மீதோ எறிந்து கொண்டிருக்கிறார்.
ஒரு வகையில் சொன்னால் தெருவில் சென்று திரும்ப முடியாத துயரத்தை அதனால் ஏற்படுகிற கோபத்தை இரவால் மூடியிருக்கிற விளக்கின் மீது பேசிக்கொண்டிருப்தைபோலான கவிதைகள். மிகவும் மெல்லிய மனிதனின் வெளியால் ஒடுங்கியிருக்கிற வீட்டுக்குள்ளிருந்து தன்பாட்டில் உதிர்த்தெறியப்பட்ட சொற்களின் கதியாக புத்தகம் உருவாகியிருக்கிறது.
---------------------------------------------------------------------------
Tuesday, December 2, 2008
அம்மாக்கள் சுமக்கிற துயரங்கள்:மாதுமை கவிதை
____________________________________
காலம் மற்றும் சனங்களின் நெருக்கடிகளை பிரிதிபலிக்கும் பல கடிதங்களை வாசிக்க முடிகிறது. எனது அம்மா எனக்கு எழுதுகிற கடிதங்களிலும்கூட நான் பெரிய துயரங்களை கண்டேன். மிகவும் கசங்கிய ஒரு கொப்பித்தாளின் ஒரு பக்கத்தில் முடிகிற அந்தக் கடிதத்தில் அம்மா எழுதாத துயரங்கள் பெருகுவதை என்னால் உணரமுடிகிறது. அதைப்போலவே என்னோடு படிக்கும் நண்பன் ஒருவனுக்கு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் இருந்து அவனது அம்மா அப்பா தங்கைகள் தம்பி எழுதிய கடிதங்கள் மிகவும் காலதாமதமாக கிடைக்கப் பெற்றிருந்தது. அவன் அழுதுகொண்டே இருந்தான். அதில் வலிகளாலான பெருவாழ்வை வாசித்து அழத்தான் முடிந்தது.
மாதுமைக்கு அவரது அம்மா எழுதிய கடிதமும் பெருவலி சுமந்து அவருக்கு வந்திருக்கிறது.
“உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன்”
இந்த வரி சாதாரணமாக கடிதங்களில் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து வருகிற
“இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஒரே கவலையாக இருக்கிறது. உன்னைப்பார்க்க வேண்டும்போல் மனதில் ஒர் இனம்புரியாத ஆசை”
என்ற வரிகள் உண்மையில் ஒரு தாயின் மனதிற்குள்ளிருந்து எழும்புகின்ற குரல்களாக உள்ளன. அதன் கனதி முழுக்கடிதத்தையும் கவனப்படுத்துகின்றது.
போர் எல்லோரையும் துரத்திக்கொண்டிருக்கிறது. உயிரை காத்துக் கொள்ள எல்லோருமே எங்காவது போய்விட முயலுகிறோம். அதுதான் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கிற வெற்றியாக நிகழ்கிறது.
“நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன்”
இங்கிருக்கிற அனேக அம்மாக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பிள்ளைகளுடன் சேர்ந்திருப்பதைவிட அவர்கள் எங்காவது மிஞ்சியிருக்கட்டும் என்றே நெருக்கடிப்படுகிறார்கள். அந்த நெருக்கடியிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் அவர்கள் வலிகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.
“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்”
இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டது. வர முடியாது. என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.
தமிழ்நதி இங்கு வரத்துடித்துக் கூறினார். சனங்கள் அனுபவிக்கிற போரை தானும் அனுபவிக்க துணிவதை நான் உணர்ந்தேன். நிவேதா எழுதிய கடிதத்தில்
“அங்கு வாழ்வுக்கான போராட்டம் என்றால் இங்கு இருப்புக்கான போராட்டம்.”
என்று எழுதியிருந்தார். றஞ்சனி ஜெபாலன் எல்லோருமே மண்ணை பிரிந்த ஏக்கத்தையும் இங்க உறவுகள் அனுபவிக்கிற பெருந்துயரை கண்டு கொதித்து துடிப்பதையும் கேட்டிருக்கிறேன். அப்படியான வலி மாதுமையிடமும் காணப்படுகிறது.
அம்மாவின் கடிதத்தை மையப்படுத்திய மாதுமையின் பதினொரு வரிகளான இந்தக் கவிதை மிகவும் இறுக்கமாகவும் இயல்பாகவும் விரிந்த கனதியுடனும் அமைகிறது. கடிதத்தை மேலே குறிப்பிட்டு விட்டு கீழெ அதன் தாக்கமாக அல்லது வாசிப்பின் பிறகான கவிதையாக மாதுமை கவிதை இடம் பெறுகிறது. இந்த சிறிய கவிதை பரந்த ஆய்வுக்குரிய உட்பரப்பை கொண்டிருக்கிறது.
“இலங்கை அம்மாவிற்கு
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பாலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தால் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடை பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்பட்டிருந்தார் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கா அம்மா
அம்மாக்கள் மட்டும் ஒற்றமையாக இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க”
உலக அதிகாரங்கள் அம்மாக்களை வதைக்கிறது என்ற பொதுவான ஏக்கம் கவிதையில் இருக்கிறது. அம்மாக்கள் எல்லாவித்திலும் பாதிக்கபப்டுவதை மாதுமை கவிதை பேசுகிறது.
போர், அரசியல், பொருளாதாரம், கொலை, தந்திரம், ஆணாதிக்கம், பாலியல் வன்முறை எல்லாமே சேர்ந்து அம்மாக்களை வதைகிறது. அதிகாரங்களின் நகர்வுகளிலும் அதன் செயற்பாடுகளிலும் தொடர்புகளிலும் ஈடுபாடுகளிலும் வருகிற பலன் அல்லது அழிவுகளை அம்மாக்களே சுமக்க நேரிடுகிறது.
இந்த நெருக்கடிகளின் பொழுது அம்மாக்களிடம் கோடிக்கனக்கான அனுபவங்களும் கதைகளும் கண்ணீரும் உருவாகின்றன. இந்த அனுபவமும் வலியும்; எழுதி முடிக்க முயாதவை. எல்லேருடைய வினைகளையும் உலகம் எங்கிலும் அம்மாக்களே சுமப்பதாக மாதுமை கவிதை கூறுகிறது. குறிப்பிடப்படுகிற நாடுகளின் அம்மாக்கள் அந்தந்த நாடுகளின் மீது அதிகாரம் வைத்திருக்கிற குறிகளையும் அல்லது நலன்களையும் வெளிப்படுத்தகின்றன. அதன் பலன்களை அம்மாக்கள் சுமக்கும் விதத்தை எடுத்துப் பேசுகிறது.
மாதுமை எழுதிய இந்தக்கவிதை இன்றைய உலக வாழ்வுச் சூழலை பேசுகிறது. அதிகாரம் மற்றம் ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்பவற்றின் போக்கை உலகளவில் நின்று கோபப்படுகிற அவருடைய பார்வை மிகவும் பரந்ததும் முக்கியமானதுமானதாக படுகிறது.
-----------------------------------------------------------------------------
Friday, October 10, 2008
‘புரிதலின் அவலம்’ றஞ்சனி கவிதை வெளியில் அலையும் சொற்கள்
--------------------------தீபச்செல்வன்
--------------------------------------------------------------------------
றஞ்சனியின் கவிதை சிலவற்றிற்க்கு வார்ப்பு இணையதளத்தில் பின்னூட்டம் எழுதியிருந்தேன். முதல் வாசினடிப்படையில் மதிப்பிடப்பட்ட அந்தக்கருத்துக்களை நானே மீறுகிற வகையில் அவரின் புரிதலின் அவலம் என்ற கவிதை என்னை பாதிக்கிறது. பிழைத்துப்போன புரிதலிலிருந்து வெளியில் அலைகின்ற சொற்களை சில அடிகளில் இணைக்கின்ற பாங்கை றஞ்சனியிடம் காணமுடிகிறது. அத்தன்மை ஒருங்கினைந்து இந்தக் கவிதையில் துண்டாடப்பட்ட ஒரு இரவில் அல்லது ஒரு பகலில் கிடந்து உருள்கிற குருதியின் சொற்கள் கிளம்புகின்றன.
றஞ்சனியின் அடையாளத்தை 'புரிதலின் அவலம்' என்ற ஒரு கவிதையின் ஊடாக காணமுடிகிறது. அது நீண்ட வாழ்வின் ஒரு நாளை பிழைத்துப்போன நிமிடத்தின் ஒரு துளியை பேசுகிறது. மாறிமாறி மாறிவிடுகிற இணைவுக்குள்ளும் பிரிவுக்குள்ளும் அறுந்து வெளியில் வந்துவிடுகிற புழுவாக துடிப்பையும் காற்றையும் பிரதிபலிக்கிறது.
"முத்தங்களாகி கலியில் மயங்கி
இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி
கரைந்துபோகும் அடுத்த நிமிடமே
நீ ஆணாகி விடுகிறாய்."
இது வெளியின் சொற்களை காண்பிக்கிறது. கலவியில் குறையில்விட்டு எழுந்து செல்கையில் இருட்டில் படுக்கையில் கிடக்கிற தெரியாத முகத்தையும் கேடக்;காத சொற்களையும் எழுதுகிறது. குறையில் விட்டுச் செல்கிற அந்தப்படுக்கையிலிருந்து இருட்டிலிருந்து மூடுண்ட புல்பற்றையிலிருந்து எழுந்து செல்கிறதை எழுதுகிறது.
"நான் காணவேண்டிய நீ முழுமையாகக் காணாது
ஆணாக விஸ்வரூபம் எடுக்கிறாய்"
பிழைத்துப்போன நிமிடத்தை வெறுக்கிற உணர்வை எழுதியது இந்த அடிகள் கவிதையை வெளியில் இடுகிறது. குறையாய் கிடைக்கையில் ஆண் உருவம் வெளி எழும்புகிற அதன் அலத்தை எழுதுகிற போது விட்டெழும்புகிற வேகமும் வெறுப்பையும் சட்டென வெளியே சொல்லுகிறது.
"ஒரு நாள் மறந்துவிடலாம்
இரு நாள் மன்னித்து விடலாம்ஒவ்வொரு நாளும்
பைத்தியமாகிறது உறவு"
பகலின் இடைவெளியில் முகமிழந்து துடிக்கிற மொழியினையும் மறைந்துகிடக்கிற குறியின் முகத்தையும் சரிசெய்ய முடியாத கலவியையும் கேள்விக்குள்ளாக்கின்றன. பைத்தியமான அல்லது குழப்பமான பொழுதுகளை நிறைத்துவிடுகிற உறவாய் நாள் அமைந்துவிடுகிறதை வெளிப்படுத்துகிறது.
"நீ எழுதுகிறாய் பேசுகிறாய்
இதில் பெண்ணுரிமை வேறு
எதையுமே நீ புரிந்ததில்லை
எப்படி முடிகிறது உங்களால்"
வீட்டுக்குளிலிருந்து வெளியில் வந்து கேள்விகளாய் முகத்தில் அறைகின்றன இந்தச் சொற்கள். எதையுமே புரியாத நீ என்பதில் புரிந்துகொள்ளபடாது தள்ளிப்போன நிலையையும் உடைந்த முகத்தையும் கொண்டிருக்கிறது. எப்படி முடிகிறது என்பதில் தனி ஒரு கேள்வி பெரிதாய் விரிந்து எழுவதை காணமுடிகிறது.
"என்னால் முடியவில்லை விட்டுவிடு
எல்லாத்தையுமே"
கவிதையின் கடைசியில் இருக்கின்ற இந்த வரிகளுடன் இரவும் படுக்கையும் கலவியும் பகல்களும் முடிந்துவிடுகின்றன. அதன் கடைசி அடியில் இருந்து வெளி புறப்படுகின்றது அல்லது உருவாகிறது. சொற்கள் அலையத் தொடங்குகின்றன. காற்றை அறிகிற ஒளியை அறிகிற கடைசி அடிக்குப்பிறகான வெளியில் புரிந்து கொள்ள முடியாத எப்போதுமே புரிந்து கொள்ள முடியாதுபோன உணர்வு தொடர்ந்து துடித்துக்கnhண்டிருக்கிறது.
கடைசி அடியின் பிறகான வெளியில் துடிக்கின்ற வெளியில் புரிவதற்கன அவலமும் வெளியும் இருக்கிறது. இந்தப்போதாமையினையும் இடைவெளியினையும் புரிதலின் அவலத்தில் றஞ்சனி நிரப்பியுள்ளார். இந்தக்குறைநிலையினை வெளியில் வந்துபேசுவது றஞ்சனியின் மொழியின் சிறப்பாகவும் அடையாளமாகவும் படுகிறது. புரிதலின் குழப்பம் பற்றி இவர் நிறையக் கவிதைகள் எழுதியபோதும் எப்பொழுதும் கொதித்துக்கொண்டிருக்கும் நிமிடத்துளியையும் குருதியையும் இரவையும் இந்தக் கவிதை சிறப்பாக போர்வையிலிருந்து வெளியிலெடுத்துக் காட்டுகிறது. காத்திருத்தலை உடைத்து வெளியில் அலையும் எண்ணற்ற சொற்களும் இருக்கின்றன. உண்மையில் நினைவுக்கு வரும்பொழுதெல்hலாம் இந்தக் கவிதை முகத்தில் அறைந்து கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------
('பெயல் மணக்கும் பொழுதுகள்' என்ற ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுதியில் றஞ்சனியின் புரிதலின் அவலம் கவிதை இடம்பெறுகிறது)
Monday, August 25, 2008
"தாயகம்" அதிகாரங்களைப் பேசுகிறது
--------------------------தீபச்செல்வன்தாயகம் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் ஜீலை-செப்ரம்பர்2008 வெளிவந்திருக்கிறது. அதிகாரங்களிடமிருந்து சுயங்களைக் காக்கும் தன்மையும் அதிகாரத்தின் பல்வேறு கூர்மையான முகங்களையும் அதிலிருந்தான எழுச்சியையும் தாயகம் பேசுகிறது. தாயகம் இதழ் தொடர்ந்து தனது முகத்தை வலிமைப்படுத்தி புதிய வாழ்வு ஒன்றை உருவாக்க முனைகிறது. சமூகத்தில் அரசியல் பொருளாதார தன்மைகளை மிக எளிமையாக எடுத்து பேசுகிறது. உலக அரசியல் அதிகாரங்கள் எமது சுயங்களையும் உரிமைகளையும் விழுங்கும் தன்மையும் அது கல்வி பொருளாதாரம் சமயம் என்று தனது மேலாதிக்கம் கையாளும் மயங்களையும் துணிந்து பேசுகிறது.
அதன்படி 'இரும்புத்திரையும் மாயத்திரையும்' எனவும் 'உதவுங் கரங்களும் உதைக்கும் கால்களும்' எனவும் ஆசிரியர் உரைகள் எழுதப்பட்டுள்ளன.
கவிதைகள்
------------------------------------
சு.சுகனேசன்-அவர்கள் பார்வையில்
வே.மகேந்திரன்-மீள வருவோம்
ம.பா.மகாலிங்கசிவம்- எலிச் சுத்திகரிப்பு
கிருஷ்ணா- ஒளிந்து கொள் அல்லது எழுந்து நில்
தீபச்செல்வன்- பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்
நச்சீயாதீவு பர்வீன-; நான் நீ அவன் நிஜம்
கலைச்செல்வி- ஏனிந்த வம்பு
எளியோன்- மனிதத்தை விடுத்து..
எல்.வஸீம்.அக்ரம்- நிறங்களைக் காழ்பவன்
ஜி.இராஜகுலேந்திரா- ஆய்ந்து சொல்வீர்
இராகலைமோகன்- சுகம் விசாரிப்போம்
தி.காயத்திரி- கவலையின் முடிவிலி
இதயராசன்- முரண்பாடு
மொழிபெயர்ப்புக்கவிதை
----------------------------------------------------------
மஹ்முட்டர்வீஷ் -மண்ணின் கவிதை (தமிழில் மணி)
ஸீகன்த பிராச்சார்ய லால் ஸலாம்-செவ்வணக்கம் (தமிழில் சிவானந்தம்)
சிறுகதைகள்
--------------------------------------------------
ஸ்ரீ- எப்போதோ நடந்த போர் பற்றி எங்கேயோ ஒரு உரையாடல்
செவ்வந்தி- ஒரு ஓப்பதல் வாக்கு மூலம்
சோ.ஆதர்சனன்- சோமு பொடி
ச.முருகானந்தன்- தாய்
தொடர்நடைச்சித்திரம்
-------------------------------------------------------------------------
மாவை.வரோதயன்- வலிகாமம் மண்ணின் மைந்தர்கள் குழந்தை குமாரசாமி
விந்தை மனிதர்
---------------------------------
புவன ஈசுவரன்- குருநாதர் குஷ்வந்த்சிங்
ஆதவா.சு.சிந்தாமணி- அட்சய பாத்திரம் எங்கே?
சிங்கள மொழி பெயர்ப்புக்கதைகள்
-------------------------------------------------------------------
எரிக் இளையப்பாராச்சி- ஆசிரியர் ஒருவரின் காதல் (தமிழில் சி.சிவசேகரம்)
பின் வரலாற்றியல் தொடர்கதை
----------------------------------------------------------
ஜெகதலப்பிரதாபன்- ஆங்கிலேயனின் பரிசு 8 நாடு திரும்பற் படலம்
கட்டுரை
------------------------------
க.கைலாசபதி- ஏனிந்த தமிழுணர்ச்சி
சி.சிவசேகரம்- பாட்டும் பயனும் ( பாட்டும் செய்யுளும்)
விமர்சனம்
--------------------------------------
செ.சக்திதரன்- இப்சனின் 'தலைமைக் கட்டடக்காரன்'
முன் அட்டை ஓவியம் நசியும் வெளியை விடுவிக்கும் விதமாய் அதிகாரங்களைச் சாடுகிறது. மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல்வேறு செய்திகளை தருகின்றன. கூடுதலாகன தமிழ்க் கவிதைகள் அதிகாரங்களை சாடுகின்றன. புத்தக வடிவமைப்பில் இன்னும் செம்மையை ஏற்படுத்தலாம். எழுத்தருக்களின் அளவுகள் எழுத்துருக்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாள்கள் முகப்பு மற்றும் பின் பக்கம் என்பன நேர்த்தியுடன் இருக்கின்றன. எளிமையான வாசிப்புத் தளத்தில் பயணிக்கும் தன்மையுடன் தாயகம் வருகிறது. அதன்படி தொடர்ந்து தாயகம் இதழின் சீரான வருகையும் வலிமையான குரலும் தனித்து தெரிகிறது
----------------------------------------------------
“கலைமுகம்” அமைதியாக பதிகிறது
----------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரைகள்
-----------------------------
சு.குணேஸ்வரன் - புலம்பெயர் சஞ்சிகைகள்
ராசு – தேவதைகளின் மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகளும் தற்கொலையும்
கா.சிவரூபன் - பனையிடைவெளி(ஒளிப்படக் காட்சி)
சி.ரமேஷ் - உள்முக அபத்தமும் அதன் இயங்கு நிலையும்( 20ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ்க் கவிதைகள்)
செவ்வந்தி – கவிய சம்பிரதாயம் (கவிதையியற் பள்ளிகள்) ஆங்கில மூலம் நிர்மல.ஜெயின்
இ.ஜீவகாருண்யன் - ஈழத்து நவீன இலக்கிய விமர்சனம்:ஆழ் நோக்கிற்கான ஆரம்பக் குறிப்புக்கள்
குப்பிழான்.ஜ.சண்முகன் - பத்தி எழுத்தக்கள்
மகிழன் - பல்வேறு சிறப்பக்களும் கொண்டமைந்த திருமறைக்கலாமன்றத்தின் கூத்த விழா-2007(ஒரு பார்வை)
தபின் - சமகாலத்துடன் இணைந்து நின்ற தலமைக் கட்டடக்காரன் நாடகம்
தொடர்
--------------------------------
சௌ ஜன்யஷாகர்-சுவைத்தேன்-05 சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள்
யோ.யோண்சன் ராஜ்குமார்- திருமறைக் கலா மன்றத்தின்-கடல் கடந்த கலைப் பயணங்கள்-பயணம்3
கவிதைகள்
------------------------
அனார் - பருத்திக்காய்கள் வெடிக்கும் நாள்
சைத்திரிகன் -காதலர்களைப் போல இருத்தல்,காதலியைப்போல முத்தமிடல்
அ.அனுஷானி – நான் ஒரு புத்தகம்
தீபச்செல்வன் - மேசைக்கு கீழே புகைந்த சிகரட்,
நிலவு தேடிய குழந்தை,
அறையை விட்டுப் போன பல்லி,
பறவை மிருகமாகியது.
பெரிய ஜங்கரன் - இருண்மை, தூசு தட்டதல் ,சிதறும் தத்தவங்கள்
ஜோ.ஜெஸ்ரீன் -அவல நிறம்
சிறுகதைகள்
-------------------------------
குகபரன் - தாய்மைக்காக
நிர்மலன் - வழிகாட்டிகள்
பத்தி
-------------------------------
ஆ.சுரேந்தின் - பரிமாற்றம்
நேர்காணல்
-----------------------------------
சிற்பி-சிவவரவணபவன் சந்திப்பு:இயல்வாணன்
புத்தக அறிமுகம்
----------------------------------
நிலான்,கிருத்தியன் -ஒரு கடல் நீரூற்றி(பஹீமாஜஹான் கவிதைகள்)
இராகவன் -எல்லாப்பூக்களும் உதிர்ந்து விடும்(அலறி கவிதைகள்)
தி.செல்வமனோகரன- குறிப்பேட்டிலிருந்து..(அ.யேசுராசா இலக்கியக்கட்டுரைகள்)
பா.இரகுவரன்- உதிரிகளும்…(குப்பிழான் ஜ.சண்முகன் கதைகள்)
ம.ஜெயந்திரன்- பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்(யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் கதைகள்)
இவைகளுடன் நிகழ்வுகள்,பதிவுகள்,கடிதங்கள்,அஞ்சலிகள் முதலியனவும் இடம்பெறுகின்றன.
கலைமுகம் இதழை வடிவமைப்தில் காணப்படுகின்ற நுட்பங்கள்அதனை ஒரு செம்மையடைந்த இதழாக காண்பிக்கின்றன. அதிலும் இந்த இதழில் கூடுதல் நேர்த்தியும் ஒழுங்கும் காணப்படுகின்றது உள் எழுத்துருக்களின் அளவுகளும் எழுத்துருவும் தெளிவாக ஒழுங்குடன் இருக்கிறது. துலைப்புகளுக்கு ஒரு சில ஒறறுமைத்தன்மையுடைய எழுத்துருக்களை பாவித்திருக்கலாம். புத்தக வடிவமைப்பில் அலங்காரத்தனமான எழுத்துருக்கள் வெறுக்கப்படுகின்றன. அவை வாசிப்பில் அலுப்பையும் காலம் கடந்த தன்மைகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் இது பற்றிய முன்மாதிரிகளுடன் கலைமுகம் வடிவமைக்கப்படுகிறது.
கலைமுகம் தொடர்ந்தும் உரிய காலத்தில் வெளிவருவதுடன் கூடுதல் செம்மையினை பெற்று சமூகத்தின் அரசியலின் ஊடாட்டங்களின் வலிய குரலோடு வெளிவரவேண்டும். எனினும் காலத்தின் முகம் அறிந்து அமைதியாய் சமூகத்தை பதிவு செய்கிறது கலைமுகம் இதழ்.
----------------------------------------------------------------
Tuesday, June 10, 2008
அகதியாய் அலைகிற கால்கள்

எழுதியவர்:தீபச்செல்வன்
`````````````````````````````````````````````````````````````````````````
அகதியாய் அலைகிற கால்களின் வலிகளோடு ஷிப்லியின் “நிழல் தேடும் கால்கள்” கவிதைப் புத்தகம் வந்திருக்கிறது. போரின் தாக்கம் சமூகத்தின் விளைவுகள் காதலின் பிரிவு முதலிய தன்மைகளோடு எழுதப்பட்டிருக்கும் இந்த கவிதைகள் எளிமையான சொற்களை அடுக்கி உருவாக்கப்பட்டிருப்பதுடன் சாதாரண வாசகர் தரப்பினரை இலக்காக கொண்டிருக்கின்றன. ஒரு ‘ஜனரஞ்சக கவிதைப்புத்தகம’; என்ற தன்மையுடன் ஷிப்லியின் கவிதைகளும் புத்தகமும் அமைந்திருக்கிறது.
இதழ்களையும் பத்திரிகைகளையும் கவிதை மற்றும் இதர எழுத்தக்களுக்காக நம்பியிருக்கும் ஒரு சூழல் நிலவி வருகிறது. நாங்கள் எழுதுகிற கவிதைகளை இன்று அவைகளே தீர்மானித்து விடுகின்றன. சங்ககால கவிதைகள் அதிகாரத்திலிருந்தவர்களால் தொகுக்கப்பட்டதாய் கூறப்படுகிறது. ஏனைய காலங்கள் எல்வாவற்றிலும் அதிகாரத்திலிருந்தவர்களினதும் தொகுப்பாளர்களினதும் கொள்ளைகளிற்கு உட்பட்டே தொகுப்புகள் நடைபெற்றிருக்கின்றன.
இன்றும் இதழ்கள் பத்திரிகைகள் அதிகாரத்திலிருப்பவர்களின் தணிக்கை அதிகாரங்களோடு வெளியிடப்படுகின்றன. அல்லது அவைகளை அதிகாரங்கள் அச்சுறுத்துகின்றன. ஷிப்லியின் கவிதைகள் நான் மேலே கூறிய தணிக்கைகளை கருதி எழுதப்பட்டிருந்தன. அவற்றின் மத்தியில் தணிக்கையுடன் வெளிவந்திருக்கின்றன. சிலது அவற்றை மீறியும் எழுதப்பட்டிருக்கிறன்றன.
ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுகிறது. எனவே தணிக்கை செய்யப்பட்ட படைப்புக்களை வைத்து நாம் அசலான சமூகத்தை எப்படி எங்கு தேடுவது என்ற கேள்வி எழுகிறது.
தனது போக்கு ஜனரஞ்சகப்போக்கு என்று கூறகிற ஷிப்லி அத் தன்மையுடைய கவிதைகளைத்தான் எழுதவேண்டும் என்றும் தீhமானித்து எழுதுகிறார். சமூகம்மீதான அனுதாபமாய் அமைகிற அவரது போர்க்கவிதைகள் பாதிப்பு என்ற தன்மையை விடுத்து பார்வை என்ற தன்மையுடன் காணப்படுகிறது. மண்வாச் போர்க்களமும் சில பூக்களும் முதலிய கவிதைகள் போர் பற்றி எளிமையாக பேசுகின்னறன.
வாழ்வையும் பொழுதையும் மனிதர்களையும் துப்பாக்கிகள் ஆளுகிற சூழலில் வாழும் அடக்குமுறை ஷிப்லியின் வாழ்வுச்சூழலாய் கவிதையிலிருந்து புலப்படுகிறது. ஷிப்லியின் கவிதைகள் அகதிச்சமூகத்திலிருந்து வெளிப்படுகின்றன. அகதியாய் அலைகிற நம்மைப்போன்ற ஷிப்லியின் சமூகம் அதன் கொடுமைகளை எல்லாத்தரப்பின் மீதும் அறைந்து விடுகிற தன்மையும் தனக்குள் தானே சொல்லி விமமுகிற தன்மையும் காணப்படுகிறது.
”பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண்வாசனையை
தேடும்போதுதான்
ஊயிர் கருகுகிறது”
(மண்வாசம் 40 )
‘வாழையடி வாழையாக’ என்ற கவிதை அரசியல் அதிகாரங்கள் தொடர்ந்து சனங்களை வதைக்கிற தன்மையை பேசுகிறது. அதிகாரம் என்பது ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து சனங்களை வதைக்கிறது. சனங்களை வதைக்கிற அரக்கனை கொல்ல மீளமீள அவன் பிறக்கிறான் என்கிறாhர் இவர்
இவனை எரித்து
சாம்பலாக்கு முன்னே
வந்து விட்டான்…
அடுத்த அரக்கன்”
(வாழையடி வாழையாக 48)
அலுத்துப்போன அரசியல் விடயங்கள் பற்றியும் நம்பிக்ககை கொள்ளுகிற சமூகத்தின் முகங்கள் பற்றியும் கவிதைகள் பேசுகின்றன.
“எதற்கோ
எங்கோ
எப்படியோ
நீண்டு கொண்டிருககும்
இதுவெல்லாம்
ச்சே…
ஒரு பயணமா? ”
(நிழல் தேடும் கால்கள் 50)
“ஊரில்
மீண்டும்
வசிக்கப்போகும்
எங்கள் கனவுகளையும்
நம்பிக்கைகளையும்
யாரால்
என்ன செய்ய முடியும்”
(இன்னும் சில நம்பிக்கைகள் 43)
போர் அகதியாய் அலைத்துவிட் துயரமும் அரசியல் ஏமாற்றிவிட்ட அனுபவங்களும் என்று ஷிப்லி போன்றவர்களின் கவிதைகள் அவர்கள் சமூகத்திலிருந்து வருகிறதைக்காணாலாம்.
அரசியல் தவிர ஷிப்லியின் கவிதைகள் சமூகம் மீதான அடிபாடுகள் ஊட்டப்பட்டகவிதைகள் இந்தப்புத்தகத்pல் நிறைய இருக்கின்றன. உலகத்தை இருட்டு உலகம் என்கிறார் இவர். நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற மனதர்களிடையே அவர்களால் நிரம்பியிருக்கும் உலகத்தினரிடையே அடிபட்டுக்கிடக்கிற ஒரு மனிதனாயும் ஷிப்லியின் கவிதைகள் காணப்படுகின்றன. “மரணத்தை தவிர விடுதலை இல்லை” என்று எஸ். போஸ் எழுதியது போல எழுதுகிறார் ஷிப்லி.
“மரணத்தின் திசைநோக்கி
நடக்கிறேன்
மிக மிகத் தெலைவில்
என்னை வரவேற்றுக்
காத்திருக்கிறது அது..”
(இருட்டு உலகம் 16)
மனிதர்களால் பலியிடப்படுகிற உலகம் பற்றி கோபமும் சில கவிதைகளில் வெளிப்படுகின்றன. சிலர் உலகத்தையும் மனிதர்களையும் கையாளுகிற விதம் வேறு சிலரை பாதிக்கிறது அது சிலவேளை சரியாக அல்லது தவறாக இருக்கலாம் ஷிப்லி தனது அவதானத்திலிருந்து எழுதுகிறார்.
“எத்தனை ஜோடிகள்
இருந்தென்ன
யாராலும் ரசிக்கப்படாமல்
சகலக் கடலும்
விரிந்த வானமும்”
(காலிமுகத்திடல் 20)
மனிதாபிமானம் தீர்ந்தஉலகத்தில் கை ஏந்தித்திரிகிற ஏழைச்சனங்களின் கண்ணீர் பாதிப்பிலிருந்து வருகிற அவருடைய ஒரு கவிதை சமூகத்தில் கேள்விகளை விட்டுச்செல்கிறது.
“எங்கள் பாத்திரங்களில்
எப்போதாவது விழும்
சொட்டுச் சொட்டாய்
மனிதாபிமானம்..”
(ஏழையின் கண்ணீர் 25)
கருக்கலைப்பு பற்றிய அவருடைய கவிதை உயிரை அறைகிற மற்றொரு கவிதையாகும். மருத்தவங்கள் நவீன மருத்துவங்கள் சத்திர சிகிச்சை முதலியன மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட போது கருக்கொலை போல மனிதன் தன்னைத்தானே கொலை செய்கிற வேலையையும் செய்கிறான்.
“தொப்புள் கொடிகளே
தூக்குக் கயிறுகளாகின்றன
இந்தக் கருக்கலைப்பில்..”
(கருக்கலைப்பு 31)
பெண் பற்றியும் ஷிப்லி கவிதைகள் எழுத முனைந்திருக்கிறார். கவிதைகள் அனுபவத்தின் மொழியும் வடிவமும் என்ற வகையில் பெண் பற்றி ஷிப்லி எழுதுகிற ‘நானும் ஒரு பெண்’ என்கிற மாதிரியான கவிதைகள் கேள்விகளின் வயப்பட்டவை. பெண் அடைக்கப்பட்டிருப்பதை காணுகிற ஒரு சிறை மீதான இவரது கவிதை
“அதனுள்
உறைந்து கிடந்த
எதிர்காலம் மீதான
அவைகளின் நம்பிக்கையும்
சுதந்திர அறைகூவலும்
எவருக்குமே கேட்கவில்லை..”
(கிளிகள் பெண்கள் சுகந்திரம் 37)
என்று காணப்படுகிறது. இத்தொகுப்பில் மேலும் ‘பெண்மை போற்றி’ போலவும் வேறும் சில கவிதைகள் இடம்பெறுகின்றன.
அடுத்து காதல்பிரிவு அதன் வலிகள் ஊடு செல்கின்றன ஷிப்லி கவிதைகள். காதல் கவிதை எழுதுவது தொடர்பான முயற்சி மொழியையும் வாசிப்பையும் இலக்கிய செம்மையற்ற –சாத்தியமற்ற நிலைக்க கொண்டு சென்றிருக்கிறது. மேலோட்டமான சொற்களாலும் ஆழமற்ற உணர்வுகளாலும் வருகிற காதல் கவிதைகளின் சூழலில் அவைகள் ‘கவிதைகள் இல்லை’ என்று அதிலிருந்து பலர் விடுபட்டிருக்கிறார்கள். காதல் கவிதைகள் தொடர்பில் உணர்வுபூர்மான கவிதைகளும் வருகிறதை காணலாம். ஷிப்லியின் காதல் கவிதைகள் காதல் பிரிவு மீதான வலியுடனும் எதிர்ப்புணர்வுடனும் காணப்படுகின்றன.
கவிதைகள் நுட்பமான சொற்களினால் இணைக்கப்படுபவை, அடுக்கப்படுபவை அல்லது பின்னப்படுபவை என்று கூறப்படுகிறது. கவிதையில் சொற்களே முக்கியம் பெறுகின்றன எனவும் கூறுகிறார்கள். கவிதையில் நிரம்பியிருக்கும் அழகான வித்தியாசமான சொற்கள்தான் கவிதையை தீர்மானிக்கின்றன. ஷிப்லியின் கவிதைகளில் புதுமையான சொற்களை காண முடியவில்லை பழக்கப்பட்ட சொற்களைத்தான் கையாளுகிறார். ஆழகியலான மொழியையும் ஆழமான படிமங்களையும் காணமுடியவில்லை. அவைகளிலிருந்து விடுபட்டு சாதாரணமாய் எழுதவேண்டும் என்று ஷிப்லி நினைக்கிறார்.
ஷிப்லி கவிதைகள் அவரின் தொடக்கக கவிதைகள் என்றே கூற வேண்டும்.
“போனது போகட்டும்
வெட்டப்பட்ட
நகங்களை விடுத்து
விரல்களை பாதுகாப்போம்”
என்ற அடிப்படையுடன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதுவரை ஷிப்லி தனது பார்வையின் வாயிலாகவே தனது கூடுதலான கவிதைகளை எழுதி வந்திருக்கிறார். அவற்றில் இன்னும் நுட்பங்களைசெலுத்தி தனது அனுபவத்திலிருந்து தனக்களிலி
ரந்து புதிய வடித்தோடும், புதிய சொற்களோடும் இனி அவர் எழுதும் கவிதைகள் அவரது புதிய அடையாளத்தோடு நமக்கு வரப்போகிற நம்பிக்கையை ‘நிழல் தேடும் கால்கள்’ கவிதைப் புத்தகம் தருகிறது.
Monday, May 5, 2008
எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
கவிதைகள் எப்பொழுதுமொரு தனித்துவமான அழகியலைக் கொண்டிருப்பவை.எழுதுபவரது வாழ்வும்,வாழ்வின் சூழலும்,தாக்கங்களுமே கவிதைகளாகப் பிறப்பெடுக்கின்றன.கவிதைகளின் பாடுபொருளும்,அவற்றின் எளிதில் புரிந்து கொள்ளமுடியுமான வரிகளும் கவிதைக்கும்,வாசிப்பவருக்குமிடையிலான நெருக்கத்தை உண்டுபண்ணுபவை.எழுதியவரின் மகிழ்ச்சி,துயரம்,இன்ன பிற உணர்ச்சிகளும் வாசிக்கும் நபரின் மேல் ஒரு போர்வையாகப் படியும்.
அவ்வாறான ஒரு துயரத்தின் உணர்வை தீபச்செல்வனின் 'கீறல் பட்ட முகங்கள்' வலைப்பூவில் அவர் பதிந்திருக்கும் அவரது கவிதைகளில் காணலாம்।இவ்வலைப்பூ துயரங்களைச் சொல்லும் ஆவணங்களின் கவிதைகளைக் கொண்டிருப்பவை।பெரும் புற்றுப் போலப் படர்ந்து வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி,வாசிப்பவரை விழிகசியச் செய்பவையாக இருக்கின்றன இவரது பெரும்பாலான கவிதைகள்.
இவரது 'கிளிநொச்சி' தலைப்பிலான கவிதை சமாதான ஒப்பந்தம் முறிக்கப்பட்டதன் பிற்பாடு திரும்பவும் பதுங்குகுழிக்கு மீண்ட வாழ்வை மிகத் துயருடன்,எளிதில் புரிந்து கொள்ள முடியுமான மொழியில் பேசுகிறது.கவிதையின் சில வரிகள்,
எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.
நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.
எனச் சொல்லி, இப்படி முடிக்கிறார்.
நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.
பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்
மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
இதே வலியை இவரது 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' கவிதையும் பேசுகிறது.இதில் யுத்தப்பிரதேசங்களின் சூனியங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான துயரத்தாலாட்டுக்கள் கண்ணீரால் பாடப்பட்டிருக்கின்றன.
ஒருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?
குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது
குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்
என்று துயருருத்தும் வரிகளால் தொடங்கி,
ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
என இவர் முடிக்கையில் சுடும் துயரம் படர்ந்த யதார்த்தத்தின் சாரலானது வாசிப்பவரது மனங்களில் வலிக்க வலிக்கச் சிதறுகிறது.
இவரது 'வெளிக்கு நகரும் மரங்கள்' சாபங்கள் சூழ்ந்த யுத்தத்தின் சாயலைப் பேசுவதோடு தற்போதைய இயற்கையின் பசுமைச் சீரழிவையும் பேசுவதாகவே படுகிறது.
நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்.
எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.
நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.
என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்
எனக் கேட்கிறார்.
'நீயும் நமது குழந்தைகளும்' கவிதையானது யுத்தத்தின் இரு தரப்புப் படைகளின் மனிதம் நிரம்பிய முகங்களையும்,சமாதானத்துக்கான அவாவையும் பேசுகிறது.சமரினால் பாதிப்புறும் குழந்தைகளின் பாடல் ஆயுதங்களால் கரையும் உலகத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.
எனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.
முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்
நாம் புன்னகைக்கலாம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னகைக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்...........
உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்............
நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.
என இவர் முடிக்கும்போது தீராதவலியொன்று நெஞ்சில் இடறுகிறது.இதே போன்றதொரு உணர்வை இவரது 'பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்' கவிதையும் தருகிறது.
பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.
நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன..........
பாட்டி சொல்லும் கதையின் வரிகளாக இவர் எழுதும்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.
மேலுள்ள வரிகள் நம்பிக்கையை விதைக்கின்றன.
'குட்டிமானின் புள்ளிகள்' எனும் தலைப்பில் இவர் வடித்திருக்கும் கவிதை, யுத்தம் சூழும் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மக்களின் வாழ்வியலையும்,மக்களின் வலிகளில் கண்ணீர் தொட்டு வரையப்பட்ட துயர ஓவியங்களையும் மானின் மருட்சிப் பார்வைக்கு ஒப்பிட்டு வெளிக்காட்டுகிறது.
அந்த குட்டிமானை யாரோ
துரத்திக்கொண்டிருக்கிறான்
துரத்திக்கொண்டு வருபவன்
இராமனாக இருக்கலாம்
இரவணனாக இருக்கலாம்
மான்மீது
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.
குட்டிமானின் கண்களிள்
தவிப்பு பெரியளவில்
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.........
எனத் தொடரும் கவிதையில்,
இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்.
மானே பொறியாக இருக்கலாம்..........
ஆகிய வரிகள் சமரின் ஆயுதங்களும்,அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி,கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
கால்கள் இடருப்பட
கால்களை விரித்து ஒதுக்கி
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது
மானாக மாறியவர்களும்
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.
இப்பொழுது
மானைப்போலவே
எல்லோருடைய கண்களிலும்
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது.
என முடித்திருக்கும் இவ்வரிகளில் மானின் மருட்சியும்,உயிர் பிழைத்து வாழ்வதற்கான அவாவும்,மக்களின் ஏக்கமும் ஒன்றாகவே பிரதிபலிக்கிறது.
இவரது 'இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப்பறவை' கவிதை நிகழும் யதார்த்தத்தினைச் சுட்டி ஒரு சமூகத் துயரத்தின் கீதமாக உயிரினில் கசிகிறது.இதன் இறுதி வரிகள்
இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.
தற்காலத்தில் சகோதர,சகோதரிகள் கடத்தப்பட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அதே வெள்ளை நிற வாகனம் பெரும் வலியைச் சொல்கிறது.
அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.
எனக் குறிப்போடு இவர் எழுதியிருக்கும் 'நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்' கவிதை கடல் தாண்டிய நாடொன்றின் காயங்களை உரத்துப் பேசிடினும் யுத்தப்பிசாசின் ஆட்சிகளில் மூழ்கியிருக்கும் அத்தனை நாடுகளுக்கும் ஒத்துப் போகிறதாக அமைகிறது.
கிளிநொச்சிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பின் தங்கிய கிராமத்தின் குளக்கரையோரம் இவருக்கு,இவரது நண்பரோடு சில நேரங்களைச் செலவிட நேருகிறது.அப்போது நிகழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை மிக அழகாகச் சொல்லும் 'முறிப்புக்கிராமம்' கவிதை இவரது கவிதைகளிலேயே யுத்தத்தின் வாடை அதிகளவு படியாத கவிதை எனலாம்.
இவரது வலைப்பூவில் காயங்களின் வலியைச் சொல்லும் துயரத்தின் கவிதைகளே அதிகம் உள்ளன.அவை மிக அழுத்தத்தைத் தரவல்லன.இதன் மூலமே மனதுக்கு நெருக்கமானவராக இவரும்,இவரது கவிதைகளும் ஆகி விடுகின்றனர்.
--------------------------------------------------------------------------------
Saturday, March 22, 2008
யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று கலை இலக்கிய சமுக இதழ்கள்
முற்றுப்பெறாத கட்டுரை....
#தாயகம்
#கலைமுகம்
#ஜீவநதி
யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று கலை இலக்கிய சமமூக இதழ்கள் வெளிவருவது மிகவும் வியப்புக்கும் மகிழ்வுக்குமான செய்தியாகும். தாயகம் கலைமுகம் ஜீவநதி என மூன்று இதழ்கள் வருகின்றன.
கலைமுகம்-முன்மாதிரியான இதழ்

"இணையம் கதையாடல்களுக்கான புதியவெளி" என்ற கட்டுரையை கரன் எழுதியிருக்கிறார். இணையத்தளம் மற்றும் வலைப்பதிவுகளிள் ஊடாக முக்கியம் பெறுகிற கலை இலக்கிய சமுக அரசியல் வெளி பற்றிய கட்டுரையாக அது காணப்படுகிறது.
அந்தக்கட்டுரையோடு, தார்மிகி-திருமறைக்கலா மன்றம் நடத்திய தமிழ் விழா, அம்மன்கிளி முருகதாஸ்-பாரம்பரிய அறிவியலில் பழமொழிகள்-விவசாயம் தொடர்பான தமிழ்ப்பழமொழிகள், சண்முகம் சிவலிங்கம்-எஸ். புஷ்பாநந்தனின் இரண்டு கார்த்திகைப்பறவைகள்-கவிதைத் தொகுதியை புதிய புதிய விமர்சன ஆய்வுக்குட்படுத்தல், மதுரா-திருமறைக்கலா மன்றம்-கலைத்தூது கலையம் திறப்புவிழா -15.08.2007சனன்,- இலக்கியத்திற்கான நோபல் பரீசு-2007-நோபலின் அரசியலில் கவனம் பெறும் மற்றோரு உலகம்-டொறிஸ் லெஸ்ஸிங்,சைத்திரிகன்-லா.சா.ராமாமிருதம்-இசையின் உன்மையை உணர்தல் -அஞ்சலி, இங்கர் பெர்க்மன்- கைவிடப்பட்ட ஆன்மாக்களுக்க அருகில்- அஞ்சலி, வேல்.தஞ்சன்-புலமைப்பரிசில் பரீட்சை சமுகத்திற்கு அசாதாரண தன்மையாகின்றதா?-ஒரு நோக்கு, மகிழன்- இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர்களின் வர்ண மொழி - கண்காட்சி ,An Award to aflying artiste-Alfi முதலிய கட்டுரைகள் இருக்கின்றன.
கவிதைகளை அனார்- அனார் கவிதைகள்-குரல் என்றொரு நதி அல்லது திராட்சை ரசம், நான் பெண், அறைக்கு வெளியே அலைகிற உறக்கம்,உக்கிரம் முதலியகவிதைகள்., ம.பா.மகாலிங்கசிவம்-போர் என்பது கவிதை, செ.திருநாவுக்கரசு-அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் கவிதை, ம.பா.மகாலிங்க சிவம்- சாவே சமன் செய்யும் கோல்,தழுவல் கவிதை, சித்தாந்தன்-சித்தாந்தன் கவிதைகள- மெய் உறங்கும் நாட்களின் கோடை, கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, காற்றில் அலைகிற மரணம், குறி சொல்வேரின் கணிப்பில் தவறிய வாய்ப்பாட்டு சித்திரம், நீள் துயரின் அகாலப்பொறி முதலிய கவிதைகள்., துவாரகன்-கண்களைப்பற்றி எழுதுதல் கவிதை , ராசு-சிதைந்த பகலிலொரு நாள் கவிதை,பஹீமாஜஹான் கவிதைகள்- காட்டில் பெய்த மழை, ஊற்றக்களை வரவழைப்பவள் கவிதைகள், த.ஜெயசீலன்-வரண்டுபோன வாழ்க்கை, இரண்டு கவிதைகள்-த.அஜந்தகுமார்-பேசியபடிஇருத்தல், ஞாபகங்களின் அச்சக்கோடுகள் முதலிய கவிதைகளும் கவிதைப் பகுதியில் வெளியாகியுள்ளன. இதில் அனனார், சித்தாந்தன், துவாரகன், அஜந்தகுமார், பஹீமாஜஹான் முதலியோரின் கவிதைகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் முக்கியம் பெறுகின்றன.
சிறுகதைகள்-குப்பிழான்.ஜ.சண்முகம்-கண்டறிதல் -என்ற ஒருகதை வந்திருக்கிறது. பத்தி எழுத்துக்கள்-விபரீதன்-பிள்ளை நேயம் என்ற கற்பிதமும் தண்டனைகளாகும் அவமதிப்புகளும்-நடைவழிக்குறிப்பகள்,ஆ.சுரேந்திரன்-பரிமாற்றம் காணப்படுகிறது.
நேர்காணல்-குந்தவை மற்றும் சடாச்சரதேவியை இராகவன் நேர்கண்டிருக்கிறார்.மிகச் சிறந்த பேசவைத்தலுக்கான நுட்பங்களுடன் அந்த நேர்காணல் காணப்படுகிறது.
நெடுவல்-ரதீதரனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரு திரைப்படங்கள் ஒரு நோக்கு-குறும்படம்-கால்,வெட்டை-அறிமுகம்,முதலியவைகளோடு மேலும் பல விடயங்கள் வெளியாகி உள்ளளது.
இதழை வடிவமைத்திருப்பதில் மிக நேர்த்தி காணப்படுகிறது. அட்டை, பக்கவடிவமைப்புக்கள், எழுத்தருக்களை பயன்படுத்திய விதம் என்பன சீரான தன்மையினை கொண்டிருக்கிறது. மிக சிறந்த இதழாக கலைமுகம் வந்திருக்கிறது. அ.ஜீட்ஸன்-அட்டைப்பட கணனி வடிவமைப்பு, கி.செல்மர்எமில்-இதழ்வடிவமைப்பு, பிரதம ஆசிரியர் நீ.மரிய சேவிய அடிகளார்.
இந்த கலைமுகம் ஜீலை டிசம்பர் 2007 காலாண்டு இதழாக 'சமுக கலை இலக்கிய இதழாக வந்திருக்கிறது.
விலை-80ரூபா
தொடர்புகளுக்கு
திருமறைக்கலா மன்றம்,
238 பிரதானவீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
தொலைபேசி,தொலைநகல்:0212222393
மின்னஞ்சல்: @sltnet.lk
ஜீவநதி-இளையவர்களின் முன்முயற்சி

சின்னராஜா விமலன்,கலாமணி பரணீதரன். முதலிய இளையவர்கள் நடத்த ஜீவநதி கலை இலக்கிய இருதிங்கள் ஏடு வெளிவருகிறது. இதுவரை நான்கு இதழ்கள் வந்திருக்கிறது. தாயகம் இதழ் கொழும்பில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. கலைமுகம் இதழும் ஜீவநதி இதழும் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டு வெளி வருகின்றன.
ஜீவநதி-பங்குனி சித்திரை 2008 இதழ் 'பெண்கள் சிறப்பு' இதழாக வந்திருக்கிறது. தனித்துவமான இதழ் வடிவமைப்பு இல்லாது ஞானம் முதலிய இதழ்களைப்போன்ற வடிவமைப்பு மற்றும் எழுத்தருத்தன்மைகளுடன் இந்த இதழ் வருகிறது. இது தனக்கான தனித்தவமான உருவத்தோடு வருவதற்கான முயற்சிகளை எடுக்கப்படவேண்டும். இருந்தாலும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகிற ஒரு இளைய இதழ் என்ற வகையிலும் தற்போது வெளிவருவதிலும் ஒரு முக்கிய தன்மையினை கொண்டிருக்கிறது. இந்த இதழ் "தமிழ் சூழலும் பெண்ணியமும்" என்றஆசிரியர் தலைப்போடு காணப்படுகிறது.
கவிதைகளை: ச.நிரஞ்சனி-இனியாவது, சரங்கா தயாநந்தன்(லண்டன்)-எனது கனவில் சிரித்தவர்கள், தாட்சாயணி-வார்த்தைகள் சூழ்ந்த வாழ்க்கை,டி.எச்.லவ்ரின்(91885-1930) இளம் மனைவி-கெக்கிறாவ ஸீலைஷா -மொழிபெயர்ப்புக்கவிதை, சுகிர்தராணி-பெரும்பாம்பு, கி-பிறைநிலா-சோகமும் சுகமாய் மாறும் -அறிமுகம், மைத்திரேயி-பாசம் முதலிய கவிதைகளும் காணப்படுகிறகின்றன.
கட்டுரைகள்- மனோன்மணி சண்முகதாஸ்-ஈழத்துப் பெண்படைப்பாளிகள்-சில குறிப்புகள், அம்மன் கிளி முருகதாஸ்-பெண்களின் பாடல் ஆக்கதிறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள், க.தங்கேஸ்வரி-கிராமியப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், றஞ்சி(சுவிஸ்)-பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சினைகளும் தமிழ் பெண்களும், செல்வஅம்பிகை நடராசா-செம்மொழித்தமிழில் பெண்களின் புலமைத்தவம்-ஒளவையார்,ஜெயலஷ்மி இராசநாயகம்-பெண்களும் தலைத்துவப்பண்பும், றஞ்சி(சுவிஸ்)-சர்வதேசப்பெண்கள் தினம் மார்ச்08,சந்திரகாந்தா முருகானந்தன்-பால்நிலை பாரபட்சம் ஒழியாதவரை பெண்ணிய இலக்குள் எட்ட முடியாது, சௌந்தரி (அவுஸ்ரேலியா)கலாச்சார மாற்றம் முதலிய கட்டுரைகள் இருக்கிறன்றன.
சிறுகதைகளை: கார்த்திகாயினி சுபேஸ்-உதயம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம்-சீதனம் கொடுத்தால்..,கெக்கிறாவ ஸகானா-உண்மை-பெண்மை,ஆழியாள்(அவுஸ்ரேலியா)-ஒரு குட்டி இளவாசியுடனான வானவில் நாட்கள் முதலியோர் எழுதியிருக்கிறார்கள்.
இவைகளோடு கருத்துரைகள்,கலைஇலக்கிய நிகழ்வுகள்,பேசும் இதயங்கள், முதலிய பகுதிகளும் காணப்படுகின்றன. இதழ் வடிவமைப்படன் படைப்புக்களை தெரிவு தெய்வதில் கூடிய அக்கறை தன்மையினை எடுக்க வேண்டியதின் தன்மையினை சுட்டிக் காட்டவேண்டும்.தெணியான், குப்பிழான்.ஜ.சண்முகம்,கி.நடராஜாமுதலியோர் இந்த இதழின் ஆலோசகர்களாயிருக்கிறார்கள். இளையவர்களினால் முன்னெடுக்கப்படுகிற இந்த எழுத்து உழைப்பு முயற்சியினை ஊக்கப்படுத்தி நாம் பங்களிக்க முன்வரவேண்டிய தேவையும் உள்ளது.
விலை-50ரூபா
தொடர்புகளுக்கு
ஆசிரியர்இ
கலைஇகம்இ
சாமணந்தரை ஆலடிப்பிள்ளையார் வீதிஇ
அல்வாய்.
தொலைபேசி: 0775991949. 0776991015
தொலைநகல்: 0212263206
மின்னஞ்சல்:
தாயகம்-போரும் பெரும் துயரும்

தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீடான தாயகம் 68(ஜனவரி-மார்ச்)கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் யாழ் இதழாக வெளி வருகிறது. நாட்டின் பேர் நெருக்கடிகளின் மத்தியில் தாயகம் இதழை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த இதழது உழைப்பினால் அது ஒரு சீரான வருகையுடைய இதழாக கவனம் பெறுகிறது.
இந்த இதழின் ஆசிரியர் தலைப்பு"போரும் பெருந்துயரும்"என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது। "....சமாதானத்திற்கான மேசை விரிப்புகள் விரித்த உலக நாடுகள் போருக்கான ஆயுதங்களை வழங்க முன் வந்துள்ளன. தீர்வு முயற்சிகளை தூரப்போட்டு விட்டு போர்ப்பிரகடனங்களுடன் போர் தொடங்குகிறது...."என்று ஆசிரியர் தலையங்கம் தொடர்ந்து செல்லுகிறது."ஈழத்தமிழரை விட்டு இனிமலேசியத்தமிழர் பற்றிப்பேசலாம்" என்ற தலைப்புடன் மலேசியத்தமிழரின் பிரச்சினை பற்றி தொடர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. சமகால பிரச்சினைகள் பற்றி எந்தவித பிரக்ஞையும் அற்று பழைய மரபுகளுடன் வருகிற ஒருசில இதழ்களின் மத்தியில் தாயகம் இதழின் ஆசிரியர் தலைப்பானது தொடர்ந்து பிரச்சினைகள் பற்றி துணிந்து பேசுவதாகவும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
முன்பக்கத்தில் காணப்படும் ஓவியமும் போரின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. உற்று அவதானிக்கையில் பல்வேறு வலிகளை புரிந்துகொள்ளமளவில் பரந்து விரிகிறது அந்த ஓவியம். இதழின் பின்பக்க ஓவியமும்கூட சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. இதழின் உள்பக்க வடிவமைபர்புக்களும் கையாளப்பட்டுள்ள எழுத்துக்களும்கூட குறிப்பிடத்தக்க அளவு ஒழுங்கை கொண்டிருக்கிறது.
கவிதைகள்:த.ஜெயசீலன்-வழமையான நாட்கள்,தி.திருக்கமரன்- சுதந்திரம் தருகிற சோகம், அழ.பகீரதன்-தகுமோ,சிவசேகரம்-சிலந்தி பற்றிய ஒரு சிந்தனை, பேரறிஞ்சன்-தீ வானத்தின் தின்னை, குறிஞ்சி நாடன்- வானம் பொறுக்குமோ, எஸ்.இ.பி.பாலமுருகன்-கனவுகள் தொலைதூரம்,கவிஞர் துரையப்பா-கண்ணதிலே ஈரமதாய்,சி.ஜெயசங்கர்-பயங்கரவாதம், நிலாகீற்றன்-மீட்கப்படட் மேதினியிலே,தி.கலைச்செல்வி- பாலைவனத்தின் சாயலா?,சை.கிங்ஸ்லிகோமஸ்-நெடுங்கவிதை,முதலிய நமது நாட்டுக்கவிதைகளும் இடம்பெற்றிருக்கிறது.
சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை தாயம் இனம் கண்டு தமிழில் வாசிப்புக்கு தருகிறது கனான் அஷ்ரவி -ஏறத்தாள நான்கு வயதான குழந்தையின் நாட்குறிப்பு, எமஸ்ரெல்டா டவிலா-மலைகளில் லால் சிங்டில்-தாய்நாடு,)இ{இன்கிலிஷ்}அரசநைட சரமலளநசவேர்கள்(ஆபிரிக்கஈ அமெரிக்க கவிதை)-உhயசடழவவந றயவளழn ளாநசஅயn,{இன்கிலிஷ்}அகுமட்ஷம்லுர்- இந்த மூட்டுச் சந்தியில் முதலிய கவிதைகளை சிவசேகரம்,சோ.பா,குழந்தை.மா.சண்முகலிங்கம்,மணி முதலியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
உதாரம்......
கட்டுரைகளளை ஏகலைவா-எங்கோ நடந்ததும் இங்கே நடப்பதும்,சிவசேகரம்-படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகமும்,ஜெ.சற்குருநாதன்-மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும் ஆகியவை எழுதப்பட்டள்ளது.அர்ஜென்ற்றீனாவில் அன்றும் அமரிக்காவில் இன்றும் -புஷ்கற்கவேண்டிய பாடங்களும் நாம் கற்கவேண்டிய பாடங்களும் என்ற கட்டுரை பயங்கரவாதத்திற்கு எதிரான போரை என }000000000000000{பற்றி குறிப்பிடுகிறது. சிவசேகரத்தின் கட்டுரை வாசிப்பின் போதாமை மற்றும் சிந்தனை தேக்கம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஜெ.சற்குருநாதனின் கட்டுரை ஈழமலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுகிறது.
சிறுகதைகளை திக்குவல்லைகமால்-உழைப்பு,அயிராமி-எல்லை தாண்டல்,ந.பீ.அருளாநந்தம்-உலகத்தின் முதல் எதிரி,வனஜா நடராஜா- நிரபாதி,சிறீ-பட்டுத்தெளிந்தது. முதலியவைகள் வந்திருக்கிறது.
இவைகளோடு மாவை வரோதயனின் -பரந்தன் பாலசிங்கம்-நடைச்சித்திரமும்,சு.க.நடேசமூர்த்தி-ஊரும் சீரும்-உன்மைக்கதையும்,மணி தமிழில் மொழி பெயர்த்த தெய்வ சித்திரம் மொழி பெயர்ப்பு சிறுகதையம்,புவனஈசுவரன் சுந்தர காண்டம்,ஆதவா அ.சிந்தாமணி குறளி விளையாட்டு -விந்தை மனிதர் வடிவ எழுத்தும் ,தாயகம் இதழ் பற்றி திருக்கமரன் சுபாஷினி சந்திரகுமார், முதலியோர் எழுதிய விமரிசனங்களும் இவைகளுடன்நிகழ்வு,நீத்தார் நினைவு,கண்காட்சி முதலிய பகுதிகளும் காணப்படுகின்றன.இதழை வெளியிடுவதிலும் வடிவமைப்பதிலம் நெருக்கடிகளும் குறைபாடுகளும் காணப்படும் சூழலில் தாயகம் ஈடு கொடுக்கம் முகத்தோடு தொடர்ந்து வருகிறது.
தொடர்புகளுக்கு:
க.தணிகாசலம்,
ஆடியபாதம் வீதி,
கொக்குவில்.
தொலைபேசி:0212223629,0112335844
மின்னஞ்சல்: thajakam@gmail.com,thayakam@yahoo.com
இணையம்: .thajakam.com
----------------------------------------------------------------
Wednesday, March 12, 2008
பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை
பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்
சிறுகதை விமர்சனம் -----------------------------------------
___________________________--------------------------தீபச்செல்வன்
பசியோடும் இருளோடும் வாழுகின்ற சனங்களின் கதையாய் "பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள் "என்ற சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் எழுதிய இந்த சிறுகதைகள் மேலும் சொல்லியிருக்க வேண்டிய வெளிகளும் குரல்களும் இருக்கின்றன என்றே படுகிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் இக்கதைத்தொகுதி "ஒரு தனியன் இறுமாப்படைகிறான் "என்கிற மாதிரியான குரலோடு முக்கியம் பெறுகிறது.
பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது। முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைகூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது. த.அஜந்தகுமார்,தீபச்செல்வன்,திருச்செநதூரன்,ச.நிரஞ்சனி,ந.வினோதரன்,மயூரரூபன் போன்ற ஒருசிலரையே காணமுடிகிறது. அப்படிப்பார்க்கையில் எழுத்துச்சூழலுக்கான தொடக்கமாக இந்த கதைத்தொகுதியை கருதமுடிகிறது. ஆபத்தையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி எழுகிற எழுத்துக்களாக இந்த எழுத்தக்களை பார்க்கலாம்.
இந்த தொகுதியில் இடம்பெறும் கதைகளை ச.நிரஞ்சினி,ப.உதயசாந்தினி,சி.கோகிலவாணி,த.அஜந்தகுமார்,ந.வினோதரன்,ந.மயூரரூபன்,க.சிவதாரணி,சி.சிவாகர்.ஜெ.கவிதா முதலியோர் எழுதியிருக்கிறார்கள்
"உதிர்வு" என்ற கதையை ச.நிரஞ்சனி எழுதியிருக்கிறார். இதுவரையில் அவர் எழுதிய கதைகளிலிருந்து இது சற்று வித்தியாசப்படுகிறது. நவீன பெண்ணிய கதைகளுக்காளன தன்மைகளை கதை கொண்டிருக்கிறது. விண்மீனை பெண்ணென்றும் முகிலை ஆண் என்றும் குறியீடுபடுத்தகிற கதையில் பெண்ணை உரசிவிட்டு தட்டிக்கழித்து சொற்களாலும் நடைமுறைகளாலும் நெருக்குகையில் எழும்பும் ஒரு பெண் எழுத்தாய் கதை அமைகிறது. நவீன பெண்எழுத்துக்கான மொழியையும் நடைமுறைப்பாங்கையும் ஓரளவு கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஈழத்தில் எழுதத்தொடங்கிய புதிய செம்மையடைந்து வரும் எழுத்தாளராக நிரஞ்சனி காணப்படுகிறார்.

"ஒரு தனியன் இறுமாப்படைகிறான்" என்ற கதைக்கு கைலாசநாதன் வரைந்த ஓவியம்
தொகுதியில் இடம்பெறும் மற்றொரு முக்கிய கதையாய் "ஒரு தனியன் இறுமாப்படைகிறான்" என்ற கதையை குறிப்பிடலாம். கிராமத்திற்குரிய புழங்கு மொழியை கதை கதையாடுகிறது. கிராமத்திற்குரிய கதை பேசும் முறை இயல்பாக காணக் கூடியதாயிருக்கிறது. மேலால் கதையை வாசிக்கையில் ஒருகதை புலப்படுவதைக்காணலாம். விவசாயி ஒருவனின் விவசாய வாழ்வில் குறுக்கிடுகிற மிருகங்களின் நாசங்களையும் அவைமீதான போரிடலையும் கதைபேசுகிறது. இன்னொருவிதத்தில் நாசப்படுத்தப்படுகிற ஒரு இனத்திற்குரிய செழுமையான போரிடலாகவும் கதை தெரிகிறது. புரட்சிர சமுகத்திற்குரிய குரலிடும் குறியீடாய் கதைத்தொகுதியில் இந்த கதை முக்கியம் பெறுகிறது. அதற்கான மொழியும் கதைச்சூழலும் சொல்லப்படுமுறையும் வாய்த்திருக்கிறது.
அடுத்து "பரிகாஷைக்காரனின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்" என்ற கதையை குறிப்பிடமுடியும். நவீன சிறுகதைக்கான அல்லது ஒருமுறைக்கான முயற்சி என்கிறார் அருந்தாகரன். ஆனால் ரகுநாதன் அதை இருண்மைத் தன்மை கொண்ட கதை என்கிறார். நானும் இதை சற்று வித்தியாசமான ஒரு நவீன சிறுகதைக்கான முன் தன்மையுடைய தாகவே நினைத்தேன். காதல் பற்றிய சொற்களுடனான சுய சம்பாஷனையும் உணர்வுமாக கதை அமைகிறது. ஒரு சிறிய புள்ளிப்பொழுது விரிகிற சொற்களின் ஓட்டமாய் கதை நிகழ்கிறது. கதையாடுவதும் கவிதைத்தன்னமை தன்மையுடையதுமாக கதை நகர்கிறது. கதையின் மொழி இறுக்கமும் அழகியலும் கொண்டிருக்கிறது.
சாதாரண மகக்களுக்கு புரியாத தன்மை ஒருவேளை கதை இருண்மைத்தன்மை உடையது என்ற தன்மையின் கீழ் விடலாம். த.அஜந்தகுமாரின் இந்தக்கதை இத்தொகுதியிலிருந்து தனிமைப்பட்டு சிலரால் முக்கியப்படுத்தப்படுகிற தன்மையும் சிலரால் இருண்மை என்று ஒதுக்கப்படுத்துகிற தன்மையும் கொண்டிருக்கிறது. சிறிய துண்டை விரித்து கதையாடிவரும் இந்தக்கதை ஏனோ முழுமை பெறாத ஒரு குறையுணர்வை கதை வாசித்து முடிக்கையில் ஏற்படுத்திவிடுகிறது.
இந்தக் கதை இருள்மீதான பயத்தையும் இருள் சூழ்கிற குரூரத்தையும் பற்றி எழுதப்பட்டிருக்pறது. இருள் மூடிய பொழுதுகளை கதை விரித்து சொல்லுகிறது. பசி மிக மெல்லியதாகவே கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. விபரிக்கப்பட்ட காட்சிகளின் பின்னால் சொல்லப்படாத கதைகள் ஒளிந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கதை நவீன சிறுகதைக்கான தன்மையை இலேசாக கொண்டிருக்கிறது. கதையாடுகிற மொழியில் இத்தன்மையை காணலாம். இந்தக்கதையை ரகுநாதன் இருண்மைத்தன்மை உடையதாய் குறிப்பிடுகிறார். கதையில் ஒரு இருண்மைத் தன்மை மறைந்திருப்பதை காண முடிகிறது. கதை முக்கியப்படுத்தப்படுகிற தொகுதியாக இருக்கிற பொழுதும் திருப்தி அளிக்காகாத தன்மையினை கொண்டிருக்கிறது.
"இழப்புகள்" என்ற கதை ஏ-9 பாதை மூடப்பட்ட முடப்பட்ட பின்னர் நிலவிய பசியின் கொடுரம் பற்றியதாக இருக்கிறது. மிக எளிமையான மொழியில் கதைஅமைகிறது. பாதைபூட்டப்பட்ட பின்னர் பசியின் துயரத்தால் ஒரு குடும்பம் அனுபவிக்கிற துன்பங்களை சொல்லுகிறது. பிள்ளையை அநாதரவாக சேர்ஜ்சில் விட்டுச்செல்லுகிற அளவில் உளவியல் ரீதியாக பாதிப்படைகிற தந்தையை பற்றி கதை இடம் பெறுகிறது. உளவியல் ரீதியாக பாதிப்படைந்திருக்கும் சமுகத்திற்கு தேவையான உளவியல் ஆற்றுதல் பற்றிய தன்மையை முன்வைக்கிறது "பசியடங்கா இருளிலிருந்து" என்ற கதைத்தொகுதியின் தலைப்பை பிரதிபலிக்கும் கதையாக இதைப் பார்க்கலாம். இந்த தொகுதியின் முக்கியமானதொரு கதையாக இதை குறிப்பிடலாம்.
இவைகளோடு ப.உதயசாந்தினியின் "பதம்" என்ற பெண்ணியம் பற்றியதும் சி.கோகிலவாணியின் "விரட்டப்பட்ட கனவுகள்" க.சிவதாரணியின் "கோடிட்ட இடம்" ஜெ.கவிதாவின் "தாய்மனசு" என்ற சுனாமி இழப்புதொடர்பான கதை முதலிய கதை முயற்சிகளும் தொகுதியில் இடம்பெறுகின்றன. இவர்களின் கதை முயற்சிகள் மொழி.கதையின் பரப்பு. கதையாடும் முறை முதலியவற்றில் குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. இவைகள் நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறமாதிரியான தன்மையை கண்டடைவதற்கான இடங்களை அவசியப்படுத்துகிறது.
இந்த தொகுதியில்
ச.நிரஞ்சனியின் -"உதிர்வு"
த.அஜந்தக்குமாரின்-"பரிபாஷையின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்"
ந.வினோதரனின்-"ஒரு தனியன் இறுமாப்படைகிறான்"
சிவாகரின்-"இழப்புகள்"
மயூரரூபனின்-"பசியடங்கா இருளிலிருந்து"
முதலிய கதைகள் முக்கியம் பெறுகின்றன.
புத்தக்தில் இடம்பெறுகின்ற ஓவியங்கள் பற்றி முக்கியமாக குறிப்பிடவேண்டும். முன்னட்டை ஓவியம் மிக எளிமையானதாயிருக்கிறது. பசியடங்கா இருளிலிருந்து என்ற ஏக்கத்தையும் ஒடுங்கிப்போயிருத்தலையும் முகத்தில் வெறி எழுகிறதையும் இன்னும் பலவற்றை பிரதிபலிக்கிறது. கதைகளுக்கான உள் ஓவியங்களும்கூட சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. நவீன ஓவியத்தன்மையுடனும் குறியீட்டப்பாஷையுடனும் பல உணர்வுகளை குவிக்கிற தன்மையும் கொண்டிருக்கிறது. ஓவியங்களை கோ.கைலாசநாதன் வரைந்திருக்கிறார்.
புத்தகத்தின் வெளி அட்டையின் எளிமை வரவேற்கத்தக்கது. ஆனால் புத்தகத்தை உள்ளே வடிவமைப்புச்செய்ததில் பல குறைபாடுகள் இருக்கின்றன. பக்கவடிவுகள்.எழுத்துருக்களை பாவித்தவிதம். எழுத்துருவின் அளவுகள். பந்தியமைப்பு. என்பவற்றில் சீரின்மையும் போதியளவிலான ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. ஓவியங்களால் பெரியளவு இந்த குறைபாடு வாசிப்பை பாதிக்காதிருக்கும் போலுள்ளது.
ஏற்கனவே இரண்டாயிரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய "மண்ணின் மலர்கள்" என்ற கதைத்தொகுதி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தட்சாயினி, ராகவன்,உடுவில் அரவிந்தன்,சிவாணி,பிரியா போன்றோர் எழுதியிருந்தனர். இதில் தட்சாயினி, ராகவன் முதலியோர் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதிவருகின்றமை முக்கிய விடயமாகும்.
கதைகளை செ.யோகநாதன், சோ.ப, குப்பிளான் ஜ. சண்முகம் முதலியோர் தெரிந்திருக்கிறார்கள். கதைகளை ந.வினோதரன் தொகுத்திருக்கிறார். இந்த கதைத்தொகுதி புதிய எழுத்துக்கான தொடக்கமாகும். இவர்கள் நல்ல கதைகளை எழுதுகிறவர்களாகவும் புதிய கதை எழுத்தப்பரப்புக்களை உண்டாக்கிறவர்களாகவும் செம்மையடைய வேண்டும். இன்னும் புதியவர்களும் எழுதத்தொடங்க வேண்டும்.
------------------------------------------------------------------
Wednesday, February 27, 2008
பெண்ணியம் சார்பான இரண்டு குறும்படங்கள்
--------------------------தீபச்செல்வன்
__________________________________________________
01. துடுப்பு-பெண்ணின் வலிமையான பயணம்
ஒரு பெண்ணால் தனித்து பயணிக்க முடியும் என்ற திடத்தை இயக்குனர் ஒரு திடமான பெண்ணின் மூலம் துடுப்பில் காட்டியிருக்கிறார். நிமலா எடுத்துக் கொண்ட பெண்ணும் யேசுதாசன் எடுத்துக் கொண்ட பெண்ணும் நமது சமூகத்தில் அவர்கள் அவதானித்ததின் வெளிப்பாடாக இருக்கின்றது. இதில் முரணான முடிவுகள் என்று எதுவும் இல்லை.படத்தின் தொடக்கத்தில் வரும் கலைப்பருதி எழுதிய அழுவதற்கென்று பூமியில் யாரும் பிறப்பதில்லை... பாடலுக்கு படத்தின் அ றிமுகம் வருகிறது. நம்பிக்கை சார்பான வலுவான காட்சிகள் அதற்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தில் வலிமையான பெண்ணாக வரும் இந்திரா என்ற பாத்திரம் படத்தின் தொடக்கத்தில் தன்னை ஒரு வலிமைப் பெண்ணாக காட்டிச் சொல்கிறாள். அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமைவாக்கிற்கு ஆனா நான் நகரமாட்டன் என்று ஒரு விதவலிமையை நம்மிடையே விதைக்கிறாள். சுனாமிப் பேரலை காவுகொண்ட உயிர்களில் இந்திராவின் கணவனும் செல்வனின் மனைவி பிள்ளைகளும் அடங்குகிறார்கள். இந்திரா இப்போது அவளின் ஒரே மகனுடன் வாழ்கிறாள். செல்வன் இந்திராவை திருமணம் செய்ய விரும்புகிறான். அவளை எல்லோரும் திருமணம் செய்யும்படி கட்டாயம் செய்கிறார்கள். இதை இந்திரா மறுக்கிறாள்.மீன்பிடி தொழில் செய்ய இந்திரா துணிகிறாள். நீ ஒரு பெம்பிள உன்னாள கடலில இறங்கித் தொழில் செய்ய ஏலுமே... கடத்தொழில நீ நினைச்சுக் கூட பாக்காத... என்று ஊர் தலைவர் கூறி தையல் இயந்திரத்தை கொடுக்க முனைந்த போது தலைவர் நீங்க ஒரு கிணத்து தவளை, இப்ப பொம்பிளையள் எவ்வளவு சாதனை செய்யுறினம் எண்டு உங்களுக்கு தெரியாது என்று அழுத்தமாக கூறுவதும்... எண்ட படகும் கடலில ஏறும்... என்று சபதமிடுவது ஒரு முக்கியமான பதில் கட்டம்.
கணவன் வலைக்கட்ட காட்டிக் கொடுத்ததை மீட்டியபடி தன் நகைகளை விற்று படகு வாங்கி கடலில் இறக்கப்படுகிறது. நிறைய மீன்களுடன் இந்திராவின் படகு கரைசேர்கிறது. அதைப்பார்த்து ஊர்த் தலைவர் வெட்கிப் போவதும் ""இந்திரா உனக்கு கதைச்சு ஒரு படகு வாங்கித் தாரன்'' என்ற தலைவரின் பதிலுக்கு... நன்றி தலைவர் என்னை ஒரு பொம்பிள எண்டு பாக்காம ஒரு தொழிலாளி எண்டு பாருங்கோ.. என்று கூறி தன் வழியில் பயணிப்பதுடன் படம் முடிகிறது. மீண்டும் கலைப் பருதியின் பாடல் வந்து படத்தின் நோக்கு அழுத்தமாக சொல்லப்படுகிறது. அவளின் போராட்டம் எல்லாம் ஒரு ஆணுக்கு நிகராக கடலில் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்குடையதாக இயக்குனர் காட்டியிருக்கிறார். சமூகத்தின் வசைகளுக்கு மடியாத துணிச்சல் பெண்ணாக அவளை காட்டியிழுப்பதில் செல்வன் என்ற துணை அவளுக்கு அவசியமாக்கப்படவில்லை. இதில் யஸ்மின் கணே "மாமா உட்பட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு குகதாஸ் காட்சிகளை இயற்கையாகவே பதிவாக்கியிருக்கிறார். அவரின் அவசியமான இடூணிண்ஞுதணீ காட்சிகள் குறித்த உணர்வுகளை சரியாகவே வெளிக்காட்டுகின்றன. படத் தொகுப்பு சிவா. அலங்காரங்கள் எதுவுமின்றி படம் இயல்பாக நகர்கிறது. படத்தின் இசையில் உயர்வில்லை. படத்தின் கதையோட்டத்தையோ பாத்திரத்தின் குணவியல்பையோ எழுச்சியூட்டும் விதத்தில் அமையவில்லை. அதிமுக்கியமான காட்சிகளில் கூட குணாம்சத்தை பிரதிபலிப்பது குறைவாகவே இருக்கிறது. படத்தின் மூலக் கதை என். சிறிதேவியின் உடையது. படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் முல்லை யேசுதாசன். ஒரு பெண்ணின் வலிமையான பயணத்தை எப்படி பயணிக்கலாம் என்பதை துடுப்பு குறும்படம் மூலம் காட்டியிருக்கிறார்.ஈழத்து, சினிமா பற்றி சரியான உரையாடல் இடம்பெறுவதில்லை என்று இராகவன் எழுதியிருந்தார்.இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ள வேண்டிய விடயமே. தென்னிந்திய சினிமா பற்றிய மாயை நம்மிடம் தலைதூக்கி ஒரு பகட்டான போலி ரசனையை அநேகர் கொண்டிருக்கின்றார்கள். இயல்பானதும் நம்முடைய பிரச்சினையை சொல்வதுமான நமது சினிமாக்களை முதலில் இவ்வாறானவர்கள் ரசிக்க முன்பு பார்க்க வேண்டும். கவிதை, சிறுகதை, நாவல் முதலிய படைப்புகளில் நாம் செலவிடுகிற அக்கறை பிரயோசனமான நமது சினிமாவிலும் ஏற்படுத்துவதை முதலில் கைக்கொள்ள வேண்டும்.
Thursday, January 17, 2008
சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி கவிதைகள்
பனிக்குடம் பதிப்பகம்
பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம் இதைச் சொல்ல வெட்கமாகவும் இருக்கிறது. அதேவேளையில் இந்தத்தாமதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு அவருடைய கவிதைகளே சாட்சி.
உலகம் சுருங்கி கிராமமாகிவிட்டது. தொடர்பாடலால் அது விரைவு கொண்டு விட்டது என்றே சொல்கிறோம். சுருங்கியிருக்கும் இந்தக்கிராமத்தில் எல்லாமே எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் கிராமத்திலிருக்கின்ற எல்லாவற்றையும் எல்லோருக்கும் தெரியும் நிலையுண்டு. ஆனால் இந்தக்கிராமத்தில் நாங்களிருக்கிறோமா என்று பார்க்க வேணும். அதாவது தொடர்பாடலால் சுருக்கி கிராமமாக வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் போரில் அகப்பட்டுச் சிக்கித்தவிக்கும் சமூகங்கள் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.
இது இன்று பொதுவாக போர்ச்சூழலில் வாழும் சமூககங்களுக்கு எழுந்துள்ளதொரு முக்கிய சவால். உலகத்தை பொதுமைப்படுத்த விளையும் பண்பார்ந்த செயலில் பலவிதமான தன்மைகளுண்டு. சிலர் மதத்தை வழிமுறையாகக் கொள்கின்றனர். சிலர் பொருளாதார மாற்றத்தை வலியுறுத்திச் செயற்படுகின்றனர். வேறு சிலர் அறிவியல் வளர்ச்சி மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று சிந்திக்கின்றனர். இன்னுஞ்சிலர் ஜனநாயக ரீதியான வளர்ச்சியும் பண்பும் பெருகும்போது மாற்றம் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.
ஆனால் இந்த எல்லா வழிகளுக்குள்ளும் இருக்கும் அதிகாரத்துவமும் குருட்டுத்தனங்களும் இடைவெளியின்மைகளும் எப்போதும் எதிர் நிலைகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த எதிர்நிலைகள் நம்பிக்கைக்கு எதிரான கோட்டை அழுத்;தமாக வரைகின்றன. உண்மையில் இந்த வழிகளை இவற்றுக்கான செயல்முறைகள் அடைத்து விடுகின்றன பெரும்பாலும். இதுவொரு மாபெரும் அவலம். இதுதான் தீராத கொடுமை. இதுவே நல்ல நகைமுரணும்கூட.
எந்தவொரு கோட்பாட்டுவாதமும் அதன் செயலால்தான் ஒளி பெற முடியும். அந்தச் செயலில் நிராகரிப்புக்கும் ஏற்றுக்கொள்ளலுக்குமான சமாந்தர விசையும் பயணப்பாதையும் உண்டு. அதாவது நெகிழ்ச்சியும் வெளியும் அவற்றில் இருக்கும். இருக்க வேணும். இல்லாதபோது அது எப்படியோ அடைபட்டுப்போகிறது. அல்லது எதிர் நிலைக்குப் போய்விடுகிறது.
என்னதானிருந்தாலும் மனிதன் ஒரு இயற்கை அம்சம் என்பதை வைத்தே எதையும் அணுகுதல் வேணும். மற்ற எல்லா அம்சங்களோடும் மனிதனை வைத்து நோக்க முடியாது. குறிப்பாக பொருளியல் அம்சங்களுடனும் இயந்திரங்களோடுமான கணிதத்தில் மனிதன் எப்போதும் சிக்காத ஒரு புள்ளியே.
ஆகவே மனித விவகாரத்தில் எப்போதும் பல்வகைத்தான அம்சங்களுக்;கும் இயல்புக்கும் இடம் அவசியம். ஆனால், இந்த இடத்தை பகிர்வதிலும் அளிப்பதிலும் பெறுவதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளும் முரண்களும் எப்போதும் தீராப்பிணியாவே உள்ளது. இது மனிதனைச் சுற்றியுள்ள சாப இருள். இந்தச் சாப இருளின் காரணமாக தமிழ்நதியின் கவதைகளை இவ்வளவுகாலமும் காணாதிருந்து விட்;டேன். அதேபோல இந்தச் சாப இருள்தான் அவருடைய கவிதைகளை மறைத்தும் வைத்திருந்திருந்தது. அதுமட்டுமல்ல தமிழ்நதியின் கவிதைகளும் இந்த இருளின் துயரமும் இதனால் ஏற்படும் அவலமும் அநீதியும் அவற்றுக்கெதிரான நிலைப்பட்டவையும்தான். ஆக இப்போது எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் முடிச்சுகள், கோர்வைகளாக இருக்கின்றன. எனவே இந்தக்கவிதைகளைப் படிக்கும்போதும் இவற்றை அணுகும்போதும் இந்த அம்சங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக கிளம்பி வருகின்றன.
சுருங்கியிருப்பதாகச் சொல்லப்படும் இந்த ' உலகக்கிராமத்தை' பொய்யென்கிறார் தமிழ்நதி. அப்படி தகவலாலும் தொடர்பாடலாலும் சுருங்கியிருக்குமாக இருந்தால் எப்படி எங்கள் அவலங்களை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமற்போயிருக்கும் என்பது இந்தக்கவிதைகளின் அடியொலியாகும். தமிழ்நதி இதை எந்தத்தூக்கலான குரலோடும் பேசவும் இல்லை. திட்டவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. முறையிடவும் இல்லை. ஆனால் தன்னுடைய கேள்வியையும் நிராகரிப்பையும் சத்தமில்லாமல் அறிவார்ந்த முறையில் மெல்ல வைக்கிறார், நம் அருகில். அது எல்லோருடைய கண்ணிலும் மனதிலும் ஊசியைப்போல ஊடுருவிச் செல்லும் விதமாய்.
அதேவேளை, சக மனிதர்களால், அரசினால், இனரீதியாக இழைக்கப்படும் அநீயை எப்படி இந்தத்தகவல் யுகமும் அறிவு உலகமும் ஜனநாயக அமைப்பும் கண்டு கொள்ளமுடியாதிருக்கிறது என்றும் எப்படி இதையெல்லாம் இவற்றால் அனுமதிக்க முடிகிறது என்றும் தன்னுடைய கவிதைகளின் வழியாக பல கேள்விகளைப் பரப்புகிறார் இந்த வெளியில்.
இதன் மூலம் தமிழ்நதி பெண் கவிதைப்பரப்பிலும் ஈழத்துக்கவிதை வெளியிலும் தமிழ்க்கவிதையின் தளத்திலும் தனித்துத் தெரியும் அடையாளங்கொண்டிருக்கிறார். குறிப்பாக சொல் முறையால்- மொழிதலால் அவர் வேறுபட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை அமைப்பு அல்லது அதன் அனுபவங்கள் அவரிடம் மிஞ்சியிருக்கும் அல்லது திரளும் எண்ணங்கள் எல்லாம் இங்கே உரையாடலாகியிருக்கின்றன.
குறிப்பாக ஈழத்துக் கவிஞர்கள் பலரதும் அண்மைய (அண்மைய என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளான) கவிதைகளில் இன வன்முறையின் கொடுவலியை யாரும் உணரமுடியும். சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம், சிவசேகரம், முருகையன், வ.ஐ.ச. ஜெயபாலன், அ.யே சுராசா, சேரன் போன்ற தலைமுறைகளின் கவிகள் தொடக்கம் இன்னும் இந்த வலியுடைய குரலையே ஒலிக்கிறார்கள். இதில் இடையில் வந்த தலைமுறையைச் சேர்ந்த ஊர்வசி, மைத்திரேயி, ஒளவை, சிவரமணி என்ற பெண் கவிஞர்களும் இத்தகைய தொனியிலும் வலியிலுமான கவிதைகளையே தந்தார்கள். அதிலும் போரும் வாழ்வு மறுப்பும் அகதி நிலையும் இதில் முக்கியமானவை.
இந்த அகதி நிலை இரண்டு வகைப்பட்டது. ஒன்று உள்@ரில் இடம்பெயர்ந்து அலைதல். அருகில் வீடோ ஊரோ இருக்கும். ஆனால் அங்கே போக முடியாது. அதுவும் ஆண்டுக்கணக்கில் அங்கே போக முடியாது. அதெல்லாம் சனங்களைத் துரத்திவிட்டு படையினருக்காக அத்துமீறி அரசாங்கம் கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசங்களாகும். அப்படிக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சரைவை மூலம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலான சுவீகார சட்டம் வேறு. ஆனால் அப்படி கைப்பற்றிய பிரதேசத்துக்கான நட்ட ஈட்டைக்கூட அது கொடுக்கத்தயாரில்லை.
தவிர, போரில், படையெடுப்புகளின் போது நிகழும் அகதி நிலை. இடம் பெயர்வு. இதைவிடவும் புலம் பெயர் அகதி நிலை வேறு. இது வேரிழந்த நிலை. அந்நியச் சுழலில் அந்தரிக்கும் கொடுமையான அவலம். தமிழ்நதி இவை எல்லாவற்றையும் தன் மொழியில் பிரதியிடுகிறார். தமிழ்நதியின் பிரதியில் இனவன்முறைக் கெதிரான பிரக்ஞையும் அகதித்துயரும் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அவருடைய பிரக்ஞை இவற்றில்தான் திரண்டுள்ளது.
இது குறித்து அவருடைய சில அடையாளங்கள், அதாவது இத்தகைய வாழ்நிலையின் பின்னணியில் தமிழ்நதியின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்நதி அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். இந்தத் தொகுதியின் முதற்கவிதையும் இறுதிக்கவிதையும்கூட அரசியற் கவிதைகள்தான். அதிலும் இந்த அரசியலைத் தீவிரமாகப் பேசும் கவிதைகள்.
முதற்கவித


