Wednesday, February 27, 2008

பெண்ணியம் சார்பான இரண்டு குறும்படங்கள்

எழுதியவர்--------------------------------
--------------------------தீபச்செல்வன்
__________________________________________________

01. துடுப்பு-பெண்ணின் வலிமையான பயணம்

ஒரு பெண்ணால் தனித்து பயணிக்க முடியும் என்ற திடத்தை இயக்குனர் ஒரு திடமான பெண்ணின் மூலம் துடுப்பில் காட்டியிருக்கிறார். நிமலா எடுத்துக் கொண்ட பெண்ணும் யேசுதாசன் எடுத்துக் கொண்ட பெண்ணும் நமது சமூகத்தில் அவர்கள் அவதானித்ததின் வெளிப்பாடாக இருக்கின்றது. இதில் முரணான முடிவுகள் என்று எதுவும் இல்லை.படத்தின் தொடக்கத்தில் வரும் கலைப்பருதி எழுதிய அழுவதற்கென்று பூமியில் யாரும் பிறப்பதில்லை... பாடலுக்கு படத்தின் அ றிமுகம் வருகிறது. நம்பிக்கை சார்பான வலுவான காட்சிகள் அதற்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தில் வலிமையான பெண்ணாக வரும் இந்திரா என்ற பாத்திரம் படத்தின் தொடக்கத்தில் தன்னை ஒரு வலிமைப் பெண்ணாக காட்டிச் சொல்கிறாள். அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமைவாக்கிற்கு ஆனா நான் நகரமாட்டன் என்று ஒரு விதவலிமையை நம்மிடையே விதைக்கிறாள். சுனாமிப் பேரலை காவுகொண்ட உயிர்களில் இந்திராவின் கணவனும் செல்வனின் மனைவி பிள்ளைகளும் அடங்குகிறார்கள். இந்திரா இப்போது அவளின் ஒரே மகனுடன் வாழ்கிறாள். செல்வன் இந்திராவை திருமணம் செய்ய விரும்புகிறான். அவளை எல்லோரும் திருமணம் செய்யும்படி கட்டாயம் செய்கிறார்கள். இதை இந்திரா மறுக்கிறாள்.மீன்பிடி தொழில் செய்ய இந்திரா துணிகிறாள். நீ ஒரு பெம்பிள உன்னாள கடலில இறங்கித் தொழில் செய்ய ஏலுமே... கடத்தொழில நீ நினைச்சுக் கூட பாக்காத... என்று ஊர் தலைவர் கூறி தையல் இயந்திரத்தை கொடுக்க முனைந்த போது தலைவர் நீங்க ஒரு கிணத்து தவளை, இப்ப பொம்பிளையள் எவ்வளவு சாதனை செய்யுறினம் எண்டு உங்களுக்கு தெரியாது என்று அழுத்தமாக கூறுவதும்... எண்ட படகும் கடலில ஏறும்... என்று சபதமிடுவது ஒரு முக்கியமான பதில் கட்டம்.
கணவன் வலைக்கட்ட காட்டிக் கொடுத்ததை மீட்டியபடி தன் நகைகளை விற்று படகு வாங்கி கடலில் இறக்கப்படுகிறது. நிறைய மீன்களுடன் இந்திராவின் படகு கரைசேர்கிறது. அதைப்பார்த்து ஊர்த் தலைவர் வெட்கிப் போவதும் ""இந்திரா உனக்கு கதைச்சு ஒரு படகு வாங்கித் தாரன்'' என்ற தலைவரின் பதிலுக்கு... நன்றி தலைவர் என்னை ஒரு பொம்பிள எண்டு பாக்காம ஒரு தொழிலாளி எண்டு பாருங்கோ.. என்று கூறி தன் வழியில் பயணிப்பதுடன் படம் முடிகிறது. மீண்டும் கலைப் பருதியின் பாடல் வந்து படத்தின் நோக்கு அழுத்தமாக சொல்லப்படுகிறது. அவளின் போராட்டம் எல்லாம் ஒரு ஆணுக்கு நிகராக கடலில் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்குடையதாக இயக்குனர் காட்டியிருக்கிறார். சமூகத்தின் வசைகளுக்கு மடியாத துணிச்சல் பெண்ணாக அவளை காட்டியிழுப்பதில் செல்வன் என்ற துணை அவளுக்கு அவசியமாக்கப்படவில்லை. இதில் யஸ்மின் கணே "மாமா உட்பட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு குகதாஸ் காட்சிகளை இயற்கையாகவே பதிவாக்கியிருக்கிறார். அவரின் அவசியமான இடூணிண்ஞுதணீ காட்சிகள் குறித்த உணர்வுகளை சரியாகவே வெளிக்காட்டுகின்றன. படத் தொகுப்பு சிவா. அலங்காரங்கள் எதுவுமின்றி படம் இயல்பாக நகர்கிறது. படத்தின் இசையில் உயர்வில்லை. படத்தின் கதையோட்டத்தையோ பாத்திரத்தின் குணவியல்பையோ எழுச்சியூட்டும் விதத்தில் அமையவில்லை. அதிமுக்கியமான காட்சிகளில் கூட குணாம்சத்தை பிரதிபலிப்பது குறைவாகவே இருக்கிறது. படத்தின் மூலக் கதை என். சிறிதேவியின் உடையது. படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் முல்லை யேசுதாசன். ஒரு பெண்ணின் வலிமையான பயணத்தை எப்படி பயணிக்கலாம் என்பதை துடுப்பு குறும்படம் மூலம் காட்டியிருக்கிறார்.ஈழத்து, சினிமா பற்றி சரியான உரையாடல் இடம்பெறுவதில்லை என்று இராகவன் எழுதியிருந்தார்.இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ள வேண்டிய விடயமே. தென்னிந்திய சினிமா பற்றிய மாயை நம்மிடம் தலைதூக்கி ஒரு பகட்டான போலி ரசனையை அநேகர் கொண்டிருக்கின்றார்கள். இயல்பானதும் நம்முடைய பிரச்சினையை சொல்வதுமான நமது சினிமாக்களை முதலில் இவ்வாறானவர்கள் ரசிக்க முன்பு பார்க்க வேண்டும். கவிதை, சிறுகதை, நாவல் முதலிய படைப்புகளில் நாம் செலவிடுகிற அக்கறை பிரயோசனமான நமது சினிமாவிலும் ஏற்படுத்துவதை முதலில் கைக்கொள்ள வேண்டும்.