--------------------------தீபச்செல்வன்
__________________________________________________
ஈழத்து சினிமா பற்றிய அவதானிப்புகளும் விவாதங்களும் பரவலாக காணப்படுகின்ற சூழலில் 2006 இன் இறுதியில் ஆணிவேர், மண் முதலிய இரண்டு வெண்திரைப்படங்கள் ஈழத்துப் படங்களாக வெளியாகியிருக்கின்றன। இந்த இரண்டு படங்களுக்குமான உரையாடல்கள் விமர்சனங்கள் என்பன இன்னும் பரவலாக முன்னெடுக்க வேண்டியுள்ளது। இந்தப்படங்கள் பரவலான பார்வைக்கு உட்படுத்தவும் முடியாதிருக்கிறது. இருந்தாலும் மண் திரைப்படம் தற்போது பரவலாக பார்வைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
மண் திரைப்படம் எடுக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை பல அறிமுகக் குறிப்புக்கள் பல்வேறு ஊடகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் நீண்ட கருத்தாக்கமோ ஆழமான பார்வையோ விவாதமோ இடம் பெறவில்லை என்று குற்றமும் எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் மண் படம் பற்றி கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்காறர்.(தினகரனில்) வே.தினகரன் மண்படம் தொர்பான முரண்களை(வீரகேசரியில்) எழுதியிருக்கிறார். நிச்சயமாக இந்தப்படம் பற்றிய விரிந்த உரையாடலுக்கும் ஆய்வுக்கும் நாம் தயாராக வேண்டியது ஈழச்சினிமா பற்றி அக்கறையுள்ள அனைவரினதும் கடமையாகும்.
மண்படம் எந்த அரசியலும் கலக்காத சமூகப்படம் என்று புதியவன் கூறினார். அவர் எந்த அரசியல் விவகாரங்களையும் எடுத்துக் கதையைக் காட்டவில்லை என்பதனால் இப்படி கூறியிருக்கலாம். அரசியல் வழி நீண்டு ஏற்பட்ட போரின் வடுக்கள், மீட்கப்பட்ட கிராமங்கள். தாயகம் பிரிந்து புலம்பெயர் சூழல் இவைகளைக் கொண்டு படத்தை இயக்குனர் உருவாக்கியிருக்கிறார்.
படத்தின் பிரதானகதை மிகவும் முக்கியமான விடயம்। இது ஈழத்துச் சினிமாவுக்கு ஒரு புதிய பிரச்சினையை கையாளும் படமாகவும் வாய்த்திருக்கிறது. கவிதை,சிறுகதை,நாவல் முதலிய இலக்கியங்களில் பகிரப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வு, சாதிய எதிர்ப்பு, பிரதேசவாதம் முதலிய முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டு படம் பகிரப்பட்டுள்ளது. சமூகத்திற்கு மிக அவசியமான கதை ஒன்றை சமூகத்தின் வழிபிறழாது படமாகத் தரப்பட்டிருக்கிறது.

பொன்னம்மா, தங்கையா, மலையகத்திலிருந்து கலவரத்தினால் இடம்பெயர்ந்து கனகராயன்குளத்தில் வந்து வசிக்கிறார்கள். அந்த ஊரின் முதலாளிகளான நல்லதம்பி மற்றும் அவரின் நண்பன் முதலியோரிடத்தில் தங்கையாவும் பொன்னம்மாவும் அவர்களைப் போல மலையகத்திலிருந்து வந்தவர்களும் வேலைக்குப் போகிறார்கள்.அங்கு அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் ;இதற்கிடையில் நல்லதம்பியின் மகன் பொன்னம்பலம் தங்கையாவின் மகள் லஷ்சுமியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.
இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பொன்னம்பலம் எனப்படும் பொன்ராசு லக்சுமியைக் காதலிக்கிறான். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவினால் லக்சுமி கர்ப்பமடைகிறாள். லக்சுமி மீதான காதலையும் அவளையும் பொன்ராசின் பெற்றோர் எதிர்ப்பதைப் போல பொன்ராசும் ஏமாற்றி வெளிநாடு ஓடுகிறான். இது படத்தின் இடையில் நகர்த்தப்படும் அழுத்தக் காட்சிகள்.
இலண்டனிலிருந்து பொன்ராசு விவரணப்படம் ஒன்றை எடுப்பதற்காக நாடு திரும்பி வருகிறான் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. அப்படி வரும் பொன்ராசை பழிவாங்க பொன்ராசுவின் மகன் பின் தொடருகிறான். இதுதான் படத்தின் நகர்த்தலாகக் காணப்படுகிறது.
மிகவும் யதார்த்தமான கதைக்குச் சரியான முடிவும் யதார்த்தமான இறுக்கமும் படத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கதையைக்கொண்டு செல்லும் முறையில் புதியவன் கையாளும் நுட்பங்கள் இயல்பான சூழல் என்பன கவனிக்கப்பட வேண்டியது.இந்தப்படத்தை பார்த்தபிறகுகூட கனகராயன்கிராமத்தை சென்று பாhத்து விட்டு இக்கட்டுரையை எழுதத்தொடங்கினேன். கனகராயன் குளப்பாடசாலைக்கு சென்றேன் மண்படத்தில்வரும் அதிபரைப்போலவே கனகராயன் குளப்பாடசாலை அதிபரும் இருந்தார். அதைவிட அங்கு இன்னொரு செய்தியையும் அறிந்தேன் படத்தில் காதல் சுகுமார் கிருமிநாசினி விசிறிக்கொண்டிருக்கும் போது உடலில் நஞ்சேறி மரணமடைகிறார். படத்தில் காரை வழங்க மறுத்ததைப்போல அவர்கள் வண்டிலை வழங்க மறுத்திருக்கிறார்கள். அப்படிபல உண்மைச்சம்பவங்களை வைத்தே படத்தை புதியவன் எடுத்திருப்பதாக அக்கிராமமக்கள் கூறினார்கள்.
குறிப்பாக, படம் கனகராயன்குளக் கிராமம் ஒன்றில் நிகழும் சம்பவங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கு செய்யப்பட்ட கனகராயன்குளம் மீதான காட்சிகள் அநேகமான இடங்களில் கனகராயன்குளத்தை ஒத்திருக்கின்றன.கனகராயன் குளத்தில் இடம்பெறும் சம்பவங்களுக்கான காட்சிகள் தொடக்கம் முதல் முடிவுவரை கனகராயன்குளத்தின் உள்ளேயே நிகழும் உணர்வைத் தருகின்றன.
படத்தில் வரும் பாத்திரங்களிடையேயான பழக்கவழக்கங்கள் இ உரையாடல்கள் என்பனவும் நமது பண்பாட்டை அசலாகப் பிரதிபலிக்கின்றன.குறிப்பிட்டுக்கூறமுடியாதளவு முழு வசனங்களுமே எமது மொழியில் வருகின்றன. பொன்ராசின் உரையாடலில் இளைஞர்களின் பேச்சுவழக்கும், நல்ல தம்பியின் உரையாடலில் முதுமைப்பேச்சுவழக்கும் மிக அழகாக வெளிப்படுகிறது. மலையகத்திலிருந்துவரும் தங்கையா, பொன்னம்மா ஆகியோரின் உரையாடலில் மலையகமும் வன்னியும் இணைந்துவரும் மொழியும் அழகாகக் கையாளப்படுகிறது.
இளநீர் களவெடுக்கும் பழக்கம், அதற்காக பெற்றோர் தண்டிக்கும் பழக்கம் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் கீழ்வகுப்பு மாணவர்களுக்கு பாடக்குறிப்புக்களை வழங்கும் பழக்கம் என்பனவும் படத்தில் காணப்படுகின்றன. எங்களுக்கே உரியதும் இயல்பானதுமான காதல் கொள்ளும் விதம் சண்டையிடும்விதம் முதலியனவும் யதார்த்தமாகக் கையாளப்பட்டுள்ளது.
தென்னம்தோப்பு வேலைகள், மாட்டுப்பட்டிகள், வீடு, முற்றம், பாவனைப் பொருட்கள் முதலியவற்றிலும் நமது அடையாளமும் பதிவும் இயல்பான பகைபுலக்காட்சிகள். பாடசலையில் சில காட்சிகள் இம்பெற்றுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்குப் போவது பாடசாலையில் அரட்டை அடிப்பது, ஆசிரியர்களோடு உரையாடுவது, ஆசிரியர்கள் கற்பிக்கும் ஒழுங்கு முதலியவற்றிலும் இயல்புகுலையாது சித்தரிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இது எமது பாடசாலையாக படைக்கப்பட்டிருக்கிறது.
முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த நல்லதம்பி அவரின் மனைவி முதலிய பாத்திரங்களும் அப்படியே உணர்வை பிரதிபலித்திருக்கின்றன. கிட்டத்தட்ட 80 களில் இடம்பெறும் சமூக எற்றத்தாழ்வைப் பற்றி கதையைப் புனையும் புதியவன் அக்காலப்பகுதியில் லக்சுமியை ஏமாற்றிவிட்டு லண்டன் போகும் பொன்ராசு 2002 களில் ஏற்பட்ட சமாதான காலத்தில் நாடு திரும்புவதாக நிகழ்த்தி முடிக்கிறார்.
சாதிய வெறியால் பொன்ராசு தன் வாழ்வை இழந்து தனித்துத்திரிவதைப் போலவும் காட்டப்படுகிறார். அவரோடு படிக்கும் நண்பன் ஒருவன் அக்காலத்தில் போராட்டத்தில் இணைந்துகொண்டதும் -மீண்டும் போராளியாக நலமுடன் காணுவதைப்போலவும் படத்தின் முக்கியகாட்சி ஒன்று காணப்படுகிறது.. இருவருக்கு மிடையிலான சாதி வெறியும் தேசப்பற்றும் அதில்காட்டப்படுகிறது.. கிட்டத்தட்ட 18 வருடகால சம்பவத்தை மீட்கும் விதமாக படம்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அநேகமாக ஈழத்துப்படங்கள் விவரணப்படங்களைப் போலவே வருகிறது என்ற கருத்து மண் படத்தில் எவ்விடத்திலும் கூறமுடியாது.
"தோட்டத்தில வேலை செய்யிற கழுதைக்கு நான் மாப்பிளையாம் "
என்ற வெறி வார்த்தைகளைக் கொட்டிவிட்டு ஊரைவிட்டு ஓடும் பொன்ராசு தன் வாழ்க்கையைத் தொலைத்து நிம்மதியின்றி மீள ஊர்வருகையில்
"லண்டனுக்குப் போகவில்லை
பாரிசுக்குப் போவில்லை
சொந்தமண்ணில் தானிருந்தோம் சந்தோஷமாக "
இப்படி ஒரு பாடல் காணப்படுகிறது.
"விழமாட்டோம் விழமாட்டோம்
கனவுகள் பலித்துவிடும் "
என்ற ஆழமான அர்த்தமுடையவரிகளும் அந்தப்பாடலில் உள்ளன..
இந்தப் படத்தின் மூலம் 80களில் நிகழ்ந்த சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய விடயத்தை மட்டும் கூறிமுடிக்கவில்லை;. அந்நாளிலிருந்து இன்றுவரை கனகராயன்குளத்தோடு எமது முழுத்தேசமும் படும் துயரத்தையும் மாற்றத்தையும் காட்டுகிறார். சமூக ஏற்றத்தாழ்வை ஒழித்து படத்தின் முடிவில் தேசத்தின் விடிவுக்கு ஒற்றுமை குரலிடுகிறார். இதைப் பொன்ராசின் மகன் பொன்ராசைப் பார்த்து
"சிவனேசன்ர அம்மா செத்தது புக்காரா குண்டுவீச்சில
கூடவே இருந்த நண்பன் செத்தது இந்தத் தேசத்துக்காக
கண்ணம்மாக்காண்ர ஆறுமாதக் குழந்தை செத்தது
குடிக்கிறது பால்மா இல்லாம
என்ர அம்மா செத்தது உன்னால
என்ர அம்மா செத்தது உன்னால... "
என்று கூறும் வார்த்தைகளில் இருந்து ஒற்றுமையின்பலத்;தை உணரமுடிகிறது. படத்தின் முடிவில்
"கும்பிட்ட கைகள் நடுவே துப்பாக்கி தூக்கின இவன் கரங்கள் "
என்று எழுச்சியின்; அர்த்தம் பற்றிய கருத்துடன் படம் முடிகிறது.
படத்தில் நடித்த எல்லாப் பாத்திரங்களுமே குறிப்பிடப்பட்ட பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். விஜித், ஷனா, சந்திசேகர்,சுகுமார் முதலியோரின் நடிப்பு வெகு இயல்பானது.
எமது மொழியைக் கையாளும் விதம் பின்னணி பேசிய தொழிநுட்பம் என்பனவும் அவதானமாகக் கையாளப்பட்டுள்ளது. ஈழம்பற்றிய படங்களில் அதிகம் எமது மொழியைக் கையாளுகையில் பிழையும் இயலாமையும் நிகழ்ந்து வருவதுண்டு. மண்ணில் மொழி வெற்றியளித்திருக்கிறது. 80களுக்குரிய காட்சி உரிய காலத்தின் கலாச்சாரங்களையும் உரையாடல்களையும் சித்தரிக்கத் தவறியுள்ளது. அக்காலத்திற்குரிய காட்சிகள் தற்காலத்தைப் போலவே காணப்படுகின்றன.
படத்தின் பிரதான பாத்திரத்தை நாயகத்தனமூட்டிப் பெரும் தலையாக சித்தரிக்கும் இன்றைய தமிழ் சினிமாப் படங்களுக்குப் பொன்ராசு எவ்வாறு சமூகத்தில் வாழ்கிறான் என்பதை எந்தத் தூக்கலுமற்றுக் காட்டுவதும் தந்தைகளை வில்லன்களாகக் காட்டி வாழ்வைப் போரூட்டும் தமிழ் சினிமா நல்லதம்பி முகலிய பாத்திரத்திரங்களை கற்றுக்கொள்ள வேண்டியுமுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவு மிக அழகியலுடன்; அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற குளோசப் (closup) காட்சிகள் தேவையற்ற உணர்வு திணிக்கப்படவில்லை. அனைத்துக் காட்சிகளும் ஒவ்வொன்றாக அடையாளம் காணக்கூடியவை. ஒவ்வொன்றும் இயல்புடனும் அவதானமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கனகராயன்குளக் கிராமத்தைக் காட்டுவதில் ஒளிப்பதிவின் பங்கு மிகமுக்கியமானது.
சில ஆங்கில மற்றும் பிறமொழிப்படங்களில் இப்போது படத்தொகுப்புக் குப்பையாக அதாவது கற்பனை உலகத்தை வலிந்து காட்டுவதாக மேற்கொள்ளப்;படுகிறது. பாடல்காட்சிகள், மோதல் காட்சிகள் முதலியன போலித்தனமாகத் தொகுக்கப்படுகிறது. மண் எந்த செயற்கையும் அற்று தொகுக்கப்பட்டதில் தொய்வோ தேவையற்ற விறுவிறுப்போ-மர்மமோ இல்லை. படத்தொகுப்பு இயல்பான நகர்த்தலுக்கு உதவியிருக்கிறது.
படத்தில் இடம்பெறும் சிறந்த பாடல்கள் அத்தனையும் ஜேர்மன் விஜய் இசையமைத்துள்ளார். படத்திற்கான பிரதான குண இசை இல்லையென்றாலும் படத்தின் போக்கில் இசையின் ஓட்டம் வலுவை வழங்கியுள்ளது.
மண்படத்தை இயக்கியிருக்கிறார் புதியவன். சமூக ஏற்றத்தாழ்வை அழித்து ஒருதேச ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்ற செய்தியையும் சொல்லுகிறார். பிற்போக்கை கேலி செய்து படிப்பினைகளைத் தந்திருக்கிறார். ஈழத்தின் எந்தப்பகுதியிலும, உலகத்திலும் வெளியிடக் கூடிய வகையில் படத்தை எடுத்து சமூகத்தை வழிப்படுத்தி ஒரே இனம் ஒரே தேசம் ஒரே சமூகம் என்ற வெற்றியைக் கூற மண்ணை புதியவன் படைத்திருக்கிறார்.
படத்தின் திரைக்கதையும் (எழுத்து) தயாரிப்பும் ராஜ் கஜேந்திரா. 90 நாட்களில் படப்பிடிப்பு செய்து அவசியமான படத்தை நமக்குத் தந்த மண் திரைப்படக் குழுவிற்கு நாம் எல்லோரும் பாராட்ட வேண்டும் இன்னும் ஆழமாக விரிந்த கருத்துக்களை அனைவரும் முன்வைக்க வேண்டும். மண்போல புதியவன் போல இன்னும் பலவற்றை ஈழச்சினிமா தன் வசம் காணவேண்டும். எல்லோரும் கருத்தாடுவதன் மூலம் மண்பற்றிய முரண்களையும் சாதனைகளையும் அறிந்து கொள்ளவும் முடியும.