Tuesday, December 2, 2008

அம்மாக்கள் சுமக்கிற துயரங்கள்:மாதுமை கவிதை

-----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

காலம் மற்றும் சனங்களின் நெருக்கடிகளை பிரிதிபலிக்கும் பல கடிதங்களை வாசிக்க முடிகிறது. எனது அம்மா எனக்கு எழுதுகிற கடிதங்களிலும்கூட நான் பெரிய துயரங்களை கண்டேன். மிகவும் கசங்கிய ஒரு கொப்பித்தாளின் ஒரு பக்கத்தில் முடிகிற அந்தக் கடிதத்தில் அம்மா எழுதாத துயரங்கள் பெருகுவதை என்னால் உணரமுடிகிறது. அதைப்போலவே என்னோடு படிக்கும் நண்பன் ஒருவனுக்கு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் இருந்து அவனது அம்மா அப்பா தங்கைகள் தம்பி எழுதிய கடிதங்கள் மிகவும் காலதாமதமாக கிடைக்கப் பெற்றிருந்தது. அவன் அழுதுகொண்டே இருந்தான். அதில் வலிகளாலான பெருவாழ்வை வாசித்து அழத்தான் முடிந்தது.

மாதுமைக்கு அவரது அம்மா எழுதிய கடிதமும் பெருவலி சுமந்து அவருக்கு வந்திருக்கிறது.
“உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன்”
இந்த வரி சாதாரணமாக கடிதங்களில் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து வருகிற
“இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஒரே கவலையாக இருக்கிறது. உன்னைப்பார்க்க வேண்டும்போல் மனதில் ஒர் இனம்புரியாத ஆசை”
என்ற வரிகள் உண்மையில் ஒரு தாயின் மனதிற்குள்ளிருந்து எழும்புகின்ற குரல்களாக உள்ளன. அதன் கனதி முழுக்கடிதத்தையும் கவனப்படுத்துகின்றது.

போர் எல்லோரையும் துரத்திக்கொண்டிருக்கிறது. உயிரை காத்துக் கொள்ள எல்லோருமே எங்காவது போய்விட முயலுகிறோம். அதுதான் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கிற வெற்றியாக நிகழ்கிறது.
“நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன்”
இங்கிருக்கிற அனேக அம்மாக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பிள்ளைகளுடன் சேர்ந்திருப்பதைவிட அவர்கள் எங்காவது மிஞ்சியிருக்கட்டும் என்றே நெருக்கடிப்படுகிறார்கள். அந்த நெருக்கடியிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் அவர்கள் வலிகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.
“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்”
இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டது. வர முடியாது. என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

தமிழ்நதி இங்கு வரத்துடித்துக் கூறினார். சனங்கள் அனுபவிக்கிற போரை தானும் அனுபவிக்க துணிவதை நான் உணர்ந்தேன். நிவேதா எழுதிய கடிதத்தில்
“அங்கு வாழ்வுக்கான போராட்டம் என்றால் இங்கு இருப்புக்கான போராட்டம்.”
என்று எழுதியிருந்தார். றஞ்சனி ஜெபாலன் எல்லோருமே மண்ணை பிரிந்த ஏக்கத்தையும் இங்க உறவுகள் அனுபவிக்கிற பெருந்துயரை கண்டு கொதித்து துடிப்பதையும் கேட்டிருக்கிறேன். அப்படியான வலி மாதுமையிடமும் காணப்படுகிறது.

அம்மாவின் கடிதத்தை மையப்படுத்திய மாதுமையின் பதினொரு வரிகளான இந்தக் கவிதை மிகவும் இறுக்கமாகவும் இயல்பாகவும் விரிந்த கனதியுடனும் அமைகிறது. கடிதத்தை மேலே குறிப்பிட்டு விட்டு கீழெ அதன் தாக்கமாக அல்லது வாசிப்பின் பிறகான கவிதையாக மாதுமை கவிதை இடம் பெறுகிறது. இந்த சிறிய கவிதை பரந்த ஆய்வுக்குரிய உட்பரப்பை கொண்டிருக்கிறது.
“இலங்கை அம்மாவிற்கு
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பாலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தால் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடை பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்பட்டிருந்தார் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கா அம்மா

அம்மாக்கள் மட்டும் ஒற்றமையாக இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க”
உலக அதிகாரங்கள் அம்மாக்களை வதைக்கிறது என்ற பொதுவான ஏக்கம் கவிதையில் இருக்கிறது. அம்மாக்கள் எல்லாவித்திலும் பாதிக்கபப்டுவதை மாதுமை கவிதை பேசுகிறது.

போர், அரசியல், பொருளாதாரம், கொலை, தந்திரம், ஆணாதிக்கம், பாலியல் வன்முறை எல்லாமே சேர்ந்து அம்மாக்களை வதைகிறது. அதிகாரங்களின் நகர்வுகளிலும் அதன் செயற்பாடுகளிலும் தொடர்புகளிலும் ஈடுபாடுகளிலும் வருகிற பலன் அல்லது அழிவுகளை அம்மாக்களே சுமக்க நேரிடுகிறது.

இந்த நெருக்கடிகளின் பொழுது அம்மாக்களிடம் கோடிக்கனக்கான அனுபவங்களும் கதைகளும் கண்ணீரும் உருவாகின்றன. இந்த அனுபவமும் வலியும்; எழுதி முடிக்க முயாதவை. எல்லேருடைய வினைகளையும் உலகம் எங்கிலும் அம்மாக்களே சுமப்பதாக மாதுமை கவிதை கூறுகிறது. குறிப்பிடப்படுகிற நாடுகளின் அம்மாக்கள் அந்தந்த நாடுகளின் மீது அதிகாரம் வைத்திருக்கிற குறிகளையும் அல்லது நலன்களையும் வெளிப்படுத்தகின்றன. அதன் பலன்களை அம்மாக்கள் சுமக்கும் விதத்தை எடுத்துப் பேசுகிறது.

மாதுமை எழுதிய இந்தக்கவிதை இன்றைய உலக வாழ்வுச் சூழலை பேசுகிறது. அதிகாரம் மற்றம் ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்பவற்றின் போக்கை உலகளவில் நின்று கோபப்படுகிற அவருடைய பார்வை மிகவும் பரந்ததும் முக்கியமானதுமானதாக படுகிறது.
-----------------------------------------------------------------------------
யுகமாயினி அக்டோபர் இதழில் இந்த மாதுமைகவிதை இடம்பெறுகிறது.

No comments: