Monday, May 5, 2008

எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !

எழுதியவர்___________________________
மாவனல்லை. எம்.ரிஷான் ஷெரீப்,

கவிதைகள் எப்பொழுதுமொரு தனித்துவமான அழகியலைக் கொண்டிருப்பவை.எழுதுபவரது வாழ்வும்,வாழ்வின் சூழலும்,தாக்கங்களுமே கவிதைகளாகப் பிறப்பெடுக்கின்றன.கவிதைகளின் பாடுபொருளும்,அவற்றின் எளிதில் புரிந்து கொள்ளமுடியுமான வரிகளும் கவிதைக்கும்,வாசிப்பவருக்குமிடையிலான நெருக்கத்தை உண்டுபண்ணுபவை.எழுதியவரின் மகிழ்ச்சி,துயரம்,இன்ன பிற உணர்ச்சிகளும் வாசிக்கும் நபரின் மேல் ஒரு போர்வையாகப் படியும்.
அவ்வாறான ஒரு துயரத்தின் உணர்வை தீபச்செல்வனின் 'கீறல் பட்ட முகங்கள்' வலைப்பூவில் அவர் பதிந்திருக்கும் அவரது கவிதைகளில் காணலாம்।இவ்வலைப்பூ துயரங்களைச் சொல்லும் ஆவணங்களின் கவிதைகளைக் கொண்டிருப்பவை।பெரும் புற்றுப் போலப் படர்ந்து வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி,வாசிப்பவரை விழிகசியச் செய்பவையாக இருக்கின்றன இவரது பெரும்பாலான கவிதைகள்.

இவரது 'கிளிநொச்சி' தலைப்பிலான கவிதை சமாதான ஒப்பந்தம் முறிக்கப்பட்டதன் பிற்பாடு திரும்பவும் பதுங்குகுழிக்கு மீண்ட வாழ்வை மிகத் துயருடன்,எளிதில் புரிந்து கொள்ள முடியுமான மொழியில் பேசுகிறது.கவிதையின் சில வரிகள்,

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.


எனச் சொல்லி, இப்படி முடிக்கிறார்.
நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
இதே வலியை இவரது 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' கவிதையும் பேசுகிறது.இதில் யுத்தப்பிரதேசங்களின் சூனியங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான துயரத்தாலாட்டுக்கள் கண்ணீரால் பாடப்பட்டிருக்கின்றன.

ஒருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்
என்று துயருருத்தும் வரிகளால் தொடங்கி,

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
என இவர் முடிக்கையில் சுடும் துயரம் படர்ந்த யதார்த்தத்தின் சாரலானது வாசிப்பவரது மனங்களில் வலிக்க வலிக்கச் சிதறுகிறது.

இவரது 'வெளிக்கு நகரும் மரங்கள்' சாபங்கள் சூழ்ந்த யுத்தத்தின் சாயலைப் பேசுவதோடு தற்போதைய இயற்கையின் பசுமைச் சீரழிவையும் பேசுவதாகவே படுகிறது.

நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்.

எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.

நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.

என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்

எனக் கேட்கிறார்.

'நீயும் நமது குழந்தைகளும்' கவிதையானது யுத்தத்தின் இரு தரப்புப் படைகளின் மனிதம் நிரம்பிய முகங்களையும்,சமாதானத்துக்கான அவாவையும் பேசுகிறது.சமரினால் பாதிப்புறும் குழந்தைகளின் பாடல் ஆயுதங்களால் கரையும் உலகத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.
எனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.

முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்

நாம் புன்னகைக்கலாம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னகைக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்...........

உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்............

நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.
என இவர் முடிக்கும்போது தீராதவலியொன்று நெஞ்சில் இடறுகிறது.இதே போன்றதொரு உணர்வை இவரது 'பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்' கவிதையும் தருகிறது.
பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன..........
பாட்டி சொல்லும் கதையின் வரிகளாக இவர் எழுதும்
மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

மேலுள்ள வரிகள் நம்பிக்கையை விதைக்கின்றன.

'குட்டிமானின் புள்ளிகள்' எனும் தலைப்பில் இவர் வடித்திருக்கும் கவிதை, யுத்தம் சூழும் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மக்களின் வாழ்வியலையும்,மக்களின் வலிகளில் கண்ணீர் தொட்டு வரையப்பட்ட துயர ஓவியங்களையும் மானின் மருட்சிப் பார்வைக்கு ஒப்பிட்டு வெளிக்காட்டுகிறது.

அந்த குட்டிமானை யாரோ
துரத்திக்கொண்டிருக்கிறான்
துரத்திக்கொண்டு வருபவன்
இராமனாக இருக்கலாம்
இரவணனாக இருக்கலாம்
மான்மீது
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.

குட்டிமானின் கண்களிள்
தவிப்பு பெரியளவில்
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.........
எனத் தொடரும் கவிதையில்,
இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்.
மானே பொறியாக இருக்கலாம்..........
ஆகிய வரிகள் சமரின் ஆயுதங்களும்,அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி,கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
கால்கள் இடருப்பட
கால்களை விரித்து ஒதுக்கி
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது
மானாக மாறியவர்களும்
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.

இப்பொழுது
மானைப்போலவே
எல்லோருடைய கண்களிலும்
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது.
என முடித்திருக்கும் இவ்வரிகளில் மானின் மருட்சியும்,உயிர் பிழைத்து வாழ்வதற்கான அவாவும்,மக்களின் ஏக்கமும் ஒன்றாகவே பிரதிபலிக்கிறது.

இவரது 'இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப்பறவை' கவிதை நிகழும் யதார்த்தத்தினைச் சுட்டி ஒரு சமூகத் துயரத்தின் கீதமாக உயிரினில் கசிகிறது.இதன் இறுதி வரிகள்
இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.
தற்காலத்தில் சகோதர,சகோதரிகள் கடத்தப்பட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அதே வெள்ளை நிற வாகனம் பெரும் வலியைச் சொல்கிறது.

அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.

எனக் குறிப்போடு இவர் எழுதியிருக்கும் 'நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்' கவிதை கடல் தாண்டிய நாடொன்றின் காயங்களை உரத்துப் பேசிடினும் யுத்தப்பிசாசின் ஆட்சிகளில் மூழ்கியிருக்கும் அத்தனை நாடுகளுக்கும் ஒத்துப் போகிறதாக அமைகிறது.

கிளிநொச்சிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பின் தங்கிய கிராமத்தின் குளக்கரையோரம் இவருக்கு,இவரது நண்பரோடு சில நேரங்களைச் செலவிட நேருகிறது.அப்போது நிகழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை மிக அழகாகச் சொல்லும் 'முறிப்புக்கிராமம்' கவிதை இவரது கவிதைகளிலேயே யுத்தத்தின் வாடை அதிகளவு படியாத கவிதை எனலாம்.

இவரது வலைப்பூவில் காயங்களின் வலியைச் சொல்லும் துயரத்தின் கவிதைகளே அதிகம் உள்ளன.அவை மிக அழுத்தத்தைத் தரவல்லன.இதன் மூலமே மனதுக்கு நெருக்கமானவராக இவரும்,இவரது கவிதைகளும் ஆகி விடுகின்றனர்.
--------------------------------------------------------------------------------
நன்றி
---------------------------------------------------------------------------

7 comments:

ஜெயபாலன் said...

மகிழ்ச்சி, தீபச்செல்வன் இன்றய காலத்தினனதும் மண்ணினதும் பிள்ளை. மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்தி நமது காவியக் குரலாக மேம்படுவார் என்கிற நம்பிக்கையைத் தருகிறார். அவரிடம் அதற்க்கான அர்ப்பணிப்பும் உழைப்பும் இருக்கிறது என்றே நம்புகிறேன் தீபச்செல்வனுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

தாசன் said...

நல்லது தீபச் செல்வனின் உங்களின் பணி தொடர்க.நண்பன் ஷெரீப் அவர்களின் பெயரும் இதிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக்க மகிழச்சி வாழ்த்துக்கள்.

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் தீபச் செல்வன்

இதனை எழுதியவர் தாசன் அல்ல.தாசன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது சகல வேலைப் பளுவுக்கும் மத்தியில் ரிஷான் ஷெரீப் இதனை எழுதியிருந்தார்.

எழுதியவர்கள் என்பதை மாற்றி எழுதியவர் ரிஷான் ஷெரீப் என்று இடுவதே சரியானது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது இவ்வாறிருக்க தாசனின் பின்னூட்டம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.அவராவது இதனைக் குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா?
இதில் ஒரு எழுத்தைக் கூட தாசன் எழுதாத நிலையில் எழுதியவர்களின் பெயரில் அவரைக் குறிப்பிடுவது சரியானதா?

Theepachelvan said...

அன்புடன் பஹீமாஜஹான்,

தவறுக்கு மன்னிக்கவும் இந்த கட்டுரையை
தாசன் எழுதியதாக பெயர் குறிப்பிடப்பட்டு
எனக்கு அனுப்பிவைத்தார்.
பிறகு ரிஷானிடம்
நான் பெற்றுக்கொண்ட கட்டுரையும்
அதே கட்டுரையாக இருந்தது.
சில இடங்களில்
மாற்றம் செய்யப்பட்டு செம்மையூட்டப்ப்டிருந்தது.

தாசன் கட்டுரையை எழுத ரிஷான் செம்மைப்படுத்தியதாக
நான் நினைத்தேன்.
ரிஷான் எனக்கு கூறியிருக்கலாம்.
தாசனும் எதுவும் கூறவில்லை.

வார்ப்பில் இந்த கட்டுரையை ரிஷான் எழுயிருப்பதாக வெளியாகியுள்ளது.
இதற்காக நீங்கள் குறிப்பிட்ட மாற்றத்தை செய்து
விட்டிருக்கிறேன்.
இதற்காக நான் ரிஷானிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

நன்றி

தீபச்செல்வன்

தாசன் said...

\இது இவ்வாறிருக்க தாசனின் பின்னூட்டம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.அவராவது இதனைக் குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா?
இதில் ஒரு எழுத்தைக் கூட தாசன் எழுதாத நிலையில் எழுதியவர்களின் பெயரில் அவரைக் குறிப்பிடுவது சரியானதா?
\\

எனது தவறான பின்னூட்டத்திற்க்கு. மண்ணிப்பு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

தாசன் said...

\இது இவ்வாறிருக்க தாசனின் பின்னூட்டம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.அவராவது இதனைக் குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா?
இதில் ஒரு எழுத்தைக் கூட தாசன் எழுதாத நிலையில் எழுதியவர்களின் பெயரில் அவரைக் குறிப்பிடுவது சரியானதா?
\\

எனது தவறான பின்னூட்டத்திற்க்கு. மண்ணிப்பு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

ஃபஹீமாஜஹான் said...

அன்பின்
தீபச் செல்வன் ,தாசன்

இருவரதும் பெருந்தன்மையை மிகவும் மதிக்கிறேன்.

உணர்ந்து செயற்பட்டமைக்கு மிக்க நன்றி.