Wednesday, December 26, 2007

நிலை குலைந்து திரிதல் முல்லை யேசுதாசனின் இரண்டு குறும்படங்கள் பற்றி





எழுதியவர்--------------------------------
--------------------------தீபச்செல்வன்
__________________________________________________
ஈழத்தில் இயக்கப்படுகிற படங்கள் அதாவது புலிகளின் கலைத்துறையினரால் தயாரிக்கப்படுகிற படங்கள் அவர்களின் தாக்குதல்கள் பற்றிய விவரணச் சித்திரங்களாகவே அமைந்துவிடும் என்று பரவலான கருத்து உண்டு. அல்லது பிரச்சாரப்போக்கை முன்னிறுத்தி எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவைகளால் அவை நீண்ட பார்வைத்தளங்களுக்கோ காண்பிப்புக்களுக்கோ, விவாதங்களுக்கோ எடுக்கப்படாத குறைப்பார்வை இப்போதும் தொடர்ந்து வருகிறது. ஈழத்து சினிமாவின் வளர்ச்சிபற்றியும், போலிச்சினிமாவுக்கு எதிராகவும் அதாவது யதார்த்த சினிமா பற்றியும் உரையாடல் செய்பவர்கள் நிச்சயமாக இவைகளையும் ஆராய்ந்தே தமது ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இது கலைக்கும் ஈழசினிமாவுக்குமான நேர்மையான நோக்கும் கடமையுமாகும்.

இருந்தாலும் சமூகத்தை மையப்படுத்திய போரின்மீதான வாழ்வையும் துயரையும் வெளிக்காட்டும் படங்களும் அதோடு வெறும் சமூகப்பிரச்சனைகளை மையம்காட்டும் படங்களும் இயக்கப்படுகிறது என்பது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய அவசியமாகும்.

குறும்படம் சார்பான உயர்ந்த அல்லது சரியான நுட்பங்களை கையாண்டு அவைகள்மூலம் கவனஈர்ப்பைச் செய்பவர் குறும்பட இயக்குனர் முல்லை.யேசுதாசன்.ஈழத்தமிழர் மொழிக்கேயேற்ற யதார்த்தமான தன்மையிலும் எந்தஅலங்காரமுமற்ற படுஇயல்புத்தனத்துடனும் படங்களை உருவாக்கியிருக்கின்றார். ஒரு சிறுகதை எழுத்தாளரான முல்லையேசுதாசன் மழை, ஒருநாட்குறிப்பு, தவிப்பு நெருப்பு நிலவுகள் போன்ற சிறந்த குறும்படங்களையும் படைத்துள்ளார். அவரின் பயணம், கனவு என்ற இரண்டு குறும்படங்கள் பற்றி இனி அவதானிப்போம்.

யணம் - ஒருதுயரக்கிளம்பல்

பயணம் குறும்படம் குவிந்திருக்கும் மௌனத்தை கிளறுவதாக உள்ளது. ஒரு நீண்ட பார்வையை சிலநிமிடத்தில் குறுக்கி அவதானிக்க வைக்கிறது. பயணத்தை பார்த்தவர்கள் நிச்சயம் மௌனித்திருக்க முடியாது. மனக்குடைப்படைவார்கள்.

யதார்த்தம் யதாhர்தமாக சொல்லப்பட வேண்டும் என்ற நல்ல சினிமாவின் ஒரு அடையாளம் பயணத்தில் சரியாகவே தெரிகிறது. கதையம்சம் - கருத்தாழம் என்ற சமன்பாடுகளில் இது சரியாகவே பிரசவிக்கப்பட்டுள்ளது. நமக்குள் - நம்மைச் சுற்றி நடக்கும் - நடந்துகொண்டிருக்கும் அற்பத்தில் பொதிந்து ஆழமாய் இருக்கும் பிரச்சினையை பேசியிருக்கிறார் - விளக்கியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர்.

படத்தின் முடிவுகள் கைதட்டுலுக்குரியவை என்பது யதார்த்த சினிமாவில் மறுதலிக்கப்படுகிறது. மாறாக அவை சிந்திக்கவோ, மனதை உறைய வைக்கவோ, பேசிக்கொள்ளவோ தூண்டும் என்ற கட்டுமானம் ~~பயணத்தில் வெளிக்கிளம்புகிறது.

பயணம் இரண்டு பயணங்களில் நகர்ந்து செல்கிறது. ஒன்று - புன்னகையே சுமந்து போகும் அந்தத்தாய் அதை பறிகொடுக்கும் பயணம். இரண்டு இறந்து போன தன் பிள்ளையை சுகயீனமற்றவன் என்று கூறி பேரூந்தில் அவனை சுமந்து பயணிக்கும் மற்றைய பயணம். இந்த இரண்டு பயணங்களில் இயக்குனர் படத்தை கட்யெழுப்பியிருக்கிறார். முதலாவது பயணத்தில் தன் புன்னகையைப் பறிகொடுக்கிறாள். இரண்டாவது பயணத்தில் தன் பிள்ளையை பறி கொடுக்கிறாள்.

இந்த இருவித பயணங்களுக்குமாக அடிப்படையாக இருபிரச்சினைகளை இயக்குனர் முன் வைக்கிறார்.

ஒன்று அரசின் விமானத்தாக்குதல் என்ற அரச பயங்கரவாதம் கருதிய செயல்.இரண்டு அடிக்கடி பூட்டப்படும் பாதைப்பிரச்சினை. இவை இரண்டுமே இந்தப் பயணத்தின் துயரக்கிளம்பலுக்கான பின்னணியாக அமைகிறது.

பாதை பூட்டியதால் மருத்துவம் செய்ய முடியாது தன் பிள்ளையை பறிகொடுக்கிறாள் இந்தத் தாய். இறந்த போன தன் பிள்ளையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாத பண நெருக்கடி. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் பயணம் வெளித்தெரிகிறது.

தன் கதை வசனம் இயக்கத்தின மூலம் இரண்டு இடங்களில் இயக்குனர்; உயர்ந்து ஒருவித அடையாளம் காட்டியிருக்கிறார். ஒன்று "டொக்கடர் சரியாய் கவலைப்பட்டவர் உங்கட பிள்ளையை காப்பாற்ற ஏலாமல் போட்டுதெண்டு என்பதாக அவளின் குழந்தை மரணமானதை ஒரு தாயிடம் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை சொல்லுகையில் மனதைத்தொட்டிருக்கிறார்.

இரண்டு பேரூந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, விமானம் வட்டமிடுகையில்

சாவோடு சவால்விடும் நிலையில் நின்றுகொண்டிருக்கும் அந்தத் தாய் நடத்துனரைப் பார்த்து " அவனை நான் எப்பயோ சாகக் கொடுத்திட்டன் இந்த இரு இடங்களிலும் மனக்கட்டை உடைத்து கதையை உள் செலுத்தியிருக்கிறார் - பயணத்தை உள் நுழைத்திருக்கிறார் இயக்குனர்.

அவள் மரணமடைந்த தனது பிள்ளையைத்தான் சுமந்து வருகிறாள் என்பதை உணர்ந்த பேருந்து ஓட்டுணர் அவளிடம் காசு வாங்காது விடுவதும் பேருந்து மறையும் வரை இருவரும் பார்த்துக்கொண்டு நிற்பதும் அழுத்தமான இடம்.அத்துடன் பயணமும் முடிகிறது.

இந்தப்பயணம் குறும்படத்தில் முக்கிய பாத்திரமாக - தாயாக நடிக்கும் யஸ்மின் தனது பங்கை இயல்பாகவே பிரதிபலித்திருக்கிறார். வைத்தியசாலை ஊழியராக வருபவர் மனிதாபிமானம் மிக்க பாத்திரமாக மனதைத் தொடுகிறார். படத்தில் மருத்துவ தாதியாக வருபவரின் பங்கு, பேரூந்து நடத்துனராக வருபவரின் பங்கு என்பனவும் கதைக்கு உயிரோட்டத்தை வழங்கியிருக்கிறது.

படத்தில் ஒளிப்பதிவு நிலவன். காட்சிகளின் நாடித்துடிப்பை பிடித்து மனநயத்தின் உச்சிக்கு தேடிப்போகும் அளவிற்கு காட்சிகளை தந்துள்ளார்.

படத்தொகுப்பு பரி. அலங்காரங்கள் செயற்கைத்தனங்கள் தொடுக்கமுடியாத யதார்த்தக் கதையை யதார்த்தமாகவே தொகுத்துள்ளார். இசையமைத்துள்ளார் முகிலரசன். சில இடங்களில் இசையின் மூலம் உரையாடி கதையை நகர்த்தியுள்ளார். மனதை தொட்டுச் செல்லும் இசையாலும், சில இடங்களில் மௌனித்து இடைவெளி விடும் இசையும் படத்தில் அவதானத்தை பிறப்பிக்கிறது - உணர்வுகளை தட்டிவிடுகிறது. பின்னணிக்குரல் பற்றிய தொழில்நுட்பம் சிறப்பாய் இருக்கிறது.

இந்தப்படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் முல்லை யேசுதாசன் சில இடங்களில் மௌனத்தின் மூலம் உரையாடியுள்ளார். அழகியல் மொழிமூலம் கதையைச் சொல்லிச் செல்கிறார்.

படத்தின் முடிவில் சற்று நீட்சி ஏற்ப்பட்டுள்ளது. அது இன்னொரு காட்சியின் மூலம் மேலும் நீட்டப்படுகிறது. இந்தப் படத்தின உச்ச உறைவிக்குப்பிறகும் என்ன நடக்கப்போகிறது.

என்ற ஒரு தொடர்ச்சிக்கான கேள்வியை எழுப்பும் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவே படத்தின முடிவுக்கு காட்சி.

சொல்லப்பட வேண்டிய பிரச்சினையை பிரதானமாக கொண்டு சில நிமிடம் மனதை உறயவைத்து எதையோ உணர்த்த முற்படும் மௌனக்காட்டலாக பயணத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் முல்லை யேசுதாசன்.

வீடு பற்றிய " கனவு குறும்படம்

எல்லோரும் வீடு பற்றய கனவையே வாழ்வின் முதலில் தொடங்குகிறோம். ஒரு பிள்ளை வளர்ந்து வாலிப வயதை அடையும்பொழுது முதலில் வீடு பற்றிய கனவு பிறக்கிறது. ஒரு அழகான வீடுதேவை, தனது நண்பர்களை அங்குதான் அழைத்து வரவேண்டும் என்று அவனின் உணர்வு நாகரீகப்படும். சரியான வீடு இல்லாதபோது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதில் வேண்டுமென்றே அக்கறை காட்டாது இருப்பார்கள். பொறுப்புள்ள ஒரு அப்பாவிடம் ஒரு வசதியான வீட்டைக்கட்டி தனது மனைவி பிள்ளைகளை வாழவைக்கும் எண்ணம் உண்டாகும். கணவனை இழந்த பெண் தனது இரத்தத்தை வியர்வையாகச்சிந்தி ஒரு வீடுகட்டுவாள். ஆக வீடு மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் ஆறுகிற அவசிய இடமாக இருக்கிறது.

கனவு குறும்படம் இப்படி ஒரு விதத்தில் தான் வெளிப்பட்டிருக்கிறது. மிகுந்த உழைப்புடன் நாம் கட்டிய எத்தனை வீடுகள் இன்று உயர்பாதுகாப்பு வலயம் என்று முத்திரை குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருகிறது. இடம்பெயர்ந்த பொழுது எத்தனை இடங்களில் எத்தனை வீடகளைக்கட்டி சிதையவிட்டிருக்கிறோம். இரவல் வீடுகளில் தங்கி எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கிறோம். இப்படி ஒரு உணர்வில் கட்டப்பட்ட வீடு பற்றிய ஏக்கமே கனவு குறும்படத்தில் விபரிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல் காட்சியில் ஒரு அழுத்தம் கையாளப்பட்டிருக்கிறது. அதனால் சமகாலச் செய்தியுடன் ஆதங்கம் பிறக்கிறது. வீடுகளின் ஆக்கிரமிப்பால் வீதியிலும் எம்மமால் நடமாட முடியாது என்பதையும் ஒரு வேளை அதில் இயக்குனர் சொல்ல முற்பட்டிருக்கலாம். சிறுமி ஒருத்தி பாடசாலை செல்கிறாள். வீதியில் வந்த பீல்பைக் இராணுவத்தினர் இரு அப்பாவி இளைஞர்களை சுடுகிறார்கள். அதைப்பார்த்த சிறுமி பாடசாலை செல்லாது வீடு திரும்புகிறாள். இந்தச்செய்தியை படத்தின் பிரதான பாத்திரமாக காட்டப்படும் ஆச்சியிடம் சொல்லுவதுடன் இரண்டாவது காட்சி தொடங்குகிறது. அந்தச்சூட்டுச்செய்தி ஆச்சியிடம் சில நினைவுகளை கிளறிவிடுகிறது. அந்தத் தாக்கத்தால் அவளுக்குள் இருந்த ஆஸ்துமா வருத்தம் இயங்கத் தொடங்குகிறது.

படத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது காட்சிகளில் படத்தின் பிரதான கருத்தையோ பிரதான பாத்திரத்தின் குணஇயல்பையோ பார்வையாளனிடம் இலேசாக விட்டுவிடவேண்டும் என்பது சினிமா பற்றிய அவகாசம். இதனால் பார்வையாளனின் உள்ளம் படத்தில் ஆராய்வு நோக்கை ஏற்படுத்தும் என்பதை மேலே சொல்லப்பட்ட காட்சியிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.

படத்தின் பிரதான கருத்து ஆச்சிக்கும் சிறுமிக்கும் இடையில் இடம்பெறுகிற உரையாடலாக நகர்த்தப்படுகிறது. ஆச்சியின் வீடு இப்போது உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டைப் பார்ப்பதற்காக ஆச்சி பலதடவை முயலுகிறாhள். அவளால் வீட்டைப் பார்க்க முடியவில்லை. முரண்படும் படையினரையும் காவலரணையும் பார்த்துவிட்டு ஆச்சி திரும்பிவிடுவாள்.

ஆச்சியின் வீடு பற்றிய கனவு வித்தியாசமானது. அவளது வீட்டில் ஒரு வலுவான சிந்தனை இருக்கிறது. தானும் தனது கணவனும் பெற்றோரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு இருவரும் வியர்வை சிந்தி அந்த வீட்டைக் கட்டுகிறார்கள். சூட்டுச் செய்திக்கு ஆச்சி துயரப்பட்டதற்கு காரணம் படையினர் அவளின் வீட்டில் புகுந்து கணவனைச்சுட்டுச் சென்றதனால் ஆகும். அவனை அங்கேயே புதைத்துவிட்டு வருவதனால் தனது உயிர் அங்கேயே இருக்கிறது என்கிறாள் ஆச்சி. அதைப்பார்த்தே தீருவேன் என்றம் அவள் நினைத்திருக்கிறாள்.

ஆச்சி ஒரு ஓய்வுபெற்று உதவிஅரச அதிபர். தனது வீட்டை ஒருமுறை பார்ப்பதற்கு நாகரீகமாகவும் சட்டத்தை மதிப்பதாகவும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகிறாள். அனுமதி வருகிறது. ஆச்சி பூரித்துப்போகிறாள். அந்த அனுமதி கடிதத்துடன் ஆச்சி படையினரிடம் சென்று தனது வீட்டைப்பார்க்க கேட்கிறாள். படையினர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆச்சி வீட்டைக் காட்டியதும் ஆச்சிக்கு வீடு அங்கிருந்தே பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ~~வீடு பாத்தாச்சுத் தானே சரி போ.. இனி வந்தா சுர்றது படத்தின் கடைசியில் வரும் மிக அழுத்தமான ஒரு வசனம். ஆச்சியின் வீடுபற்றிய அந்த ஆதங்கப்பார்வையுடன் அமைந்த ளுவடை காட்சியுடன் ' கனவு மெய்ப்படவேண்டும் என்ற இயக்குனனரின் நேரடி வரிகளுடன் படம் முடிவடைகிறது.

படத்தில் பிரதான பாத்திரமாக வரும் ஆச்சி கருத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுபோலவே சிறுமியும் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறார்.

படத்தின் நினைவுக்காட்சிகளைச் சொல்லும்விதம் இறந்தகாலத்தை சிறப்பாக காட்டும் நுட்பமாக இருக்கிறது. இருந்தாலும் இறந்தகாலத்தில் வரும் காட்சிப்புலமும் சூழலும் அதை சரியாகச் சித்தரிக்கவில்லை என்கிறார் படத்தைப் பார்த்த ஒருவர். படத்தின் தொடக்கத்தில் ஒரு உரையாடலைத்தவிர ஏனைய இடங்களில் பின்னணி பேசிய நுட்பம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் குணஇயல்பை இசை ஆளுமை செய்தது ஒருசில காட்சிகளில் அழுத்தம் தருகிறது. படத்திற்கான இசையும் ஒலிப்பதிவும் போராளி முகிலரசன்.

எல்லாக்காட்சிகளும் கொள்ளப்பட்ட இயல்பை பிரதிபலிக்கின்றன. கமராவின் வௌ;வேறு கோணங்கள் உணர்வை பிரதிபலிக்க வசதியாக இருக்கிறது. ஒளிப்பதிவு தவநீதன். காட்சிகளின் யதார்த்தத்திற்கு ஒளியமைப்பு ஏற்றிருந்தது. ஒளியமைப்பு சுதன். பிரதான குணத்தை சிதைவின்றியும் யதார்த்தமாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது. படத்தொகுப்பு தனுஷ்.

படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் யேசுதாசன். இருத்தல் குறித்த ஆதங்கத்தின் வெளிப்பாடு - வீடு பற்றிய கனவின் மொழி.

இங்கு குறிப்பிட்ட இரண்டு படங்களும் போரின் மீதான வாழ்வு நிரப்பிய துயரமாக காணப்படுகிறது. வீடு இன்றி திரிதலும் துயரமான பயணமும் நேரில் தரிசித்த அனுபவங்களே படமாக மொழியப்பட்டுள்ள முல்லை யேசுதாசன். மிக அமைதியாக துயரத்தை கண்டு கொதிப்பவர். ஆவர் இன்னும் நமது வாழ்வைத் தொடர்ந்து நல்ல படங்கள் படைக்க வேண்டும்.

No comments: