Friday, December 21, 2007

விடுதலை அரசியலின் உக்கிரம் மலர்ச்செல்வன் கவிதைகள்


எழுதியவர்--------------------------------
--------------------------கருணாகரன்
_________________________________________________
வாழ்க்கையின் உத்தரவாதங்கள் தகர்ந்து போயிருக்கும் யதார்த்தவெளியில் தனித்தலையும் கவியின் மொழிதலாக மலர்ச்செல்வனின் கவிதைகள் பெருகியிருக்கன்றன. அதிரும் மனமும் நொருங்கும் சூழலும் சிதறடித்த மொழியைக் கூட்டியள்ளி மலர்ச்செல்வன் தன் கவிதைகளை எழுதியிருக்கிறார்.

அவிந்த உணர்வின் சிதைகளில் மூட்டப்பட்ட பெருந்தீயாய் கொழுந்து விடுகின்றன அவருடைய தனித்துத் திரிதல் கவிதைகள்.வாழவிரும்பிய கணங்கள் எதிர்நிலையில் விபரீதங்கொண்டு இயங்குவதைசகிக்க முடியாமல்தத்தளிக்கும் நிலை ஒரு புள்ளியில் உணரப்படஇன்னொரு புள்ளியில் சகிப்பை மீறிய கோபம் மலர்ச்செல்வனுக்குள்பொங்குகிறது. இது ஒரு நிலை. ஆனாலும் மலர்ச்செல்வனின்கவிதைகளில் துயரத்தின் நிழலே படிந்திருக்கிறது.துயரம்தான் மலர்ச்செல்வன் கவிதைகளின் மையம். துயரம் வனைகின்ற மொழியை தன்னொழுங்கில் அமைப்பதன்முலம் கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்றின்மீதும் கேள்விகளை எழுப்புகிறார் மலர்ச்செல்வன்.

மனிதவாழ்க்கையில் இது காலவரையும் கண்டறியப்பட்ட உண்மைகளென்ன? மனிதமனம் தொகுத்துக் கொண்டிருக்கும் அனுபவத்தின் நிலையென்ன? எது அதனைப்புறந்தள்ளுவது? வாழ்வின்மீது எது நிழல் விழுத்துவது? எப்போதும் ஒவ்வொருவிதமாகத் திரட்சிபெற்று மேலெழும் அரசியலா? அந்த அரசியலின் வெவ்வேறு முகங்களா?

உண்மையில் அரசியல் எப்போதும் ஏதோவொருவகையில் அனுபவத்துக்கு எதிராகத்தான் இயங்குகிறதா? அப்படி அது இயங்குகின்றபடியால்தானோ எப்போதும் அனுபவத்துக்கு முரணாகவும் அதைப்பொருட்படுத்தாமலும் அது வாழ்வைச்சிதைக்கும் வாளைத்தன் உறையில் வைத்திருக்கிறது?அது வாழமுடியாத்துயரம் அறிவின் யுகமாகிய இன்று கூட தீராப்பழி பெருத்து வாழ்வைச் சிதைக்கிறது. எதனெதன் பேராலோவெல்லாம் ஏதொரு சம்பந்தமுமில்லாமல் பழிவாங்கப்படுகிறார்கள் சனங்கள்.

தீராத்துயரின் வலியின் குருதித்தெறிக்கைகள் தனித்திருந்தலின் கவிதைகளில் படிந்துள்ளன.இப்போது நிகழ்காலத்தில் சிதையும் வாழ்வுபற்றிய மனித மனத்தின் மதிப்பீடென்ன?

நிகழ்காலம் வரையான அறவியலும் அறிவியலும் வாழ்வின் மீது நிகழ்த்துவதென்ன? வாழ்வின்மீது துன்பத்தின் நிழல் விசமாகக்கவிகையில் இந்த அறவியலும் அறிவியலும் என்னவாகின்றன? உண்மையில் அதிகாரத்துக்கிடையிலான போட்டியும் அது பெருக்கும் நுட்பங்களும் கண்டறிந்த எல்லா அறிவியலையும் அறவியலையும் துவம்சமாக்கி விடுகின்றன. அறிவியலும் அறவியலும் துவம்சமாகும்போது வாழ்க்கை சிதைகிறது. இங்கே துன்பத்தின் ஊற்று பெருக்கெடுத்து வாழ்வை மூழ்கடிக்கிறது. இதுவே தொடரும் யதார்த்தம்.இதற்கெதிராகத் தொடர்ந்தும் இன்னொரு முனையில் மனிதமனம் இயங்குகிறது. அது அதிகாரத்துக்கு எதிரானது. ஆனால் அதேவேளை அது அதிகாரத்தைப் பகிரக் கோருகிறது.

அதிகாரத்தைப்பகிர்வதற்கான மனப்பாங்கு, இணக்கம் தயார் என்பன இல்லாதபோது அதைப்பகிர்வதற்கான வன்முறை வெடிக்கிறது. இந்த வன்முறையின் எல்லையை அது வெடித்தபின் யாராலும் நிர்ணயம் செய்யமுடியாது. அது கட்டற்றது. அது எல்லாப் பருவங்களையும் ஊடுருவி எல்லாத்திசைகளையும் சிதைத்து விடுவது. இங்கேயும் வாழ்வின் மீது துன்பத்தின் நிழல் கருந்திரையாகப்படர்கிறது. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தன்வழியே துளிர்க்கிறது.எல்லாக்காலத்தையும் சிதைக்கும் அதிகாரத்தின்முன் அறமும் தோற்கிறது. அறிவியலும் தோற்கிறது. அப்படியாயின் உலகம் இதுவரையிலும் தன்னனுபவத்திலும் தன்னறிவிலும் கண்டதென்ன?

அதிகாரத்துக்கான போட்டியென்பது அறிவுக்கும் அறிவின்மைக்கும் இடையிலான போட்டியா? கடவுளே இதன்முடிவெது? இதற்கு முடிவேயில்லையா? ஒரு அதிகாரத்துக்கு எதிரான மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரமாக மாறிவிடும் விந்தை இன்னும் மாறமலிருக்கிறதே. மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரத்தின் தொடக்கமா? என்று மலர்ச்செல்வன் அச்சத்தோடு உணர்கிறார். இந்த உணருகை அவரை எழுதத்தூண்டுகிறது. அதொரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் மொழிதல்தான் மலர்ச்செல்வனின் தனித்துத்திரிதல் கவிதைகள்.மலர்ச்செல்வன் வாழ்கின்ற சூழலும் காலமும் அவருடைய கவிதைகளை வனைகின்றன. அதற்குரிய மொழியை வழங்குவதும் காலமும் சூழலுமே.

ஒரு கவிஞன் தன் கவிதையைக் காலத்திலும் சூழலிலுமே கண்டெடுக்கிறான். அது கவிதையின் வடிவமாயினும் சரி அதன் மொழியாயினும் சரி அதன் பொருளாயினும் சரி காலமும் சூழலும் விரிக்கின்ற பரப்பிலே அவன் அதை எடுத்துக்கொள்கிறான்.

மலர்ச்செல்வன் தன்னுடைய காலத்திலும் தன்னுடைய சூழலிலும் கண்டெடுத்து உருவாக்கியளித்துள்ள இந்தக்கவிதைகள் நமக்கு முன்னுள்ள ஒருவகைச் சவாலே. நம் காலத்தின் நிலையை அப்படியே தொகுத்து நம்முன்னே வைக்கிறார் மலர்ச்செல்வன். வைத்துவிட்டு அவர் நமது முகத்தைப் பார்த்தபடியிருக்கிறார். என்ன பதில் நம்மிடமிருந்து வருமென்ற ஆவலுடன்.சிதையும் நம் காலத்தில் நமது பாத்திரமென்ன? நமது அனுபவமும் அறிவும் என்ன செய்யப்போகின்றன? காலத்துயராய் இது இன்னும் எத்தனை யுகத்துக்கு நீளப்போகிறது.அதிகாரம் குவியப் போகிறதா? அதிகாரம் என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் துயரந்தானா?அது துயரத்தைப் பெருக்குகிறதா? அதிகாரத்துக்கிடையிலான போட்டியில் நிகழ்வதென்ன? வாழ்வின் சிதைவில் துளிர்த்துப்பெருகும் துயருறுவலிதானாதுயரத்தை நிலைநிறுத்தத்தான் இத்தனை போட்டிகளும்? அப்படியெனில் வெற்றியென்பது என்ன? துயரத்தை கைப்பற்றுவதிலா?

மலர்ச்செல்வன் இவற்றிலிருந்து விலகிச்செல்ல முனைகின்றார். ஆனால் அவரால் அப்படி விலகிச்செல்லவும் முடியவில்லை. சூழல் அவரை நிர்ப்பந்திக்கிறது. காலம் அவரை அழுத்துகிறது. இந்த நிலையில் இணைந்தும் விலகியும் மலர்ச்செல்வன் பயணிக்கிறார். அது ஒரு வகைத்தனிப்பயணம்.மலர்ச்செல்வன் தனித்துத்திரிகிறார். தனித்துத்ததிரிய முடியாக்காலத்தில் அவர் ஒரு சாகசக்காரனைப்போல தனித்திருக்கிறார். இந்தத் தனியன் தனமே மலர்ச்செல்வனின் பலம். அதொருவகை வீரமே.மலர்ச்செல்வன் மிக எளிதாய் ஆனால் வலியதாய் தன் உணர்வைப்பகிர்வதன் மூலம் தன்னுள் எரிகின்ற சுடரை மற்றவர்க்கும் பற்றவைத்து விடுகிறார்.

எரிகின்ற காலத்தையும் சூழலையும் இணைப்பதன் மூலம் இந்த வித்தையை அவர் எளிதாக நிகழ்த்தி விடுகிறார்.ஈழவாழ்வின் கதிகலங்கிய நாட்களின் பதிவுகளாக இந்தத் தொகுதிக் கவிதைகள் பலவுண்டு. அவற்றிற்பல ஏற்கனவேயுள்ள ஈழக்கவிதைகளின் தொடர்ச்சியே. இன்னும் சொல்லப்போனால் தென் ஈழக்கவிதைகளின் தொடர்ச்சி இவை எனலாம். அதிலும் சோலைக்கிளிக்குப் பின்னான சுவடுகள்.சோலைக்கிளிக்குப்பிறகு இந்தத்தொடர்ச்சியில் ஆத்மா றஸ்மி ஓட்டமாவடி அரபாத் அலறி அனார் என ஒரு வளர்நிலையுண்டு.தென்னீழ சமகால வாழ்க்கை அசாதாரணங்கள் கொண்டது. அதன்வழி அதன் கனவும் நிசமும் அபத்தத்தின் ஈரம் ஊறியது. குருதியிலிருந்து தீ மூண்டெரியுமு; யதார்த்தம் அது. தீயினுள்ளிருந்து குருதி பீறிட்டோடும் வரலாற்றையுடையது. இதை மலர்ச்செல்வன் உணர்ந்துள்ள முறைமை அல்லது விதமே இக்கவிதைகள்.

அரசியல் உணர்வு அல்லது அரசியல் இடையீறு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழ்க்கவிதையைப்பாதித்து வருகிறது. ஈழத்தில் அரசியலின் நிழலற்று எந்தக்கவிஞரும் தங்கள் கவிதைகளை எழுதியதில்லை நேரடியாகவேர் மறைமுகமாகவோ. விலக்காக சில கவிதைகள் வாழ்வின் ஏனைய திசைகளிலுக்கு நகர்ந்திருக்கலாம். அந்தளவுக்கு அரசியல் ஈழவாழ்வில் செல்வாக்குப்பெற்றுள்ளது. அது உயிருடன் விளையாடுகிறது. உயிர்வாழ்வதற்கு அதைச்சார்ந்தும் விலகியுமிருக்கவேண்டும் என்ற தத்தளிப்பை உருவாக்கியுள்ளது.

மலர்செல்வனுக்கு இந்தஅரசியலின் செல்வாக்கு அதிகமுண்டு.முன்னகரும் வகையான வழிகளைத் தொடும் பயணமாக மலர்செல்வன் தன் அரசியல் தேர்வைச் செய்கின்றர் மூன்று காலங்களாக வகைசெய்யப்பட்டிருக்கும் இந்தத்தொகுதியின் கவிதைகளில் தொடர் அடக்குமுறை என்ற இராணுவப்பயங்கரவாதத்துக்கு எதிரான வலுப்பாதைகள் நிகழ்த்தப்படுகின்றன. மிகயதார்த்தமாக தான்வாழ்கின்ற மட்டக்களப்பு நிலப்பகுதியின் ஆன்மாவின் நடனத்தை நிகழ்த்தி அந்த யதார்த்தத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறார் எளியசொற்களின் மூலம் உருவாக்கப்படுகிற-அல்லது உருவாகின்ற நிகழ்காலத்தின் தோற்றத்தையும் அதன் உயிரையும் தருவதற்கு மலர்செல்வனிடம் சொற்கள் உருவாகிவிட்டன.விடுதலைஅரசியலின் மீதுள்ள பற்று அல்லது நாட்டம் இந்தத் தொகுதிகவிதைகளில் முன்னெழுந்தவாறு நிற்கின்றன அதில் அவருக்குள்ள நம்பிக்கைகள் சிதறல்கள் முனைப்புகள் தெளிவுகள் தெளிவின்மைகள் சரிவுகள் விலகல்கள் கொந்தளிப்புகள் அடங்குதல்கள் குற்றவுணர்;வுகள் இயலாமைகள் எல்லாம் சாட்சிப்படுத்தப்படுகின்றன. உள்ளுக்குள்ளே ஊடுருவிப்பதிவாகியிருக்கும் கொந்தளிப்பின் நடனம் நிழலாகவும் நிஐமாகவும் தெரிகின்றது. சகலத்தையும் காட்சிப்புலமாக விரிக்கும் உத்தியை பின்பற்றுவதன் மூலம் எல்லாவற்றுக்கும் ஒருசுவடு நிலையை ஆதாரநிலையை மலர்செல்வன் உருவாக்குகிறார். அழிவின் சுவடுகளும் வலியும் அதன் கருநிழலும் காலத்தால் கலைந்து போய்விட்டாலும் மலர்செல்வனும் ஈழக்கவிதைகளும் ஆதாரப்படுத்துவது இந்தச் சுவடுகளையே இதுகாலத்தால் நகர்த்த முடியாத காயங்களாக இருப்பதற்கு இவற்றுக்குள் துடிக்கும் ஆன்மாவே பலம்.எண்பதுக்குப்பின்னான ஈழக்கவிதையின் இன்னொரு சுவடாக வரும் மலர்ச்செல்வன் அதிலிருந்து சில இடங்களில் விலகுகிறார். அந்த விலகலே மலர்ச்செல்வனின் அடையாளம். அதுவே தமிழ்க்கவிதையில் எதிர்பார்க்கப்படுவது.

ஒரு மொழிக்குப் புது முகங்களே அவசியமானது. சாயல்கள் இரண்டாம் பட்சம். அல்லது நாலாம் பட்சம். சாயல்களுடைய கவிதையும் அப்படியே.கடந்த காலத்தின் நினைவுகளில் வீழ்ந்து சுழலும்போது தவிர்க்க முடியாமல் சாயலோடான மொழிக்கும் அதன் வெக்கை தகிக்கும் நிழலுக்கும் சென்று விடுகிறார் மலர்ச்செல்வன். இது பயணமல்ல. பயணத்துக்கு முரணானது.அவர் இதிலிருந்து மீள வேண்டும். மலர்ச்செல்வன் தன்னடையாளங்களோடு பல இடங்களில் செய்யும் பயணம் வேறானது. அதுவே தொடர வேண்டும்.

மலர்ச்செல்வனுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும் உணருகை புதிய பயணத்தின் சுவட்டுக்குரியது. அது மேலும் திசைகளைத் திறக்கும்.
____________________________________________

No comments: