Wednesday, December 26, 2007

"மண் " ஒற்றுமைக்கான நவீனம் ஒரு சமூகப்படம் பற்றிய ஆய்வு

எழுதியவர்--------------------------------
--------------------------தீபச்செல்வன்
__________________________________________________

ஈழத்து சினிமா பற்றிய அவதானிப்புகளும் விவாதங்களும் பரவலாக காணப்படுகின்ற சூழலில் 2006 இன் இறுதியில் ஆணிவேர், மண் முதலிய இரண்டு வெண்திரைப்படங்கள் ஈழத்துப் படங்களாக வெளியாகியிருக்கின்றன। இந்த இரண்டு படங்களுக்குமான உரையாடல்கள் விமர்சனங்கள் என்பன இன்னும் பரவலாக முன்னெடுக்க வேண்டியுள்ளது। இந்தப்படங்கள் பரவலான பார்வைக்கு உட்படுத்தவும் முடியாதிருக்கிறது. இருந்தாலும் மண் திரைப்படம் தற்போது பரவலாக பார்வைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

மண் திரைப்படம் எடுக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை பல அறிமுகக் குறிப்புக்கள் பல்வேறு ஊடகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் நீண்ட கருத்தாக்கமோ ஆழமான பார்வையோ விவாதமோ இடம் பெறவில்லை என்று குற்றமும் எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் மண் படம் பற்றி கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்காறர்.(தினகரனில்) வே.தினகரன் மண்படம் தொர்பான முரண்களை(வீரகேசரியில்) எழுதியிருக்கிறார். நிச்சயமாக இந்தப்படம் பற்றிய விரிந்த உரையாடலுக்கும் ஆய்வுக்கும் நாம் தயாராக வேண்டியது ஈழச்சினிமா பற்றி அக்கறையுள்ள அனைவரினதும் கடமையாகும்.

மண்படம் எந்த அரசியலும் கலக்காத சமூகப்படம் என்று புதியவன் கூறினார். அவர் எந்த அரசியல் விவகாரங்களையும் எடுத்துக் கதையைக் காட்டவில்லை என்பதனால் இப்படி கூறியிருக்கலாம். அரசியல் வழி நீண்டு ஏற்பட்ட போரின் வடுக்கள், மீட்கப்பட்ட கிராமங்கள். தாயகம் பிரிந்து புலம்பெயர் சூழல் இவைகளைக் கொண்டு படத்தை இயக்குனர் உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் பிரதானகதை மிகவும் முக்கியமான விடயம்। இது ஈழத்துச் சினிமாவுக்கு ஒரு புதிய பிரச்சினையை கையாளும் படமாகவும் வாய்த்திருக்கிறது. கவிதை,சிறுகதை,நாவல் முதலிய இலக்கியங்களில் பகிரப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வு, சாதிய எதிர்ப்பு, பிரதேசவாதம் முதலிய முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டு படம் பகிரப்பட்டுள்ளது. சமூகத்திற்கு மிக அவசியமான கதை ஒன்றை சமூகத்தின் வழிபிறழாது படமாகத் தரப்பட்டிருக்கிறது.

பொன்னம்மா, தங்கையா, மலையகத்திலிருந்து கலவரத்தினால் இடம்பெயர்ந்து கனகராயன்குளத்தில் வந்து வசிக்கிறார்கள். அந்த ஊரின் முதலாளிகளான நல்லதம்பி மற்றும் அவரின் நண்பன் முதலியோரிடத்தில் தங்கையாவும் பொன்னம்மாவும் அவர்களைப் போல மலையகத்திலிருந்து வந்தவர்களும் வேலைக்குப் போகிறார்கள்.அங்கு அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் ;இதற்கிடையில் நல்லதம்பியின் மகன் பொன்னம்பலம் தங்கையாவின் மகள் லஷ்சுமியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.

இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பொன்னம்பலம் எனப்படும் பொன்ராசு லக்சுமியைக் காதலிக்கிறான். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவினால் லக்சுமி கர்ப்பமடைகிறாள். லக்சுமி மீதான காதலையும் அவளையும் பொன்ராசின் பெற்றோர் எதிர்ப்பதைப் போல பொன்ராசும் ஏமாற்றி வெளிநாடு ஓடுகிறான். இது படத்தின் இடையில் நகர்த்தப்படும் அழுத்தக் காட்சிகள்.

இலண்டனிலிருந்து பொன்ராசு விவரணப்படம் ஒன்றை எடுப்பதற்காக நாடு திரும்பி வருகிறான் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. அப்படி வரும் பொன்ராசை பழிவாங்க பொன்ராசுவின் மகன் பின் தொடருகிறான். இதுதான் படத்தின் நகர்த்தலாகக் காணப்படுகிறது.

மிகவும் யதார்த்தமான கதைக்குச் சரியான முடிவும் யதார்த்தமான இறுக்கமும் படத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கதையைக்கொண்டு செல்லும் முறையில் புதியவன் கையாளும் நுட்பங்கள் இயல்பான சூழல் என்பன கவனிக்கப்பட வேண்டியது.இந்தப்படத்தை பார்த்தபிறகுகூட கனகராயன்கிராமத்தை சென்று பாhத்து விட்டு இக்கட்டுரையை எழுதத்தொடங்கினேன். கனகராயன் குளப்பாடசாலைக்கு சென்றேன் மண்படத்தில்வரும் அதிபரைப்போலவே கனகராயன் குளப்பாடசாலை அதிபரும் இருந்தார். அதைவிட அங்கு இன்னொரு செய்தியையும் அறிந்தேன் படத்தில் காதல் சுகுமார் கிருமிநாசினி விசிறிக்கொண்டிருக்கும் போது உடலில் நஞ்சேறி மரணமடைகிறார். படத்தில் காரை வழங்க மறுத்ததைப்போல அவர்கள் வண்டிலை வழங்க மறுத்திருக்கிறார்கள். அப்படிபல உண்மைச்சம்பவங்களை வைத்தே படத்தை புதியவன் எடுத்திருப்பதாக அக்கிராமமக்கள் கூறினார்கள்.

குறிப்பாக, படம் கனகராயன்குளக் கிராமம் ஒன்றில் நிகழும் சம்பவங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கு செய்யப்பட்ட கனகராயன்குளம் மீதான காட்சிகள் அநேகமான இடங்களில் கனகராயன்குளத்தை ஒத்திருக்கின்றன.கனகராயன் குளத்தில் இடம்பெறும் சம்பவங்களுக்கான காட்சிகள் தொடக்கம் முதல் முடிவுவரை கனகராயன்குளத்தின் உள்ளேயே நிகழும் உணர்வைத் தருகின்றன.

படத்தில் வரும் பாத்திரங்களிடையேயான பழக்கவழக்கங்கள் இ உரையாடல்கள் என்பனவும் நமது பண்பாட்டை அசலாகப் பிரதிபலிக்கின்றன.குறிப்பிட்டுக்கூறமுடியாதளவு முழு வசனங்களுமே எமது மொழியில் வருகின்றன. பொன்ராசின் உரையாடலில் இளைஞர்களின் பேச்சுவழக்கும், நல்ல தம்பியின் உரையாடலில் முதுமைப்பேச்சுவழக்கும் மிக அழகாக வெளிப்படுகிறது. மலையகத்திலிருந்துவரும் தங்கையா, பொன்னம்மா ஆகியோரின் உரையாடலில் மலையகமும் வன்னியும் இணைந்துவரும் மொழியும் அழகாகக் கையாளப்படுகிறது.

இளநீர் களவெடுக்கும் பழக்கம், அதற்காக பெற்றோர் தண்டிக்கும் பழக்கம் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் கீழ்வகுப்பு மாணவர்களுக்கு பாடக்குறிப்புக்களை வழங்கும் பழக்கம் என்பனவும் படத்தில் காணப்படுகின்றன. எங்களுக்கே உரியதும் இயல்பானதுமான காதல் கொள்ளும் விதம் சண்டையிடும்விதம் முதலியனவும் யதார்த்தமாகக் கையாளப்பட்டுள்ளது.

தென்னம்தோப்பு வேலைகள், மாட்டுப்பட்டிகள், வீடு, முற்றம், பாவனைப் பொருட்கள் முதலியவற்றிலும் நமது அடையாளமும் பதிவும் இயல்பான பகைபுலக்காட்சிகள். பாடசலையில் சில காட்சிகள் இம்பெற்றுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்குப் போவது பாடசாலையில் அரட்டை அடிப்பது, ஆசிரியர்களோடு உரையாடுவது, ஆசிரியர்கள் கற்பிக்கும் ஒழுங்கு முதலியவற்றிலும் இயல்புகுலையாது சித்தரிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இது எமது பாடசாலையாக படைக்கப்பட்டிருக்கிறது.

முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த நல்லதம்பி அவரின் மனைவி முதலிய பாத்திரங்களும் அப்படியே உணர்வை பிரதிபலித்திருக்கின்றன. கிட்டத்தட்ட 80 களில் இடம்பெறும் சமூக எற்றத்தாழ்வைப் பற்றி கதையைப் புனையும் புதியவன் அக்காலப்பகுதியில் லக்சுமியை ஏமாற்றிவிட்டு லண்டன் போகும் பொன்ராசு 2002 களில் ஏற்பட்ட சமாதான காலத்தில் நாடு திரும்புவதாக நிகழ்த்தி முடிக்கிறார்.

சாதிய வெறியால் பொன்ராசு தன் வாழ்வை இழந்து தனித்துத்திரிவதைப் போலவும் காட்டப்படுகிறார். அவரோடு படிக்கும் நண்பன் ஒருவன் அக்காலத்தில் போராட்டத்தில் இணைந்துகொண்டதும் -மீண்டும் போராளியாக நலமுடன் காணுவதைப்போலவும் படத்தின் முக்கியகாட்சி ஒன்று காணப்படுகிறது.. இருவருக்கு மிடையிலான சாதி வெறியும் தேசப்பற்றும் அதில்காட்டப்படுகிறது.. கிட்டத்தட்ட 18 வருடகால சம்பவத்தை மீட்கும் விதமாக படம்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அநேகமாக ஈழத்துப்படங்கள் விவரணப்படங்களைப் போலவே வருகிறது என்ற கருத்து மண் படத்தில் எவ்விடத்திலும் கூறமுடியாது.

"தோட்டத்தில வேலை செய்யிற கழுதைக்கு நான் மாப்பிளையாம் "

என்ற வெறி வார்த்தைகளைக் கொட்டிவிட்டு ஊரைவிட்டு ஓடும் பொன்ராசு தன் வாழ்க்கையைத் தொலைத்து நிம்மதியின்றி மீள ஊர்வருகையில்

"லண்டனுக்குப் போகவில்லை

பாரிசுக்குப் போவில்லை

சொந்தமண்ணில் தானிருந்தோம் சந்தோஷமாக "

இப்படி ஒரு பாடல் காணப்படுகிறது.

"விழமாட்டோம் விழமாட்டோம்

கனவுகள் பலித்துவிடும் "

என்ற ஆழமான அர்த்தமுடையவரிகளும் அந்தப்பாடலில் உள்ளன..

இந்தப் படத்தின் மூலம் 80களில் நிகழ்ந்த சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய விடயத்தை மட்டும் கூறிமுடிக்கவில்லை;. அந்நாளிலிருந்து இன்றுவரை கனகராயன்குளத்தோடு எமது முழுத்தேசமும் படும் துயரத்தையும் மாற்றத்தையும் காட்டுகிறார். சமூக ஏற்றத்தாழ்வை ஒழித்து படத்தின் முடிவில் தேசத்தின் விடிவுக்கு ஒற்றுமை குரலிடுகிறார். இதைப் பொன்ராசின் மகன் பொன்ராசைப் பார்த்து

"சிவனேசன்ர அம்மா செத்தது புக்காரா குண்டுவீச்சில

கூடவே இருந்த நண்பன் செத்தது இந்தத் தேசத்துக்காக

கண்ணம்மாக்காண்ர ஆறுமாதக் குழந்தை செத்தது

குடிக்கிறது பால்மா இல்லாம

என்ர அம்மா செத்தது உன்னால

என்ர அம்மா செத்தது உன்னால... "

என்று கூறும் வார்த்தைகளில் இருந்து ஒற்றுமையின்பலத்;தை உணரமுடிகிறது. படத்தின் முடிவில்

"கும்பிட்ட கைகள் நடுவே துப்பாக்கி தூக்கின இவன் கரங்கள் "

என்று எழுச்சியின்; அர்த்தம் பற்றிய கருத்துடன் படம் முடிகிறது.

படத்தில் நடித்த எல்லாப் பாத்திரங்களுமே குறிப்பிடப்பட்ட பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். விஜித், ஷனா, சந்திசேகர்,சுகுமார் முதலியோரின் நடிப்பு வெகு இயல்பானது.

எமது மொழியைக் கையாளும் விதம் பின்னணி பேசிய தொழிநுட்பம் என்பனவும் அவதானமாகக் கையாளப்பட்டுள்ளது. ஈழம்பற்றிய படங்களில் அதிகம் எமது மொழியைக் கையாளுகையில் பிழையும் இயலாமையும் நிகழ்ந்து வருவதுண்டு. மண்ணில் மொழி வெற்றியளித்திருக்கிறது. 80களுக்குரிய காட்சி உரிய காலத்தின் கலாச்சாரங்களையும் உரையாடல்களையும் சித்தரிக்கத் தவறியுள்ளது. அக்காலத்திற்குரிய காட்சிகள் தற்காலத்தைப் போலவே காணப்படுகின்றன.

படத்தின் பிரதான பாத்திரத்தை நாயகத்தனமூட்டிப் பெரும் தலையாக சித்தரிக்கும் இன்றைய தமிழ் சினிமாப் படங்களுக்குப் பொன்ராசு எவ்வாறு சமூகத்தில் வாழ்கிறான் என்பதை எந்தத் தூக்கலுமற்றுக் காட்டுவதும் தந்தைகளை வில்லன்களாகக் காட்டி வாழ்வைப் போரூட்டும் தமிழ் சினிமா நல்லதம்பி முகலிய பாத்திரத்திரங்களை கற்றுக்கொள்ள வேண்டியுமுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவு மிக அழகியலுடன்; அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற குளோசப் (closup) காட்சிகள் தேவையற்ற உணர்வு திணிக்கப்படவில்லை. அனைத்துக் காட்சிகளும் ஒவ்வொன்றாக அடையாளம் காணக்கூடியவை. ஒவ்வொன்றும் இயல்புடனும் அவதானமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கனகராயன்குளக் கிராமத்தைக் காட்டுவதில் ஒளிப்பதிவின் பங்கு மிகமுக்கியமானது.

சில ஆங்கில மற்றும் பிறமொழிப்படங்களில் இப்போது படத்தொகுப்புக் குப்பையாக அதாவது கற்பனை உலகத்தை வலிந்து காட்டுவதாக மேற்கொள்ளப்;படுகிறது. பாடல்காட்சிகள், மோதல் காட்சிகள் முதலியன போலித்தனமாகத் தொகுக்கப்படுகிறது. மண் எந்த செயற்கையும் அற்று தொகுக்கப்பட்டதில் தொய்வோ தேவையற்ற விறுவிறுப்போ-மர்மமோ இல்லை. படத்தொகுப்பு இயல்பான நகர்த்தலுக்கு உதவியிருக்கிறது.

படத்தில் இடம்பெறும் சிறந்த பாடல்கள் அத்தனையும் ஜேர்மன் விஜய் இசையமைத்துள்ளார். படத்திற்கான பிரதான குண இசை இல்லையென்றாலும் படத்தின் போக்கில் இசையின் ஓட்டம் வலுவை வழங்கியுள்ளது.

மண்படத்தை இயக்கியிருக்கிறார் புதியவன். சமூக ஏற்றத்தாழ்வை அழித்து ஒருதேச ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்ற செய்தியையும் சொல்லுகிறார். பிற்போக்கை கேலி செய்து படிப்பினைகளைத் தந்திருக்கிறார். ஈழத்தின் எந்தப்பகுதியிலும, உலகத்திலும் வெளியிடக் கூடிய வகையில் படத்தை எடுத்து சமூகத்தை வழிப்படுத்தி ஒரே இனம் ஒரே தேசம் ஒரே சமூகம் என்ற வெற்றியைக் கூற மண்ணை புதியவன் படைத்திருக்கிறார்.

படத்தின் திரைக்கதையும் (எழுத்து) தயாரிப்பும் ராஜ் கஜேந்திரா. 90 நாட்களில் படப்பிடிப்பு செய்து அவசியமான படத்தை நமக்குத் தந்த மண் திரைப்படக் குழுவிற்கு நாம் எல்லோரும் பாராட்ட வேண்டும் இன்னும் ஆழமாக விரிந்த கருத்துக்களை அனைவரும் முன்வைக்க வேண்டும். மண்போல புதியவன் போல இன்னும் பலவற்றை ஈழச்சினிமா தன் வசம் காணவேண்டும். எல்லோரும் கருத்தாடுவதன் மூலம் மண்பற்றிய முரண்களையும் சாதனைகளையும் அறிந்து கொள்ளவும் முடியும.

நிலை குலைந்து திரிதல் முல்லை யேசுதாசனின் இரண்டு குறும்படங்கள் பற்றி





எழுதியவர்--------------------------------
--------------------------தீபச்செல்வன்
__________________________________________________
ஈழத்தில் இயக்கப்படுகிற படங்கள் அதாவது புலிகளின் கலைத்துறையினரால் தயாரிக்கப்படுகிற படங்கள் அவர்களின் தாக்குதல்கள் பற்றிய விவரணச் சித்திரங்களாகவே அமைந்துவிடும் என்று பரவலான கருத்து உண்டு. அல்லது பிரச்சாரப்போக்கை முன்னிறுத்தி எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவைகளால் அவை நீண்ட பார்வைத்தளங்களுக்கோ காண்பிப்புக்களுக்கோ, விவாதங்களுக்கோ எடுக்கப்படாத குறைப்பார்வை இப்போதும் தொடர்ந்து வருகிறது. ஈழத்து சினிமாவின் வளர்ச்சிபற்றியும், போலிச்சினிமாவுக்கு எதிராகவும் அதாவது யதார்த்த சினிமா பற்றியும் உரையாடல் செய்பவர்கள் நிச்சயமாக இவைகளையும் ஆராய்ந்தே தமது ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இது கலைக்கும் ஈழசினிமாவுக்குமான நேர்மையான நோக்கும் கடமையுமாகும்.

இருந்தாலும் சமூகத்தை மையப்படுத்திய போரின்மீதான வாழ்வையும் துயரையும் வெளிக்காட்டும் படங்களும் அதோடு வெறும் சமூகப்பிரச்சனைகளை மையம்காட்டும் படங்களும் இயக்கப்படுகிறது என்பது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய அவசியமாகும்.

குறும்படம் சார்பான உயர்ந்த அல்லது சரியான நுட்பங்களை கையாண்டு அவைகள்மூலம் கவனஈர்ப்பைச் செய்பவர் குறும்பட இயக்குனர் முல்லை.யேசுதாசன்.ஈழத்தமிழர் மொழிக்கேயேற்ற யதார்த்தமான தன்மையிலும் எந்தஅலங்காரமுமற்ற படுஇயல்புத்தனத்துடனும் படங்களை உருவாக்கியிருக்கின்றார். ஒரு சிறுகதை எழுத்தாளரான முல்லையேசுதாசன் மழை, ஒருநாட்குறிப்பு, தவிப்பு நெருப்பு நிலவுகள் போன்ற சிறந்த குறும்படங்களையும் படைத்துள்ளார். அவரின் பயணம், கனவு என்ற இரண்டு குறும்படங்கள் பற்றி இனி அவதானிப்போம்.

யணம் - ஒருதுயரக்கிளம்பல்

பயணம் குறும்படம் குவிந்திருக்கும் மௌனத்தை கிளறுவதாக உள்ளது. ஒரு நீண்ட பார்வையை சிலநிமிடத்தில் குறுக்கி அவதானிக்க வைக்கிறது. பயணத்தை பார்த்தவர்கள் நிச்சயம் மௌனித்திருக்க முடியாது. மனக்குடைப்படைவார்கள்.

யதார்த்தம் யதாhர்தமாக சொல்லப்பட வேண்டும் என்ற நல்ல சினிமாவின் ஒரு அடையாளம் பயணத்தில் சரியாகவே தெரிகிறது. கதையம்சம் - கருத்தாழம் என்ற சமன்பாடுகளில் இது சரியாகவே பிரசவிக்கப்பட்டுள்ளது. நமக்குள் - நம்மைச் சுற்றி நடக்கும் - நடந்துகொண்டிருக்கும் அற்பத்தில் பொதிந்து ஆழமாய் இருக்கும் பிரச்சினையை பேசியிருக்கிறார் - விளக்கியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர்.

படத்தின் முடிவுகள் கைதட்டுலுக்குரியவை என்பது யதார்த்த சினிமாவில் மறுதலிக்கப்படுகிறது. மாறாக அவை சிந்திக்கவோ, மனதை உறைய வைக்கவோ, பேசிக்கொள்ளவோ தூண்டும் என்ற கட்டுமானம் ~~பயணத்தில் வெளிக்கிளம்புகிறது.

பயணம் இரண்டு பயணங்களில் நகர்ந்து செல்கிறது. ஒன்று - புன்னகையே சுமந்து போகும் அந்தத்தாய் அதை பறிகொடுக்கும் பயணம். இரண்டு இறந்து போன தன் பிள்ளையை சுகயீனமற்றவன் என்று கூறி பேரூந்தில் அவனை சுமந்து பயணிக்கும் மற்றைய பயணம். இந்த இரண்டு பயணங்களில் இயக்குனர் படத்தை கட்யெழுப்பியிருக்கிறார். முதலாவது பயணத்தில் தன் புன்னகையைப் பறிகொடுக்கிறாள். இரண்டாவது பயணத்தில் தன் பிள்ளையை பறி கொடுக்கிறாள்.

இந்த இருவித பயணங்களுக்குமாக அடிப்படையாக இருபிரச்சினைகளை இயக்குனர் முன் வைக்கிறார்.

ஒன்று அரசின் விமானத்தாக்குதல் என்ற அரச பயங்கரவாதம் கருதிய செயல்.இரண்டு அடிக்கடி பூட்டப்படும் பாதைப்பிரச்சினை. இவை இரண்டுமே இந்தப் பயணத்தின் துயரக்கிளம்பலுக்கான பின்னணியாக அமைகிறது.

பாதை பூட்டியதால் மருத்துவம் செய்ய முடியாது தன் பிள்ளையை பறிகொடுக்கிறாள் இந்தத் தாய். இறந்த போன தன் பிள்ளையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாத பண நெருக்கடி. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் பயணம் வெளித்தெரிகிறது.

தன் கதை வசனம் இயக்கத்தின மூலம் இரண்டு இடங்களில் இயக்குனர்; உயர்ந்து ஒருவித அடையாளம் காட்டியிருக்கிறார். ஒன்று "டொக்கடர் சரியாய் கவலைப்பட்டவர் உங்கட பிள்ளையை காப்பாற்ற ஏலாமல் போட்டுதெண்டு என்பதாக அவளின் குழந்தை மரணமானதை ஒரு தாயிடம் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை சொல்லுகையில் மனதைத்தொட்டிருக்கிறார்.

இரண்டு பேரூந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, விமானம் வட்டமிடுகையில்

சாவோடு சவால்விடும் நிலையில் நின்றுகொண்டிருக்கும் அந்தத் தாய் நடத்துனரைப் பார்த்து " அவனை நான் எப்பயோ சாகக் கொடுத்திட்டன் இந்த இரு இடங்களிலும் மனக்கட்டை உடைத்து கதையை உள் செலுத்தியிருக்கிறார் - பயணத்தை உள் நுழைத்திருக்கிறார் இயக்குனர்.

அவள் மரணமடைந்த தனது பிள்ளையைத்தான் சுமந்து வருகிறாள் என்பதை உணர்ந்த பேருந்து ஓட்டுணர் அவளிடம் காசு வாங்காது விடுவதும் பேருந்து மறையும் வரை இருவரும் பார்த்துக்கொண்டு நிற்பதும் அழுத்தமான இடம்.அத்துடன் பயணமும் முடிகிறது.

இந்தப்பயணம் குறும்படத்தில் முக்கிய பாத்திரமாக - தாயாக நடிக்கும் யஸ்மின் தனது பங்கை இயல்பாகவே பிரதிபலித்திருக்கிறார். வைத்தியசாலை ஊழியராக வருபவர் மனிதாபிமானம் மிக்க பாத்திரமாக மனதைத் தொடுகிறார். படத்தில் மருத்துவ தாதியாக வருபவரின் பங்கு, பேரூந்து நடத்துனராக வருபவரின் பங்கு என்பனவும் கதைக்கு உயிரோட்டத்தை வழங்கியிருக்கிறது.

படத்தில் ஒளிப்பதிவு நிலவன். காட்சிகளின் நாடித்துடிப்பை பிடித்து மனநயத்தின் உச்சிக்கு தேடிப்போகும் அளவிற்கு காட்சிகளை தந்துள்ளார்.

படத்தொகுப்பு பரி. அலங்காரங்கள் செயற்கைத்தனங்கள் தொடுக்கமுடியாத யதார்த்தக் கதையை யதார்த்தமாகவே தொகுத்துள்ளார். இசையமைத்துள்ளார் முகிலரசன். சில இடங்களில் இசையின் மூலம் உரையாடி கதையை நகர்த்தியுள்ளார். மனதை தொட்டுச் செல்லும் இசையாலும், சில இடங்களில் மௌனித்து இடைவெளி விடும் இசையும் படத்தில் அவதானத்தை பிறப்பிக்கிறது - உணர்வுகளை தட்டிவிடுகிறது. பின்னணிக்குரல் பற்றிய தொழில்நுட்பம் சிறப்பாய் இருக்கிறது.

இந்தப்படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் முல்லை யேசுதாசன் சில இடங்களில் மௌனத்தின் மூலம் உரையாடியுள்ளார். அழகியல் மொழிமூலம் கதையைச் சொல்லிச் செல்கிறார்.

படத்தின் முடிவில் சற்று நீட்சி ஏற்ப்பட்டுள்ளது. அது இன்னொரு காட்சியின் மூலம் மேலும் நீட்டப்படுகிறது. இந்தப் படத்தின உச்ச உறைவிக்குப்பிறகும் என்ன நடக்கப்போகிறது.

என்ற ஒரு தொடர்ச்சிக்கான கேள்வியை எழுப்பும் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவே படத்தின முடிவுக்கு காட்சி.

சொல்லப்பட வேண்டிய பிரச்சினையை பிரதானமாக கொண்டு சில நிமிடம் மனதை உறயவைத்து எதையோ உணர்த்த முற்படும் மௌனக்காட்டலாக பயணத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் முல்லை யேசுதாசன்.

வீடு பற்றிய " கனவு குறும்படம்

எல்லோரும் வீடு பற்றய கனவையே வாழ்வின் முதலில் தொடங்குகிறோம். ஒரு பிள்ளை வளர்ந்து வாலிப வயதை அடையும்பொழுது முதலில் வீடு பற்றிய கனவு பிறக்கிறது. ஒரு அழகான வீடுதேவை, தனது நண்பர்களை அங்குதான் அழைத்து வரவேண்டும் என்று அவனின் உணர்வு நாகரீகப்படும். சரியான வீடு இல்லாதபோது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதில் வேண்டுமென்றே அக்கறை காட்டாது இருப்பார்கள். பொறுப்புள்ள ஒரு அப்பாவிடம் ஒரு வசதியான வீட்டைக்கட்டி தனது மனைவி பிள்ளைகளை வாழவைக்கும் எண்ணம் உண்டாகும். கணவனை இழந்த பெண் தனது இரத்தத்தை வியர்வையாகச்சிந்தி ஒரு வீடுகட்டுவாள். ஆக வீடு மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் ஆறுகிற அவசிய இடமாக இருக்கிறது.

கனவு குறும்படம் இப்படி ஒரு விதத்தில் தான் வெளிப்பட்டிருக்கிறது. மிகுந்த உழைப்புடன் நாம் கட்டிய எத்தனை வீடுகள் இன்று உயர்பாதுகாப்பு வலயம் என்று முத்திரை குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருகிறது. இடம்பெயர்ந்த பொழுது எத்தனை இடங்களில் எத்தனை வீடகளைக்கட்டி சிதையவிட்டிருக்கிறோம். இரவல் வீடுகளில் தங்கி எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கிறோம். இப்படி ஒரு உணர்வில் கட்டப்பட்ட வீடு பற்றிய ஏக்கமே கனவு குறும்படத்தில் விபரிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல் காட்சியில் ஒரு அழுத்தம் கையாளப்பட்டிருக்கிறது. அதனால் சமகாலச் செய்தியுடன் ஆதங்கம் பிறக்கிறது. வீடுகளின் ஆக்கிரமிப்பால் வீதியிலும் எம்மமால் நடமாட முடியாது என்பதையும் ஒரு வேளை அதில் இயக்குனர் சொல்ல முற்பட்டிருக்கலாம். சிறுமி ஒருத்தி பாடசாலை செல்கிறாள். வீதியில் வந்த பீல்பைக் இராணுவத்தினர் இரு அப்பாவி இளைஞர்களை சுடுகிறார்கள். அதைப்பார்த்த சிறுமி பாடசாலை செல்லாது வீடு திரும்புகிறாள். இந்தச்செய்தியை படத்தின் பிரதான பாத்திரமாக காட்டப்படும் ஆச்சியிடம் சொல்லுவதுடன் இரண்டாவது காட்சி தொடங்குகிறது. அந்தச்சூட்டுச்செய்தி ஆச்சியிடம் சில நினைவுகளை கிளறிவிடுகிறது. அந்தத் தாக்கத்தால் அவளுக்குள் இருந்த ஆஸ்துமா வருத்தம் இயங்கத் தொடங்குகிறது.

படத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது காட்சிகளில் படத்தின் பிரதான கருத்தையோ பிரதான பாத்திரத்தின் குணஇயல்பையோ பார்வையாளனிடம் இலேசாக விட்டுவிடவேண்டும் என்பது சினிமா பற்றிய அவகாசம். இதனால் பார்வையாளனின் உள்ளம் படத்தில் ஆராய்வு நோக்கை ஏற்படுத்தும் என்பதை மேலே சொல்லப்பட்ட காட்சியிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.

படத்தின் பிரதான கருத்து ஆச்சிக்கும் சிறுமிக்கும் இடையில் இடம்பெறுகிற உரையாடலாக நகர்த்தப்படுகிறது. ஆச்சியின் வீடு இப்போது உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டைப் பார்ப்பதற்காக ஆச்சி பலதடவை முயலுகிறாhள். அவளால் வீட்டைப் பார்க்க முடியவில்லை. முரண்படும் படையினரையும் காவலரணையும் பார்த்துவிட்டு ஆச்சி திரும்பிவிடுவாள்.

ஆச்சியின் வீடு பற்றிய கனவு வித்தியாசமானது. அவளது வீட்டில் ஒரு வலுவான சிந்தனை இருக்கிறது. தானும் தனது கணவனும் பெற்றோரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு இருவரும் வியர்வை சிந்தி அந்த வீட்டைக் கட்டுகிறார்கள். சூட்டுச் செய்திக்கு ஆச்சி துயரப்பட்டதற்கு காரணம் படையினர் அவளின் வீட்டில் புகுந்து கணவனைச்சுட்டுச் சென்றதனால் ஆகும். அவனை அங்கேயே புதைத்துவிட்டு வருவதனால் தனது உயிர் அங்கேயே இருக்கிறது என்கிறாள் ஆச்சி. அதைப்பார்த்தே தீருவேன் என்றம் அவள் நினைத்திருக்கிறாள்.

ஆச்சி ஒரு ஓய்வுபெற்று உதவிஅரச அதிபர். தனது வீட்டை ஒருமுறை பார்ப்பதற்கு நாகரீகமாகவும் சட்டத்தை மதிப்பதாகவும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகிறாள். அனுமதி வருகிறது. ஆச்சி பூரித்துப்போகிறாள். அந்த அனுமதி கடிதத்துடன் ஆச்சி படையினரிடம் சென்று தனது வீட்டைப்பார்க்க கேட்கிறாள். படையினர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆச்சி வீட்டைக் காட்டியதும் ஆச்சிக்கு வீடு அங்கிருந்தே பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ~~வீடு பாத்தாச்சுத் தானே சரி போ.. இனி வந்தா சுர்றது படத்தின் கடைசியில் வரும் மிக அழுத்தமான ஒரு வசனம். ஆச்சியின் வீடுபற்றிய அந்த ஆதங்கப்பார்வையுடன் அமைந்த ளுவடை காட்சியுடன் ' கனவு மெய்ப்படவேண்டும் என்ற இயக்குனனரின் நேரடி வரிகளுடன் படம் முடிவடைகிறது.

படத்தில் பிரதான பாத்திரமாக வரும் ஆச்சி கருத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுபோலவே சிறுமியும் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறார்.

படத்தின் நினைவுக்காட்சிகளைச் சொல்லும்விதம் இறந்தகாலத்தை சிறப்பாக காட்டும் நுட்பமாக இருக்கிறது. இருந்தாலும் இறந்தகாலத்தில் வரும் காட்சிப்புலமும் சூழலும் அதை சரியாகச் சித்தரிக்கவில்லை என்கிறார் படத்தைப் பார்த்த ஒருவர். படத்தின் தொடக்கத்தில் ஒரு உரையாடலைத்தவிர ஏனைய இடங்களில் பின்னணி பேசிய நுட்பம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் குணஇயல்பை இசை ஆளுமை செய்தது ஒருசில காட்சிகளில் அழுத்தம் தருகிறது. படத்திற்கான இசையும் ஒலிப்பதிவும் போராளி முகிலரசன்.

எல்லாக்காட்சிகளும் கொள்ளப்பட்ட இயல்பை பிரதிபலிக்கின்றன. கமராவின் வௌ;வேறு கோணங்கள் உணர்வை பிரதிபலிக்க வசதியாக இருக்கிறது. ஒளிப்பதிவு தவநீதன். காட்சிகளின் யதார்த்தத்திற்கு ஒளியமைப்பு ஏற்றிருந்தது. ஒளியமைப்பு சுதன். பிரதான குணத்தை சிதைவின்றியும் யதார்த்தமாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது. படத்தொகுப்பு தனுஷ்.

படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் யேசுதாசன். இருத்தல் குறித்த ஆதங்கத்தின் வெளிப்பாடு - வீடு பற்றிய கனவின் மொழி.

இங்கு குறிப்பிட்ட இரண்டு படங்களும் போரின் மீதான வாழ்வு நிரப்பிய துயரமாக காணப்படுகிறது. வீடு இன்றி திரிதலும் துயரமான பயணமும் நேரில் தரிசித்த அனுபவங்களே படமாக மொழியப்பட்டுள்ள முல்லை யேசுதாசன். மிக அமைதியாக துயரத்தை கண்டு கொதிப்பவர். ஆவர் இன்னும் நமது வாழ்வைத் தொடர்ந்து நல்ல படங்கள் படைக்க வேண்டும்.

Tuesday, December 25, 2007

அனார் கவிதைகள்

எழுதியவர்--------------------------------
--------------------------கருணாகரன்
__________________________________________________

துக்கமும் அலைச்சலும் நிரம்பிய நாட்களில் எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியைப் பகிர்வதற்கென்ற மாதிரியாக வந்திருந்தது அனார் கவிதைகள் - எனக்குக் கவிதை முகம்.

தபாலில் இந்தக்கவிதைத் தொகுப்பு வந்தபோது நாங்கள் மீண்டும் இடம் பெயர்ந்திருந்தோம். கடிதத்தை தருவதற்காக தபாற்காரர் எங்களைத் தேடியலைந்திருக்கிறார். இடம்பெயரிகளுக்கென்று எப்போதும் நிரந்தர முகவரி இருக்க முடியாது. பலஸ்தீனிலும் ஈராக்கிலும் ஆப்கானிலும் கொசோவாவிலும் எப்படி சனங்கள் கடிதங்களை பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதும் ஓடவேண்டியிருக்கும் வாழ்க்கையில் நிற்பதற்கேது தருணம். தரிப்பதற்கேது இடம். அதனால் சில நாட்கள் பிந்தியே புத்தகத்தைப்பார்க்கக் கிடைத்தது.

போர் மீண்டும் மீண்டும் எங்;களை விரட்டுகிறது. அது தொடர்ந்து விரட்டுகிறது. எந்தக்குற்றமும் செய்யாத எங்களை விட்டுத் துரத்துகிறது. முடிவில்லாத ஓட்டம். ஓடி, ஓடியே எனது காலம் போய்க்கழிந்து விட்டது. அனாரும் போரை எரிச்சலுறுகிறார். அவருக்குள் இருக்கும் காதல் பொங்கும் மனதை இந்தப்போர்ச் சூழல் கெடுத்துக் கரைத்து விடுகிறது. அவர் பெண்ணாக நின்று இதை உணர்கிறார். பெண் உணர்கையின் வழியாக அதை மொழிகிறார். இதில்தான் அவர் அதிக கவனத்தை பெறுகிறார். அனாரின் கவிதைகள் பெறுகின்ற இடமும் இதில்தான் சிறப்பாகிறது.

அனாரின் ' மேலும் சில இரத்தக் குறிப்புகள் ' கவிதை மிகவும் அலைக்கழிப்பதாயிருக்கிறது. அந்தக் கவிதைக்குள் கசிந்து கொண்டிருக்கிற குருதி, வாசிப்பின் பின்னான தருணங்களில் ' சாவின் தடயமாய் என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தது ' . அக்கவிதையில் நிசப்தமாய் விசும்பிக்கொண்டிருக்கிற பெண்மையின் சுவடுகள் வன்முறைக்கெதிரான வலிமையான பிரதியியல் நடவடிக்கைகளாகும். ஈழத்திலிருந்து வன்முறை-வலி தொடர்பில் பெண்களால் எழுதப் பட்டவற்றுள் மிகவும் சிறந்த கவிதைப் பிரதி அதுவெனலாம்.

வித்தியாசங்களை உணர்தல் - அறிதல் (சநஉழபnவைழைn ழக னகைகநசநnஉநள ) - பெரும்பாலும் ஆண்மை, பெண்மை என்கிற னiஉhழவழஅலயை - என்பதிலிருந்தே பெண்மைய அரசியலும் அதற்கான கவிதையியலும் ( கநஅinளைவ pழடவைiஉள யனெ வை 'ள pழநவiஉள ) கட்டமைய முடியும். வித்தியாசங்களை உணர்தல், வெளிப்படுத்துதல் என்று வருகையில் அனார் முக்கியமானவர். தனது வித்தியாசத்தின் இருப்பை சாராம்சப்படுத்துதலினூடாகவே அவர் கட்டமைக்கிறார் (நளளநவெயைடளைiபெ ). ஆனாலும் கூட, ஆண் புனைவுக்கு எதிரான எதிர்ப்புனைவாய் குறித்த சாராம்சப் படுத்துதல் அமைந்துபோவதால், ஒரே சமயத்தில் அது சுமை நீக்குவதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது (காண்க: ' மை' தொகுப்பிலுள்ள ' பருவகாலங்களைச் சூடித்திரியும் ' கவிதை) அனாரின் கவிதைப் பெண் ' விலகி நிற்பவள்' . அவள் சொல்கிறாள்:



"இன்னும்

இந்த ஒரே உலகத்திலேயேதான்

இருக்கின்றன

எனக்கும்

அவனுக்குமான

வௌ;வேறு உலகங்கள் "



(பக்.24)



வன்முறையைப் பதிவு செய்கிற போதிலும் கூட அனார் ' பெண்ணிலைப் பட்ட' படிமங்களையே கையாள்வதை இங்கு குறிப்பிட வேண்டும். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள் ' கவிதையில் வருகிற மாத உதிரம் பற்றிய சங்கேதமே அக்கவிதையின் ' பெண்மை ' யை மீள்வலியுறுத்திக் கொண்டியங்குகிற ஒன்றாய் அமைகிறது.



தனது வித்தியாசங்களைக் கொண்டாட அவர் முயல்வது மகிழ்ச்சி தருகிற விடயம். பெண்ணிய அரசியலிலும் கவிதையியலும் 'கொண்டாட்டம் ' என்பது மிக அவசியமான ஆயுதம். ' நான் பாடல், எனக்குக் கவிதை முகம் ' என்றெழுதுகிறார் அனார்.

இவ்வாறு அனாரின் மேலும் சில இரத்தக்குறிப்புகள் கவிதையைப்பற்றியும் அவருடைய படைப்பியலைப்பற்றியும் சொல்கிறார்; ஹரிகரசர்மா. அந்த அளவுக்கு அனாரின் உணர்வுலகமும் அனுபவப்பரப்பும் நிகழ்காலத்தின் கொந்தளிப்பான நிலைமைகளால் காயமடைந்து கன்றியுள்ளது. பதற்றம் நிறைந்த நாட்களில் வாழும் கவி அனார். அவருடைய கவிதைகளிலும் இந்தப்பதற்றமுண்டு. நெருக்கடியுண்டு. வாழ்வு நசியும் துயருண்டு. அத்துடன் பெண்ணாயிருத்தலின் விளைவாகப் பெறும் அனுபவத்தையும் அவர் அவர் பகிர்கிறார.;; அதுவும் பெண் மொழியில்.

ஹரி சொல்வதைப்போல பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் நிலைப்பட்ட படிமங்களைக் கொள்ளுதல் என்பதிலிருந்தே இந்த படைப்பியக்கத்தின் வலிமை திரள்கிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் உணர்வைக் கொண்டாடுதல், பெண்மொழியைக் கொண்டாடுதல் என்று இந்த வலிமையின் விரிதளம் பெருகுகிறது. இங்கே பெண் தன்னைத்தானே அங்கீகரிக்கிறாள். தன்னைத்தானே நிறுவுகிறாள். தான் மேலெழுந்து வருகிறாள். அனாரின் பல கவிதைகளிலும் இந்த அம்சம் உள்ளது. அவருடைய பிரக்ஞையின் இயங்குதளம் அத்தகைய நிலையிலேயே உருவாகியுள்ளது.

அனார் பெண்கவி. அதிலும் முஸ்லிம் பெண்கவி. சிலவேளை இப்படி பெண்கவி என்று தனி அடையாளத்தை வைப்பது தவறாகவும் அனாவசியமாகவும் படுகிறது. சிலபோது அது தவிர்க்க முடியாது. கட்டாயம் என்றும் தோன்றுகிறது.

அப்படி வைத்து பார்;ப்பதனூடகப் பலபுதிய பிரதேசங்களையும் ஆழ்நிலைகளையும் அறியலாம் என்றும் படுகிறது. அதேவேளை பெண்கவி என்று பிரிப்பதனூடாக சார்பு நிலை அணுகுமுறை ஏற்பட்டுவிடுமோ என்றும் படுகிறது.

இதுவே ஒரு தத்தளிப்புத்தான். தீராத தத்தளிப்பு. சமூக விலகல்களும் ஏற்றத்தாழ்வுகளும் உருவாக்கிய தவறுகளால் இப்போது இப்படி நாம் கிடந்து எல்லாவற்றுக்குமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் அதிகாரமும் அதன் குருட்டுத்தனமுமே காரணமாக இருந்திருக்கின்றன.

பொதுவான வாழ்க்கை அமைப்பில் இன்னும் பெண் கடக்க வேண்டிய எல்லைகள் நிறையவுள்ள சூழலில் ஒரு பெண்கவியாக தொடர்ந்து இருப்பதில் பல பிரச்சினைகளுண்டு. அதிலும் முஸ்லிம் பெண்கவிக்கு அதைவிடவும் அதிக சவால்;களுண்டு. இன்னும் சொன்னால்;, அறத்தின் வழியாகவும் சமூக அரசியல் ரீதியாகவும் இயங்க முனைந்தால் இந்த நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதிலும் போர்க்காலத்தில் படைப்பாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சினையே அறம் எழுப்பும் சவால்தான். இதையே அனாரின் கவிதைத் தொகுப்பான எனக்குக் கவிதை முகம் நூலின் முன்னுரையிலும் சேரன் சொல்கிறார்.

அனார் இந்தமாதிரியான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்N;ட தன்னுடைய கவிதைகளை எழுதுகிறார். அனாரின் பிரதிகளிலும்அவருடைய உரையாடலிலும் இந்த நெருக்கடிகளின் தாக்கத்தையும் அதற்கெதிரான, மாற்றான அவருடைய நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

இப்போது எனக்குக் கவிதை முகம் என்ற அவருடைய இரண்டாவது கவிதை நூல் வந்திருக்கிறது. முதல் தொகுதி ஓவியம் வரையாத தூரிகை 2004 இல் வெளியானது. இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிகளுக்குமிடையில் அனாரின் கவிதைமொழியில் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சொல்முறை, உணர்முறை, அவருடைய பார்வை, கருத்து, மொழி எல்லாவற்றிலும் மாற்றங்களும் முதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொடர் பயணத்தை நிகழ்த்தும் படைப்பாளிகளிடத்தில் எப்போதும் இத்தகைய படிமலர்;ச்சியையும் முதிர்ச்சியையும் காணலாம்.

முதல் தொகுதியில் அவர் செய்கிற பிரகடனங்களை இரண்டாவது தொகுதியில் செய்யவில்லை. பதிலாக அவர் அருகிருந்தும் உள்ளிருந்தும் பேசுவதைப்போல தோன்றும் கவியாக்க முறைமையைக்கையாள்கிறார்.

ஆனால் அவருடைய அனுபவத்தில் திரண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த பதிவுகளை அவர் விட்டுவிடவில்லை. அவற்றை இப்போது வெகு சாமர்த்தியமாகவும் இயல்பாகவும் பக்குவமாகவும் சொல்ல முனைகிறார். அமைதியொலிக்கும் கவிதைகளாக தமிழ்ப்பரப்பில் இந்தக்கவிதைகளைத் தரும் அனார் அவற்றினுள்ளே தனது தீவிரத்தை குறையாமல் பரிமாற்றுகிறார். அவருடைய அரசியல் மனித மேன்மை குறித்தது. அதற்கான அறத்தை வலியுறுத்துவது. அதைக் கோருவது. சிறு வட்டங்கள், வளையங்களுக்குள் சிக்கிவிடாதது. இது இன்றைய ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் மிக அபூர்வமானது.

ஈழக்கவிதைப்பரப்பில் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித்திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது. பதற்றமும் பீதியும் சூழ்கின்றன. திசைகள் குழம்பித்தத்தளிக்கின்றன.

உள்ளடங்கியிருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியற் சித்திரம் மிகவும் முக்கியமானது.

என்று சேரன் முன்னுரையில் குறிப்பிடுவது கவத்திற்குரியது.

அனார் ஈழத்துக்கவிதைப்பரப்பில் தனித்துத் துலங்கும் ஒரு பிரகாசமான அடையாளமே. அவருடைய கவிதை மொழியும் மொழிபும் அசாதாரணமானது. கனிவு நிரம்பிய உணர்;வும் மொழியும் மொழிபுமானது. மீள மீள வாசிக்கக் கோரும் ஈர்ப்பை அனார் ஏற்படுத்துகிறார். அவருடைய பிரதி வேறுபட்ட தளத்தில் உணச்சிப்பரிமாற்றங்களை நிகழ்த்த முனைகிறது.

ஈழத்தின் பெண் கவிதை வெளிப்பாடு; பிரக்ஞை பூர்வமாக இயங்கத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. சொல்லாத சேதிகளுக்குப்பின்னரான அல்லது அதன் தொடர்ச்சியான பெண் கவிக்குரலில் அனார் பெறுகிற இடம், அடையாளம் இந்தத் தொடர்ச்சியில் ஒரு முக்கிய புள்ளியாகவும் விலகித் தெரியும் தனித்த கோடாகவும் உள்ளது. மென் சொல் முறையில் தீவிர மன நிலையை ஏற்படுத்தும் இயல்பு கொண்ட கவியாக்கத்திறன் கொண்டவராக அனார் இருக்கிறார்.

ஒரு காட்டாறு

ஒரு பேரருவி

ஒரு ஆழக்கடல்

ஒரு அடை மழை

நீர் நான்

கரும் பாறை மலை

பசும் வயல் வெளி

ஒரு விதை

ஒரு காடு

நிலம் நான்

……

நானே ஆகாயம்

நானே அண்டம்

எனக்கென்ன எல்லைகள்

நான் இயற்கை

நான் பெண்



(நான் பெண்)

பெண்ணை அவர்; பேரியற்கையின் அம்சங்களாகவே காணுகிறார். பெண்ணுடலும் பெண் மனமும் இந்த இயற்கையின் அம்சமே. அது எல்லையற்றது. விரிவும் ஆழமும் கூடியது. எல்லாக்காயங்களின் பின்னாலும் எல்லா அழிவுகளின் பின்னாலும் உயிர்ப்புடன் திரண்டெழுவது. பேராறாகவும் ஆழ் கடலாகவும் வெளியாகவும் காடாகவும் மலைப்பாறையாகவும் விதையாகவும் காயமாகவும் காற்றாகவும் நெருப்பாகவும் அவர் தன்னை உணர முடிகிறது.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கவிகள் எதிர்கொள்கிற சவால்கள் அனாருக்குமுண்டு. அதிலும் பெண்கவிகள் சந்திக்கின்ற அத்தனை வலிகளும் இடர்களும். அரசியல் ரீதியாக அவருடைய பார்வை பொது வரையறைக்குள்ளிருந்தாலும் உலகு தழுவிய, மானுட விடுதலை தழுவிய நேசமும் அக்கறையையும் இருக்கிறது. புதிய உலகத்தின் நுட்பமான வலையமைப்புகளையும் பொறிகளையும் அது பெண்களை இன்னொரு தளத்தில் சிறையிடுவது பற்றியும் அனார் அதிகம் பேசவில்லைத்தான். ஆனால், அவருக்குள்ள பிரச்சினைகளை அவர் சொல்லத்தயங்கவில்லை என்பது இங்கே முக்கியமானது.

வானவில் படிந்து உருகிக் கிடக்கும்

மலைகளின் தொன்மப் புதையல்களில்

மௌனம் குருதி சொட்ட ஒளிந்திருக்கிறேன்

……

பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்

வண்ணத்துப் பூச்சியின் பிரமாண்டமான

கனாக்கால கவிதை நானென்பதில்

உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்

(வண்ணத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை)

நாளாந்தம் எண்ணங்கள் வைத்து

நினைவும் மறதியும் ஆடுகிற சூதாட்டம்

கைதவறிச் சிதறிப்போகிற தேநீர்க் குவளை

தலைக்கு மேல் மிதந்து வருகிற பூச்சிறகு

அல்லது வெறும் அசைவற்ற ஒரு வெளி

எவ்விதமாகவும்

நான் தோன்றியிருக்கவும் கூடும்

உனக் கெதிரில்

எவ்வேளையும் பிசகாமல்

(இல்லாத ஒன்று)



பெண்ணின் இயல்பெழுச்சி ஆணினால் வரையறை செய்யப்படுவது அனாருக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது. அவர் அதனை மறுதலிக்கிறார். இத்தகைய மறுதலிப்பும் நிமிர்வும் நமது கவிதைப்பரப்பிலும் சமூகப்பரப்பிலும் இதற்கு முன்பே நிகழத் தொடங்கிவிட்டதுதான். ஆனால் அது இன்னும் சமூகத்தின் பொதுப்போக்காக பிரக்ஞை பூர்வமாகத் திரளவில்லை. பெண் சந்திக்கிற நெருக்கடிகளினதும் சவால்கள், பிரச்சினைகளினதும் தன்மைகள் அப்படியேதான் அநேகமாக இருக்கின்றன. ஆனால் அந்த வடிவம் மாறிவிட்டது. அதாவது இப்போதுள்ள பொது நிலைமைகளில் அறிவியலுக்கேற்ப நுட்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அவ்வளவுதான்.

மூன்றாமுலகின் பெண்படைப்பாளிகளுக்கு எப்போதும் பல பிரச்சினைகளுண்டு. அவர்கள் தங்களைச் சுற்றிய சூழலை எதிர் கொள்வதுடன் சர்வ தேச ரீதியான அழுத்தங்கள் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மூன்றாமுலகின் பண்பாட்டுச் சுமை அதாவது அது வளர்ச்சிக்கான தத்தளிப்பிலிருப்பதால,; அதனால் எதையும் கடக்கவும் முடியாது எதனையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற நிலையில், பெண்களே அந்தச் சுமையைக் காவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண்கள் இதில் மிகவேகமாக மாற்றங்களின் பின்னோடும்போது பெண்ணுக்கு அந்தச்சந்தர்ப்பத்தை அந்தச் சமூகங்கள் கொடுப்பதில்லை. இந்த ஓர வஞ்சனை எந்தவகையான வெட்கமுமின்றி, கருணையுமின்றி ஆணாதிக்க உலகினால் தொடரப்படுகிறது. இதில் ஏற்படும் கொதிப்பு நிலையை அனார் துணிச்சலோடு முன்னீடாக்குகிறார். அவருடைய வாழ் களமான முஸ்லிம் சமுகத்தின் பிடிமானங்களைக்கடந்தும் அவருடைய உரையாடல் நிகழ்கிறது. இப்படி நிகழும்போது அவருடைய மொழி புது மொழியாக புதிய பிரதேசங்களைத் திறக்கிறது. இதில் அனாரின் சாவி நுட்பமானது. இதில் அனாரையும் விட சல்மா அதிக எல்லைகளில் விரிகிறார். அதுவும் பாலுறவு மற்றும் பாலுணர்வுத்தளத்திலும். அதிலும் அதிர்ச்சியும் வியப்பும் கவனமும் ஏற்படுகிற விதமாய். ஆனால் அனாரோ இன்னொரு புதிய தொடுகைப் பிரதேசத்தில் பயணிக்கிறார். ஒருவரின் பாதையில் இன்னொருவரும் பயணிக்க வேண்டும் என்பது இங்கே அர்த்தமில்லை. அவரவர்க்கான பயண வழிகளிலும் திசைகளிலும் அவரவர் செல்லும் சுதந்திரமுண்டு.

போரால் கட்டப்பட்ட அல்லது சுற்றிவளைக்கப்பட்ட வாழ்க்கையில் மனித அடையாளம் பெறுமதியற்றது. இந்த வருத்தம் எந்தப்படைப்பாளியையும் கொதிப்படைய வைக்கும். உலகின் சகல திசைகளிலும் நெருக்கடியான நிலைகளில் படைப்பாளிகள் மனித அடையாளத்துக்காகவும் இருப்புக்காகவும் தங்களின் குரலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உண்மையான போராட்டமாக இருந்திருக்கிறது. அறத்தின் வழி நிற்பதற்காக அவர்கள் பெருத்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளியின் இயங்கு தளம் அப்படித்தான் இருக்கும். அறத்தை நிராகரித்து விட்டு அதிகாரத்துக்காக இயங்குவதென்பது அல்லது அதைச்சார்ந்து நிற்பது என்பது படைப்பாளி தன்னைத்தானே நிராகரிப்பதாகும். ஆகவே, இங்கே அனார் அறத்தை விலயுறுத்தியே தன்னை நிறுவுகிறார்.

அனாருடைய கவிமனம் அன்பும் பரிவும் நேசமும் கருணயும் நிரம்பியது. அவரிடம் வன்மனது இல்லை. அவருடைய மொழியிலும் மொழிபிலும் வன்னியல்பில்லை. ஆனால் தீர்மானங்களுண்டு. வலிமையுண்டு.

காற்றைத் தின்ன விடுகிறேன்

என்னை

என் கண்களை

குளிர்ந்த அதன் கன்னங்களை வருடினேன்

…..

(காற்றின் பிரகாசம்)



பேரியற்கையாக விரிந்திருக்கும் பூமியில் எல்லாவற்றையும் அவர் சிநேகம் கொள்ள முனைகிறார். அந்தச் சிநேகம் ஒரு பெருங்காதலாகப்பிரவாகிக்கிறது. அது மனிதரிடத்திலும்தான். இயற்கையினிடத்திலும்தான்.

அதனாலென்ன

அவன் வாள் உறைக்குள்

கனவை நிரப்புவது எப்படியென்று

எனக்குத் தெரியும்

மகத்துவம் மிகுந்த இசை

தீர்வதேயில்லை.

நான் பாடல்

எனக்குக் கவிதை முகம்

பெண்ணின் சேதி, பெண் அடையாளம் இயல்பான ஒன்றென்று உணர்த்தும் எளிய, நுட்பமான வரிகள் இவை. இதுவே அனார்.

எனக்குக் கவிதை முகம் அன்பூறும் சொற்களாலான நெகிழும் சித்திரங்களைக் கொண்டதொரு கவிதைத்தொகுதி. போரின் பேரோலங்களுக்கிடையில் அனார் எப்படி இத்தனை நெகிழ்ச்சியான மொழியைக் கொண்டிருக்கிறார் என்பது தீரா ஆச்சரியமே.
--------------------------------------------------------------

Friday, December 21, 2007

த.அகிலன் கவிதைகள் வெளிதேடியலையும் இன்னொரு பறவை

எழுதியவர்--------------------------------
--------------------------கருணாகரன்
___________________________________________________________________

அகிலனின் கவிதைகளைப்பற்றி எழுதத் தொடங்கும்போது முதலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. எந்த அகிலனின் கவிதைகளைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்ற கேள்வி உருவாகக்கூடியமாதிரி, தமிழில் பல அகிலன்களின் பெயர் பதிவாகியுள்ளது. அதிலும் ஈழத்தில் மட்டும் இரண்டு அகிலன்களுண்டு. ஒருவர் பா. அகிலன். மற்றவர் த.அகிலன். இருவருமே சமகாலத்தில் கவிதைகளை எழுதிவருகிறார்கள். இரண்டுபேருமே நவீன கவிதையின் புதிய பிரதேசங்களைக்கண்டடையும் முனைப்புடையவர்கள். எனவே இதில் எந்த அகிலனைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்று யாரும் முதலில் கேட்கவோ அவதானிக்கவோ கூடும். அதற்கு முன்னர் தமிழில் அகிலன் என்ற அடையாளம் பதிந்திருக்கும் விதம் குறித்து எழுதவேண்டிய நிலையுள்ளது.



இந்தப்பெயர் கடந்த தலைமுறையில் பதிந்த விதம் வேறுவிதமானது. அது படைப்பின் கூர்மைக்கும் செம்மைக்கும் எதிரானதாகவே இருந்தது. அந்தத்தலைமுறையில் இருந்த அகிலனை வாசித்தவர்கள் ஏராளம். அந்த அகிலன் தமிழ்ப்படைப்புக்கு எதிராக இயங்கியவர் என்ற தெளிவின்றியே அன்று தமிழ்ச்சமூகம் அந்த அகிலனைக் கொண்டாடியது. இப்போதும் பொதுவாக அந்த அகிலனைப்பற்றிய மறுவாசிப்புகளில்லாமலே தமிழ்ச்சமூகமிருக்கிறது. செய்யப்பட்ட மறு வாசிப்புகளையும் முன்வைக்கப்பட்ட விமரிசனங்களையும் தமிழ்ச்சமூகம் சரியாகப்புரிந்து கொண்டதாகவும் இல்லை. அகிலனுக்கு இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோதே படைப்பின் நுட்பங்களை அறிந்தவர்கள்கண்டித்தார்கள். அந்த விருதுக்கு அகிலன் தகுதியற்றவர் என்றும் எதிர்த்தார்கள். அப்போது விருதுக்குழு மீதே பெரும் குற்றம் சாட்டப்பட்டது. காலம் இவ்வளவு கடந்த பின்னும் அந்த விருது அகிலனுக்கு வழங்கப்பட்டமை குறித்து இன்னும் தீராத சர்ச்சைகளும் விமர்சனங்களுமுண்டு. ஆனால் அந்த அகிலன் தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்.



தமிழ்ச்சூழலின் அவல நிலையே இதுதான். தமிழில் பெரிதுங்கொண்டாடப்படுவோர் விழல்களாகவே இருந்துள்ளனர். இப்போதும் அப்படியான விழல்தனங்கள்தான் கொண்டாடப்படுகின்றன. விழல்தனங்கள் தமிழில் இலகுவாக வெற்றி பெற்றும் விடுகின்றன. பதிலாக சீரியஸானவை கவனிப்பாரற்றே கிடக்கின்றன. இந்த அறிவீனம் அல்லது புரிதலின்மை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் பாரதியின் காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடருகிறது. பாரதியை அன்று பலரும் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்கிறோம். ஆனால் இப்போது மட்டும் யாரைச்சரியாகப் புரிந்து கொள்கிறோம். யாருக்கு உரிய இடத்தைக் கொடுக்கிறோம். தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்;படும் சினிமா இதற்கு துலக்கமான உதாரணமாகும். வெற்றிப்படங்களாகவும் வெற்றிப்பட நாயகர்களாகவும் தமிழ்மூளை கண்டுபிடித்துக் கொண்டாடும் தரப்புகளின் சிறப்பு எதுவெனத் தெரியுமல்லவா. அதுபோலவே பெருவாரியான தமிழர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள், அரசியல்வாதிகள், விசயங்கள் எல்லாமே மிகவும் தரங்குறைந்தவையும் வாழ்க்கைக்கு எதிர்மாறானவையுமே இருக்கின்றன.பதிலாக தரமானவையும் சிறந்தவையும் பாராமுகமாக இருக்கின்றன. சீரியஸானவை புறக்கணிக்கப்படுகின்றன. சீரியஸான ஆட்களும்தான்.


இத்தகைய துயரமும் அவலமும் நிறைந்த பின்னணியில்தான் தமிழ்ப்படைப்புகளை அணுகவேண்டியிருக்கிறது. அதிலும் அகிலன் என்ற ஒரு படைப்பாளி எழுதிய கவிதைகளைப்பற்றி எழுதவரும்போது இந்த மாதிரி ஒரு முன்விளக்கத்தைக் கொடுக்கவேண்டிய வருத்தந்தரும் நிலையுமிருக்கிறது. இப்போது இரண்டு அகிலன்கள் அகிலன் என்ற பெயர் தமிழ்ச்சூழலில் பதிந்துள்ள முறைமைக்கும் அடையாளத்துக்கும் மாறாக எழுதிவருகிறார்கள். இதில் பா. அகிலன் தன்னுடைய பதுங்குகுழி நாட்கள் என்ற தொகுப்புக்கூடாக பெருங்கவனிப்பைப் பெற்றவர். தமிழில் அகிலன் என்ற அடையாளம் பா.அகிலனின் மூலம் வேறுவிதமாக மாறுகிறது என்ற தொனியில் அவருடைய கவிதைகளை முன்வைத்துப் பேசும்போது வெங்கட்; சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இப்போது இன்னொரு அகிலன், வெங்கட் சாமிநாதன் சொன்னதைப் போல இன்னொரு புதிய அடையாளமாக தெரிகிறார். மாறுதலான பார்வையும் அனுபவமும் வெளிப்பாடும் கொண்ட ஒரு கவிதைத்தளத்தை நிர்மாணிக்க முனைகிறார் இந்தத் த. அகிலன்.




இவருடைய கவிதைகள் இன்னமும் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்படவில்லை. ஆனால் அகிலனின் கவிதைகள் பல இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. அப்படி வெளியாகியுள்ள கவிதைகள்தான் இப்போது இந்த விமரிசனத்தை எழுத்தூண்டியிருக்கின்றன. புரிந்துகொள்ளுதலில் இடையறாது நிகழும் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தவறுகளையும் -துயரோடு- சொல்லத்துடிக்கின்றன த. அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள் மனிதனைச் சிதைக்கும் அவலத்தை அகிலன் சொல்கிறார். இப்படி புரிதலின்மையின் மையத்தை அகிலன் சொல்லத்துடிக்கும்போது அதை அவற்றின் அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல் வேறுவிதமாகப் புரிந்து கொள்ளும் நிலையும் யதார்த்தத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதுதான் மிகச் சுவாரசியமானதும் மிக அவலமானதுமாகும். புரிந்துகொள்ளலின்மை பற்றி பேசும்போது அதையே புரிந்து கொள்ளாமலிருக்கும் அவலத்தை என்னவென்று சொல்லலாம்.




புரிந்துகொள்ளலில் நடக்கின்ற குறைபாடுகளைப்பற்றி குறிப்பிடும்போது அதனையே குறைபாட்டுடன் புரிந்து கொள்ள முற்படும் அவலம் என்பது பெரும் வேதனைக்குரியது. இப்படியெல்லாம் புரிதலின்மை நிகழும்போது மனிதன் புழுவைப்போல துடித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இந்தத் 'துடித்தல் ' என்ற அந்தரிப்பு நிலைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் பேரவலம் அகிலனின் கவிதைகளில் நிரம்பிக்கிடக்கின்றன. நவீன வாழ்வில் நிரம்பிக்கிடக்கும் காயங்களில் அநேகமானவை புரிதலின்மையினால் ஏற்படுவதே. புரிதலின்மையில் மொழியும் நடத்தைகளும் முக்கியமாகின்றன. மொழியின் தொனி பல சந்தர்ப்பங்களிலும் எதிர்மறையான புரிதல்களை, விளக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றது. சொல்லில் மட்டும் பிழையான பொருள் ஏற்பட்டு விடுவதில்லை. சொல்லும் தொனியிலும் தவறான புரிதல் நிகழ்ந்து விடுகிறது. இதற்கு மொழியின் விரிவிலுள்ள போதாமை ஒரு காரணம். அத்துடன் அந்தச் சொற்களைப்பற்றிய படிமமும் அவை உணர்த்துகிற முன்னனுபவங்களும் இவ்வாறு தவறான புரிதல்களுக்குக் காரணமாகிவிடுகின்றன. அவ்வாறு படிமம் உருவாகுவற்கு அப்போதைய மனித நடத்தைகளே காரணமாகின்றன. ஆகப் பொதுவாக, மொழிக்கும் அப்பால் மனித நடத்தைகள் முக்கியமானவையாகின்றன. இந்த நடத்தைகள்தான் சொல்லுக்கான பொருளை அர்த்தப்படுத்துகின்றன: நம்பகத்தன்மையையும் உருவாக்குகின்றன.




ஒரு காலத்தில் மதிப்பாக இருந்த சொல் பின்னர் கொச்சைப்படுத்தப்பட்ட பாவனைக்காளாகிறது. அம்மா என்ற சொல்லும் அது சுட்டும் உணர்வும் அந்த உறவும் அடையாளமும் மிகப் பெறுமதியானது. ஆனால் அது சுருக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நிலைக்கு வந்திருப்பதன் அவலத்தை என்ன என்பது. இன்று பொருளும் (அர்;த்தமும்) நம்பகத்தன்மையும் இழந்திருக்கும் ஏராளம் சொற்களுண்டு. இந்த அர்த்தமின்மையையும் நம்பகமின்மையையும் மனித நடத்தைகளே உருவாக்குகின்றன. அர்த்தத்தையும் நம்பகத்தன்மையையும் உருவாக்க வேண்டிய நடத்தைகள் அதற்கு எதிர்மாறாக இயங்குவதே இப்பொழுது அதிகரித்துள்ளது. இது இன்னுமின்னும் பெருகியபடியே இருக்கிறது. உறவுகளுக்குள் நாங்கள் பெரும்பாலும் சந்திக்கின்ற பல பிரச்சினைகளின் மையமே புரிந்து கொள்ளலில் நிகழ்கின்ற தவறுகளும் சறுக்கல்களுமே. அகிலனுடைய கவிதைகளின் மையம் இதுதான்.


என்னுடைய
காலடிச்சுவடுகள்
கண்காணிக்கப்படுபவை
புன்னகைகள்
விசாரணைக்கானவை

அடுத்த கணங்கள்பற்றிய
அச்சங்களும்
துயரும்
நிரம்பிக்கிடக்கிறது
வழிமுழுதும்

(அடுத்து வரும் கணங்கள்)


அதிகமதிகம் அவநம்பிக்கையும் தன்னலத்தின் குரூரமும் பெருகிக் கிடக்கும் சூழலில் விதிக்கப்பட்டிருக்கும் சாபமாகிக் கிடக்கிறது நியாயவானின் வாழ்க்கை. நீதியும் நியாயமும்கூட ஆளாளுக்கு வேறுபடுகின்றன. சார்புநிலைப்படுகின்றன. குடும்பங்கள் விரிசலடைந்து வருகின்றன. உறவுகளுக்குள் அந்நியத்தன்மை பெருகி முகமூடிகளை உற்பத்தி செய்கிறது. அன்பில் எண்ணற்ற கரும்புள்ளிகளையும் காயத்தையும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது புரிந்துணர்வின்மை. எதிரும் புதிருமான நிலைப்பாடுகளுக்கு முடிவேயில்லை என்றாகி விட்டது.

அகிலன் எழுதுகிறார்


எப்போதும்
எனது சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்மனதில்
ஒளிந்திருக்கிறது

(தவறி வீழ்ந்த முடிச்சு)


இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா

(எதிர்பார்ப்பு)


நான்
சிந்திப்பதை
நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்
அது என்னைக் கேள்விகளால்
குடைந்து கொண்டேயிருக்கிறது.


புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
கண்களின் பின்னாலுள்ள
இருள்நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான் நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான் சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்.

(சிந்திப்பது குறித்து)



ஒழுங்கமைப்புகள், தனியாள் நிலைப்பாடுகள் என்வற்றுக்கிடையிலான புரிதலில் உள்ள பெருங்குறைபாடுகள் வாழ்வைப்பிளந்தெறிகிறது. இந்த இரண்டையும் சமநிலைப்படுத்துவதிலும் சரியான அணுகுமுறைகளில்லை என்பது முக்கியமானது. இவற்றுக்கிடையிலான புரிதல் சரியாக நிகழ்ந்திருக்குமானால் அவலங்களுக்கும் துயரத்துக்கும் இடமேற்பட்டிருக்காது. தவிர முரண்களும் கொந்தளிப்பும் கூட ஏற்படாது. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் மனமும் இதயமும் அறிவொழுக்கமும் இன்னும் பெரிதாக இல்லையென்பதே கொடுமையானது. "



எல்லோருக்கும் அறிவும் இதயமும் சேர்ந்திருக்கவேணும்" என்று சொல்வார் ஒரு நண்பர். " அதுவுமில்லாது விட்டால் அறிவாவது இருக்க வேண்டும். இல்லையென்றால் மனச்சாட்சியாவது இருக்க வேணும். இது எதுவும் இல்லாமற்தான் இன்று சூழல் இப்படிக் கெட்டுக் கிடக்கிறது " என்று சொல்வார் அவர்.



அதிகாரம் மிகப் பெரும் சவாலாக மனிதனைச் சூழ்ந்திருக்கிறது. மனிதன் மீPளமுடியாத சவாலாக அது பல ரூபங்களிலும் அரூபங்களிலும் விருத்தியுற்றுக் கொண்டேயிருக்கிறது. அழிவேயில்லாத மிகப் பெரிய சவால் அது. நுட்;பங்களும் தந்திரங்களும் பொறிகளும் குரூரங்களும் நிரம்பிக்கிடக்கும் பெரும் சவால்.மனிதனி;ன் எல்லாப்படைப்புகளும் எண்ணங்களும் அதிகாரத்தை நோக்கியதாகவும் அதிகாரத்தை எதிர்ப்பதாகவும் அல்லது அதை மறுப்பதாகவுமே இருக்கிறது. ஒரு பக்கம் அதிகாரத்தின் திரட்சிக்காக மனித ஆற்றல் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் அப்படித்திரண்ட அதிகாரம் மனித வாழ்வுக்கு எதிராக இயங்குகிறது என மீண்டும் அந்த அதிகாரத்துக்கெதிராக மனித ஆற்றல் முழுவதும் திரட்டப்படுகிறது. இப்படியே மனித அவலம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதிகாரத்தின் நிழல்படியாத வாழ்க்கையில்லை. அதிகாரத்தின் குருதியோடாத இதயங்களில்லை. ஆளுக்காளிடம் வடிவங்களிலும் அளவுகளிலும் அது மாறுபடலாம். அல்லது வேறுபடலாம். ஆனால் தன்மையிலும் அடிப்படையிலும் அது ஒன்றுதான். அதிகாரம் ஒரு போதை. மிகப் பெரியபோதை. தீராப்போதை. மனிதனின் மிகப்பெரிய ருசியான பண்டமே அதிகாரம்தான். அது போதையூட்டும் ருசி. ருசி தரும் போதை. அந்த ருசி பிடிபடப்பிடிபட அது தீராத்தாகத்தை அளித்தபடியேயிருக்கிறது. அதிகாரத்தின் வேர்முடிச்சுகளில் நிம்மதியின்மை கிளைக்கிறது. மனிதனை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய பிரம்பாக அது சதா மனிதகுலத்தை மிரட்டிக்கொண்டேயிருக்கிறது. மிகநுண்ணிய வடிவங்களிலும் வகைகளிலும் மாபெரும் வலைப்பின்னலாக அது வாழ்வைச்சுற்றியிருக்கிறது. அதற்கு எண்ணற்ற நுட்பங்கள் உருவாகிவிட்டன. இதுவரையில் மனித குலம் தன் ஆற்றலை அதிகாரத்தின் நுட்பங்கள் குறித்தே அதிகளவில் செலவளித்திருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அதிகூடிய நுட்பமுடைய கருவியும்; அதிகாரம்தான். அதேபோல மனித உழைப்பின் பெரும்பகுதியும் அதிகாரத்துக்கும் அதிகாரத்துக்கெதிரான முயற்சிகளுக்குமாகவே செலவளிக்கப்பட்டிருக்கிறது.




ஒருவரிடம் உள்ள அதிகாரம் பிரயோகிக்க முடியாமற்போகிறது. இன்னொருவர் அதையும் சுவீகரித்துக்கொண்டு பலமான நிலையில் பெருக்கிறார். அப்படிப் பெருக்கும்போது வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. இங்கேதான் சிதைக்கப்படும் வாழ்வைக்குறித்து படைப்பியக்கம் நிகழ்கிறது. இந்தப்படைப்பியக்கம் அதிகாரத்துக்கு எதிரானவாழ்வியக்கமாக வாழ்வை நசிக்கும் அத்தனை குரூரங்களுக்கும் எதிரானதாக தொழிற்படுகிறது. ஆனால் பொதுத்தளத்தில் மாற்று அதிகாரம் குறித்த சிந்தனை இன்று பின்னகர்ந்து கொண்டிருப்பதாகவே படுகிறது. வணிகக்கலாச்சாரமும் உலகமயமாதலும் உருவாக்கியுள்ள இடைவெளியின்மை வாழ்க்கையை மீள்பரிசீலனை செய்யும் மனோநிலையையும் அவகாசத்தையும் இல்லாமற் செய்துவிட்டது. மறுபுறத்தில் அதிகாரத்துக்குப் பலியாகும் சனங்களின் தொகை பெருகிக் கொண்டேயிருக்கிறது. சனங்கள் விழிகளை இழக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய செவிகளையும் இழந்துபோகிறார்கள். பொதுவாகச் சொன்னால் புலன்களை இழந்துபோகிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த புலன்களையிழந்த மனிதர்களுக்காகவே இப்போது பெருவாரியான ஊடகங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. புலன்களுக்காகவும் புலன்திறப்புக்காகவும் இயங்கவேண்டிய ஊடகங்கள் புலன்களை அடைக்கும் முரண்நிலை பெருகிய யதார்த்தம் இது. அதிகாரத்தைப் பரப்பும் அதைப் பிரயோகிக்கும் நுண்ணரசியலின் வடிவப் பெருக்கில் இன்று ஊடகங்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்தளவுக்கு மாற்றதிகாரத்துக்கான அறிவுப்பலமும் நுட்பமும் விழிப்பும் ஊடகப்பயன் பாடும் இல்லை. இதெல்லாம் அகிலனுக்கும் பிரச்சினையாக இருக்கின்றன. உறவுகளுக்கிடையில் பெருகியிருக்கும் அதிகாரம் பொய்முகங்களையும் நெருக்கடிகளையும் உற்பத்தி செய்தபடியே யிருக்கின்றது.




அதிகார மனோநிலை எதையும் சந்தேகிக்கிறது. எதையும் தன்னுடைய கோணத்திலிருந்தே பார்க்க முற்படுகிறது. அதனால் எல்லாவற்றிலும் அதிகளவுpல் தவறுகள் நிகழ்கின்றன. அதாவது தவறான புரிதல்களும் அச்சங்களும் ஏற்படுகின்றன. உண்மையில் இது எந்த அடிப்படையும் அற்றது. தேவையில்லாதது. வாழ்;க்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரானது. அதிகாரத்துக்கெதிரான கவிதைகளைச்சமகாலத்தில் தீவிரமாக எழுதியவர் எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகர். அவருடைய கவிதைகள் அதிகாரத்தின் குரூர முகத்தை கடுமையாக எதிர்த்தன. அதிகாரத்தின் நுட்பத்தையும் அதன் பொறிகளையும் எஸ்போஸ் தன்னாற்றல் முழுவதையும் திரட்டி எதிர்த்தார். ஆனால் அந்த அதிகாரம் அவரை ஏதோ ஒரு வடிவத்தில் பலியெடுத்து விட்;;டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எஸ்போஸ் சொல்லி வந்த அதிகாரம் அவர் எதிர்பார்த்ததைப் போல அவரைக் கொன்று விட்டது. அவர் தன்னுடைய குழந்தைகளின் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமகால வாழ்வின் நிலைமைகளோடு இதை இணைத்து அகிலன் எழுதுகிறார் இப்படி



…பற்கள் முளைத்த
இரவுகள்
கனவுகளைத்தின்று கொழுத்தன
தூக்கத்தை
சிறையிலடைத்த
இரவின் படை வீரர்
விழிகளைச் சூறையாடினர்
……..
…….
என் கனவின் மீதியை
வானில் கரைக்கிறது
நடு நிசியில்
வீரிட்டுப் பறக்கும்
ஒரு பறவை



மனிதனின் அத்தனை மாண்புகளையும் அதிகாரம் என்ற இந்தக்கரும்புள்ளி பெருநோயாகி அழித்துக் கொண்டேயிருக்கிறது. மனிதன் தன் வரலாற்றில் இந்தப்பூமியை அதிகளவில் சுவீகரித்திருக்கிறான். உண்மையில் அப்படிச் சுவீகாரம் பண்ணும் அதிகாரமோ உரிமையோ மனிதனுக்கில்லை. இந்தப்பூமியில் மனிதனும் ஒரு பிராணியே. ஏனைய பிராணிகளுக்கிருக்கும் இயற்கையின் உரிமைதானே மனிதனுக்கும் உண்டு. ஆனால் இந்த உண்மையை மனிதன் விட்டுவிட்டு தன்னுடைய அதிகார வெறிக்காக இதுவரையில் பூமியின் பெருவாரியான வளங்களை அழித்திருக்கிறான். மனித உழைப்பின் பெரும்பகுதியைச் சிதைத்திருக்கிறான். உண்மையில் இந்தப்பூமியின் மிகப்பெரிய எதிரி மனிதனே. தன்னுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் பண்புக்கும் அவன் உருவாக்கிய அறத்துக்கும் நீதிக்கும் அவனே எதிரி.




இந்தப்பிரச்சினைகள் பொதுவாக எந்தப்படைப்பாளியையும் நிம்மதியாக இருக்;க விடுவதில்லை. அதிகாரத்தின் வௌ;வேறுவிதமான பொறிகளால் கணமும் நிம்மதியற்றுத்தவிக்கும் அந்தர நிலையின் வலியை உணரும் நிலையையிட்ட வருத்தம் அகிலனையும் அலைக்கிறது.


அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்;
நிரம்பிக்கிடக்கிறது வழிமுழுதும்;

(அடுத்து வரும் கணங்கள்)



உறவுகளுக்குள்ளும் மின்னலைகளாக அதிகாரமே ஊடுருவியிருக்கும்போது அன்பு பாசம் இரக்கம் நேசம் எல்லாமே பொய்யாகி விடுகின்றன. இதனால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நலன் சார்ந்தே எல்லாம் நிர்ணயம் செய்யப்படுகிறது. நலனின் அடிப்படையிலேயே இணக்கமும் இணக்கமின்;மையும் நிகழ்கிறது. அகிலன் இந்த நுண்வலைப்பின்னலை கண்டு அதிர்ந்துள்;ளார்.


பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு மூலையில்
சிக்கிக் கொண்டது
திருப்தியும் அன்பும்;

(தவறி வீழ்ந்த முடிச்சு)


இந்த நிலையில் மெய்யன்புக்கும் உறவுக்கும் இடமில்லை. உண்மையான அர்த்தத்தில் இதெல்லாம் உணரப்படுவதுமில்லை. அதனால் அவை உரிய முறையில் பொருட்படுத்தப்படுவதுமில்லை. உறவு அன்பினாலும் கருணையினாலும் எதிர்பார்ப்புகளுக்கப்பாலான நெருக்;கத்தினாலுமே உருவாகிறது என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்குள்ளாகிறது.



பதிலாக அது நலன்சார்ந்து. தேவைகளின் அடிப்படையில் பராமரிக்கப்படுகிறது என்பதைக்காணும்போது அதற்கப்பால் சிந்திக்கும் மனம் படுகின்ற துயரம் சாதாரணமானதல்ல.




இது அன்புக்கு எதிரானது. கருணைக்கும் உண்மைக்கும் மாறானது. பரஸ்பரம் என்பதற்கும் பற்றற்றது என்பதற்கும் இதில் இடமில்லை.



அன்பு என்பதன் பொருள் சிதையும் போது அதன் மெய்ப்பொருள் தேடும் மனம் அவலத்தில் வீழ்கிறது. இப்படி வீழ்ந்த மனங்களில் ஒன்று அகிலனுடையது. அன்பினால் இழைக்கப்படுவது உறவு என எதிர்பார்க்கும்மனதில் எழும் காயஙங்களை அகிலன் தன் கவிதைகளில் வலியெழும்பக்காண்பிக்கிறார்.


எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்


(துயரின் தொடக்கம்)



அகிலனுக்கு எல்லாமே துயரமயமாக இருக்கிறது. உண்மையற்;ற தனம் பெருகும் போது இப்படி புன்னகையும் துயரின் தொடக்கமாகவே இருக்கும் என அவர் உணர்கிறார். தன்னைப்புரிந்து கொள்ளத்தவறும் மனிதர்களை நோக்கி அகிலன் பேச முனைகிறார். புரிந்துகொள்ளத்தவறுவது வேறு. புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இரண்டு அனுபவங்களும் அகிலனை வருத்துகின்றன.


நமது வாழ்வில் அநேக தருணங்களில் நாம் பலதையும் புரிந்து கொள்ளத்தவறி விடுகிறோம். அதேபோலவே பல சந்தர்ப்பங்களிலும் மனிதர்களையும் மனித நடத்தைகளையும் விளங்கிக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இது இடைவெளிகளை உருவாக்குகிறது. பின்னர் இந்த இடைவெளிகளை நிர்பபமுடியாமலும் கடக்கமுடியாமலும் திணறுகிறோம். அகிலன் இந்த அந்தரிப்பையும் இந்த மூடத்தனத்தையும் கோபத்தோடும் துயரத்தோடும் பரிகாசத்தோடும் சொல்கிறார்.



என் மரணத்தின் போது
நீ ஒரு உருக்கமான
இரங்கற் கவிதையளிக்கலாம்
ஏன் ஒரு துளி
கண்ணீர் கூட உதிர்க்கலாம்
என் கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்

அதைப் பூக்களால்
நீ நிறைக்கலாம்
நீ என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேநீரோ
வரும்பொளர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்எண்ணங்கள் கிடையாது

(எதிர்பார்ப்பு)



உளவியற் சிதைவுகள் ஏற்படுவதன் அடிப்படையே பெரும்பாலும் புரிந்துணர்வின் வீழ்ச்சியே. அகிலனின் காதற்கவிதைகளின் மையமும்கூட புரிந்து கொள்ளலின் நெருக்கடிகளைப்பற்றியவையே. அல்லது புரிந்து கொள்ளலில் உள்ள குழப்பமே. அவருடைய பெரும்பாலான கவிதைகளில் தொனிக்கிற கேவல், துயர்க்குரல் என்பது ஏதோ ஒரு வகையில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையின் வீழ்ச்சியே.

யாரோடும் பகிர முடியாதுபோன
புன்னகையும்
முத்தங்களும்
துயரங்களும்
என்னுடையவைதானென்று
யாருக்குத் தெரியும்
என் வார்த்தைகளின்
அர்த்தம் கூட
எனதாயில்லை

..........
..........

அழுவதற்கான
வெட்கங்கள்
ஏதுமற்றுதுளிக்கும்
என் கண்கள்

(சுயம்)



இந்தப்புரிந்துணர்வின்மை என்பது மனிதனின் எல்லா ஆற்றலையும் சிதைக்கும் பெருங்கண்ணியாக இருக்கிறது. அதிகாரத்தைப்போலவே இதுவும் எதிர் அம்சங்கள் நிறைந்தது. எனவே இந்த அடிப்படையைச் சீர்செய்யாதவரையில் மனித முயற்சிகளும் ஆளுமையும் பொருளற்றே போகின்றன.



மனித குலம் திரட்டிய ஆற்றலுக்கு எதிராக புரிந்துணர்வின்மையின் எதிர்மறைவிளைவுகள் பெருகிக்கொண்டேயிருப்பதால்தான் இவ்வளவு இடர்ப்பாடுகளும் பூமியில் நிரம்பிக்கிடக்கின்றன என்று அகிலன் உணர்த்துகிறார். புரிதலை அதன் மெய்ப்பொருளில் சாத்தியப்படுத்தாதவரையில் எந்த உன்னதங்களும் சாத்தியமில்லை என்கிறார் அகிலன்.




அகிலனின் கவிதை மொழி தீவிரமானது. நவீன கவிதை பெற்றுவருகின்ற புதிய தொனியில் அவர் தன்னுடைய உணர்வுகளை பதிவு செய்கிறார். இந்தப்பதிவு ஒரு வகையான உரையாடல்தான். ஆனால் முறையீடற்ற உரையாடல்.




நேரடியாகச் சொல்லும் முறையில் எண்ணற்ற நேர், நேர் மறை அம்சங்களை காண்;பிக்கும் நுட்பத்தை தன்னுடைய கவிதை முறையாக்கிருக்கிறார் அகிலன். இது மென்மொழி. துயர்நிறை மொழி. யதார்த்த உலகத்தின் இடர்ப்பாடுகளை சொல்வதற்கான எளிய மொழி.




வாழ்வின் மீதான ஈடுபாடும் இளவயதின் தாபங்களும் எதிர்பார்ப்புகளும் அகிலனை வதைக்கின்றன. இயல்பற்ற சூழல் எல்லாவற்றையும் சிதைக்கிறது என்ற வருத்தம் அவரை அவருக்குத் தெரிந்த வகையில் பேச வைக்கிறது.




இதில் சில கவிதைகள் சொரிந்த தன்மையோடிருக்கின்றன. இவை ஆரம்ப நிலைக்கவிதைகளாகவும் இருக்கலாம். குறிப்பாக சில காதற் கவிதைகள். காதற்துயரைச் சொல்லும் கவிதைகளை விடவும் காதலின் ஏக்கத்தையும் அன்பிழைதலையும் சொல்லும் கவிதைகளில் மொழியின் அமைப்பும் உணர்வாழமும் குறைவாகவேயிருக்கின்றன. அதேபோல சில அரசியற் கவிதைகள். சுலொகத்தன்மைக்கு கிட்டவாக நிற்கின்றன அவை. அதாவது அகிலனின் கவிதை மொழிக்கு மாறானவையாகவும் விலகியும் தெரிகின்றன.




குரூரமாகப்பிளந்தெறியும் அரசியலை, அதன் அடக்குமுறைப்பயங்கரவாதத்தை அகிலன் வெறுக்கிறார். அவர் தன்னுடைய 'கனவுகளைத்தின்னும் இரவுகள் ' என்ற கவிதையில் சொல்கிறார்


நீள இரவின்
பெரு மூச்சு
துப்பாக்கிகளினின்றும்
புறப்படுகிறது
….
பெரும் ஊழியாய்.


என்று.இவையெல்லாம் நம் வாழ்வைச் சுற்றிய யதார்த்தங்கள் என்பதை உணர்த்துவதே அகிலனுடைய அக்கறை. இந்த அக்கறைதான் அகிலனின் மீது வாசகருக்கு ஏற்படுகிற கவனம். அவருடைய கவிதைகளின் மீது ஏற்படுகிற கவனமும்.
------------------------------------------------------------------------------------------------

விடுதலை அரசியலின் உக்கிரம் மலர்ச்செல்வன் கவிதைகள்


எழுதியவர்--------------------------------
--------------------------கருணாகரன்
_________________________________________________
வாழ்க்கையின் உத்தரவாதங்கள் தகர்ந்து போயிருக்கும் யதார்த்தவெளியில் தனித்தலையும் கவியின் மொழிதலாக மலர்ச்செல்வனின் கவிதைகள் பெருகியிருக்கன்றன. அதிரும் மனமும் நொருங்கும் சூழலும் சிதறடித்த மொழியைக் கூட்டியள்ளி மலர்ச்செல்வன் தன் கவிதைகளை எழுதியிருக்கிறார்.

அவிந்த உணர்வின் சிதைகளில் மூட்டப்பட்ட பெருந்தீயாய் கொழுந்து விடுகின்றன அவருடைய தனித்துத் திரிதல் கவிதைகள்.வாழவிரும்பிய கணங்கள் எதிர்நிலையில் விபரீதங்கொண்டு இயங்குவதைசகிக்க முடியாமல்தத்தளிக்கும் நிலை ஒரு புள்ளியில் உணரப்படஇன்னொரு புள்ளியில் சகிப்பை மீறிய கோபம் மலர்ச்செல்வனுக்குள்பொங்குகிறது. இது ஒரு நிலை. ஆனாலும் மலர்ச்செல்வனின்கவிதைகளில் துயரத்தின் நிழலே படிந்திருக்கிறது.துயரம்தான் மலர்ச்செல்வன் கவிதைகளின் மையம். துயரம் வனைகின்ற மொழியை தன்னொழுங்கில் அமைப்பதன்முலம் கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்றின்மீதும் கேள்விகளை எழுப்புகிறார் மலர்ச்செல்வன்.

மனிதவாழ்க்கையில் இது காலவரையும் கண்டறியப்பட்ட உண்மைகளென்ன? மனிதமனம் தொகுத்துக் கொண்டிருக்கும் அனுபவத்தின் நிலையென்ன? எது அதனைப்புறந்தள்ளுவது? வாழ்வின்மீது எது நிழல் விழுத்துவது? எப்போதும் ஒவ்வொருவிதமாகத் திரட்சிபெற்று மேலெழும் அரசியலா? அந்த அரசியலின் வெவ்வேறு முகங்களா?

உண்மையில் அரசியல் எப்போதும் ஏதோவொருவகையில் அனுபவத்துக்கு எதிராகத்தான் இயங்குகிறதா? அப்படி அது இயங்குகின்றபடியால்தானோ எப்போதும் அனுபவத்துக்கு முரணாகவும் அதைப்பொருட்படுத்தாமலும் அது வாழ்வைச்சிதைக்கும் வாளைத்தன் உறையில் வைத்திருக்கிறது?அது வாழமுடியாத்துயரம் அறிவின் யுகமாகிய இன்று கூட தீராப்பழி பெருத்து வாழ்வைச் சிதைக்கிறது. எதனெதன் பேராலோவெல்லாம் ஏதொரு சம்பந்தமுமில்லாமல் பழிவாங்கப்படுகிறார்கள் சனங்கள்.

தீராத்துயரின் வலியின் குருதித்தெறிக்கைகள் தனித்திருந்தலின் கவிதைகளில் படிந்துள்ளன.இப்போது நிகழ்காலத்தில் சிதையும் வாழ்வுபற்றிய மனித மனத்தின் மதிப்பீடென்ன?

நிகழ்காலம் வரையான அறவியலும் அறிவியலும் வாழ்வின் மீது நிகழ்த்துவதென்ன? வாழ்வின்மீது துன்பத்தின் நிழல் விசமாகக்கவிகையில் இந்த அறவியலும் அறிவியலும் என்னவாகின்றன? உண்மையில் அதிகாரத்துக்கிடையிலான போட்டியும் அது பெருக்கும் நுட்பங்களும் கண்டறிந்த எல்லா அறிவியலையும் அறவியலையும் துவம்சமாக்கி விடுகின்றன. அறிவியலும் அறவியலும் துவம்சமாகும்போது வாழ்க்கை சிதைகிறது. இங்கே துன்பத்தின் ஊற்று பெருக்கெடுத்து வாழ்வை மூழ்கடிக்கிறது. இதுவே தொடரும் யதார்த்தம்.இதற்கெதிராகத் தொடர்ந்தும் இன்னொரு முனையில் மனிதமனம் இயங்குகிறது. அது அதிகாரத்துக்கு எதிரானது. ஆனால் அதேவேளை அது அதிகாரத்தைப் பகிரக் கோருகிறது.

அதிகாரத்தைப்பகிர்வதற்கான மனப்பாங்கு, இணக்கம் தயார் என்பன இல்லாதபோது அதைப்பகிர்வதற்கான வன்முறை வெடிக்கிறது. இந்த வன்முறையின் எல்லையை அது வெடித்தபின் யாராலும் நிர்ணயம் செய்யமுடியாது. அது கட்டற்றது. அது எல்லாப் பருவங்களையும் ஊடுருவி எல்லாத்திசைகளையும் சிதைத்து விடுவது. இங்கேயும் வாழ்வின் மீது துன்பத்தின் நிழல் கருந்திரையாகப்படர்கிறது. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தன்வழியே துளிர்க்கிறது.எல்லாக்காலத்தையும் சிதைக்கும் அதிகாரத்தின்முன் அறமும் தோற்கிறது. அறிவியலும் தோற்கிறது. அப்படியாயின் உலகம் இதுவரையிலும் தன்னனுபவத்திலும் தன்னறிவிலும் கண்டதென்ன?

அதிகாரத்துக்கான போட்டியென்பது அறிவுக்கும் அறிவின்மைக்கும் இடையிலான போட்டியா? கடவுளே இதன்முடிவெது? இதற்கு முடிவேயில்லையா? ஒரு அதிகாரத்துக்கு எதிரான மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரமாக மாறிவிடும் விந்தை இன்னும் மாறமலிருக்கிறதே. மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரத்தின் தொடக்கமா? என்று மலர்ச்செல்வன் அச்சத்தோடு உணர்கிறார். இந்த உணருகை அவரை எழுதத்தூண்டுகிறது. அதொரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் மொழிதல்தான் மலர்ச்செல்வனின் தனித்துத்திரிதல் கவிதைகள்.மலர்ச்செல்வன் வாழ்கின்ற சூழலும் காலமும் அவருடைய கவிதைகளை வனைகின்றன. அதற்குரிய மொழியை வழங்குவதும் காலமும் சூழலுமே.

ஒரு கவிஞன் தன் கவிதையைக் காலத்திலும் சூழலிலுமே கண்டெடுக்கிறான். அது கவிதையின் வடிவமாயினும் சரி அதன் மொழியாயினும் சரி அதன் பொருளாயினும் சரி காலமும் சூழலும் விரிக்கின்ற பரப்பிலே அவன் அதை எடுத்துக்கொள்கிறான்.

மலர்ச்செல்வன் தன்னுடைய காலத்திலும் தன்னுடைய சூழலிலும் கண்டெடுத்து உருவாக்கியளித்துள்ள இந்தக்கவிதைகள் நமக்கு முன்னுள்ள ஒருவகைச் சவாலே. நம் காலத்தின் நிலையை அப்படியே தொகுத்து நம்முன்னே வைக்கிறார் மலர்ச்செல்வன். வைத்துவிட்டு அவர் நமது முகத்தைப் பார்த்தபடியிருக்கிறார். என்ன பதில் நம்மிடமிருந்து வருமென்ற ஆவலுடன்.சிதையும் நம் காலத்தில் நமது பாத்திரமென்ன? நமது அனுபவமும் அறிவும் என்ன செய்யப்போகின்றன? காலத்துயராய் இது இன்னும் எத்தனை யுகத்துக்கு நீளப்போகிறது.அதிகாரம் குவியப் போகிறதா? அதிகாரம் என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் துயரந்தானா?அது துயரத்தைப் பெருக்குகிறதா? அதிகாரத்துக்கிடையிலான போட்டியில் நிகழ்வதென்ன? வாழ்வின் சிதைவில் துளிர்த்துப்பெருகும் துயருறுவலிதானாதுயரத்தை நிலைநிறுத்தத்தான் இத்தனை போட்டிகளும்? அப்படியெனில் வெற்றியென்பது என்ன? துயரத்தை கைப்பற்றுவதிலா?

மலர்ச்செல்வன் இவற்றிலிருந்து விலகிச்செல்ல முனைகின்றார். ஆனால் அவரால் அப்படி விலகிச்செல்லவும் முடியவில்லை. சூழல் அவரை நிர்ப்பந்திக்கிறது. காலம் அவரை அழுத்துகிறது. இந்த நிலையில் இணைந்தும் விலகியும் மலர்ச்செல்வன் பயணிக்கிறார். அது ஒரு வகைத்தனிப்பயணம்.மலர்ச்செல்வன் தனித்துத்திரிகிறார். தனித்துத்ததிரிய முடியாக்காலத்தில் அவர் ஒரு சாகசக்காரனைப்போல தனித்திருக்கிறார். இந்தத் தனியன் தனமே மலர்ச்செல்வனின் பலம். அதொருவகை வீரமே.மலர்ச்செல்வன் மிக எளிதாய் ஆனால் வலியதாய் தன் உணர்வைப்பகிர்வதன் மூலம் தன்னுள் எரிகின்ற சுடரை மற்றவர்க்கும் பற்றவைத்து விடுகிறார்.

எரிகின்ற காலத்தையும் சூழலையும் இணைப்பதன் மூலம் இந்த வித்தையை அவர் எளிதாக நிகழ்த்தி விடுகிறார்.ஈழவாழ்வின் கதிகலங்கிய நாட்களின் பதிவுகளாக இந்தத் தொகுதிக் கவிதைகள் பலவுண்டு. அவற்றிற்பல ஏற்கனவேயுள்ள ஈழக்கவிதைகளின் தொடர்ச்சியே. இன்னும் சொல்லப்போனால் தென் ஈழக்கவிதைகளின் தொடர்ச்சி இவை எனலாம். அதிலும் சோலைக்கிளிக்குப் பின்னான சுவடுகள்.சோலைக்கிளிக்குப்பிறகு இந்தத்தொடர்ச்சியில் ஆத்மா றஸ்மி ஓட்டமாவடி அரபாத் அலறி அனார் என ஒரு வளர்நிலையுண்டு.தென்னீழ சமகால வாழ்க்கை அசாதாரணங்கள் கொண்டது. அதன்வழி அதன் கனவும் நிசமும் அபத்தத்தின் ஈரம் ஊறியது. குருதியிலிருந்து தீ மூண்டெரியுமு; யதார்த்தம் அது. தீயினுள்ளிருந்து குருதி பீறிட்டோடும் வரலாற்றையுடையது. இதை மலர்ச்செல்வன் உணர்ந்துள்ள முறைமை அல்லது விதமே இக்கவிதைகள்.

அரசியல் உணர்வு அல்லது அரசியல் இடையீறு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழ்க்கவிதையைப்பாதித்து வருகிறது. ஈழத்தில் அரசியலின் நிழலற்று எந்தக்கவிஞரும் தங்கள் கவிதைகளை எழுதியதில்லை நேரடியாகவேர் மறைமுகமாகவோ. விலக்காக சில கவிதைகள் வாழ்வின் ஏனைய திசைகளிலுக்கு நகர்ந்திருக்கலாம். அந்தளவுக்கு அரசியல் ஈழவாழ்வில் செல்வாக்குப்பெற்றுள்ளது. அது உயிருடன் விளையாடுகிறது. உயிர்வாழ்வதற்கு அதைச்சார்ந்தும் விலகியுமிருக்கவேண்டும் என்ற தத்தளிப்பை உருவாக்கியுள்ளது.

மலர்செல்வனுக்கு இந்தஅரசியலின் செல்வாக்கு அதிகமுண்டு.முன்னகரும் வகையான வழிகளைத் தொடும் பயணமாக மலர்செல்வன் தன் அரசியல் தேர்வைச் செய்கின்றர் மூன்று காலங்களாக வகைசெய்யப்பட்டிருக்கும் இந்தத்தொகுதியின் கவிதைகளில் தொடர் அடக்குமுறை என்ற இராணுவப்பயங்கரவாதத்துக்கு எதிரான வலுப்பாதைகள் நிகழ்த்தப்படுகின்றன. மிகயதார்த்தமாக தான்வாழ்கின்ற மட்டக்களப்பு நிலப்பகுதியின் ஆன்மாவின் நடனத்தை நிகழ்த்தி அந்த யதார்த்தத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறார் எளியசொற்களின் மூலம் உருவாக்கப்படுகிற-அல்லது உருவாகின்ற நிகழ்காலத்தின் தோற்றத்தையும் அதன் உயிரையும் தருவதற்கு மலர்செல்வனிடம் சொற்கள் உருவாகிவிட்டன.விடுதலைஅரசியலின் மீதுள்ள பற்று அல்லது நாட்டம் இந்தத் தொகுதிகவிதைகளில் முன்னெழுந்தவாறு நிற்கின்றன அதில் அவருக்குள்ள நம்பிக்கைகள் சிதறல்கள் முனைப்புகள் தெளிவுகள் தெளிவின்மைகள் சரிவுகள் விலகல்கள் கொந்தளிப்புகள் அடங்குதல்கள் குற்றவுணர்;வுகள் இயலாமைகள் எல்லாம் சாட்சிப்படுத்தப்படுகின்றன. உள்ளுக்குள்ளே ஊடுருவிப்பதிவாகியிருக்கும் கொந்தளிப்பின் நடனம் நிழலாகவும் நிஐமாகவும் தெரிகின்றது. சகலத்தையும் காட்சிப்புலமாக விரிக்கும் உத்தியை பின்பற்றுவதன் மூலம் எல்லாவற்றுக்கும் ஒருசுவடு நிலையை ஆதாரநிலையை மலர்செல்வன் உருவாக்குகிறார். அழிவின் சுவடுகளும் வலியும் அதன் கருநிழலும் காலத்தால் கலைந்து போய்விட்டாலும் மலர்செல்வனும் ஈழக்கவிதைகளும் ஆதாரப்படுத்துவது இந்தச் சுவடுகளையே இதுகாலத்தால் நகர்த்த முடியாத காயங்களாக இருப்பதற்கு இவற்றுக்குள் துடிக்கும் ஆன்மாவே பலம்.எண்பதுக்குப்பின்னான ஈழக்கவிதையின் இன்னொரு சுவடாக வரும் மலர்ச்செல்வன் அதிலிருந்து சில இடங்களில் விலகுகிறார். அந்த விலகலே மலர்ச்செல்வனின் அடையாளம். அதுவே தமிழ்க்கவிதையில் எதிர்பார்க்கப்படுவது.

ஒரு மொழிக்குப் புது முகங்களே அவசியமானது. சாயல்கள் இரண்டாம் பட்சம். அல்லது நாலாம் பட்சம். சாயல்களுடைய கவிதையும் அப்படியே.கடந்த காலத்தின் நினைவுகளில் வீழ்ந்து சுழலும்போது தவிர்க்க முடியாமல் சாயலோடான மொழிக்கும் அதன் வெக்கை தகிக்கும் நிழலுக்கும் சென்று விடுகிறார் மலர்ச்செல்வன். இது பயணமல்ல. பயணத்துக்கு முரணானது.அவர் இதிலிருந்து மீள வேண்டும். மலர்ச்செல்வன் தன்னடையாளங்களோடு பல இடங்களில் செய்யும் பயணம் வேறானது. அதுவே தொடர வேண்டும்.

மலர்ச்செல்வனுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும் உணருகை புதிய பயணத்தின் சுவட்டுக்குரியது. அது மேலும் திசைகளைத் திறக்கும்.
____________________________________________