Monday, March 29, 2010

காணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி!- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -


சிவபாலன் தீபன்

1..

“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், குருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் போரை சந்தித்திருக்கிறோம். எங்கள் அன்றாடம் போர் எழுதிய துயரம் மிகுந்த வாழ்வாய் இருந்தது.கட்டங்கள் கடந்தததும் காலங்கள் கடந்ததுமான போரின் சகல விளைவுகளையும் சுமந்து ஒரு சனக்கூட்டம் எஞ்சியிருக்கிறது. வாய் விட்டழவும் வலிகள் எதுவும் நினைவில்லாத மனித கூட்டம் அது. துயரத்தின் பேசாத சாட்சிகளாக போரின் தடயங்கள் ஒரு ரேகையைப்போல படர்ந்திருக்கிறது எல்லாவிடமும் எல்லோரிடமும். சாவையும் பிறப்பையும் சாதாரணமாக்கியதில் பெரிய பங்கு போருக்கு போகிறது. ஏணிகளை எடுத்தெறிந்து விட்டு பாம்புகளை மட்டும் வைத்து சாவு ஆடிய பரமபதம் நிகழ்ந்தது நேற்று. எங்களை துரத்தி துரத்தி தீண்டியது மரணம். அதற்கொரு எல்லையும் இருக்கவில்லை எவரும் தடுக்கவுமில்லை .அழுவதை மறந்து நாங்கள் ஓடிக்கொண்டே இருந்தோம். எங்கள் இனத்தில் வடிந்த துயரத்தை நீங்கள் கைகள் கொண்டு கழுவ முடியாது காலம் கொண்டு நழுவ முடியாது எங்கள் உயிரை, சதையை, குருதியை, கண்ணீரை பெருங்கதறலை உங்கள் காலடிக்கு கொண்டுவந்தபோது நீங்கள் வேட்டைப்பற்கள் தெரிந்துவிடும் என்ற சங்கடத்தில் மௌனித்தீர்கள். எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம் நீங்கள் நீதி பேசும் சபையில் சிரிக்க.”

இறப்பு குறித்தான நிஜங்களும் வாழ்வு குறித்தான கற்பனைகளும் ஒரு கதையாகவே நிகழ்கின்ற ஒரு நிலத்தின், இனத்தின் தொடச்சியாக நாமிருக்கிறோம். இந்த தொடர்ச்சி அதன் சகல பரிமாணத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியாதாகிறது. இங்கே எமக்காக நாமே அழவும் சிரிக்கவும் தேவைகள் இருக்கிறது.

2..

போர்ச் சர்ப்பம் வால் விழுங்கிச் சுழலும் ஒரு வேளையில் எழுதப்பட்ட கவிதைகளை வடலி வெளியீடாக தொகுத்திருக்கிறார்கள். பலியாடு என்ற பெயரில் வெளிவந்திருக்கின்ற கருணாகரனின் கவிதைகள் குறித்து பேச நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. விடுபடுதல்கள் விளங்கிக்கொள்தல்களின் இயல்பான அச்சம் இது குறித்து தடுத்தாலும் என்னால் பேசாமலும் இருக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

“நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்”

என்கின்ற முகப்பு கவிதை பேசுகின்ற மொழிதான் இந்த தொகுப்புக்கான கட்டியம். உண்மையிலேயே அச்சந்தருவதாயிருக்கிறது இந்த தொகுப்பு முழுவதும். ஏன் என்றும் புரியவில்லை எது குறித்து என்றும் தெரியவில்லை எந்தன் வாசிப்பனுபவம் முழுதும் விந்தி விந்தி வழிந்தது அச்சத்தின் எல்லாச் சாயலும். நான் அதை மறைத்து மறைத்து வாசித்து ஒவ்வொருதடவையும் தோற்றேன்.
"வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்குமுன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தில் வெளிவருகிறது." - என்பது தான் இந்த கவிதை தொகுப்பின் அட்டையில் உள்ள மிக இறுதி வாசகம். இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்? அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்?

ஒரு முதியவனை கண்டேன், அவன் பிறந்த போதும் வளர்ந்த போதும் இருந்தது ஒன்றே அது போர்; அது சார்ந்த மரணங்கள் வலிகள் இன்னபிறவும் சேர்ந்து எப்போதும் சூழ்ந்து கொள்ளும் அவமானங்களாயும்.. அவன் அதற்குள்ளே பிறந்தான் அங்கேயே வளர்ந்தான் அவன் இருப்பு முழுதும் மரணம் சூழ்ந்திருந்தது. எதற்கும் அவன் பெயர்ந்தவன் இல்லை. அவனை எடுக்க அச்சப்பட்டேன் அவன் பேசியது கேட்க பயப்பட்டேன். எந்தன் கையில் கிடந்தான் ஒரு தொகுதித் துயரமாய். எனக்கு தாகமாக இருந்தது நீரருந்தவும் தயங்கினேன் அவன் சாலை முழுதும் பாலையாய் இருந்தது குருதி காய்ந்து. அவனிடம் ஒரு சோடிக் கண்கள் இருந்தது அது பேச வல்லதாயும் புலன் நிறைந்ததாயும் இருந்தது. அவன் இரப்பவனாய் இருக்கவில்லை. அவன் இரந்தபோது அதை கொடுப்பவனாயும் எவனும் இங்கு இருக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்? - ஒரு முதியவனை கொண்டிருந்த முகப்போவியம் என்னுள் எழுப்பிய வாசிப்பு இது.

முகப்போவியமாய் இங்கே முதுமையோடு தீட்டப்பட்டிருப்பதை எங்கள் வாழ்க்கை என்றே வாசிக்கத்தோன்றுகிறது. இந்த இடத்தில் மறைந்த பெண் கவிஞர் சிவரமணியின் பின்வரும் கவிதைகளின் மீதான வாசிப்பும் பொருத்தம் மிக்கது என நினைக்கிறேன் .

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….
எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்

“பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.”
-சிவரமணி

யுத்தகாலம் சகலதையும் முதுமைக்குள்ளாக்கும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது நீண்ட காலமாய். எல்லோரிடமும் பாதுகாப்பு வேண்டி நாங்கள் முதுமையடைகிறோம் , இதில் இயற்கையாகவும் யுத்தத்தின் இயல்பாகவும் மரணம் நம்மை நிரந்தரமாக ஆட்கொள்கிறது. யுத்த காலத்தில் தவறிப்போன இளமைக்காலம் குறித்த வருத்தம் வேதனை தருவதாக இருக்கிறது.

சாவை வளர்த்து வாழ்வுக்கு கொடுத்ததன் மூலம் சாவே வளர்ந்த சூழலில் வந்த கவிதைகள் இவை, கரு முட்டையை நோக்கி சிரமத்துடன் நீந்திச் செல்லும் விந்தணுவைப்போல இந்தக் கவிதைகளினது ஜீவிதம் குறித்தான முனைப்புகளும் பெரியவை. வாழ்ந்தாக வேண்டும் என்ற உயிரின் துடிப்பு ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஒவ்வொருவருடைய குருதியாலும் உடைந்துபோன சுவரில் எழுதப்பட்டிருக்கிறது மானுடத்தின் பாடல்.

"போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக் கிடக்கிறது நடுத்தெருவில்
நாய் முகர…
……………………..
யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது?
அதில் மிதக்கும் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும் என்ன செய்வது?"

எங்கள் எல்லோரிடமும் அடை காக்கப்பட்ட மௌனங்களை தவிர பதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

என்றென்றும் நான் ஆராதிக்கின்ற கவிதை இது. வாழ்தலின் உச்சபட்ச வேண்டுதலையும் இருத்தலின் எல்லாவித சாத்தியப்பாட்டையும் வெளிப்படுத்திய மானுடத்தின் மண்டியிட்டழும் குரல் இது. விழியோடும் உவர்ப்போடும் விரல் கொண்ட நடுக்கத்தோடும் நான் இதனை வாசித்து முடித்தேன் ..

“எந்தப் பெருமையும் இல்லை
போங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களை பெறுவதில்
எந்தச் சிறுமையும் இல்லை
மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது
என்று எவ்விதம் உரைப்பேன்? .....” .
(சாட்சிகளின் தண்டனை)

ஊசலாடுகின்ற பெண்டுலம் கடிகாரத்தை உயிர்ப்பிப்பது போல இந்தக் கவிதை என்னுள்ளே அலைந்து கொண்டே இருக்கிறது படித்த நாள் முதல். மிக அண்மையில் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களை மறுவாழ்வின் முடிவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் புகைப்படங்களை காண நேர்ந்த போது கண் நெடுக வழிந்தது மேற்சொன்ன கவிதை வரி. மகாகனம் பொருந்தியவர்களே போரை முடித்து விட்டீர்கள், போர்க்கணக்கை நீங்கள் விரும்பியவாறு எழுதிக்கொள்ளுங்கள், புகழை எப்படியும் எழுப்பிக்கொளுங்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளுங்கள்; கூண்டுகளில் இருக்கும் எங்கள் மனிதர்களை திருப்பிதாருங்கள். மண்ணுலகில் உங்களின் மாட்சிமைக்கெதிரே மண்டியிடுகிறோம் வேண்டுவதெல்லாம் அவர்கள் வாழ்க்கை ஒன்றே! விட்டுவிடுங்கள் எல்லோரையும்.

“ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்…”.

சனங்களின் கண்கள் இரண்டு வரிசையிலும் பிடுங்கப்பட்டது எந்த வரிசையில் இருந்தவர்களும் தப்பவில்லை. அவர்களிடம் கண்களை தவிர வேறதுவும் இருக்கவில்லை அதனால் அவர்கள் கொடுக்கவும் இல்லை. போர் தனக்கு ஒரு முகமே இருப்பதாகச் சொல்லி எல்லோர் கண்களையும் பிடுங்கியது. போரிடம் நல்ல முகம் என்பதே இல்லை என்றறிந்த மக்களிடம் கண்கள் பிடுங்கப்படிருந்தன.

3..
கருணாகரனின் கவிதைகள் பேசும் அரசியல் குறித்து அவதானத்தோடே பேச இருக்கிறது. அவரது படைப்புலக அரசியல் குறித்த ஆய்வை ஒரு பாதுகாப்பு கருதி சற்று வெளியே நிறுத்தி விட்டு இந்த தொகுப்பை வாசிக்க வேண்டிய பொறுப்பு உயிர் குறித்தான அச்சங்கள் அற்று இலக்கியம் பேசுகின்ற எங்களுக்கு இருப்பதாகவே உணர்கிறேன். அதுவே இங்கு அரசியல் சார்பு விமர்சனங்களை மீறி இந்த தொகுப்பு மீதான ஒரு மட்டுப்படுத்திய வாசிப்பை கொடுக்கிறது ஆனால் அது கவிதை அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதித்தாக தெரியவில்லை . ஆனாலும் அவரும் தீவிர நிலையில் கவிதைகளை எழுதிய படைப்பாளியே என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இங்கே கருணாகரனின் படைப்புகளில் உள்ள சிறப்பம்சமாக ஒன்றை சொல்ல வேண்டும், அவருடைய கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையில் எப்போதும் இன்னொன்றை அனுமதிப்பதில்லை. அவரது கவிதைகளே அதன் வாசகனோடு இயல்பாய் பேசிவிடுவதால் அவரது கவிதை குறித்து பேச வருபவர்களுக்கு இன்னொரு தளம் இலகுவாக கிடைக்கிறது அதன் விளைவுகள் குறித்து உரையாட .இது ஏற்படுத்தி தரும் வெளி வசதியானது இது போன்ற வாசிப்புநிலை குரல்களை செவிமடுக்க.

கருணாகரனின் கவிதைகளில் நாங்கள் சரளமாக சந்திக்க கூடிய இன்னொரு நபர் கடவுள் மற்றும் தேவதூதன், தேவாலயம், கோவில் சார்ந்த அவரது துணைப்படிநிலைகள் – குறியீடுகளாகவும் படிமங்களாகவும் நிறைந்திருக்கிறது கவிதைகள் நெடுக. நிராசைகள் நிறைந்திருக்கும் உலகில் முதல் விமர்சனப் பொருள் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும்தான். அவர்களால் நம்ப வைக்கப்படுகின்ற - அல்லது அவர்கள் நம்புகின்ற ஒன்றிடம் அலைகழிக்கப்பட்ட கேள்விகள் சென்றடைகின்றன. சார்போ எதிர்ப்போ பதிலளிக்க வேண்டியது அங்கே அவர்கள் தான். கையறு நிலையில் துயரம் மிகுந்தவர்களின் பிரார்த்தனைதான் பிதாக்கள் மீதான ஏளனப்பாடலாகிறது - அவர்களுமறியாமல். எல்லாமறிந்த கடவுள்களின் அபயமளிக்கின்ற புன்னகையையும் குண்டு துளைத்திருக்கிறது. கோபுரத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற புறாக்களின் குருதி பீடத்தில் வழிந்திருக்கும் போது கேள்விகள் இடம்பெயர்ந்தலைகின்றன உயிரை காப்பாற்றிக்கொள்ள.


“.........................................................
முடிவற்ற சவ ஊர்வலத்தில்
சிக்கியழிகிறது பொழுது

புனித நினைவாலயலங்கள்
ஒவ்வொன்றாக வீழ்கின்றன

எங்களை கைவிட்ட கடவுளர்கள்
எங்களால் கைவிடப்பட்ட கடவுளர்கள்
எல்லாம் இங்கேதான்

இனிவரும் முடிவற்ற இரவு
நமது பிணங்களின் பரிசாக “
(இருள்)

முடிவற்ற இரவு குறித்தான பதட்டங்களில் எழுதப்படுகிறது பிரார்த்தனையின் பாடல் - நம்பிக்கை அழிந்திருப்பவர்களிடம் இருந்து - எழுத்துப் பிழைகளுடன் தாறுமாறாக..

.....................................................................
சந்தையிலுருந்து திரும்பிய
பெண்ணிடம்
தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்
கேட்டார் இரண்டு காசுகளை கடனாக

பசி தணிந்த பிறகு காத்திருந்த
கடவுளை ஏற்றிச் செல்லவில்லை
எந்தப் பேருந்தும்

யாரும் பேசாமல் சென்றபோது
தனித்த கடவுள்
வாழ்ந்து விட்டு போங்கள் என்றார்
சலிப்பு நிரம்பிய கோபத்தோடு
...........................................................................
( கண்ணழிந்த நிலத்தில் )

மேற்குறித்த வரிகளை கடந்து செல்ல எமக்கு தேவையாயிருப்பது ஒரு புன்னகை மட்டும் அன்று - கைவிடப்பட்ட மனிதர்களின் சார்பாக கடவுளை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது வருத்தத்துடன்.

மேலும் கடவுளர்கள் குறித்து நிரம்புகிறது கவிதைக்கான பாடு பொருள்

..கொலை வாளை வைத்திருந்தான் என்று
குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்
தலையை கொய்துகொண்டு போன
புதிய கடவுளை சனங்கள் திட்டினார்கள்..

பாடுகள் சுமக்கின்ற மனிதர்களால் வரையப்படும் கடவுள் குறித்தான சித்திரங்கள் முடிவுறுவதாக தெரியவில்லை, கொடும் பாலையில் அனல் காற்று வீசியிறைக்கும் மணல் துகளாய் நிறைகிறது விழியோடும் வழியோடும்.

சாத்தானும் கடவுளும்
ஒரே ராஜ்ஜியத்தில் பங்கு வைத்துக்கொண்ட
உலகத்தில்
சனங்களின் நிழலைக் கண்டு
நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்
ஒருவனை கண்டேன்
அன்றிரவின் இறுதிக் கணத்தில்

( வளாகத்தின் நிழல்களில் படிந்திருக்கும் பயங்கரம்)

சாத்தான்களாலும் கடவுளர்களாலும் பங்கு போடப்பட்டிருக்கும் உலகில் சனங்களின் நிழலைத் தன்னும் கண்டவனை காணமுடியாமை உச்சநிலைத் திகிலை வாசிப்பு மனதில் நிகழ்த்துகிறது. மேற்குறித்த கவிதைகளில் எல்லா நிலைகளிலும் கடவுளர்கள் ஒருவராக இருப்பதில்லை அனால் சோதிக்கப்படும் பாடு நிறைந்த மக்கள் ஒருவராகவே இருக்கிறார்கள் என்பது எத்தனை முரண் நகை.



4.

இந்த தொகுப்பு ஏறத்தாள நூற்றுப்பதினைந்து பக்கங்களில் கருணாகரனின் ஐம்பது கவிதைகளை உள்ளடக்குகிறது. வடலி வெளியீட்டின் தொகுப்பு. அவரது கவிதைகளை நன்கு புரிந்த அவரது நண்பர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் நேர்த்தியோடு பதிப்பிடப்பட்டிருகிறது. இதில் உள்ளடக்கப்படிருக்கும் எல்லாக்கவிதைகளையும் யுத்தத்தின் அவலச்சுவை என வகைப்படுத்த முடியாது. குற்றமும் தண்டனையும் மன்னிப்பும், தேவ தேவனின் பறவை, மூடிய ஜன்னல், சிரிக்கும் பறவை, பெண்நிழல், மாமிசம், பறக்கும் மலைகள், உறக்கத்தில் வந்த மழை, குழந்தைகளின் சிநேகிதன் முதலிய கவிதைகள் வாழ்வியலின் தொடர்ச்சியை அதன் தருணங்களில் பதிவு செய்பவை. அந்த வகையில் குழந்தைகளின் சிநேகிதன் எனக்குபிடித்த கவிதை – இன்பம் தொற்றிக்கொள்ளக் கூடியது எப்போதும் நீங்கள் அதை காவிச் செல்பவராய் இருங்கள் என்கிறது ஒரு பொன்மொழி – இங்கே குளிர் விற்பவர்கள் குழந்தைகளிடம் அப்படித்தான் இருக்கிறார்கள் இன்பத்தை அதன் கரைந்து விடும் (நிலையற்ற) நிலையில் எடுத்துச் செல்பவர்களாக..

“குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி“

என்ற எளிய கவிதை மொழி சிறுவர்களை நோக்கி பேசுகிறது. இதன் எளிமைக்காகவே இதனை நேசிக்கிறேன்.

…………………..
என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர் விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும்”

யாரிடம் இல்லையென்று சொல்லுங்கள்? மணியொலி, மகிழ்ச்சி மற்றும் குளிர்ந்தினிக்கும் துளிகளைத் தந்தவர் புன்னகை.


போர் தன் சமன்பாட்டை எங்களில் எழுதிவிடுகிறது, அதற்கு விடையளிக்க முடியாதவர்களை தன் வாயால் விழுங்கி விடுகிறது. உண்மையில் அதற்கொரு விடையும் இல்லை எனக் கண்டிருக்கின்ற நாங்கள் இறந்திருக்கிறோம் எல்லா விதமாகவும். யுத்தத்தின் விளைவுகள் எவருக்கும் எப்போதும் மகிழ்ச்சிகுரியவை அன்று. யுத்தம் தன் சாட்டையை எல்லோரிடமும் விசிவிட்டு செல்கிறது அதன் வலிகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாய் இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் போரின் வால் எங்களை சூழ்ந்திருக்கிறது. அது தருகிற அப்பாலான விளைவுகள் வெளிவருகிறது வேறுபட்ட வடிவங்களில்.

“வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்”

குழந்தைகளும் வாசலைத் திறந்து வெளியேறிவிட்ட வீடுகளில் ஞாபகங்களுடன் பொம்மைகளாக இருக்கிறார்கள் அவர்களை பெற்றவர்கள். உண்மையில் போர் வரின் பிரிதலோ இல்லை பொருள் வரின் பிரிதலோ, பிரிதல் வேதனையானது அது வாழ்வின் பிடிமானம் குறித்தான கடைசி நூற்புரியையும் பரிசோதித்து விடும் வல்லமை உள்ளது. எங்கள் பிடி நழுவிக்கொண்டிருக்கிறது எல்லா வகையிலும். மேற்குறித்த அருமையான கருணாகரனின் இந்தக் கவிதை இத் தொகுப்பில் இடம் பெறவில்லை. அனால் மேற்குறித்த கவிதை எம்மக்குள் நிகழ்த்தும் கிளர்வை இன்னொரு கவிதை சாத்தியப்படுத்துகிறது தொகுப்பில்.

“பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்து போகும்
இளமைக் காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்கும் இடையில் கிடந்தது அவிகிறான்“

என்று ஆரம்பிக்கிறது தூக்கத்தை தொலைத்த கிழவன் கவிதை

“கால முரணுக்கிடையில்
தன்னை கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான கருணையில்..“

காலம் எல்லாவிதத்திலும் முரண்தான் - யார் அறிந்தோம்?
சர்வதேச தேதிக்கோடு என்று சொல்லப்படுகின்ற பூமிக்கோட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு நீர்த்துளிகளின் இடைவெளியை தூரக்கணக்கில் சொன்னால் பூச்சியம் நேரக்கணக்கில் சொன்னால் நாள்; அது போலதான் உறவுகளை கருணையின் கணக்கில் ஒன்றாகவும் காலத்தின் கணக்கில் வேறாகவுமாக பிரித்து வைக்கிறது கண்டங்கள்.

“வெவ்வேறு கண்டங்களுக்கு இடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்த துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளை என்றும்
அங்கும் இங்குமாக“

அன்பின் உடலின் துடிப்பு குழந்தையின் ஞாபகங்களோடு தனித்திருக்கின்ற பொம்மையை அழைத்து வருகிறது மீண்டும் மீண்டும்.

காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை. சிலர் காணமல் போனபோது அழுதோம் சிலர் காணாமல் போனபோது மகிழ்ந்தோம். சிலர் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்கள். சிலர் எழுத வைத்து விட்டு காணாமல் போனார்கள். சில காணாமல் போதலுக்காய் இன்னும் சில காணாமல் போதலை நியாயம் செய்தார்கள். நாங்களே எங்களுக்குள் காணாமல் போதலை நிகழ்த்தினோம் இன்னும் என்னவாய் எல்லாம் சாத்தியமோ அவ்வாறாய் எல்லாம் நாங்கள் காணாமல் போயிருக்கிறோம். சரியோ-தவறோ, நியாயமோ- அநியாயமோ, காலத்தின் தேவையோ-களத்தின் தேவையோ ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரொரு துயர் மிகுந்த இரவை உருவாக்கியது எங்கள் வரலாற்றில் . அந்த இரவில் விளித்திருந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி.

காணாமல் போனவனின் புன்னகை என்கின்ற கவிதை எங்கள் ஞாபகங்களில் சில கேள்விகளை எழுப்புகிறது. திரும்பிச் செல்லவும் முடியாது அங்கிருக்கவும் முடியாது என்கின்ற நிலையில் காணாமல் போனவன் புன்னகை எங்களை தொடர்கிறது அல்லது எங்களை தடுக்கிறது. காயமறுக்கும் கண்ணீர்த்துளிகளின் முன்னிலையிலும் குருதியின் அருகாமையிலும் சில கேள்விகள் சிந்திக்கிடக்கிறது - காலம் பதில் சொல்லக் கடவது.

" திரும்பிச் செல்ல முடியவில்லை
காணாமல் போனவனின் புன்னகையை விட்டு.."

பெருந்துயரமாக இருக்கிறது காணாமல் போனவனின் புன்னகையில் இன்றும் உறைய மறுத்திருக்கும் குருதித் துளி குறித்து.

நன்றி: வைகறை மாதஇதழ் (கனடா)

No comments: