Monday, March 29, 2010

காணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி!- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -


சிவபாலன் தீபன்

1..

“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், குருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் போரை சந்தித்திருக்கிறோம். எங்கள் அன்றாடம் போர் எழுதிய துயரம் மிகுந்த வாழ்வாய் இருந்தது.கட்டங்கள் கடந்தததும் காலங்கள் கடந்ததுமான போரின் சகல விளைவுகளையும் சுமந்து ஒரு சனக்கூட்டம் எஞ்சியிருக்கிறது. வாய் விட்டழவும் வலிகள் எதுவும் நினைவில்லாத மனித கூட்டம் அது. துயரத்தின் பேசாத சாட்சிகளாக போரின் தடயங்கள் ஒரு ரேகையைப்போல படர்ந்திருக்கிறது எல்லாவிடமும் எல்லோரிடமும். சாவையும் பிறப்பையும் சாதாரணமாக்கியதில் பெரிய பங்கு போருக்கு போகிறது. ஏணிகளை எடுத்தெறிந்து விட்டு பாம்புகளை மட்டும் வைத்து சாவு ஆடிய பரமபதம் நிகழ்ந்தது நேற்று. எங்களை துரத்தி துரத்தி தீண்டியது மரணம். அதற்கொரு எல்லையும் இருக்கவில்லை எவரும் தடுக்கவுமில்லை .அழுவதை மறந்து நாங்கள் ஓடிக்கொண்டே இருந்தோம். எங்கள் இனத்தில் வடிந்த துயரத்தை நீங்கள் கைகள் கொண்டு கழுவ முடியாது காலம் கொண்டு நழுவ முடியாது எங்கள் உயிரை, சதையை, குருதியை, கண்ணீரை பெருங்கதறலை உங்கள் காலடிக்கு கொண்டுவந்தபோது நீங்கள் வேட்டைப்பற்கள் தெரிந்துவிடும் என்ற சங்கடத்தில் மௌனித்தீர்கள். எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம் நீங்கள் நீதி பேசும் சபையில் சிரிக்க.”

இறப்பு குறித்தான நிஜங்களும் வாழ்வு குறித்தான கற்பனைகளும் ஒரு கதையாகவே நிகழ்கின்ற ஒரு நிலத்தின், இனத்தின் தொடச்சியாக நாமிருக்கிறோம். இந்த தொடர்ச்சி அதன் சகல பரிமாணத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியாதாகிறது. இங்கே எமக்காக நாமே அழவும் சிரிக்கவும் தேவைகள் இருக்கிறது.

2..

போர்ச் சர்ப்பம் வால் விழுங்கிச் சுழலும் ஒரு வேளையில் எழுதப்பட்ட கவிதைகளை வடலி வெளியீடாக தொகுத்திருக்கிறார்கள். பலியாடு என்ற பெயரில் வெளிவந்திருக்கின்ற கருணாகரனின் கவிதைகள் குறித்து பேச நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. விடுபடுதல்கள் விளங்கிக்கொள்தல்களின் இயல்பான அச்சம் இது குறித்து தடுத்தாலும் என்னால் பேசாமலும் இருக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

“நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்”

என்கின்ற முகப்பு கவிதை பேசுகின்ற மொழிதான் இந்த தொகுப்புக்கான கட்டியம். உண்மையிலேயே அச்சந்தருவதாயிருக்கிறது இந்த தொகுப்பு முழுவதும். ஏன் என்றும் புரியவில்லை எது குறித்து என்றும் தெரியவில்லை எந்தன் வாசிப்பனுபவம் முழுதும் விந்தி விந்தி வழிந்தது அச்சத்தின் எல்லாச் சாயலும். நான் அதை மறைத்து மறைத்து வாசித்து ஒவ்வொருதடவையும் தோற்றேன்.
"வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்குமுன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தில் வெளிவருகிறது." - என்பது தான் இந்த கவிதை தொகுப்பின் அட்டையில் உள்ள மிக இறுதி வாசகம். இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்? அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்?

ஒரு முதியவனை கண்டேன், அவன் பிறந்த போதும் வளர்ந்த போதும் இருந்தது ஒன்றே அது போர்; அது சார்ந்த மரணங்கள் வலிகள் இன்னபிறவும் சேர்ந்து எப்போதும் சூழ்ந்து கொள்ளும் அவமானங்களாயும்.. அவன் அதற்குள்ளே பிறந்தான் அங்கேயே வளர்ந்தான் அவன் இருப்பு முழுதும் மரணம் சூழ்ந்திருந்தது. எதற்கும் அவன் பெயர்ந்தவன் இல்லை. அவனை எடுக்க அச்சப்பட்டேன் அவன் பேசியது கேட்க பயப்பட்டேன். எந்தன் கையில் கிடந்தான் ஒரு தொகுதித் துயரமாய். எனக்கு தாகமாக இருந்தது நீரருந்தவும் தயங்கினேன் அவன் சாலை முழுதும் பாலையாய் இருந்தது குருதி காய்ந்து. அவனிடம் ஒரு சோடிக் கண்கள் இருந்தது அது பேச வல்லதாயும் புலன் நிறைந்ததாயும் இருந்தது. அவன் இரப்பவனாய் இருக்கவில்லை. அவன் இரந்தபோது அதை கொடுப்பவனாயும் எவனும் இங்கு இருக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்? - ஒரு முதியவனை கொண்டிருந்த முகப்போவியம் என்னுள் எழுப்பிய வாசிப்பு இது.

முகப்போவியமாய் இங்கே முதுமையோடு தீட்டப்பட்டிருப்பதை எங்கள் வாழ்க்கை என்றே வாசிக்கத்தோன்றுகிறது. இந்த இடத்தில் மறைந்த பெண் கவிஞர் சிவரமணியின் பின்வரும் கவிதைகளின் மீதான வாசிப்பும் பொருத்தம் மிக்கது என நினைக்கிறேன் .

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….
எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்

“பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.”
-சிவரமணி

யுத்தகாலம் சகலதையும் முதுமைக்குள்ளாக்கும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது நீண்ட காலமாய். எல்லோரிடமும் பாதுகாப்பு வேண்டி நாங்கள் முதுமையடைகிறோம் , இதில் இயற்கையாகவும் யுத்தத்தின் இயல்பாகவும் மரணம் நம்மை நிரந்தரமாக ஆட்கொள்கிறது. யுத்த காலத்தில் தவறிப்போன இளமைக்காலம் குறித்த வருத்தம் வேதனை தருவதாக இருக்கிறது.

சாவை வளர்த்து வாழ்வுக்கு கொடுத்ததன் மூலம் சாவே வளர்ந்த சூழலில் வந்த கவிதைகள் இவை, கரு முட்டையை நோக்கி சிரமத்துடன் நீந்திச் செல்லும் விந்தணுவைப்போல இந்தக் கவிதைகளினது ஜீவிதம் குறித்தான முனைப்புகளும் பெரியவை. வாழ்ந்தாக வேண்டும் என்ற உயிரின் துடிப்பு ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஒவ்வொருவருடைய குருதியாலும் உடைந்துபோன சுவரில் எழுதப்பட்டிருக்கிறது மானுடத்தின் பாடல்.

"போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக் கிடக்கிறது நடுத்தெருவில்
நாய் முகர…
……………………..
யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது?
அதில் மிதக்கும் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும் என்ன செய்வது?"

எங்கள் எல்லோரிடமும் அடை காக்கப்பட்ட மௌனங்களை தவிர பதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

என்றென்றும் நான் ஆராதிக்கின்ற கவிதை இது. வாழ்தலின் உச்சபட்ச வேண்டுதலையும் இருத்தலின் எல்லாவித சாத்தியப்பாட்டையும் வெளிப்படுத்திய மானுடத்தின் மண்டியிட்டழும் குரல் இது. விழியோடும் உவர்ப்போடும் விரல் கொண்ட நடுக்கத்தோடும் நான் இதனை வாசித்து முடித்தேன் ..

“எந்தப் பெருமையும் இல்லை
போங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களை பெறுவதில்
எந்தச் சிறுமையும் இல்லை
மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது
என்று எவ்விதம் உரைப்பேன்? .....” .
(சாட்சிகளின் தண்டனை)

ஊசலாடுகின்ற பெண்டுலம் கடிகாரத்தை உயிர்ப்பிப்பது போல இந்தக் கவிதை என்னுள்ளே அலைந்து கொண்டே இருக்கிறது படித்த நாள் முதல். மிக அண்மையில் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களை மறுவாழ்வின் முடிவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் புகைப்படங்களை காண நேர்ந்த போது கண் நெடுக வழிந்தது மேற்சொன்ன கவிதை வரி. மகாகனம் பொருந்தியவர்களே போரை முடித்து விட்டீர்கள், போர்க்கணக்கை நீங்கள் விரும்பியவாறு எழுதிக்கொள்ளுங்கள், புகழை எப்படியும் எழுப்பிக்கொளுங்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளுங்கள்; கூண்டுகளில் இருக்கும் எங்கள் மனிதர்களை திருப்பிதாருங்கள். மண்ணுலகில் உங்களின் மாட்சிமைக்கெதிரே மண்டியிடுகிறோம் வேண்டுவதெல்லாம் அவர்கள் வாழ்க்கை ஒன்றே! விட்டுவிடுங்கள் எல்லோரையும்.

“ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்…”.

சனங்களின் கண்கள் இரண்டு வரிசையிலும் பிடுங்கப்பட்டது எந்த வரிசையில் இருந்தவர்களும் தப்பவில்லை. அவர்களிடம் கண்களை தவிர வேறதுவும் இருக்கவில்லை அதனால் அவர்கள் கொடுக்கவும் இல்லை. போர் தனக்கு ஒரு முகமே இருப்பதாகச் சொல்லி எல்லோர் கண்களையும் பிடுங்கியது. போரிடம் நல்ல முகம் என்பதே இல்லை என்றறிந்த மக்களிடம் கண்கள் பிடுங்கப்படிருந்தன.

3..
கருணாகரனின் கவிதைகள் பேசும் அரசியல் குறித்து அவதானத்தோடே பேச இருக்கிறது. அவரது படைப்புலக அரசியல் குறித்த ஆய்வை ஒரு பாதுகாப்பு கருதி சற்று வெளியே நிறுத்தி விட்டு இந்த தொகுப்பை வாசிக்க வேண்டிய பொறுப்பு உயிர் குறித்தான அச்சங்கள் அற்று இலக்கியம் பேசுகின்ற எங்களுக்கு இருப்பதாகவே உணர்கிறேன். அதுவே இங்கு அரசியல் சார்பு விமர்சனங்களை மீறி இந்த தொகுப்பு மீதான ஒரு மட்டுப்படுத்திய வாசிப்பை கொடுக்கிறது ஆனால் அது கவிதை அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதித்தாக தெரியவில்லை . ஆனாலும் அவரும் தீவிர நிலையில் கவிதைகளை எழுதிய படைப்பாளியே என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இங்கே கருணாகரனின் படைப்புகளில் உள்ள சிறப்பம்சமாக ஒன்றை சொல்ல வேண்டும், அவருடைய கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையில் எப்போதும் இன்னொன்றை அனுமதிப்பதில்லை. அவரது கவிதைகளே அதன் வாசகனோடு இயல்பாய் பேசிவிடுவதால் அவரது கவிதை குறித்து பேச வருபவர்களுக்கு இன்னொரு தளம் இலகுவாக கிடைக்கிறது அதன் விளைவுகள் குறித்து உரையாட .இது ஏற்படுத்தி தரும் வெளி வசதியானது இது போன்ற வாசிப்புநிலை குரல்களை செவிமடுக்க.

கருணாகரனின் கவிதைகளில் நாங்கள் சரளமாக சந்திக்க கூடிய இன்னொரு நபர் கடவுள் மற்றும் தேவதூதன், தேவாலயம், கோவில் சார்ந்த அவரது துணைப்படிநிலைகள் – குறியீடுகளாகவும் படிமங்களாகவும் நிறைந்திருக்கிறது கவிதைகள் நெடுக. நிராசைகள் நிறைந்திருக்கும் உலகில் முதல் விமர்சனப் பொருள் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும்தான். அவர்களால் நம்ப வைக்கப்படுகின்ற - அல்லது அவர்கள் நம்புகின்ற ஒன்றிடம் அலைகழிக்கப்பட்ட கேள்விகள் சென்றடைகின்றன. சார்போ எதிர்ப்போ பதிலளிக்க வேண்டியது அங்கே அவர்கள் தான். கையறு நிலையில் துயரம் மிகுந்தவர்களின் பிரார்த்தனைதான் பிதாக்கள் மீதான ஏளனப்பாடலாகிறது - அவர்களுமறியாமல். எல்லாமறிந்த கடவுள்களின் அபயமளிக்கின்ற புன்னகையையும் குண்டு துளைத்திருக்கிறது. கோபுரத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற புறாக்களின் குருதி பீடத்தில் வழிந்திருக்கும் போது கேள்விகள் இடம்பெயர்ந்தலைகின்றன உயிரை காப்பாற்றிக்கொள்ள.


“.........................................................
முடிவற்ற சவ ஊர்வலத்தில்
சிக்கியழிகிறது பொழுது

புனித நினைவாலயலங்கள்
ஒவ்வொன்றாக வீழ்கின்றன

எங்களை கைவிட்ட கடவுளர்கள்
எங்களால் கைவிடப்பட்ட கடவுளர்கள்
எல்லாம் இங்கேதான்

இனிவரும் முடிவற்ற இரவு
நமது பிணங்களின் பரிசாக “
(இருள்)

முடிவற்ற இரவு குறித்தான பதட்டங்களில் எழுதப்படுகிறது பிரார்த்தனையின் பாடல் - நம்பிக்கை அழிந்திருப்பவர்களிடம் இருந்து - எழுத்துப் பிழைகளுடன் தாறுமாறாக..

.....................................................................
சந்தையிலுருந்து திரும்பிய
பெண்ணிடம்
தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்
கேட்டார் இரண்டு காசுகளை கடனாக

பசி தணிந்த பிறகு காத்திருந்த
கடவுளை ஏற்றிச் செல்லவில்லை
எந்தப் பேருந்தும்

யாரும் பேசாமல் சென்றபோது
தனித்த கடவுள்
வாழ்ந்து விட்டு போங்கள் என்றார்
சலிப்பு நிரம்பிய கோபத்தோடு
...........................................................................
( கண்ணழிந்த நிலத்தில் )

மேற்குறித்த வரிகளை கடந்து செல்ல எமக்கு தேவையாயிருப்பது ஒரு புன்னகை மட்டும் அன்று - கைவிடப்பட்ட மனிதர்களின் சார்பாக கடவுளை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது வருத்தத்துடன்.

மேலும் கடவுளர்கள் குறித்து நிரம்புகிறது கவிதைக்கான பாடு பொருள்

..கொலை வாளை வைத்திருந்தான் என்று
குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்
தலையை கொய்துகொண்டு போன
புதிய கடவுளை சனங்கள் திட்டினார்கள்..

பாடுகள் சுமக்கின்ற மனிதர்களால் வரையப்படும் கடவுள் குறித்தான சித்திரங்கள் முடிவுறுவதாக தெரியவில்லை, கொடும் பாலையில் அனல் காற்று வீசியிறைக்கும் மணல் துகளாய் நிறைகிறது விழியோடும் வழியோடும்.

சாத்தானும் கடவுளும்
ஒரே ராஜ்ஜியத்தில் பங்கு வைத்துக்கொண்ட
உலகத்தில்
சனங்களின் நிழலைக் கண்டு
நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்
ஒருவனை கண்டேன்
அன்றிரவின் இறுதிக் கணத்தில்

( வளாகத்தின் நிழல்களில் படிந்திருக்கும் பயங்கரம்)

சாத்தான்களாலும் கடவுளர்களாலும் பங்கு போடப்பட்டிருக்கும் உலகில் சனங்களின் நிழலைத் தன்னும் கண்டவனை காணமுடியாமை உச்சநிலைத் திகிலை வாசிப்பு மனதில் நிகழ்த்துகிறது. மேற்குறித்த கவிதைகளில் எல்லா நிலைகளிலும் கடவுளர்கள் ஒருவராக இருப்பதில்லை அனால் சோதிக்கப்படும் பாடு நிறைந்த மக்கள் ஒருவராகவே இருக்கிறார்கள் என்பது எத்தனை முரண் நகை.



4.

இந்த தொகுப்பு ஏறத்தாள நூற்றுப்பதினைந்து பக்கங்களில் கருணாகரனின் ஐம்பது கவிதைகளை உள்ளடக்குகிறது. வடலி வெளியீட்டின் தொகுப்பு. அவரது கவிதைகளை நன்கு புரிந்த அவரது நண்பர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் நேர்த்தியோடு பதிப்பிடப்பட்டிருகிறது. இதில் உள்ளடக்கப்படிருக்கும் எல்லாக்கவிதைகளையும் யுத்தத்தின் அவலச்சுவை என வகைப்படுத்த முடியாது. குற்றமும் தண்டனையும் மன்னிப்பும், தேவ தேவனின் பறவை, மூடிய ஜன்னல், சிரிக்கும் பறவை, பெண்நிழல், மாமிசம், பறக்கும் மலைகள், உறக்கத்தில் வந்த மழை, குழந்தைகளின் சிநேகிதன் முதலிய கவிதைகள் வாழ்வியலின் தொடர்ச்சியை அதன் தருணங்களில் பதிவு செய்பவை. அந்த வகையில் குழந்தைகளின் சிநேகிதன் எனக்குபிடித்த கவிதை – இன்பம் தொற்றிக்கொள்ளக் கூடியது எப்போதும் நீங்கள் அதை காவிச் செல்பவராய் இருங்கள் என்கிறது ஒரு பொன்மொழி – இங்கே குளிர் விற்பவர்கள் குழந்தைகளிடம் அப்படித்தான் இருக்கிறார்கள் இன்பத்தை அதன் கரைந்து விடும் (நிலையற்ற) நிலையில் எடுத்துச் செல்பவர்களாக..

“குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி“

என்ற எளிய கவிதை மொழி சிறுவர்களை நோக்கி பேசுகிறது. இதன் எளிமைக்காகவே இதனை நேசிக்கிறேன்.

…………………..
என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர் விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும்”

யாரிடம் இல்லையென்று சொல்லுங்கள்? மணியொலி, மகிழ்ச்சி மற்றும் குளிர்ந்தினிக்கும் துளிகளைத் தந்தவர் புன்னகை.


போர் தன் சமன்பாட்டை எங்களில் எழுதிவிடுகிறது, அதற்கு விடையளிக்க முடியாதவர்களை தன் வாயால் விழுங்கி விடுகிறது. உண்மையில் அதற்கொரு விடையும் இல்லை எனக் கண்டிருக்கின்ற நாங்கள் இறந்திருக்கிறோம் எல்லா விதமாகவும். யுத்தத்தின் விளைவுகள் எவருக்கும் எப்போதும் மகிழ்ச்சிகுரியவை அன்று. யுத்தம் தன் சாட்டையை எல்லோரிடமும் விசிவிட்டு செல்கிறது அதன் வலிகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாய் இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் போரின் வால் எங்களை சூழ்ந்திருக்கிறது. அது தருகிற அப்பாலான விளைவுகள் வெளிவருகிறது வேறுபட்ட வடிவங்களில்.

“வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்”

குழந்தைகளும் வாசலைத் திறந்து வெளியேறிவிட்ட வீடுகளில் ஞாபகங்களுடன் பொம்மைகளாக இருக்கிறார்கள் அவர்களை பெற்றவர்கள். உண்மையில் போர் வரின் பிரிதலோ இல்லை பொருள் வரின் பிரிதலோ, பிரிதல் வேதனையானது அது வாழ்வின் பிடிமானம் குறித்தான கடைசி நூற்புரியையும் பரிசோதித்து விடும் வல்லமை உள்ளது. எங்கள் பிடி நழுவிக்கொண்டிருக்கிறது எல்லா வகையிலும். மேற்குறித்த அருமையான கருணாகரனின் இந்தக் கவிதை இத் தொகுப்பில் இடம் பெறவில்லை. அனால் மேற்குறித்த கவிதை எம்மக்குள் நிகழ்த்தும் கிளர்வை இன்னொரு கவிதை சாத்தியப்படுத்துகிறது தொகுப்பில்.

“பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்து போகும்
இளமைக் காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்கும் இடையில் கிடந்தது அவிகிறான்“

என்று ஆரம்பிக்கிறது தூக்கத்தை தொலைத்த கிழவன் கவிதை

“கால முரணுக்கிடையில்
தன்னை கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான கருணையில்..“

காலம் எல்லாவிதத்திலும் முரண்தான் - யார் அறிந்தோம்?
சர்வதேச தேதிக்கோடு என்று சொல்லப்படுகின்ற பூமிக்கோட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு நீர்த்துளிகளின் இடைவெளியை தூரக்கணக்கில் சொன்னால் பூச்சியம் நேரக்கணக்கில் சொன்னால் நாள்; அது போலதான் உறவுகளை கருணையின் கணக்கில் ஒன்றாகவும் காலத்தின் கணக்கில் வேறாகவுமாக பிரித்து வைக்கிறது கண்டங்கள்.

“வெவ்வேறு கண்டங்களுக்கு இடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்த துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளை என்றும்
அங்கும் இங்குமாக“

அன்பின் உடலின் துடிப்பு குழந்தையின் ஞாபகங்களோடு தனித்திருக்கின்ற பொம்மையை அழைத்து வருகிறது மீண்டும் மீண்டும்.

காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை. சிலர் காணமல் போனபோது அழுதோம் சிலர் காணாமல் போனபோது மகிழ்ந்தோம். சிலர் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்கள். சிலர் எழுத வைத்து விட்டு காணாமல் போனார்கள். சில காணாமல் போதலுக்காய் இன்னும் சில காணாமல் போதலை நியாயம் செய்தார்கள். நாங்களே எங்களுக்குள் காணாமல் போதலை நிகழ்த்தினோம் இன்னும் என்னவாய் எல்லாம் சாத்தியமோ அவ்வாறாய் எல்லாம் நாங்கள் காணாமல் போயிருக்கிறோம். சரியோ-தவறோ, நியாயமோ- அநியாயமோ, காலத்தின் தேவையோ-களத்தின் தேவையோ ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரொரு துயர் மிகுந்த இரவை உருவாக்கியது எங்கள் வரலாற்றில் . அந்த இரவில் விளித்திருந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி.

காணாமல் போனவனின் புன்னகை என்கின்ற கவிதை எங்கள் ஞாபகங்களில் சில கேள்விகளை எழுப்புகிறது. திரும்பிச் செல்லவும் முடியாது அங்கிருக்கவும் முடியாது என்கின்ற நிலையில் காணாமல் போனவன் புன்னகை எங்களை தொடர்கிறது அல்லது எங்களை தடுக்கிறது. காயமறுக்கும் கண்ணீர்த்துளிகளின் முன்னிலையிலும் குருதியின் அருகாமையிலும் சில கேள்விகள் சிந்திக்கிடக்கிறது - காலம் பதில் சொல்லக் கடவது.

" திரும்பிச் செல்ல முடியவில்லை
காணாமல் போனவனின் புன்னகையை விட்டு.."

பெருந்துயரமாக இருக்கிறது காணாமல் போனவனின் புன்னகையில் இன்றும் உறைய மறுத்திருக்கும் குருதித் துளி குறித்து.

நன்றி: வைகறை மாதஇதழ் (கனடா)

Saturday, January 30, 2010

வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் - காலத்தின் துயர் எரியும் அம்மாவின் பாடல்கள்


தீபச்செல்வன்

01.
யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத்தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. தீயில் எரியும் அம்மாவை முத்தமிட வரமுடியாத துயரத்தை ஜெயபாலன் எதிர்கொண்டவர். யுத்தம் நிறையப் போரை நோயாளியாக்கியிருக்கிறது. பிரித்திருக்கிறது. தொடர்புகளை துண்டித்திருக்கிறது. தோற்றுப்போனவர்களின் பாடல் என்ற கவிதையும் அம்மா கவிதைகளின் தொடர்ச்சியாகவும் எல்லா அம்மாக்களின் திரண்ட துயரமாகவும் எழுச்சியாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

ஈழத்து கவிதைகள் இரத்தமும் சதையுமான அனுபவங்களை கொண்டிருக்கின்றன. அவலமும் நெருக்கடியும் அச்சுறுத்தலும் என்று தொடர்ந்து கொண்டிருக்கிற வாழ்வில் மனத்துயர்களை வெளிப்படுத்தும் கவிதைகள் வெளிப்பிட்டன. மஹாகவி, நீலாவணணன் போன்றவர்களிடமிருந்து எழுபதுகளின் இறுதியில் எழுந்த கவிதைகள் இப்படித்தான் வேறுபட்டு நின்றன. அறுபதுகளில் மண்ணின் வாசனையை வாழ்வுத் தேவைகளையும் சித்திரிக்கிற தா.இராமலிங்கம் போன்றவர்களின் கவிதைப் போக்கு ஈழத்து நவீன கவிதைகளின் ஆரம்பமாக இருக்கிறது. பின்னர் வந்த எழுபதுகளின் தலை முறையில் வ.ஐ.ச.ஜெயபாலன், அ.யேசுராசா, மு.புஸ்பராஜன் போன்றவர்கள் ஈழ அரசியல் நெருக்கடிகளையும் வாழ்வுப்போராட்டத்தையும் அச்சத்தையும் எழுதியிருந்தார்கள்.

எண்பதுகளில் ஈழக் கவிதைகள் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இயக்க முரண்பாடுகள் மக்களின் வாழ்வுத் துயரங்கள் மரணத்துள்ளான வாழ்வு என்பன எண்பதுகளின் கவிதைகளில் மிகுந்த எழுச்சியும் தீவிரமும் கொண்டிருந்தன. சேரன், சங்கரி, நிலாந்தன், நுஃமான், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்களி, புதுவை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம், அ.யேசுராசா, ஒளவை, ஊர்வசி, இளவாலை விஜயேந்திரன், கி.பி. அரவிந்தன், சிவசேகரம் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன.

தொண்ணூறுகளில் மாறி மாறி நடைபெற்ற போரின் துயரங்களையும் போருக்கு எதிரான எழுச்சியையும் கருணாகரன், பா.அகிலன், முல்லை கோணேஷ், நிலாந்தன், சி.ஜெயசங்கர், சிவசேகரம், எஸ்.போஸ், அமரதாஸ், உமாஜிப்ரான், போராளிகளான கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி, அம்புலி, போனறவர்;களுடன் செல்வி., சிவரமணி, அனார், பஹீமஜஹான், றஷ்மி, சித்தாந்தன், தானா.விஷ்ணு, புதுவை இரத்தினதுரை வ.ஐ.ச.ஜெயபாலன், சிவசேகரம், சேரன் மஜித், ஓட்டமாவடி அறபாத், போன்றவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

இரண்டாயிரத்தின் பின்னரான கவிதை நிலவரத்தில் எஸ்.போஸ், சித்தாந்தன், கருணாகரன், அலறி, மலர்ச்செல்வன், பொன்காந்தன், த.அகிலன், அனார், பஹீமஜஹான், றஷ்மி, துவாரகன், தமிழ்நதி, மாதுமை, பிரதீபா, நிவேதா, திருமாவளவன், தீபச்செல்வன், பா.ஐ. ஜெயகரன், றஞ்சனி, போராளிகளான அம்புலி, உலமங்கை, சூரியநிலா, ஈரத்தீ, இளநிலா, தமிழினி, வெற்றிச்செல்வி வீரா, ராணிமைந்தன், செந்தோழன் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. போராளிக் கவிஞர்களின் கவிதைகள் போர் தருகிற இழப்பையும் போருக்கு எதிரான எழுச்சியையும் விபரிக்கின்றன. கருணாகரன், அமரதாஸ், எஸ்.போஸ், சித்தாந்தன், தானா.விஷ்ணு, முல்லைக்கோணேஷ் முதலியவர்கள் போரை யார் தொடுத்தாலும் மனிதர்களுக்கு எதிராக அழிவு தருகிறதாகவே எழுதியிருக்கிறர்கள்.

நிலாந்தன், புதுவை இரத்தினதுரை மற்றும் போராளிக் கவிஞர்களின் கவிதைகள் முக்கியமாக போருக்கு எதிராக மக்களை அணிவகுக்க தூண்டியிருக்கின்றன.

02.

புதியவர்களின் கவிதை நிலவரங்களை அறிந்து கொள்ளுவதிலும் அவர்களை தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்துபவர்களிலும் ஜெயபாலன் முன் நிற்பவர். கருணாகரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி.ஜெயசங்கர் போன்ற மிகச் சிலரே இப்படி புதியவர்களை தேடி உற்சாகப்படுத்துகிறார்கள் புதியவர்களை செம்மைப்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். களத்தின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என எப்பொழுதும் ஜெயபாலன் என்னை கேட்டுக் கொண்டிருப்பார். எனது வாசிப்பின்படி ஈழத்தின் நான்காம் கட்டப் போரின் பொழுது இன்றைய நிலவரத்திலும் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்திலும் களத்தில் கவிதைகளை எழுதியவர்கள் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன்.

கருணாகரன் யுத்தம் தீவிரம் அடைந்த தொடக்க நாட்களில் சில கவிதைகளை எழுதியிருந்தார். அவர் இராணுவத்தினரிடம் தனது குடும்பத்துடன் சரணடைகிற பொழுது எந்தக் குறிப்பையும் வைத்திருக்கவில்லை. இது கருணாகரனுடன் தானா.விஷ்ணு, அமரதாஸ், பொன்காந்தன், முல்லைக்கோணேஷ், மற்றும் போராளிக் கவிஞர்களுக்கும் நடந்த துயரம். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த பொழுது தங்கள் கவிதைகளையும் புகைப்படங்களையும் இழந்திருந்தார்கள். 2008 ஆண் ஆண்டில் கருணாகரன் எழுதிய கவிதை ஒன்றில்
“நிழலை விலக்க முடியாதபோது
தோற்றுப் போன போர் வீரன்
பாதுகாப்பில்லாத வெளியில்
தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்
மூடியிருந்த கதவுகள்
அவனை அச்சமடையச் செய்தன
திறந்திருந்த கதவுகளும்
அபாயமாகவே தோன்றின
…”
என்று போர் மீதான வெறுப்பை எழுதியிருக்கிறார். கிளிநொச்சி நகரத்தில் வாழ்ந்து போரை தன் வாழ்வு முழுவதும் அனுபவித்தவர் மற்றொரு கவிஞர் பொன்காந்தன். கருணாகரனும் பொன்காந்தனும் எந்தக் குறிப்பையும் எழுதுகிற அவகாசத்தை போர் தரவில்;லை என்கிறார்கள். எதற்கும் அவகாசமற்று ஓடிக்கொண்டேயிருந்ததாக கூறுகிறார்கள். போராளிகளான வீரா, செந்தோழன், ராணிமைந்தன், வெற்றிச்செல்வி, இளநிலா, ஈரத்தீ போன்றவர்களும் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கவிதைகள் எதுவும் கைவசம் இப்பொழுது இல்லாதிருக்கின்றன. அவை முழுவதும் தொலைந்துபோயிருக்கலாம் என அச்சமடைகிறேன். 2007 ஆம் ஆண்டு பொன்காந்தன் எழுதிய ‘நமது கடன்’ என்ற இந்தக் கவிதை ஒருநாள் நிகழ்ந்த பதற்றமான விமானத் தாக்குதலில் பின்னர் எழுதப்பட்டிருந்தது.
“…
இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக் கணக்குத்தான் தேவையாய் இருந்தது.
…”
பொன்காந்தனின் கவிதைகள் குரூர நினைவுகளை அப்படியே திரட்டித் தருபவை. 2007 ஆம் ஆண்டு வரை வன்னிப் போருக்குள் வாழ்ந்துவிட்டு தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த த.அகிலன் வன்னியின் போர்த்துயரங்களை அழிவுகளை போர்க்காலத்தின் மீதான விமர்சனங்களை எழுதி வந்திருக்கிறார். வன்னி இறுதி யுத்தத்தில் அவரது சகோதரன் பலவந்தமாக போராளிகளால் கொண்டு சென்று மரணம் எய்திய பொழுது ‘மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள்’ என்ற இந்தக் கவிதையை எழுதியிருந்தார்.
“…
அவனுக்கு மூன்றாம் பெயரை
அவர்கள் வழங்கினர்
அந்த மூன்றாம் பெயர்
அவனது புன்னகையைப்
பிடுங்கிவைத்துக்கொண்டு
துவக்குகளைப் பரிசளித்தது.
அவனது விருப்புகளின்
மீதேறிநின்று பல்லிளித்தது.
அவனது தாயைப் பைத்தியமாயத்
தெருவில் அலைத்தது.
…’’
கிளிநொச்சியில் பிறந்த எனக்கு வன்னிப் போருக்குள்ளும் அதற்கு வெளியில் இராணுவ ஆட்சிக்குள்ளும் வாழ நேர்ந்தது. போர் குழந்தைகளின் உலகத்தை அழிப்பவை என்று கருகிற எனக்கு பதுக்குழியொன்றில் பிறந்த குழந்தை குறித்து எழுத நேர்ந்தது.
“…
குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்.
எனது குழந்தையை
நான் இந்த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்
…”
‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற இந்தக் கவிதை 2007ஆம் ஆண்டு கிளிநொச்சியில் வாழும் பொழுது எழுதப்பட்டது. இராணுவ ஆட்சிக்குள்ளான வாழ்வு எவ்வளவு அச்சம் தரும் என்பதை நான் அறிவேன். துப்பாக்கிகள் எல்லாவற்றையும் மூடி எதையும் பேசாது தன் ஆளுகைக்குள் புதைத்துவிடும். உன்னை சுடுவோம் என்ற அப்படியான வாழ்விலிருந்து அதை எழுத வேண்டி நேர்ந்தது. ‘பாழ் நகரத்தின் பொழுது’ என்ற என்னுடைய கவிதையிலிருந்து பின்வரும் வரிகளை தருகிறேன்.
“…
பாழடைந்து போயிருக்கிற நகரத்தில்
மண் தின்கிற கால்களை
ஊடுருவி
ஒற்றை நாய் வந்து கால்களை நக்கிச் செல்லுகிறது.
வரிசையாக புன்னகைகளால்
துவக்கு
சோதனையிட்டு பிடுங்கிக்கொண்டிருக்கிறது
இயல்பான வாழ்வை.
கூர்மையான துவக்கு
எதை வேண்டுமானாலும் செய்யும்.
என்னை உருவி எடுத்துக்கொண்டு
அனுப்புகிற பழுதடைந்த பொழுதில்
தெருவிளக்குகள் அணைந்துபோய்விட்டன
…”
இந்தக் கவிதை 10.02.2009 அன்று எழுதப்பட்டது. ‘பாழடைந்த நகரம்’ என்று யாழ்ப்பாணம் எனக்கு படுவதைப்போல ‘மூடுண்ட நகரம்’ என்று சித்தாந்தன் எழுதியியுள்ளார். இந்த நகரம் அல்லது யாழ்குடா நாடு அச்சம் தருகிற ஆட்சியால் மூடுண்டிருந்ததால் எதிர்கொண்ட துயரங்கள் அச்சங்கள் அச்சுறுத்தல்கள் மரணங்கள் மிகவும் கொடுமையானவை.
இராணுவ அச்சுறுத்தல்கள் பல கவிஞர்களின் கவிதைகள் எழுவதை தடை செய்திருந்தன. அவர்கள் எதையும் எழுதாத நிலையில் அமர்த்தி கைகளை கட்டி வைத்திருந்தன. சித்தாந்தன், துவாரகன் போன்றவர்கள் அந்த அச்சுறுத்தலான வாழ்வைத்தான் கவிதைகளாக எழுதியிருக்கிறார்கள். சித்தாந்தனின் ‘தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்’ என்ற கவிதையில்
“…
முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன
....”
இப்படிக் குறிப்பிடுகிறார். துவாரகனின் ‘தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ என்ற கவிதையில்
“...
வீதிகளும் வெளிகளும்
வெறுமையாகிப் போன
நம் கதைகளையே
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன
வரிசை கட்டிக் கொள்வதும்
நேரம் கடத்தும் காத்திருப்பும்
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும்
காற்றுப் பைகளாக்குகின்றன.
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில்
இருக்கும் ஈர்ப்புக் கூட
இந்த நடைப்பிணங்களில் இல்லை
..”
என்று குறிப்பிடுகிறார். இந்தக் காலப்பகுதியியல் நா.சத்தியபாலன் எழுதிய ‘இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது’ என்ற கவிதையில்
“…
ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது
பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை
கொலைக் கருவிகளுடன் அலைகின்றன
தெய்வங்கள்
மெல்லப் பரவுகிறது இரத்த வாடை
ஊர் முழுதும்
திறந்து கிடந்த கதவை அவசரமாய்
அறைந்து மூடிப்போகிறது காற்று
…”
என்று எழுதுகிறார். த.அஜந்தகுமார் என்ற கவிஞர் தனது ‘ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீh’; என்ற கவிதையில்
“நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.
ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக்கிடந்து
அவனின் இறுதிச் சொற்களைத்
தம்மோடு எடுத்துச் சென்றன
…”
என்று மரணம் நிரம்பிய குடாநட்டு வாழ்வை எழுதுகிறார். யாழ்பபாணத்தைச் சேர்ந்த மருதம்கேதீஸ் என்ற கவிஞர்
“அழுகிய பிணத்தைத் தின்று நிணம் வழிய
ஐந்து மொட்டைகள் வந்தன
அதில் பேச்சிழந்த மொட்டைகளின் கைகளில் உருவகங்கள்
உருவகங்கள் நெளிகின்றன சர்ப்பங்களாக.”
என்று எழுதுகிறார். பள்ளி மாணவியான தேஜஸ்வினி யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் உருவாகி வருகிற பெண் கவிஞர் அவரது ‘கனாக்காலம்’ என்ற கலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் எழுதப்பட்டுள்ள கவிதையில் இப்படி எழுதுகிறார்.
“…
புன்னைச் சருகுகள்
இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன
அன்றொருநாள்
அக்குருதியின் நெடியில்
எங்கள் கனாக்காலத்தின
வசந்தங்கள் கரைந்திருந்தன
…”
என்று எழுதியவர் அதே இதழில் ‘நானும் நீயும’; என்ற கவிதையில் குறிப்பிகிற இரவு எதிர்பார்ப்பகுக்ளை நிரப்பி மிகவும் இருண்டதாயிருக்கிறது.
“…
ஆந்தைகளின் அலறல்களில
புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில
நீ வருவாய
சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து
ஒற்றை முத்தம் தருவாய்
…”
என்று குறிப்படுகிறார். மனமுரண்பாடுகளையும் பாலியல் முரண்பாடுகளையும் குருதி தோய்ந்த வாழ்வையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வேல்நந்தன், கலியுகன், தபின் போன்றவர்களும் தங்கள் வாழ்வு குறித்து ஓரளவு எழுதியிருக்கிறார்கள். ஈழத்தின் கிழக்கில் பஹீமாஜஹான், அனார், அலறி, கலைச்செல்வி, சி.ஜெயசங்கர், அநுராதபுரத்தைச் சேர்ந்த இளையவரான வஸீம்அக்கரம் போன்றவர்கள் எழுதுகிறார்கள். கிழக்கில் நிகழும் ஆக்கிரமிப்பை வஸீம்அக்ரம் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியி;ட ‘ஆக்கிரமிப்பின் கால்த்தடம்’ என்ற தொகுப்பில் உள்ள ‘சுதேச உரிமையை தொலைத்தல்;’ கவிதையில்
“…
வெறியின் கண்சுளைகள் நித்தமும்
பிதுங்கித் தெரியும் வீரமும்
அதிகாரம் தொடுத்த வில்லின் வரைபடமும்
குடைபோல் விரித்த எனது
மரங்களின் நிழற் பரப்பில்
போர்ப் பயிற்சி செய்கிறது
…”
என்று எழுதுகிறார். வவுனியா திருகோணமலை மண்ணின் கவிதைகள் குறித்து அறிய முடியவில்லை. போர்க் காலம் மற்றும் இராணுவ ஆட்சி எல்லாவற்றையும் துண்டித்தும் தணிக்கை செய்துமிருந்தபடியால் குறைநிலையான வாசிப்பையை செய்ய முடிகிறது.
03.
ஈழத்திற்குரிய புலம்பெயர் கவிதைகள் கொண்டிருக்கிற அனுபவ வெளிகள் மிகவும் விரிந்தவை. யுத்தத்திற்கும் அலைச்சலுக்கும் இடையிலான வாழ்வை நிலத்தின் கவிதைகள் சித்திரிக்க யுத்தத்தின் தாக்கத்துடன் நீண்ட அலைச்சல்களையும் பல்லின நெருக்கடிகளையும் புலம்பெயர் கவிதைகள் பேசுகின்றன. அந்நிய நாட்டு வாழ்வையும் சொந்த நாட்டு நினைவையும் இணைக்கின்றன. தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்த கவிதை நிலவரத்தில் ஜெயபாலன் முக்கியமானவர். கி.பி.அரவிந்தன், சேரன், செழியன், திருமாவளவளன், இளவாலை விஜயேந்திரன், மைத்திரேயி, வாசுதேவன், நளாயினி, பாமினி, நிரூபா, செல்வம், ஆழியாள், தான்யா, போன்றவர்கள் முக்கியம் பெறுகிறார்கள். இன்றைய சூழலில் ஜெயபாலனுடன் இளங்கோ, திருமாவளவன், பிரதீபா, நிவேதா, பா.ஐ.ஜெயகரன், தமிழ்நதி, மாதுமை போன்றவர்கள் எழுதி வருகிறார்கள்.

புலம்பெயர் கவிதைகள் உள்ளடக்கி வைத்திருக்கிற உணர்வுகள் மிகவும் தீவிரமானவை. பாலியல் நெருக்கடி, ஜனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்து என்பன புலம்பெயர் கவிதைகளில் வலிமை கொண்டிருக்கின்றன.

புதிய தேசத்தில் எதிர்கொள்ளுகிற அனுபவங்கள்தான் புலம்பெயர் கவிதைகளுக்கு வலுவளிக்கின்றன. அந்நிய மொழி அந்நிய வாழ்வு கலாசாரம் என்பவற்றின் தாக்கத்தால் ஈழ வாழ்வு குறித்த ஏக்கம் ஈழக்கவிதைகளின் இன்னொரு குரல்களாக வெளிப்படுகின்றன. அவர்கள் அலையும் தெருக்களும் பேருந்துகளும் கடற்கரைகளும் படகுகளும் ஈழக்கவிதையில் இடம்பெறுகின்றன. எப்பொழுதும் தாக்கி;கொண்டிருக்கிற யுத்தம் நிலத்தின் நினைவுகள் என்பன குறித்து அவர்கள் பேச வேண்டியிருந்தது. மரண களங்களுக்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அந்தப் பதற்றம் எப்பொழுதும் அவர்களை பின் தொடர்ந்து உலுப்பிக்கொண்டிருக்கிறது.

புலம்பெயர் கவிதைகள் நீணட அலைச்லையும் தாயகத்தலிருந்து பிரிந்து தொலைவிலிருத்தலையும்தான் அதிகம் சித்திரிக்கின்றன. வாசுதேவனின் ‘தொலைவிருத்தல்’ இதில் முக்கியமான தொகுப்புகளில் ஒன்று. ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ என்ற திருநாவுக்கரசு தொகுத்த கவிதைப் புத்தகத்தில் அநேகமான புலம்பெயர்நத கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் தேசத்தில் கிட்டத்தட்ட 63 இதழ்கள் வெளிவநதிருப்பதையும் அந்தத் தொகுப்பு பதிவு செய்திருக்கிறது. இதழ்களை வெளியிடுகிற வசதி அல்லது தேவை மற்றும் தேவைக்கு ஏற்ற வசதியான இணையத்தளப் பாவனை என்பன புலம்பெயர் கவிதைகள் வெளி வருவதற்கும் பரவலடைவதற்கும் உதவுகின்றன.

04.

வ.ஐ.ச. ஜெயபாலன், ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நிலத்தில் வாழ்ந்து அந்த செழுமையான அனுபவங்களையும் குருதி தோய்ந்த வாழ்வையும் துப்பாக்கிகளின் அச்சுறுத்தல்களையும் பேராட்டத்தையும் எழுதியிருக்கிறார். எழுபதுகளின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த ஜெயபாலன் நான்காவது தலைமுறைக் காலத்திலும் அல்லது நான்காவது தசாப்தத்திலும் எழுதிக்கொண்டிருக்கிறார். 1988ஆம் ஆண்டில் ஈழத்தைவிட்டு புலம்பெயர்ந்த ஜெயபாலன் போர் ஓய்கிற நாட்களில் அதற்கு இடையில் 2006 ஆம் ஆண்டு யுத்தம் தீவிரம் அடையும் வரை தாயகத்திற்கு வந்து போயிருக்கிறார். யுத்தமும் அலைச்சலும் இனக்கொலைகளும் நான்காவது தலைமுறை வரை தொடருகிறது என்ற குரூரமான யதார்த்தம் இதில் வெளிப்பட்டுக் கிடக்கிறது.

ஈழத்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார். ‘பாலியாறு நகருகிறது’ என்ற அவரது கவிதை வன்னியின் ஆன்ம உண்ர்வையும் இன எழுச்சியையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கவிதைகள் பேசுகிற வெளிகள் விடுதலை பற்றியவானவாக இருக்கின்றன. இன்னும் நம்பிக்கையை தந்துகொண்டிருப்பதுதான் ஜெயபாலனின் கவிதைகளின் சாத்தியமாக இருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையில் பங்களித்திருக்கிற ஜெயபாலனால் போராளிகளையும் போராட்டத்தையும் காப்பதற்காய் கூறப்பட்ட ஆலோசனைகள் எவையும் உரிய காலத்தில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இன்று நேர்ந்திருக்கிற ஈழ மக்களின் வீழ்ச்சி குறித்து காலத்திற்கு முன்பாகவே எச்சரிக்கை செய்திருந்ததை நான் அறிந்திருக்கிறேன்.

தீராத சோகத்தை தந்த யுத்தம் உலகம் எங்கிலும் சிதறிப்போயிருக்கிற ஈழத் தமிழ் மக்களை எல்லாம் வதைத்துப் போட்டிருக்கிறது. தாயகத்தை பிரிந்த துக்கமும் தாயக்கத்தில் நிகழும் இனக் கொலைகளும் புலம்பெயர்ந்த தமிழர்களை மிகக்கெடுமையாக பாதித்திருக்கின்றன. ஈழப் போராட்டத்திற்காகவும் ஈழ அபிவிருத்திக்காகவும் அவர்கள் செய்த உழைப்பு சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலைச்சலும் அவலமும் ஏமாற்றமும் நிறைந்த மனிதர்களின் மனச்சொற்களை ஜெயபாலனின் கவிதைகளில் காண முடிகிறது. எமது இனத்திற்கு ஏற்பட்ட இந்த அவலம் அரசியல் இருள் நிலை என்பவற்றை தோற்றுப் போனவர்களின் பாடல்கள் சித்திரிக்கின்றன.

நம்பிக்கைகளையும் பண்பாட்டையும் நிலத்தின் வாசனையையும் முழு அளவில் பிரதிபலிக்கிற இந்தக் கவிதைகள் தாய் மண் குறித்து கனவாகவும் அதன் மீதான சொற்களாகவும் இருக்கின்றன. ஜெயபாலனின் அழைப்பு சிதைந்துபோன தாயகத்தை மீள கட்டி எழுப்புகிற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. தோற்றவர்களை அடுத்த கட்டத்திற்கு உற்சாகப்படுத்துகிறது. ஈழக்கவிதைகளில் தோல்வியை அதன் எல்லை வரை சொல்லும் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. வரலாற்றின் மீதான இந்தப் பெரிய பாடல்கள் ஆச்சரியப்பட வைக்கிற நம்பிக்கை கொண்டிருக்கின்றன. ஆலயங்களையும் மசூதிகளையும் ஆறுகளையும் நிலத்தையும் இந்தச் சொற்கள் சுற்றி;கொண்டிருக்கின்றன. ஈழ மக்களின் புழங்கு பொருட்களையும் வளங்களையும் சித்திரிக்கின்றன. நாம் இழந்தபோயிருக்கிற வாழ்வை இந்தக் கவிதைகள் முழுமையாக கோருகின்றன.

பழைய கதைகளையும் முதிர்ந்த சொற்களையும் கொண்டு ஈழ மக்களுக்கான அரசியலை முன்வைக்கிற தோற்றுப் போனவர்களின் பாடல்கள் இந்திய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கண்டிக்கின்றன. ஈழ மக்களின் வாழ்வுரிமையை பெற்றுக்கொள்ள இந்தியாவிடம் கோருகின்றன. வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம் தொடர்பாக பேசிய மிகச்சிலரில் ஜெயபாலனும் ஒருவர். வடக்கு முஸ்லீம் மக்களின் அகதித் துயரத்தையும் அலைச்சலும் தனது முன்னைய கவிதைகளில் பிரதிபலித்திருக்கிறார். கோயில்களும் மசூதிகளும் நிறைந்த ஊரில் தமிழ் பேசும் மக்கள் சேர்ந்து வாழுகிற வாழ்வையும் தனது தோற்றுப்போனவர்களின் பாடல்களில் பேசுவதன் வாயிலாக தமிழ் முஸ்லீம் சமூகங்களது இணைந்த வாழ்வை அவசியப்படுத்துகிறார்.

எந்த மனிதகர்ளுடன் நட்புடன் பழகுகிற இவர் எல்லோருடனும் தொடர்பு கொள்ள விரும்புகிறவர். தன்னை ஒரு சனங்களின் போராளி எனக் குறிப்பிடுகிற ஜெயபாலன் போராடுகிற மக்களின் சாடசியாக வாழ விரும்புகிறார். இவரது பிரகடனங்களில் சனங்களது குரல்கள் மட்டுமே அடங்கியிருக்கின்றன. போராளிகளை மிகவும் ஆழமாக நேசிக்கிற தாயாகவும், தாயகத்தின் குழந்தையாகவும் தன்னை வெளிப்படுத்துகிறார். அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன் என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப்போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.


கிளிநொச்சி,
22.11.2009

Sunday, November 15, 2009

தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ சிதிலமாகி உறைந்த காலம்




கருணாகரன்

01
பத்து மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கவிதைகள் நூலாக்கப்படவுள்ளதாக தெரிவித்து அதற்கு முன்னுரை தரவேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தீபச்செல்வன். அப்போது நான் கிளிநொச்சியிலிருந்தேன். கிளிநொச்சியை நெருங்கியதாக யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. எனினும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது. ஒரு இடத்தில் இணைய வசதியும் கிடைத்தது. என்றபோதும் யுத்தத்தின் தீவிரம் எதையும் நிதானிக்க முடியாத அளவிற்கு நிச்சயமின்மையை உருவாக்கிகொண்டிருந்தது. அதைவிட எப்போதும் அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும் அபாய நிலை சடுதியாக மாறும் அல்லது வீழ்ச்சியடையும் சூழல். தீபச்செல்வனுக்கு ஒப்புக்கொண்டபடி அவருடைய கவிதைகளுக்கான முன்னுரையினை அனுப்ப முடியவில்லை.

யுத்தம் திடீரென வேகமெடுத்த போது எழுதிய குறையுடன் இருந்த முன்னுரையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டே இடம்பெயரத் தொடங்கினோம். எல்லாவற்றையும் அள்ளிப்போட்டுக்கொண்டு, பெயர்க்கப்பட்ட வீட்டோடு ஒவ்வொரு இடமாக பெயர்ந்து கொண்டிருக்கும் போது எல்லாமே தொலையத் தொடங்கின. எதிலும் நிதானம் கொள்ள முடியாத நிலை. யுத்தத்தின் வேகத்திற்கு எதனாலும் யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. சிதைவுகள,; சேதங்கள், அழிவுகள் இழப்புக்கள் தொடர்புகள் கிடையாது. எல்லாமே தடைப்பட்டன. மிஞ்சியவை தடுக்கப்பட்டன. தகவல் யுகத்தில் எந்தத் தகவல் அமைப்பிலும் நுளைய முடியாமலும் எந்த தகவல்களாலும் தீண்டப்படாமலும் இருந்தோம். வாழ்க்கை முற்றாக மாறியது. நாங்கள் மனிதர்கள்தானா என்று நம்பவே கடினமாகியது. இறந்தவர்களை புதைப்பதற்கோ அவர்களுக்கு ஒரு சிறு சடங்கை செய்யவோ இறுதி மரியாதையை செலுத்தவோ கூட அவகாசமில்லாத வாழ்க்கை.

அபாயவலை எங்கும் பிரமாண்டமாக விரிந்து இறுக்கியது மூச்சை. எதையும் நினைவு கொள்ள முடியாது. எதைப்பற்றியும் சிந்திக்கவும் இயலாது. யுத்தத்தை தவிர அதன் உக்கிர நடனத்தை தவிர வேறொன்றுமில்லை. உயிர் பிழைத்தலுக்கான நிகழ்தகவில் எதிர்மறைக்கூறுகளே கணமும் பெருகிக் கொண்டிருந்தன. வன்னியிலிருந்து எப்படித் தப்புவது என்ற ஒரே எண்ணமே எல்லோருக்கமிருந்தது. தீபச்செல்வனின் கவிதைகளும் ஏறக்குறைய யுத்தத்தின் குரல்களாகவே இருக்கின்றன. அதுவும் இந்த நிலமைகளைப் பேசுவனவாக இருக்கின்றன. வன்னியின் இறுதி யுத்தம் நடந்தபோது அவர் வெளியே யாழ்பாணத்திலிருந்தார். இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை அவர் கிளிநொச்சியில் இருந்தபோது எழுதியவை. சில வன்னி நிலமைகளை அவர் யாழ்ப்பாணத்தலிருந்து எழுதியபவை. யுத்த்தின் நெருக்குவாரம், தீவிரம் பற்றிய அனுபவம் அவருக்குண்டு. வன்னி யுத்தம் யாழ்ப்பாணத்தலிலும் தன் அதிர்வுகளையும் தீவிரத்தையும் காட்டியிருந்தது. (இன்றும் யாழ்ப்hணம் தன்னுடைய இறுக்கத்தலிருந்து மீள வில்லை. இயல்புக்குத் திரும்பவில்லை) எனவே அவர் தன்னுடைய கவிதைகளை எதிர்பார்த்த முன்னுரை இல்லாமலே வெளியிடத் தீர்மானித்து விட்டார்.

இப்போது தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’யைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னுரைக்குப் பதிலா இந்த அறிமுகத்தை எழுதலாம் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அப்போது யுத்த்தின் தீரத்தை அகதி வாழ்வை உயிர் பிழைத்தலு;கான போராட்டம் இவையின்றி வேறில்லை என்ற நிலை. இப்போது எப்போது முடியும் இந்த தடுப்பு முகாம் அவலங்கள் என்ற வாழ்க்கை. எப்படி வெளியே போவது? எப்போது செல்வது? அப்படி தப்பிச் சென்றால் எங்கே போவது? என்று எதைப் பற்றியும் திர்மானிக்க முடியாத நிலை. முடிவற்ற இருட்பரப்பின் நடுவே ஒவ்வொருவரும் நிறுத்தப்பட்டிருக்கிறோம். 10ù10 என்ற அளவிலான முட்கம்பிகளால் சூழப்பட்ட இந்த பிரமாண்டமான முகாம்களிற்குளிலிருந்து கொண்டு எதை எழுதுவது? இன்றும் துப்hக்கியுடன் படையினர் வெளியே சூழவும் காவலிருக்கின்றனர். இந்த நிலையில் இதை மட்முமல்ல எதையும் எப்படி எழுதுவது?

தீபச்செல்வனின் யுத்தக் கவிதைகள் இங்கே முன் சொல்லப்பட்டவற்றின் விவரணை அல்லது சாரம். எனவே அவை எல்லாவற்றையும் நினைவூட்டுகின்றன. மறக்க நினைக்கும் நினைவுகளை ஆறாக்காயங்களை அவை மீண்டும் புதுப்பிக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகிறது துளிர்க்க மறுக்கும் கனவுகளுக்கு முன்னே, நிறங்கொள்ள மறுக்கும் அவற்றின் சாயல்களுக்கு முன்னே தீயோடும் வலியோடும் தம் குரலை உயர்த்தி வைத்திருக்கின்றன இந்தக் கவிதைகள். அதாவது ஈழப்போராட்டத்தின் இறுதிக்கால நிகழ்ச்சிகளை மென் விமர்சனமாகவும் விபரணையாகவும் கண்டனமாகவும் விவரிக்கும் இயல்பை இந்தக் கவிதைகளில் உருவாக்கி வைத்திருக்கிறார் தீபச்செல்வன். இந்தக் கவிதைகளுக்கும் இங்கே முன் சொல்லப்பட்ட நிலமைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் இந்தக் கவிதைகளை ஒரு கால கட்டத்தின் உண்மை வரலாற்றுடன் இறுகப் பிணைத்ததாக உள்ளன.

02
1986இல்- 23 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அதில் 52பேரின் கவிதைகள் இடம்பொற்றிருந்தன. எல்லாமே அரசியற் கவிதைகள். அன்று ஈழத்தில் நிலவிய இராணுவ அடக்குமுறையை, அரசியல் வன்முறையை, அரச பயங்கரவாத்தை, இவற்றுக்கெதிரான விடுதலை வேட்கையை வெளிப்படுத்தின இந்தக் கவிதைகள். ஈழத்தமிழரின் அன்றைய வாழ்க்கையை, அது எதிர்கொண்ட சவால்களை, அந்தச் சூழலின் கொந்தளிப்பை, அதன் உணர்வை வெளிப்படுத்திய கவிதைகள் அவை. இந்தக் காலப்பகுதியை நெருங்கியதாக முன்- பின்னாக இன்றும் பல கவிதைகளும் தொகுப்புகளும் வெளி வந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழக்விஞர்களில் ஒருவரேனும் தன் காலச் சூழலையும் நிகழ்ச்சிகளையும் பற்றி எழுதாமல் இருந்ததில்லை. எனவே இந்தக் காலப் பகுதியில் வெளிவந்த எல்லாக் கவிதை நூல்களிலும் அரசியல் கவிதைகள் அல்லது இந்தக் காலப்பதிவுக் கவிதைகள் - கால நிகழ்ச்சிகளின் விவரணை- விமர்சனக் கவிதைகள் தவறாமல் இடம்பெற்றுள்ளன.

ஈழக்கவிதைகள் வெளிச்சூழலில் தீவிர கவனத்தை பெற்றதற்கு இந்தப் பண்புகளும் தொனியும் முதன்மைக்காரணமாகி அமைந்தன. இதேவேளை பின்னர் வெளிவந்த கவிதைகளில் அரச பயங்கரவாதத்தின்மீதான எதிர்ப்புணர்வுடன் விடுதலை அமைப்பக்களிடையே ஏற்பட்ட சிதைவுகள், சகோதரப் படுகொலைகள், அவை உருவாக்கிய அதிகாரக் குவிவு, ஜனநாயக விரோதம் என்பவற்றுக்கு எதிரான குரலும் சேர்ந்தொலித்தன. தமழ்க்கவிதை- தமிழ்த்தேசியம்- தன்னுள் விமர்சனக் கண்ணோட்டத்தை பகிரங்கப்படுத்தவும் ஜனநாயகக்குரலை ஒலிக்கக்கூடிய ஒரு முன் கண்ணோட்டமாக இந்தக் கவிதைகள் அமைந்தன. எதிர்ப்புக் கவிதைகளில் நிச்சயமாக இருக்க வேண்டிய ஜனநாயகக்கூறுகள் இவற்றில் இருந்தது இன்னொரு முக்கிய அம்சம். இது ஈழக் கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தன. ஆனால் அதேவேளை இங்கே இரண்டு விதமான நிறங்களும் உருவாகின. ஓன்று சார்பு மற்றது எதிர். புலிகளின் போராட்டை நிபந்தனையின்றி ஆதரித்தவை ஒரு வகையாகவும் (இதில் அரச எதிர்ப்புக்கரலும் சிங்கள தேசியத்திற்கு எதிரான கண்டனமும் தூக்கலாக இருந்தன) அதை விமர்சித்த கவிதைகள் (ஜனநாயகம் பன்மைத்துவத்தை வலியுறுத்தின) இன்னொரு வகையிலும் இருந்தன இந்தப் பண்பு மாற்றத்தின் சிறப்பு அடையாளத்தை நாம் சேரன், சி.சிவசேகரம், இளவாலை விஜயேந்திரன், செல்வி, றஷ்மி, நட்சத்திரன் செவ்விந்தியன், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்களின் கவிதைகளை காணலாம். எல்லாமே முன்னர் குறிப்பட்டதைப்போல ஆயுத வன்றுறையை, ஜனநாயக மறுப்பை, மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் கவிதைகள்.

கடந்த 30 வருடங்களாக ஈழத்தமிழரின் வாழ்க்கை கொந்தளிப்பு மிக்கதாகவே இருக்கிறது. வன்மறை சப்பித்துப்பிய வாழ்க்கையின் துயரம் மிகக் கொடியது. ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறைக் கவிஞர்களிடத்தில் இந்த வன்முறை அரசியலின் தாக்கம் உண்டு. குருதியும் நிணமும் தீயும் புகையும், கண்ணீரும், ஓலமும், அலைதலின் விசும்பலும் கொந்தளித்துத் ததும்பும் ஓரூலகத்தை இந்தக் கவிஞர்கள் தங்களின் கவிதைகளில் காண்பிக்கின்றனர். தொடக்கத்தில் சிங்கள இனவாதம்- பேரினவாதம்- அரச பயங்கரவாதம் எனபதற்கெதிரான எதிர்ப்புக் குரலாக வெளிக்கிளமபிய எதிர்ப்புக்குரலாக வெளிக்கிளம்பிய கவிதைக்குரல், விடுதலைப் போரட்டத்தினுள்ளும் விடுதலை அமைப்புகளினுள்ளும் நிகழ்ந்த உள் நெருக்கடிகள், ஜனநாயக மறுப்புகள், மனித உரிமை மீறல்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள், தமிழ் இனவாதம் என்பவற்றுக்கு எதிராகவும் ஒலித்தன.

கடந்த முப்பதாண்டு கால தமிழ்கவிதைகளில் அதிகமதிகம் ஜனநாயகக்குரலை உயர்ததிய கவிதைகளாக ஈழக் கவிதைகள் இருக்கக்கூடுமென நம்புகிறேன். ஆனால் ஒரு வகையில் இது மிக்கொடியது. மிக மிகத் துயரமானது. அவலம் நிரம்பியது. ஏனெனில், ஜனநாயக மறுப்புச் சூழலில் நமது வாழ்க்கை சிக்கியுள்ளதையிட்டு நாம் எப்படி மகிழ முடியும்? ஒரு பக்கம் சிங்கள இனவாத்தினாலும் அரச பயங்கரவாதத்தினாலும் பாதிப்பும் நெருக்கடியும் மறுபக்கம் தமிழ்த்தேசியம் என்ற சுலோகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலின் நெருக்கடி.களும் பயங்கரவாதமும். சனங்கள் இரண்டு தரப்பினாலும் கிழிபட்டனர். எனவே ஈழ விடுதலை போராட்டம் எப்படிச் சிதைந்தது என்பதற்கான தக்க சாட்சியமாகவும் இந்த கவிதைகள் உள்ளன.

முப்பதாண்டு கால ஈழத்தமிழரின் (முஸ்லிம்கள் உட்பட) வாழ்க்கை சிதைவையும் இன்றைய அவலநிலையையும் இந்த கவிதைகளில் உணர முடியும். அரச பயங்கரவாதம் இன்னும் அப்படியே உயர் வளர்ச்சி நிலையில் உள்ளதையும் விடுதலை போராட்டமும் போராட்ட அமைப்புகளும் எவ்வாறு உருச்சிதைந்து குரூர வெளியில் பிரவேசித்தன என்பதையும் சாட்சி நிலையில் காட்டுகின்றன. இந்த கவிதைகள் ஈழத்தின் குச்சொழுங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அவர்கள் வாழும் ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேலிய பெருநகரங்கள் வரையில் இந்தத் தொனிமாற்றத்தையும், வளர்ச்சியையும் அடையாளம் காணலாம். யார் யார் எங்கெங்கு இருந்தாலும் ஈழத்தமிழ் கவிதைகளின் மையம் அனேகமாக ஒன்றாகவே இருக்கின்றது. ஈது ஊன்றிக் கவனிக்க வேண்டியதொரு முக்கிய அம்சம். ஏவரெவர் எங்கெங்கு எப்படியெப்படி வாழ்ந்தாலும் அவர்கள் எல்லோருடைய கவனமும் பிரச்சினையும் தங்கள் தாய்நிலத்தில் எப்படி வாழ்வது? அல்லது அங்கு தமிழ் மக்களின் - தமது உறவுகளின் (இது புலம்பெயர்களின் உணர்வுகளுடன் நேரடித் தொடர்புடைய சங்கதி) வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என்பதையிட்டது. எனவே எல்லோருடைய பிரச்சினையும் ஒரே மையத்திற் குவிவது தவிர்க்க முடியாத ஒரு நியதியானது. இந்த சூழலமைவு என்பது எப்படி திக்குகள் எட்டிலும் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அவ்வாறே ஒவ்வொரு தலைமுறைகளிலும் பாதித்தது.

எனவேதான் முருகையன், சண்முகம் சிவலிங்கம், சி.சிவசேகரம், எம்.ஏ.நுஃமான், மு.பொ, சு.வி, சேரன், ஜெயபாலன், ஊர்வசி, ஒளவை, நட்சத்திரன், செவ்விந்தியன், இளவாலை வியஜேந்திரன், பா.அகிலன், றஷ்மி, அனார், கற்சுதா சோலைக்கிளி, சித்தாந்தன், நிலாந்தன், எஸ்.போஸ் என சகல தரப்பினரையும், சகல தலைமுறையினரையும் ஒரே மையத்தில் குவிய இந்த சூழலமைவும் இந்த நிகழ்ச்சிப் போக்குகளும் காரணமாய் அமைந்தன. இங்கே தீபச்செல்வனும் தவிர்க்க முடியாமல் இந்த மையத்திலேயே தன்னைக்குவிக்கிறார். இஙகே இதை இலகுவாக புரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம், 1986ல் வெளிவந்த கவிதை நூலொன்றின் தலைப்பு “மரணத்தில் வாழ்வோம்” 2009ல் வெளிவந்திருக்கும் தீபச்செல்வனின் கவிதை நூலின் தலைப்பு “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” இரண்டு நூல்களும் மரண வளையங்களால் சூழப்பட்ட தமிழ் வாழ்வை குறியாக உணர்த்துகின்றன. எனவே இந்தக் காலப்பதிவாகவே இந்த நூல்கள் உள்ளன என்பதை நாம் இலகுவாக உணர முடியும். அதன்படியே நாம் இந்த கவிதைகளை அணுகவேண்டிய ஒரு நிலையும் உள்ளது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால வெளியில் இரண்டு நூல்களும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் சூழலின் கொந்தளிப்பு மாறாமல் அப்படியே இன்னும் தீவிர நிலையிலேயே இருக்கின்றது.

மரணத்துள் வாழ்க்கை அதில் என்றால், இதில் பதுங்கு குழியில் பிறக்கின்றது குழந்தை. ஆக தொடரும் போர், அவலம், நெருக்கடி, துயரம், அச்சம், இருள் என்றவாறே வாழ்வும் அதன் நிகழ்ச்சிகளும் தொடர்ந்திருக்கின்றன. இந்த இரண்டு நூல்களுக்குமிடையே அடிப்படையில் எந்தப் பெரிய வேறுபாட்டையும் காணமுடியவில்லை. அதாவது ஈழ நிலமைகளில் வேறுபடில்லாத நிலையை போன்றே இந்தக் கவிதைகளிலும் ஒரே அரசியற் சூழலும், வாழ்க்கை சூழலும் காணப்படுகின்றன. ஆக ஒரு வளர்ச்சி மட்டுமல்ல இது யுத்தத்தின் உக்கிரத்தோடு இணைந்தது. மரணத்தில் வாழ்வோம் கவிதைகள் யுத்தத்தின் தொடக்க நிலையிலானவை. அவ்வளவுதான். இதேவேளை இந்தக்கால வெளியில் ஈழச்சூழலிலேயே – குறிப்பாக ஈழ அரசியற் சூழலின் உள்ளே நிறைய மாற்றங்களும் பிரச்சினைகளும் உருவாகி விட்டன. அவற்றை பலரின் பல கவிதைகளும் தம்முள் தீவிரத்துடன் பிரதிபலித்துள்ளன என்பதையும் நாம் தனியாக அவதானிக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு கவிஞர்களுக்கும் உள்ள வெளிப்பாட்டு முறமை, மொழிப்பிரயோகம், பார்வை என்பவற்றிலும் வேறுபாடுகள் உண்டு. அவையும் தனியான அவதானத்திற்குரியவை. தீபச்செல்வனின் கவிதைகளை வாசிக்கும் போது தவிர்க்க முடியாதவாறு இந்தக் காலவெளியின் நிகழ்ச்சிகள் இந்தமாதிரியான மதிப்பீட்டுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.

முன்னரே குறிப்பி;ட்டு இருப்பதை போல ஈழத்தில் நிலவிய இனவாத அரசியற் சூழலும் போராட்டமும் யுத்தமும் இவற்றின் விளைவுகளான உயிர் அச்சம், ஒவ்வொரு மனிதரையும் எப்போதும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் அபாய நிலை என்பவற்றையும் இந்த கால வெளிக் கவிதைகள் எளிதில் காட்டுகின்றன. யமன், போரின் முகங்கள், எலும்புக் கூடுகளின் ஊர்வலம், காவுகொள்ளப்பட்ட வாழ்வு, யுத்த சஞ்யாசம், ஆணி அறுந்த வேர், இயல்பினை அவாவுதல், தரப்பட்ட அவகாசம், வாழ்ந்து வருதல், முகங்கொள், எல்லை கடத்தல், இப்படிப் பல. ஆக முன் சொன்னதைப் போன்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தின் வாழ் நிலை எப்படி அமைந்திருந்தது, அமைந்திருக்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கவிதைகள்.

மரணத்தில் வாழ்வோம் கவிதைகள் தொகுக்கப்பட்ட போது தீபச்செல்வனுக்கு வயது மூன்று. அந்தக் கவிதைகளில் பல எழுதப்பட்ட போது தீபச்செல்வன் பிறந்திருக்கவேயில்லை. ஆனால் தீச்செல்வன் இளைஞராகி கவிதை எழுதும் போதும் அதே மாதிரியான பிரச்சினைகளையே அவரும் எழுதவேண்டியிருக்கின்றது. எனவே இதற்கு மேல் ஈழநிலவரத்தை பற்றிய விளக்கங்கள் தேவையில்லை. தவிரவும் இப்போது போரும் முடிந்துவி;ட்டது. ஆனால் இன்னும் போரின் வடுக்கள் தீரவில்லை. அரசியற் பிணக்குகள் தீரவில்லை. அகதி வாழ்க்கை மாறவில்லை. முட்கம்பிகளும் துப்பாக்கிகளும் அகலவில்லை. அகற்றப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே இத்தகைய சுருக்கமான வரலாற்றுப் பிண்ணணியில் தீபச்செல்வனையும் அவருடைய பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகளைப் பற்றியும் நோக்கலாம். இதுவும் ஒரு சுருக்க நிலையிலேயே.

03.

தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சி நகரில் பிறந்து வளர்ந்தவர். இன்னொரு வகையில் சொன்னால் யுத்தத்திற்குள் பிறந்து வளர்ந்தவர். இலங்கைத் தீவிலேயே அதிகமதிகம் அழிவுக்குள்ளான நகரம் கிளிநொச்சி. ஒன்றிரண்டு தடவையல்ல. 1983, 1986, 1990, 1996, 2008, என பல தடைவ அழிந்த நகரம். புல தடவைகள் நடந்த படையெடுப்புக்களில் (சிறிலங்கா இராணுவம், இந்திய இராணுவம், விடுதலைப்புலிகள்) கிளிநொச்சி அழிவுக்கும் மீள்எழுச்சிக்கும் அழிவுக்கும் என்றானது. வன்னி யுத்தம் (ஈழப்போராட்டம்) முடிந்து இப்போது இந்தக் குறிப்பக்களை எழுதிக் கொண்டிருக்கும் போது 46 நாட்களே ஆகின்றன. இந்த யுத்தத்திற் பிறந்த குழந்தைகளில் ஒன்று தன்னுடைய கதையை, உணர்வகளை, எண்ணங்களை, அனுபவங்களை, தான் வளர்ந்த சூழலை, வாழும் காலத்தில் தனக்கு வாய்த்த மொழியில் அல்லது இது வாழும் காலமும் சூழலும் இதற்களித்த மொழியில் பேச முனைகிறது. இவையே இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைகளை படிக்கும் போது ஏனோ த.அகிலனின் கவிதைகளை பற்றிய நினைவுகள் வருகின்றன.

தீபச்செல்வனும் த.அகிலனும் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு இளம் கவிஞர்கள். இருவரும் ஒரெ வயதுடையவர்கள். ஏறக்குறைய ஒத்த வாழ்க்கை சூழலையும் அனுபவத்தொகுதியையும் கொண்டவர்கள். அத்துடன் ஒரே பள்ளியில் படித்தவர்கள். (கடந்த கால யுத்தத்தின் சின்னமாக – எச்சமாக - இவர்கள் படித்த கல்லூரியின் பெரிய கட்டிடத்தொகுதியொன்று அங்கே விடப்பட்டிருக்கின்றது.) எனவே இவர்கள் இருவரின் கவிதைகளிலும் சில அடிப்படை விசயங்கள் ஒத்ததாக இருக்கின்றன. அதேவேளை சில இடங்களில் சில முறமைகளில் இருவரும் தத்தமது பார்வை ஆளுமை என்பவற்றிற்கு ஏற்ப வேறுபடுகிறார்கள். த.அகிலனின் கவிதைகள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புவதையும் விட மனித உணர்வு சார்ந்த விடயங்களையும் விடுதலைப்புலிகளின் நடைமுறைகள் மற்றும் அவர்களுயை கோட்பாடுகளுக்கெதிரான விமர்சனங்களையுமே அதிகமாக கொண்டவை. தொடக்க நிலையில் அகிலனும் அரச பயங்கரவாதம் சிங்கள இனவாதம் என்பவற்றிற்கு எதிராகவே எழுதியவர்.

ஈழத்தின் பெரும்பாலான கவிஞர்களும் படைப்பாளிகளும் ஆரம்பத்திலோ அல்லது ஏதோ ஒரு கட்டத்திலோ அரச பயங்கரவாதத்திற்கும் சிங்கள இனவாதத்திற்கும் எதிரான படைப்பியக்கத்தில் ஈடுபட்டிருப்பது யதார்த்தம். அதேவேளை இவர்களில் அநேகர் பின்னாட்களில் விடுதலை அமைப்புக்களின் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சிதைவுகளையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஜனநாயக மறுப்பையும் விமர்சித்து எழுதுகின்றனர். அகிலனும் இவ்வாறுதான் தன்னுடைய பயணத்தில் திகழ்கின்றார். அரச பயங்கரவாத்திற்கு எதிராக ஆரம்பித்து விடுதலை அமைப்புக்களின் அராஜகத்திற்கு எதிராக இயங்குகின்றார். ஆனாலும் சிவசேகரம், சேரன், நட்சத்திரன், செவ்விந்தியன், இளவாலை விஜயேந்திரன், சிவரமணி, தீவிரநிலையிலும் உயர்தொனியிலும் எழுதவில்லை அகிலன். அவருடைய தொனி மென்னிலையானது. அவ்வாறே அவருடைய விமர்சனங்களும் கண்டனங்களும் அவருடைய ஒரே சகோதரரை (இவர் பொறியியற் துறையில் உயர்கல்வியை படிப்பதற்கு தேர்வாகியிருந்தார். பின்னர் கொல்லப்பட்டு விட்டார்.) விடுதலைப் புலிகள் கட்டாயப் போர் நடவடிக்கைகளுக்காக பிடித்துச் சென்ற போது (அப்போதுதான் அகிலனும் ஈழத்தை விட்டு தமிழத்திற்கு சென்றார்) எழுதிய கவிதை இதற்கு அகிலனின் கவிதைகளின் இயல்புக்கு ஒரு ஆதாரமாக இதைக் குறிப்படலாம்.
----------
வெறுமனே
எதிர்முனை இரையும்
என் கேள்விகளின் போது
நீ
எச்சிலை விழுங்குகிறாயா?
எதைப்பற்றியும்
சொல்லவியலாச்
சொற்களைச் சபித்தபடி
ஒன்றுக்கும் யோசிக்காதே
என்கிறாய்..
உன்னிடம்
திணிக்கப்பட்ட
துப்பாக்கிகளை நீ
எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்
வாய் வரை வந்த
கேள்வியை விழுங்கிக்கொண்டு
மௌனிக்கிறேன்.
தணிக்கையாளர்களாலும்
ஒலிப்பதிவாளர்களாலும்
கண்டுகொள்ளமுடியாத
ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்
உதிர்கிறது..
தொலைபேசிகளை
நிறைக்கிறது
ஒரு நிம்மதிப்பெருமூச்சு..

நீ நிம்மதியாப் போ..
-----------
இதேபோல தீபச்செல்வனின் தங்கையை – அதிலும் அவள் பதின்மூன்று வயதுச்சிறுமியாக – பள்ளி மாணவியாக இருந்தபோது புலிகள் அவளை பிடித்துச் சென்றதையும் தீபச்செல்வன் தன்னுடைய
--------------------------------
இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.
-----------------------------------
(நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு)

என்ற கவிதையில் வெளிப்படுத்துகின்றார். இந்தக் கவிதை அவரது நூலில் இல்லை. அவருடைய இணையத்தளத்தில் இதைப் படிக்க முடியும். இவ்வளவுக்கும் தீபச்செல்வனின் சகோதரர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சாவடைந்தவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ நூலே இந்த சகோதரனுக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.

தீபச்செல்வனின் கவிதைகள் போரையும் இராணுவ அழுத்தத்தையும் பொதுவான தமிழ் மனநிலை நின்று நோக்குகின்றன. தமிழ் பொதுமனநிலை என்பது உடனடியாக அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே முதற்பார்வையாக கொள்ளும் இயல்பைக் கொண்டது. இதற்கு தமிழ் மக்களின் பேரால் இயங்கிய அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், அரசியலாளர்களும், இந்த நோக்குநிலை ஊடகங்களும் ஒரு பிரதான காரணமாகும். அதிலும் குறிப்பாக பின்னர் தமிழ் மைய ஊடகங்கள் விமர்சனம், மாற்றுப்பார்வை, ஜனநாயகமின்மை, என்று ஒற்றைப் படைத்தன்மையில் - சார்பு எதிர்ப்பு- ஒரு நண்பர் சொல்வதைப்போல கறுப்பு வெள்ளை என்ற பிரிப்பில் இயங்கியதால் பெரும்பாலான இளைய தலைமுறைப்படைப்பாளிகள் அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே தமது பார்வைத்தெரிவில் கொண்டனர். நட்சத்திரன், செவ்விந்தியன், சிவரமணி போன்றோர் இதில் விதிவிலக்கு. இந்த ஊடகங்கள் கட்டமைக்கும் கருத்துலகுக்கு வாய்ப்பானதாக சிங்கள இனவாதிகளும் அரசும் காரணமாக இருப்பதையும் இங்கே நாம் நோக்கவேண்டும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒரு தடைவ குறிப்பிட்டதை போல ‘தமிழ் மக்களின் போராட்டத்திலுள்ள ஜனநாயகமின்மை, அதன் நீதி மறுப்பு என்பனவெல்லாம் சிங்கள இனவாதத்தினால் மிக லாவகமாக மறைக்கப்படுகின்றன என்பது இந்த வாய்ப்பை இன்னும் தமிழ் அரசியலாளர்களுக்கும் சார்பு ஊடகங்களுக்கும் அளித்தது. இன்னும் இந்த ஊடகங்கள் தமிழ் மக்களின் அரசியற் பாதை குறித்து தெளிவாக சிந்திக்க தயாராக இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகால அதேமனநிலை, அணுகுமுறை, போக்கு என்பவற்றினடியாகவே இயங்குகின்றன. சர்வதேச அரசியல், பொருளாதாரம், இவற்றுக்கான இராஜதந்திரப் பொறிமுறை, அறிவியல் வளர்ச்சி, அதன் விளைவான தகவல் தொழில்நுட்ப ஆதிக்கம், போன்ற இன்னோரன்ன அம்சங்களையும் இவற்றின் செல்வாக்கு மற்றும் பாதிப்புக்களையும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.

யதார்த்தை உணர மறுக்கும் கற்பனாவாதப் போக்கும் அந்த மனநிலையில் மக்களை தொடர்ந்தும் வைக்கும் நோக்குமே இந்த ஊடகங்களின் இயங்கு முறையாக உள்ளது. உண்மையைக் கண்டறிய தயங்கும் இந்த நிலை உண்மையிலிருந்து சனங்களை வெகு தொலைவில் நிறுத்தும் காரியத்தையே செய்கின்றது. உண்மையிலிருந்து மக்களை பிரித்து தூரவைப்பதன் மூலம் மக்களை அறியாமையில் வைக்க முயல்கின்றன. இதை விரும்பியோ விரும்பாமலோ தெளிவில்லாமலோ தெளிந்தோ இந்த ஊடகங்கள் செய்யலாம். ஆனால் இந்த ஊடகங்களும் இவற்றில் இயங்கும் பல ஊடகவியலாளர்களும் தமிழ் மேலாதிக்க மனோபாவத்தால் கட்டமைக்கப்பட்டவர்கள். (இந்த ஊடக கலாச்சாரத்திற்கெதிரான முயற்சிகளில் ஈடுபட்ட கசப்பனுபவங்கள் எனக்குண்டு என்பதால் இதனை இங்க அழுத்தமாக குறிப்பிட முடியும்.) எனவே இவர்களாலும் இந்த ஊடகங்களாலும் கட்டமைக்கப்படுகின்ற உலகத்தில் (வன்னியில் எல்லாவற்றிகும் தடை வேறு) இருந்தகொண்டு எழுதும் அல்லது எழுதத் தொடங்கும் இளந்தலைமுறையின் எழுத்துக்கள் ஆரம்பத்தில் இவை உருவாக்கும் போது மனநிலையில் - படிமத்தில் - இருந்தே பிறக்கும். ஆனால் பின்னர் ஆளுமையும் சுயமும் உள்ள படைப்பாளிகள் இவற்றில் இருந்து விலகிச்சென்று விடுகின்றனர்.

இதுவே அகிலனுக்கும் தீபச்செல்வனுக்கும் நிகழ்ந்தது. இதுவே சேரனுக்கும், ஜெயபாலனுக்கும் ஏனையோருக்கும் நிகழ்ந்தது. அதாவது காலப்போக்கில் தன்னுடைய அனுபவத்திலுலிருந்தும் நோக்கு நிலையிலிருந்தும் இன்னும் விசாலிக்கும் போதும் தமிழ்ச் சூழலிலேயே நிலவுகின்ற ஜனநாயக மறுப்பையும் அதிகாரத்துவத்தையும் கண்டு அதிர்ச்சியடைகின்றார் ஒரு படைப்பாளி. இது இந்தச் சூழலில் ஏதோ திடீரென முளைத்துள்ள நிலமைகள் அல்ல. தொடர்ந்து நீண்ட காலமாக வளர்ந்திருக்கும் இத்தகைய எதிர்நிலைகள் சிங்கள இனவாதத்தினாலும் அரச பயங்கரவாதத்தினாலும் போர்த்தி மறைக்கப்பட்டிருந்தன என்பதே இங்கு சோகம். (இதற்கு பலியானோரில் நானும் ஒருத்தன்) எனவே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இனவாதத்திற்கு எதிராகவும் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விடுதலைக் குரலை உயர்த்திய பல கவிஞர்கள் பின்னாட்களில் தமிழ்ச்சூழலில் நிலவும் ஜனநாயக விரோத சூழலையும் தமிழ் இனவாதத்தையும் விமர்சிப்பதில் வந்து நின்றனர். இதற்கு நல்ல உதாரணம் “மரணத்தில் வாழ்வோம்” கவிஞர்கள்.

இங்கே தீபச்செல்வனும் சரி அகிலனும் சரி இந்த வகையிலேயே உள்ளனர். ஆனால் நட்சத்திரன், செவ்விந்தியன் போன்றோர் இதற்கு விதிவிலக்கு எனக் கண்டோம். தீபச்செல்வனின் முதல்நிலை அனுபவம் வன்னிச் சூழலும் அங்கு நிகழ்ந்த போருமே. வன்னிப் போர் பற்றிய விமர்சனங்களும் கண்டனங்களுமே அவருடைய முதற்கட்ட கவிதைகள். குறிப்பாக பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைகள். ஆனால் தீபச்செல்வனின் இணையத்தளத்திற் காணப்படுகின்ற கவிதைகள்; பலவும் வன்னியின் இறுதிக்கால நிலவரம் தொடர்பானவை. ஏனையவை யாழ்ப்பாண நிலமைகளின் பதிவுகள் அல்லது வெளிப்பாடு.


“எனது அறையை சூழ்ந்து வந்தன
பல மிருகங்கள்
-------------------------------------
--------------------------------
அறைகளை முழுக்க
மோப்பமிடுகிறது அந்த நாய்
புத்தகங்களையும்
பேனாக்களையும்
ட்ரக்கில் நிரப்பி விடுகின்றது.

ஆந்த மிருகங்கள்
என்னை நெருங்கி அறைந்த விடுகின்றன
கைகள் கழன்று விட
நான் முண்டமாகி கிடந்தேன்.
தணிக்கை செய்யப்பட்ட செய்தியை
வானொலி வாசிக்கிறது.

சொற்கள் கொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்ட
துப்பாக்கிகள் விழுங்கிய இரவின்
மறுநாள்
குருதி வடியும் புத்தகங்களை சுமந்து
நானும் அவளும் வகுப்பறைக்கு போனோம்.
(துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்)

இத்தகைய கவிதைகள் ஈழக்கவிதைகளுடன் பரிச்சயமானவர்களுக்கு புதுமையல்ல. சேரனின் கவிதை ஒன்றும் ஏறக்குறைய இதேபோன்றுதான் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அது சிறைச்சாலை வரை நீழ்கிறது. உண்மையில் தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாற்றீடாகவே இந்தக் கவிதைக் குரல்கள் முன்னெழுகின்றன. இந்தப் படைப்புக்களின் முக்கியத்தவம் என்பது முதல் நிலையில் இவை மறைக்கப்பட்டவற்றிற்கு எதிரான தடைகளுக்கெதிரான ஒலிப்புக்களே. (ஆனால் இத்தகைய எழுத்துக்கள் பிற விவகாரங்கள் பலவற்றை மறைத்ததையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். குறிப்பாக ஜனநாயகமற்ற சூழல், முஸ்லிம் விவாதம், தலித்துக்களின் பிரச்சனை போன்றன) எப்படியோ தணிக்கை செய்யப்பட்ட செய்திகளுக்கு மாற்றீடாக தன் கவிதைகளை முன்வைக்கும்.

தீபச்செல்வன் அதிகமாக நிகழ்வகளை பதிவாக்கும், ஆதாரப்படுத்தும் ஓர் உபாய முறையில் அதிகமாத் தன்னுடைய கவனத்தை குவித்திருக்கிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஒரு கவிதைகளில் எட்டுக் கவிதைகளுக்கு அடிக்குறிப்புக்கள் உள்ளன. இந்தக் குறிப்புக்கள் இந்தக் கவிதை எழுந்ததற்கான பின்ணணியை விபரிப்பன. நிகழ்ச்சியை கூறுவன. நூலின் அறிமுகத்தில் சொல்லப்படுவதைப் போன்று ‘நோக்கம் சார்ந்து வெளிப்படையாக பேசும்’ பண்பைக் கொண்டவை இந்தக் கவிதைகள். இதுதான் தீபச்செல்வனுக்கு இப்போது அவசியமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வெளிப்படை சாதாரணமானதல்ல. அசாதாரணமானது. குறிப்பாக “யாழ் நகரம்” என்ற கவிதை,

ஒரு கொத்துரொட்டிக் கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி: யாழ் நகரம்

யாழ்ப்பாணத்தின் ஒருகாலகட்ட நிலவரத்தையும நிகழ்ச்சிகளையும் இந்த மூன்று வரிகளும் சாதாரணமாக சொல்லிவிடுகின்றன. ஆனால் இவை சொல்லும் அல்லது மனதுள் விரிக்கும் அசாதாரண நிலை மிகப் பெரியது. யுத்தம் முடிந்த பின்னரும் - இவ்வளவுக்கும் யுத்தம் நடந்தது வன்னியில் - இன்னும் யாழ்ப்பாணம் உறை நிலையில் இருந்து மீளவில்லை. அச்சப் பிராந்தியத்துள் அது அமிழ்ந்தேயிருக்கிறது. கிலி நீங்கவில்லை. அவ்வளவுக்கு இரவுக்கொலைகள், இனந்தெரியாத கொலைகள் யாழ்ப்பாணத்தின் இரத்தவோட்டத்தை உறைய வைத்தன. இன்றும் ஊரடங்கு நீங்காத நகரமாகவே இருக்கிறது யாழ்ப்பாணம்.

யாழ் நகரம் பற்றி கடந்த முப்பது ஆண்டுகளில் ஏராளம் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. நுஃமான், அ.யேசுராசா, சோ.பத்மநாதன், சேரன், மைதிலி, நிலாந்தன், சத்தியபாலன், இயல்வாணன், பா.அகிலன், புதுவை இரத்தினதுரை எனப்பலர் யுத்தகால யாழ்நகரை எழுதியிருக்கின்றனர். ஆனால் என்னுடைய வாசிப்பில் பா.அகிலனின் (யாழ்ப்பாணம் 1996 நத்தார்) என்ற கவிதையும் தீபச்செல்வனின் யாழ் நகரமும் ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம் என்பேன். பா.அகிலனின் கவிதைகள் கலை எழுச்சியுடன் அமையப்பெற்றது. தீவிர உணர்தளத்தை நோக்கி ஊடுருவும் வீச்சையுடையது. தீபச்செல்வனின் கவிதை காட்சி விபரிப்பாக எழுந்து மனதில் அழுத்தமாக இந்தக் காட்சியை உறைய வைப்பது. காட்சிப்படிமத்தை உருவாக்கும் வகையில் தீபச்செல்வன் சொற்களை இணைக்கும் உத்தியை – தொழில்நுட்பத்தை – கையாள்கிறார். சொற்களை ஒரு காட்சி சாதனமாக்குகிறார் என்றும் சொல்லலாம்.

வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூண்கள் உயிரை குடிக்கின்றன
யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்து ரொட்டிகடை திறந்திருக்கிறது.
(யாழ் நகரம்)

இந்தச சித்தரிப்பு நாமகளின் ‘யதார்த்தம்’ கவிதையை ஒத்திருக்கிறது. அதேபோல ‘காகங்கள் கரைகின்றன மரணம் நிகழ்கின்றது’ என்றவாறாக செல்லும் அஷ்வகோஸின் கவிதையையும் ஒத்திருக்கிறது. சாவும் அவலமும் துயரமும் இயல்பாகிப்போயிருக்கிறது என்பதையே இவை சொல்கின்றன. ஆனால் தீபச்செல்வன் இந்த இயல்பை சிதைத்த விடுகின்றார். இதில் அதிர்ச்சியூட்டும் இன்னொரு இடம்,

நீங்கள் சாப்பிடும் கொத்துரொட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்
(யாழ் நகரம்)

எவ்வளவு குரூரமான யதார்த்தம் இது.

இந்தத் தொகுதியில் உள்ள இன்னொர கவனத்திற்குரிய கவிதை ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ இந்தக் கவிதையின் அரசியல் பற்றி பல முரண்பாடுகள் உண்டு.

எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்’

என்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான தீபச்செல்வனின் எதிர்ப்புணர்வு நிபந்தனையற்று, கேள்விகளற்று சதாமை ஆதரிக்க வைக்கிறது. சதாமின் ஜனநாயக மறுப்புகளும் வரலாற்று குருட்டுத்தனங்களும் குர்திஷ்களுக்கு சதாம் இளைத்த அநீதியும் இங்கே கண்டுகொள்ளப்படவில்லை. இதே வேளை இந்தக்கவிதையில் வரும்

நான்
கடும் யுத்தப்பேரழிவில் பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்த பதுங்கு குழியில்
பிரசவித்திருக்கிறேன்.
(பதுங்கு குழியில் பிறந்த குழந்தை)

என்ற அடிகள் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டதை போல ஈழத்தின் தொடர் யுத்தச் சூழலை இலகுவாகவும் துல்லியமாகவும் சொல்கிறது. ஆனால் ஈழக்கவிதைகளில் பின்னாட்களில் உருவாகியிருக்கும் ஈழ்ப்போராட்டம் பற்றிய விமர்சனங்கள் தீபச்செல்வனிடம் இங்கு முழு அளவில் இல்லை. நிகழ்ச்சிகளை பதிவுசெய்தல், அவற்றின அடியாக எழும் உணர்வுகளை வெளிப்படுத்தல் என்பவற்றை தனது அக்கறையாகவும் முறைமையாகவும் கொள்கிறார் தீபச்செல்வன்.

இது அவரை விமர்சன பூர்வமாக எதையும் அணுக வேண்டும் என்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு ஆயத்த நிலை என்று கருதலாம். ஏனெனில் தீபச்செல்வன் வரிசைப்படுத்தும் நிகழ்ச்சிகள் அவரை அப்படியொரு நிலைக்கே கொண்டு போகும். ஈழப்போராட்டத்தை ஆதரித்த படைப்பாளிகளில் பலரும் இத்தகைய ஒரு பரிணாம நிலையையே எட்டியுமிருக்கின்றனர். இப்போது இணையங்களில் காணப்படுகின்ற தீபச்செல்வனின் கவிதைகளும் பிற எழுத்துக்களும் அதை நிரூபிக்கின்றன. இது புலிகளின் வீழ்ச்சியுடன் ஏற்பட்ட மாற்றமல்ல. ஏற்கனவே அவருடன் தொடர்புடையோருக்கு அவரிடம் நிகழ்ந்து வந்த இந்த வளர்ச்சியைத் தெரியும். அவர் தொடர்பு கொள்ளத்தொடங்கிய இணையங்கள் இதற்கு இன்னொரு ஆதாரம்.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை நூலில் இரவு நதி, முட்களுக்காக முளைத்திருக்கும் கால்;கள், கத்தி, அம்மாவின் வீடு கட்டும் திட்டம், இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்பு பறவை, இரவு நட்சத்திரங்கள், சாபத்தின் நிழல், யாழ் நகரம், பதுங்கு குழியில் பிறந்த குழந்தை ஆகிய கவிதைகள் கவனத்திற்குரியன. நம் மனதில் துக்கத்தையும் அதிர்ச்சியையும் நிகழ்த்துவன. மூடுண்ட ஈழச் சூழலின் உள்ளரங்க நிகழ்ச்சிகளில் ஒரு தொகுதியை பதுங்கு குழியில் பிறந்த குழந்தை சொல்கின்றது. ஆனால் பல தொகுதிகள் சொல்லப்படவிருக்கு. அதைச் சொல்லத் தெடங்கியிருக்கிறார் தீபச்செல்வன் தன்னுடைய இன்றைய கவிதைகளில்.
-----------------------

Sunday, August 23, 2009

காலத்தின் ஓளியை அவாவுகிற கவிதைகளின் இதழ்- நடுகை


ஆறு தாள்களில் பன்னிரண்டு பக்கங்களில் இருள் கொண்ட காலத்தின் வலியைப் பேசுகிற கவிதைகளுடன் ‘நடுகை’ என்ற மாத இதழ் வந்திருக்கிறது. ‘அம்பலம்’ குழுமத்தின் மற்றொரு வெளியீடாக வந்திருக்கும் இந்த இதழ் பள்ளி மாணவர்கள் பலரது கவிதைகளுடன் வந்திருக்கிறது. அரசியல் பிரகடனங்கள் எதுவுமற்று இயல்பான உணர்வெழுச்சியின் சொற்களை கொண்டு வந்திருக்கிறது. மூன்றாவது இதழில் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். இந்த வளருகிற எழுத்துக்கள் இயல்பு கொண்டு சூழிவு நெளிவற்று இருக்கிறது.

இதழ் 01

இருள் படிந்த காலத்தையும் கனக்கிற துயர்களையும் அநேகம் கவிதைகள் புலப்படுத்துகின்றன. நடுகை இரண்டில் வந்த கவிதைகளில் சித்தாந்தனின் ‘வெறுமையின் மீது வலி’ நெய்யும் பாடல் என்ற கவிதை வெறுமையான காலம் பற்றி சித்திரமாக இருக்கிறது. சொற்களின் நெருக்கடிகளது காலத்தை அது பேசுகிறது.

“நிரவி அடைக்கவியலா வெற்றிடத்தை

சோற்களால் துயரெழுப்பிச் சூழ்கின்ற

எண்ணற்ற குரல்களையும்

கௌவித்தின்கின்றது காத்திருந்த மிருகம்”

முற்றுகையின் நெருக்குவாரத்தையும் சிதைந்த நகரத்தின் ஏக்கத்தையும் ஆபத்து நிலைகளையும் பேசி வருகிறது சித்தாந்தன் கவிதைகள். இது காலம் பற்றிய ஏக்கமாகவும் அது பற்றி உணர்ந்த ஆபத்து நிலையாகவும் வருகிறது.

அடுத்து சி.ரமேஷ் எழுதிய ‘ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா.இராமலிங்கம்’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். வாழ்வின் முற்ககால நெருக்கடி அனுபவநிலைகளை வெளிப்படுத்திய தா.இராமலிங்கம் சொற்களை கையாளுகிற முறையில் தனித்துவமானவர். அவருடைய சொற்கள் வாழ்நிலையுடனும் மண் நிறத்துடனும் மணந்து கொண்டிருப்பவை. தா.இராமலிங்கத்தின் மரணம் நெருக்கடிகளின் மத்தியில் நிகழ்ந்திருந்தது. அவரது இடம் குறித்தும் சொற்களின் இழப்புக் குறித்தும் கவனம் கொள்ளப்படாத நிலையில் சி.ரமேஷ் எழுதிய பதிவு முக்கியம் பெறுகிறது. தூ.இராமலிங்கத்தின் கவிதைகள் பற்றிய வாசிப்பாகவும் தகவல்களின் திரட்hகவும் இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது.

அடுத்து ஆபிரிக்க கவிஞர் பிலிப் ஜூவாவோவின் ‘உலோகக் கழிவு’ என்ற கவிதையும் பிலிப் ஜூவாவோ பற்றிய குறிப்பும் ‘ஒரு கவிஞன் ஒரு கவிதை’ என்று இடம்பெறுகிறது. மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த யோ.கௌதமி என்ற உயர்தர வகுப்பு மாணவியின் ‘விண்ணப்பம்’ என்ற கவிதை இடம்பெறுகிறது.

“தொல்லைகள் துரத்தும்

துயரக்கதை

முடிவே இல்லாமல்

முடிச்சிடும் பிரச்சினைகள்

பலவீனம் மேலெழ

அழுகை பலமாகிறது”

முடிவற்ற நெருக்கடி பற்றி ஒரளவு நேர்த்தியுடன் பேசுகிறது இந்தக் கவிதை. இவற்றுடன் ‘காமாணற்போன வாசம்’ தாட்சாயணி கவிதை, ‘விம்பத்துடன் வாழ்தல்’ தபின் கவிதை என்பனவும் இடம்பெறுகிறது. ந.சத்தியபாலனின் ‘விருந்தயரும் காங்கள்’ என்ற கவிதை புண்ணை கிளறும் வலிகளை தவிப்பு நிலையில் வெளிப்படுத்துகிறது. சலனியின் ‘காத்திருப்பின் வலி’ காத்திருத்தலின் மனநிலை குறித்து பேசுகிறது.

கவிதை உருவாக்கும் முறை அமிலோவல் கட்டுரையை தமிழில் பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். சீனாவின் முதலாவது கவிதைத் தொகுதி நர்த்தகன் எழுதிய குறிப்பும் இடம்பெறுகிறது. ஒரு கனவின் துயரிசை என்ற கவிதையை ஜி.எம்.ரி.ருத்ரா எழுதியிருக்கிறார்.

அடுத்து கோகுலராகவனின் ‘இழத்தலின் பாடல்’ கவிதை இடம்பெறுகிறது. கனவின் இழப்புப் பற்றிய பெருந் தவிப்புடன் சமுத்திரத்தில் தாழ்க்கப்படுகிற சொற்களாக இந்தக்கவிதையின் சொற்கள் இடம்பெறுகிறது. கவிதையின் இடையில் வருகிற சொற்களைத் தவிர பொழுதின் இழப்புப் பற்றிய துயர்ச் சித்திரமாயிருக்கிறது.

“ஆயிரம் கனவுகளை

தெருவில் எறிந்து பின்

ஒரு கணத்தில்

சிறகுகளை வெட்டி வீசிவிட்டு

உலாப்போக நினைக்கிறன்றது

சிறுபறவை

என் கனவுகள் முழுச் சாக்கில்

கட்டப்பட்டு நதியில்

வீசப்பட்டன”

அடுத்து ‘ஜெபஙகளின் மீதெழுகிற அழுகை’ என்ற தீபச்செல்வன் கவிதை இடம்பெறுகிறது.

இதழ் 02

நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் படருகிற துயரை பிழைத்த உலகத்தை பேசுகிற ‘வாயடைத்துப் போனோம்’ கவிதை இ.முருகையனின் இழப்பினை முன்னிட்டு இரண்டாவது இதழின் முகப்பில் வெளியாகியுள்ளது.

“ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை

திக் கென்ற மோதல்

திடுக்கிட்டுப் போனோம்

வராதாம் ஒரு சொல்லும்”

என்று நெருக்கடியின் கையறு நிலையைப் புலப்படுத்துகிறது இந்தக்கவிதை. ர்pஷான்ஷெரிப்பின் ‘சிதைந்த நாட்களோடு ஓய்தல்’ கவிதை மரணத் தருவாயிலிருந்து மீண்ட நஞ்சு படிந்த நினைவுகளை மீட்டுகிறது. அடுத்து அம்மனின் ‘மிதப்பு’ கவிதை இடம்பெறுகிறது. புத்தகங்களோடு ஒரு சில பொழுது என்ற கவிதையை மல்லாகம் மகா வித்தியாலய உயர்தர மாணவி யமுனா செல்வராஜா எழுதியிருக்கிறார். ஊரெழு கணேச வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கறகும் மாணவி நீ.சுகன்யாவின் சுதந்திரம் கவிதையும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 11ஆம் தரத்தில் கற்கும் மாணவி க.சாதனாவின் பூக்க மறுக்கின்றது ஒரு பூஞ்செடி என்ற கவிதையும் இடம்பெறுகிறது. இதில் சாதனாவின் சொற்கள் நம்பிக்கையை தருகின்றன.

“கறை படிந்த ஒற்றயடிப் பாதையில்

மீண்டும் ஓர் பயணம்

நசுக்கப்பட்டு

வதைக்கப்பட்ட பெண்கைக்கு

உதிர்ந்த இதழ்கள்

வண்டின் வரகவ்காக ஏங்குதல்போல்

உடைந்த என் மனமும்

ஏதோ ஒன்றைத் தேடுகின்றது”

என்று அவர் உடைந்த மனதின் பெருக்கத்தை எழுதுகிறார். பிரிவு என்ற கவிதையை வடமராச்சி மத்திய மகளிர் கல்லூரி உயர்தர மாணவி இ.திசாந்தினி எழுதியிருக்கிறார். அடுத்து உடுவில் மகளிர் கல்லூரி உயர்தர மாணவி எழுதிய பாசத்தைத்தேடல் என்ற கவிதையும் இடம்பெறுகிறது. மரணம் முடிவு கொள்ளுகிற வாழ்வை மரணமற்ற இயற்கையிடம் ஒப்பிட்டு பொருளைத் தொடுகிறது பண்ணாகம் மெய் கண்டான் மகாவித்தியாலய உயர்தர மாணவி இ.யசோதாவின் கவிதை.

“நித்தமும் உலகில்

பூக்கள் மலரும்

அலையும் காற்றும்

ஆட்டம் போடும்

புவியில் நிலைப்பவை இவையே”

என்று தொடருகிறது அந்தக் கவிதை. இங்கு பள்ளி மாணவர்களின் கவிதைகளில் சில கவிதைகள் ஆரம்ப நிலைகளையும் முளைவிடு பருவத்தையும் கொண்டிருக்கிறது. பின்பக்கம் கவிழ்ந்தும் மறைந்திருக்கிற பிம்பங்களையும் எந்தக் கவிதைகளும் கொண்டிருக்காமல் மிகவும் இயல்பாக இருக்கின்றன. கோட்பாட்டு நிலை பெறாத யதார்த்த்தின் வெளி;பாடாக இளைவர்களின் கவிதைகள் வருகிறது.

திருமறைக்கலா மன்னறத்தினரால் ஒரு முறை கவிதைப் போட்டி நடத்தப்பட்டபோது அதனை வாசிப்புச் செய்ய நேர்ந்தது. அங்கு என்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கவிதைகளை எழுதியிருந்தார்கள். எல்லோருடைய கவிதைகளும் யாழ்ப்பாணத்தினதும் ஈழ மக்களினதும் மனங்களின் நெருக்கடிகளையும் துயர்களையும் வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருந்தன. எனவே நெருக்கடியான காலத்தில் சிதைவுகளுக்குள்ளாகிற நிலத்தில் வருகிற குழந்தைகளின் சொற்கள் மனம்பொருந்திய உணர்வுப்பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. அப்படி அவர்கள் எழுதுவதற்கு நடுகை வாய்பபாக இருக்கிறது.

கிண்ணியா பாயிஸா அலியின் தசைரோபோ என்ற கவிதையுடன் மருதம் கேதிஸின் ‘தவறியிருக்கின்றது ஒரு துளி நெருப்பு’ கவிதையும் இடம்பெறுகிறது.

“உள்ளிருந்து எல்லா அதியற்புதங்களையும்

நிகழ்த்திய ஒரு துளி நெருப்பு

தவறியிருக்கிறது”

என்ற சொற்களுடன் தொடங்கும் கவிதை மனதின் பெரு உணர்வெழுச்சியை வெளிப்படுத்துகிறது. கவிதை உருவாக்கம் முறை’ கட்டுரையின் தொடர்ச்சியுடன் கவிஞர் இ.முருகையன் பற்றிய சி.ரமேஷின் ‘காலத்தை வென்ற கவிஞர்க்குக் கவிஞன் இ.முருகையன்’ என்ற கட்டுரையும் ‘சித்தாந்த சார்பொன்றின் ஆத்ம கீதம்’ என்ற த.அஜந்தகுமாரின் கட்டுரையையும் இந்த இதழில் வந்திருக்கிறது. ரமேஷின் கட்டரை முருகையன் பற்றிய முழுமையான தகவல்களுடன் அவரது இடத்தை நிறுவுகிறது. அஜந்தகுமாரின் கட்டுரை முருகையனின் கவிதைகளை முற்போக்கு, பொதுவுடமை, விடுதலை போன்ற சமூக எழுச்சித் தளங்களை சுருக்கமாக குறிப்படுகிறது.

நடுகை இதழின் இந்த மீள் வருகையும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக கவிதை- சொற்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதுடன் எல்லாக் குரல்களையும் இணைத்துத் தருகிறது. எளிமையான வடிவமைப்புடன் 5 ரூபா விலையில் சொற்களை சனங்களிடம் கொண்டு போகிறது.

- தீபச்செல்வன்

Friday, July 10, 2009

அம்பலம்: ஒடுங்கிய காலத்தில் உட்க்கொதிக்கிற நகரத்தில் வெளிவந்த இதழ்


தீபச்செல்வன்
_______________
ஈழத்தில் வருகிற இதழ்கள் சனங்களைப்போலவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. துணிச்சலாக கருத்துச் சொல்லும் ஒரு இதழாக வெளிவருவதென்பது சாத்தியமற்றிருக்கறிது. இருப்பினும் ஒரு சில இதழ்கள் அப்படி வருகின்றன. ஆனால் பல இதழ்கள் காலத்தின் நெருக்கடி குறித்து எந்த கருத்துமற்று வருகின்றன. காலத்திற்கும் சமூகத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்ற எழுத்துகளை நிரப்பி தணிக்கைகளை ஏற்று வருகின்றன. வடக்கில் முழுமையான தேக்கத்தினை சிறு பத்திரிகைகள் அடைந்து விட்டன. அவை பெரிய இடைவெளிகளுடனும், காலமாகியும் வந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தலிருந்து வந்த அம்பலம் என்ற இந்த இதழ் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘தெரிதல்’ என்ற பத்திரிகை நின்றுபோனது படைப்பிலக்கிய சூழலில் ஒரு கனதியான பத்திரிகையின் இழப்பாக இருக்கிறது. ‘தாயகம்’ என்ற தேசிய கலை இலக்கியப்பேரவையின் இதழ் தொடர்ந்து அதிகாரங்களை எதிர்த்து காலத்துக்காக குரலிட்டுக்கொண்டிருக்கிறது. ‘கலைமுகம்’ என்ற திருமறைக் கலாமன்றம் வெளியிடுகிற இதழ் நிறுவனத்தின் போக்குகளிற்கு உட்பட்டு அமைதியாக தகர்ந்த சூழலை பிரதிபலிக்கிறது. ‘ஜீவநதி’ என்ற சிறுபத்திரிகை கடந்த இரண்டு வருடமாக வந்துகொண்டிருக்கிறது. மோசமான தணிக்கைகளுக்கு உட்படுத்துவதுடன் படைப்பின் பகுதிகளை வெட்டி அவற்றிற்குள் தமது ஆதிக்கத்தை இடைச் செறுகி கட்டமைக்கப்படுகிறது. காலத்தை எந்த வித்திலும் பிரதிபலிக்காது உயிரற்ற இதழாக வருகிறது. கலைமுகம், தாயகம் என்பன வடிவமைப்பில் நேர்த்தியாக இருக்கிறது. ஜீவநதி வடிவமைப்பில் படு மோசமாக இருக்கிறது. தனிநபர் நலன்களுக்காக அது கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழக இதழ்கள் எல்லாம் ஈழத்துப் பிரச்சினைகளை முன்னிருத்தி ஈழத்து சிறப்பிதழ்கள் என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் தமிழக மக்களோ இந்திய மக்களோ எந்த மன மாற்றத்திற்கும் உள்ளாக இடமில்லை. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதனால் எங்களுக்கு எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற மற்றும் ஈழத்து-இலங்கை இதழ்கள் வேறு ஒரு உலகத்து கதைகளை பேசியபடியிருக்கின்றன. அவை தங்களுக்கு அச்சுறுத்துல்கள் ஏற்படலாம் என அப்படி வருகிற நெருக்கடியை நாம் உணருவோம். காலம் குறித்த பதிவுகளின்றி இந்த இதழ்கள் ஈழத்தில் வெளிவந்து கொண்டிருப்பது காலத்தை இருட்டடிப்பு செய்கிற நடவடிக்கைகளுக்கு சாதகமாயிருக்கிறது.

‘மூன்றாவது மனிதன்’ என்று பௌசரால் கொண்டு வரப்பட்ட இதழ் ‘சரிநிகர்’ என்று சிவக்குமாரால் கொண்டு வரப்பட்ட இதழ் என்பன ஈழத்து சமூக அரசியலை எல்லாவிதமான பார்வைகளுடனும் பேச களம் அமைத்திருந்தன. அவை பல்வேறு நெருக்கடிகளால் நின்றுபோய்விட்டது. விடுதலைப்புலிகளின் ‘வெளிச்சம்’ என்ற பத்திரிகை கூடுதலாக வன்னிப் படைப்புக்களுடன் மிகவும் காத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் கருணாகரனும் பிறகு புதுவைஇரத்தினதுரையும் அதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஷ்ணுவால் கொண்டு வரப்பட்ட ‘தவிர’ செல்வமனோகரனால் கொண்டு வரப்பட்ட ‘தூண்டி’ என்பனவும் தற்பொழுது நின்றுவிட்டன. அனுராதபுரத்தலிருந்து வஸிம்அக்கரம் வெளிக்கொண்டு வரும் ‘படிகள்’ இதழ் ஓரளவு நேர்த்தியாக வருகிறது. எஸ்.போஸ் கவிதை இதழாக வெளியிட்ட ‘நிலம்’ இதழ் அவரது படுகொலையுடன் நின்றுவிட்டது. ‘நடுகை’, ‘ஆற்றுகை’, ‘கூத்தரங்கம்’ என்பன தற்போது வருகின்றன. இவைகளுடன் தி.ஞானசேகரனின் ‘ஞானம்’ டொமினிக்ஜீவாவின் ‘மல்லிகை’ முஸ்லீம்களின் மனவோட்டத்துடன் ‘பெருவெளி’ என்பனவும் ஈழத்து சிறு பத்திரிகைகளாக வருகின்றன.

புலம்பெயர் சூழலில் ‘உயிர்நிழல்’, ‘காலம்’, ‘எதுவரை’, ‘வடு’, ‘கலப்பை’, ‘காற்றுவெளி’ போன்ற பத்திரிகைகள் நுண் அரசியல் மற்றும் சமூக மனப்போராட்டங்களை பேசுவதற்கு திறந்த களம் அமைத்து கொண்டிருக்கிறது.

சிறு பத்திரிகைகள் சமூக அரசியலை மிகவும் நுட்பமாக பேசி அவற்றில் செல்வாக்கு செலுத்தியிருந்தன. பல நல்ல சிறுஇதழ்கள் நின்றுபோனது ஈழத்து படைப்பிலக்கிய சூழலை பாதிக்கிறது. காலம் குறித்த விவாதங்களுடன் நெருக்கடிகளை பதிவு செய்வதில் சிறுபத்திரிகையின் பங்கு முக்கியமானது. படைப்பாளிகளினதும் சிறு பத்திரிகைகளினதும் அரசியல்கூட அவற்றின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகின்றன. வணிக மற்றும் தன்னரசியல் கொண்டு வருகிற சிறுபத்திரிகையினை வெகு சுலபமாக புரிந்துகொள்ள முடியும். பிரக்ஞை பூர்வமான அடிப்படையுடன் திறந்த கருத்துக் களத்துடன் அவை வெளிவர வேண்டியது சமூகத் தேவையாக இருக்கிறது.

அம்பலம் என்ற இதழின் மீள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வடிவமைப்பில் நேர்த்தியான தன்மையுடன் வந்திருக்கும் இந்த இதழ்கூட ஒடுங்கிய காலத்தில் கொதித்து உட்கொதிக்கிற நகரத்தலிருந்து வந்தமைக்கான பெரிய மௌனம் கொண்டிருக்கிறது. பயங்கரமான மௌனமும் அடிப்படையற்ற காலத்தையும் நிரப்பி வைத்திருக்கிறது. ஈழத்து அருபமான சூழலையும் நுண் படைப்பிலக்கிய போக்கையும் பிரதிபலிக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு இதழை கொண்டு வருவது பெரிய பிரச்சினையாக இருக்க பிரபாகரன் அம்பலம் இதழை வெளிக் கொண்டு வருவது ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய நிலையை தருகிறது.

பா.அகிலனால் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தின் முகப்பு இருட்டு நகரத்தின் கொதிக்கிற அவலத்தை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக விசாகரூபன் எழுதிய புலம்பெயர் கவிதைகள் உருவம் உள்ளடக்கம் என்ற புத்தகம் பற்றிய சாங்கிருத்தியனின் விமர்சனம் இடம்பெறுகிறது. குறைபாடான, பல ஆய்வுகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட தொகுப்பை விசாகரூபன் செய்திருப்பதாக சாங்கிருத்தியன் ஆதரா பூர்வமாக காட்டுகிறார். ‘பசுவே பசுவே பசுவய்யா’ என்ற கட்டுரையில் குப்பிளான்.ஐ.சண்முகன் சுந்தரராமசாமி தொடர்பாக தனது நினைவுகளை எழுதியிருக்கிறார். தி.சதிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் மரணச்சடங்கில் பாடுதல் மரபும் இசையும் என்ற ஆய்வில் யாழ்ப்பாணத்தில் நிலவுகிற மரண சடங்கின் பாடல் இசை மரபுகளை அழகியல்தனத்துடனும் ஆய்வுப்போக்குடனும் செய்திருக்கிறார். நிலான் ஆகிருத்தியனின் ‘ஈழத்துப் பெண்களின் கவிதைப் புலத்தில் அனாரின் கவிதைகள் எனக்கு கவிதை முகம் தொகுப்பை முன்வைத்து’ என்ற கலாபூர்வமான பார்வையை செலுத்தியிருக்கிறார்.

சி.ஜெயசங்கர் கூத்தில் ஊறிய கலைஞன் என்ற கட்டுரையில் கூத்துக் கலைஞன் க.நாகப்பு பற்றி பதிவு செய்திருக்கிறார். பயணியின் ‘ஜொலிக்கும் விருதுகள்: குளறுபடிகளும் இருட்டடிப்பகளும்’ என்ற கட்டுரையில் ஈழத்து விருதுகள் குறித்த அரசியல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.துவாரகன் கலையும் வாழ்வும் என்ற கட்டுரையில் மருத்துவரும் கலைஞருமான சிவதாஸின் கலை மற்றம் வாழ்வு குறித்து எழுதியிருக்கிறார். ஆற்றக்கலையின் அவசியம் பற்றி அருணாசலம் சத்தியானந்தன் ‘ஆற்றலுக்கான ஆற்றுகைக் கலை அல்லது ஆறுதலுக்கான ஆற்றுகை’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.

சிறுகதைகளில் தாட்சாயணியின் ‘கிழக்கின் வெளிச்சம’; யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கிற வாழ்வு நெருக்கடி குறித்து பேசுகிறது. தேஜோமயனின் ‘(130 லட்சம் 25 பவுண் நகை) பெண்ணுடல்- 5 ஆயிரம்’ என்ற சிறுகதை சீதனம் பற்றியும் அதனுடன் பெண்ணுடல் பறறியும் இணைத்துச் சொல்லுகிறது. இவற்றுடன் சத்தியபாலனின் ‘ஈசு’ என்ற கதையும் இடம்பெறுகிறது. கவிதைகளை அனார், மருதம் கேதீஸ், ஸப்தமி, கோகுலராகவன், மாசிதன், கல்லூரான், நிஷா, தேஜஸ்வினி முதலியோர் எழுதியிருக்கிறார்கள். தேஜஸ்வினியின் 'அந்நியமொழியில் பேசுதல்' கவிதை மனமுரண்களை பேசுகிறது. யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய பெண் கவிஞராக தேஜஸ்வினியயை இனங்காணமுடிகிறது.
------------------------------------------------------------


கலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் அவர் எழுதிய நான்கு கவிதைளில் சிலவற்றை கொண்டு அதை மேலும் உணர முடிகிறது. “புன்னைச் சருகுகள்/ இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன/ அன்றொருநாள்/ அக்குருதியின் நெடியில்/ எங்கள் கனாக்காலத்தின்/ வசந்தங்கள் கரைந்திருந்தன” (கனாக்காலம்), “ஆந்தைகளின் அலறல்களில்/ புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில்/ நீ வருவாய்/ சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து/ ஒற்றை முத்தம் தருவாய்” (நானும் நீயும்) பள்ளி உயர்தர மாணவியான தேஜஸ்வினியின் மேற்குறித்த சொற்கள் நம்பிக்கை தரக்கூயடி முன்னீடாக இருக்கின்றன.

இவைகளுடன் பா.துவாரகனின் கடிதம், குறிப்புகள், நூல் அறிமுகங்கள், பதிவுகள் என்பனவும் இடம்பெறுகின்றன. அம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற இதழ் என்ற வகையில் தற்போது அதன் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அது உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களும் பேசவேண்டிய சொற்கள் செல்ல வேண்டிய வெளிகள் இன்னும் இருக்கின்றன. மனந்திறந்த உரையாடல்களுக்கும் காலத்தின் சொற்களுக்குமான வெளியுடன் அம்பலம் மிகவும் காத்திரமாக தொடர்ந்து வருகிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது

.

Friday, June 12, 2009

சலனப்படுகிற வாழ்வின் கதி ð ந.சத்தியபாலன் கவிதைகள்

o தீபச்செல்வன்

லனப்படுகிற வாழ்வின் கதியினை ந.சத்தியபாலனின் கவிதைகள் காண்பிக்கின்றன. இயல்பான வாழ்க்கையினால் வடிவமைக்கப்பட்ட சூழலை வேண்டுகிறதையும் குழம்பியிருக்கிற இயல்பினை கண்டு மௌனமாக துயருருவதையும் உணர முடிகிறது. ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சத்தியபாலனின் 'இப்படியாயிற்று நூற்றொராவது தடவையும்' கவிதை நூல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தை அப்படியே பிரதிபலிக்கிற படைப்புக்கள் எழுகிறதென்பது அதன் இன்றைய வடிவமைப்பிலும் ஆளுகையிலும் சாத்தியமற்ற தொன்று என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும். இப்பாடியாயிருக்கிறது என் வாழ்வின் கதி என்பதைப்போல சத்தியபாலன் கவிதைகள் வெளியாகியிருப்பது நம்பிக்கை தரக்கூடிய படைப்பின் சூழலை வெளிப்டுத்துகிறது.

விமர்சனம் என்பது ஒரு வகையில் படைப்பு பறறிய இன்னொரு படைப்பு என்கிற மாதிரி அருந்தாகரன் கூறுகிறார். சத்தியபாலனின் கவிதைகளை உடைத்து வாசிப்பதன் ஊடாக அவரின் கவிதையின் வெளியை உணர வேண்டும் என்று நினைக்கிறேன். அவரது கவிதைகளின் சிறிய வடிவங்களும் இறுகிய சொற்களும் பின்னால் மறைந்திருக்கிற மௌனங்களும் விரித்து வாசிக்கபட வேண்டியிருக்கிறது.

சத்தியபாலனின் கவிதைகள் வெறும் தன்னுணர்வு சார்ந்த கவிதைகள் என்ற கருத்தை புறக்கணிப்பதுடன் அப்பால் எல்லாவற்றுக்குமான வெளியை இவை கொண்டிருக்கின்றன. இன்று கவனம் பெறாவிட்டாலும் பின்னரொரு காலத்துக்கான கவிதைகளாக கவனம் பெறும் என்று அவரது காலத்தை இன்றைக்கு தள்ளிவிட முடியாது. அவர் இன்றைக்குத்தான் இப்படியாயிற்று என்று எழுதுகிறார். இருப்பினும் சத்தியபாலன் ஏன்., இப்படி எழுதுகிறார். இவ்வாறான சொற்களை தெரிவு செய்திருக்கிறார். அவரது இடைவெளிகளும் மௌனங்களும் எதையுணர்த்துகின்றன. என்ற கேள்விகள் கவிதைகளை சுற்றியபடியிருக்கின்றன. அவர் பேசாத சென்றிருக்காத அவருக்குரிய சொற்களின் கதியை இப்படியாயிற்று நூற்றியொராவது தடவையும் கவிதைகளில் உணர முடிகிறது.

சத்தியபாலனின் கவிதைகள் பற்றி சி.ரமேஷ் மற்றும் அ.யேசுராசா ஆய்வுகளை முன் வைத்திருந்தார்கள். அவர்களின் கருத்துப்படி சத்தியபாலனின் கவிதைகள் இன்றைய கால அரசியலை முன் வைப்பதை விட தன்னுணர்வை முன்வைப்பதாக அமைந்திருந்தது. அரசியலை பேசுகிறதாக ஒரு இரு கவிதைகளை யேசுராசா வாசித்திருந்தார். எனது வாசிப்பின்படி சத்தியபாலன் தான் வாழுகிற சமூகத்தை அப்படியே பிரதிபலிப்பதாக படுகிறது. அவர் தனது வாழ்வின் ஒடுங்கியிருக்கிற பாங்கில் குருட்டுத்தனமான அரசியலை பின்னியிருக்கிறார்.

மனித குணங்கள் மாறுகிற சக மனிதர்களை வதைக்கிற வாழ்வின் தன்மை கொண்டது. அது பிரிவுகளாலும் இணைவுகளாலும் சக மனிதர்களை கொண்டு சென்றுகொண்டேயிருக்கிற உலகமாயுமிருக்கிறது. சத்தியபாலனின் கவிதைகள் மனிதர்களின் குணங்களின்., அவர்களின் அரசியலால் சூழ்ந்திருக்கிற வாழ்க்கையின் பின்னாலிருக்கிற வெளிகள் பற்றி அவாவிக்கொண்டிருக்கிறது.

போரும் அரசியலும் இயற்கையை சிதைத்துக்கொண்டிருக்கிறது. அரசியலால் சிதைந்திருக்கிற இயற்கையினை அதனால் சிதைந்திருக்கிற கவனங்களை எல்லாம் நிருமூலமாயிருக்கிற வாழ்வை ஆணி அறையப்பட்ட தலைகளை அதிகாரம் குத்திக் கொண்டிருக்கிற கனவை தன்னை சுற்றியிருக்கிற வாழ்வை அடக்கி பேசுகிறன்றன சத்தியபாலனின் கவிதைகள். இவை எல்லாவற்றையும் கண்டு அதற்கூடாக நுழைந்து வந்து எல்லாவற்றின் மீதான தனது சொற்களையும் எதன் மீதோ எறிந்து கொண்டிருக்கிறார்.

ஒரு வகையில் சொன்னால் தெருவில் சென்று திரும்ப முடியாத துயரத்தை அதனால் ஏற்படுகிற கோபத்தை இரவால் மூடியிருக்கிற விளக்கின் மீது பேசிக்கொண்டிருப்தைபோலான கவிதைகள். மிகவும் மெல்லிய மனிதனின் வெளியால் ஒடுங்கியிருக்கிற வீட்டுக்குள்ளிருந்து தன்பாட்டில் உதிர்த்தெறியப்பட்ட சொற்களின் கதியாக புத்தகம் உருவாகியிருக்கிறது.
---------------------------------------------------------------------------

Tuesday, December 2, 2008

அம்மாக்கள் சுமக்கிற துயரங்கள்:மாதுமை கவிதை

-----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

காலம் மற்றும் சனங்களின் நெருக்கடிகளை பிரிதிபலிக்கும் பல கடிதங்களை வாசிக்க முடிகிறது. எனது அம்மா எனக்கு எழுதுகிற கடிதங்களிலும்கூட நான் பெரிய துயரங்களை கண்டேன். மிகவும் கசங்கிய ஒரு கொப்பித்தாளின் ஒரு பக்கத்தில் முடிகிற அந்தக் கடிதத்தில் அம்மா எழுதாத துயரங்கள் பெருகுவதை என்னால் உணரமுடிகிறது. அதைப்போலவே என்னோடு படிக்கும் நண்பன் ஒருவனுக்கு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் இருந்து அவனது அம்மா அப்பா தங்கைகள் தம்பி எழுதிய கடிதங்கள் மிகவும் காலதாமதமாக கிடைக்கப் பெற்றிருந்தது. அவன் அழுதுகொண்டே இருந்தான். அதில் வலிகளாலான பெருவாழ்வை வாசித்து அழத்தான் முடிந்தது.

மாதுமைக்கு அவரது அம்மா எழுதிய கடிதமும் பெருவலி சுமந்து அவருக்கு வந்திருக்கிறது.
“உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன்”
இந்த வரி சாதாரணமாக கடிதங்களில் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து வருகிற
“இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஒரே கவலையாக இருக்கிறது. உன்னைப்பார்க்க வேண்டும்போல் மனதில் ஒர் இனம்புரியாத ஆசை”
என்ற வரிகள் உண்மையில் ஒரு தாயின் மனதிற்குள்ளிருந்து எழும்புகின்ற குரல்களாக உள்ளன. அதன் கனதி முழுக்கடிதத்தையும் கவனப்படுத்துகின்றது.

போர் எல்லோரையும் துரத்திக்கொண்டிருக்கிறது. உயிரை காத்துக் கொள்ள எல்லோருமே எங்காவது போய்விட முயலுகிறோம். அதுதான் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கிற வெற்றியாக நிகழ்கிறது.
“நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன்”
இங்கிருக்கிற அனேக அம்மாக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பிள்ளைகளுடன் சேர்ந்திருப்பதைவிட அவர்கள் எங்காவது மிஞ்சியிருக்கட்டும் என்றே நெருக்கடிப்படுகிறார்கள். அந்த நெருக்கடியிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் அவர்கள் வலிகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.
“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்”
இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டது. வர முடியாது. என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

தமிழ்நதி இங்கு வரத்துடித்துக் கூறினார். சனங்கள் அனுபவிக்கிற போரை தானும் அனுபவிக்க துணிவதை நான் உணர்ந்தேன். நிவேதா எழுதிய கடிதத்தில்
“அங்கு வாழ்வுக்கான போராட்டம் என்றால் இங்கு இருப்புக்கான போராட்டம்.”
என்று எழுதியிருந்தார். றஞ்சனி ஜெபாலன் எல்லோருமே மண்ணை பிரிந்த ஏக்கத்தையும் இங்க உறவுகள் அனுபவிக்கிற பெருந்துயரை கண்டு கொதித்து துடிப்பதையும் கேட்டிருக்கிறேன். அப்படியான வலி மாதுமையிடமும் காணப்படுகிறது.

அம்மாவின் கடிதத்தை மையப்படுத்திய மாதுமையின் பதினொரு வரிகளான இந்தக் கவிதை மிகவும் இறுக்கமாகவும் இயல்பாகவும் விரிந்த கனதியுடனும் அமைகிறது. கடிதத்தை மேலே குறிப்பிட்டு விட்டு கீழெ அதன் தாக்கமாக அல்லது வாசிப்பின் பிறகான கவிதையாக மாதுமை கவிதை இடம் பெறுகிறது. இந்த சிறிய கவிதை பரந்த ஆய்வுக்குரிய உட்பரப்பை கொண்டிருக்கிறது.
“இலங்கை அம்மாவிற்கு
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பாலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தால் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடை பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்பட்டிருந்தார் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கா அம்மா

அம்மாக்கள் மட்டும் ஒற்றமையாக இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க”
உலக அதிகாரங்கள் அம்மாக்களை வதைக்கிறது என்ற பொதுவான ஏக்கம் கவிதையில் இருக்கிறது. அம்மாக்கள் எல்லாவித்திலும் பாதிக்கபப்டுவதை மாதுமை கவிதை பேசுகிறது.

போர், அரசியல், பொருளாதாரம், கொலை, தந்திரம், ஆணாதிக்கம், பாலியல் வன்முறை எல்லாமே சேர்ந்து அம்மாக்களை வதைகிறது. அதிகாரங்களின் நகர்வுகளிலும் அதன் செயற்பாடுகளிலும் தொடர்புகளிலும் ஈடுபாடுகளிலும் வருகிற பலன் அல்லது அழிவுகளை அம்மாக்களே சுமக்க நேரிடுகிறது.

இந்த நெருக்கடிகளின் பொழுது அம்மாக்களிடம் கோடிக்கனக்கான அனுபவங்களும் கதைகளும் கண்ணீரும் உருவாகின்றன. இந்த அனுபவமும் வலியும்; எழுதி முடிக்க முயாதவை. எல்லேருடைய வினைகளையும் உலகம் எங்கிலும் அம்மாக்களே சுமப்பதாக மாதுமை கவிதை கூறுகிறது. குறிப்பிடப்படுகிற நாடுகளின் அம்மாக்கள் அந்தந்த நாடுகளின் மீது அதிகாரம் வைத்திருக்கிற குறிகளையும் அல்லது நலன்களையும் வெளிப்படுத்தகின்றன. அதன் பலன்களை அம்மாக்கள் சுமக்கும் விதத்தை எடுத்துப் பேசுகிறது.

மாதுமை எழுதிய இந்தக்கவிதை இன்றைய உலக வாழ்வுச் சூழலை பேசுகிறது. அதிகாரம் மற்றம் ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்பவற்றின் போக்கை உலகளவில் நின்று கோபப்படுகிற அவருடைய பார்வை மிகவும் பரந்ததும் முக்கியமானதுமானதாக படுகிறது.
-----------------------------------------------------------------------------
யுகமாயினி அக்டோபர் இதழில் இந்த மாதுமைகவிதை இடம்பெறுகிறது.

Friday, October 10, 2008

‘புரிதலின் அவலம்’ றஞ்சனி கவிதை வெளியில் அலையும் சொற்கள்

--------------------------தீபச்செல்வன்


--------------------------------------------------------------------------
றஞ்சனியின் கவிதை சிலவற்றிற்க்கு வார்ப்பு இணையதளத்தில் பின்னூட்டம் எழுதியிருந்தேன். முதல் வாசினடிப்படையில் மதிப்பிடப்பட்ட அந்தக்கருத்துக்களை நானே மீறுகிற வகையில் அவரின் புரிதலின் அவலம் என்ற கவிதை என்னை பாதிக்கிறது. பிழைத்துப்போன புரிதலிலிருந்து வெளியில் அலைகின்ற சொற்களை சில அடிகளில் இணைக்கின்ற பாங்கை றஞ்சனியிடம் காணமுடிகிறது. அத்தன்மை ஒருங்கினைந்து இந்தக் கவிதையில் துண்டாடப்பட்ட ஒரு இரவில் அல்லது ஒரு பகலில் கிடந்து உருள்கிற குருதியின் சொற்கள் கிளம்புகின்றன.

றஞ்சனியின் அடையாளத்தை 'புரிதலின் அவலம்' என்ற ஒரு கவிதையின் ஊடாக காணமுடிகிறது. அது நீண்ட வாழ்வின் ஒரு நாளை பிழைத்துப்போன நிமிடத்தின் ஒரு துளியை பேசுகிறது. மாறிமாறி மாறிவிடுகிற இணைவுக்குள்ளும் பிரிவுக்குள்ளும் அறுந்து வெளியில் வந்துவிடுகிற புழுவாக துடிப்பையும் காற்றையும் பிரதிபலிக்கிறது.

"முத்தங்களாகி கலியில் மயங்கி
இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி
கரைந்துபோகும் அடுத்த நிமிடமே
நீ ஆணாகி விடுகிறாய்."
இது வெளியின் சொற்களை காண்பிக்கிறது. கலவியில் குறையில்விட்டு எழுந்து செல்கையில் இருட்டில் படுக்கையில் கிடக்கிற தெரியாத முகத்தையும் கேடக்;காத சொற்களையும் எழுதுகிறது. குறையில் விட்டுச் செல்கிற அந்தப்படுக்கையிலிருந்து இருட்டிலிருந்து மூடுண்ட புல்பற்றையிலிருந்து எழுந்து செல்கிறதை எழுதுகிறது.

"நான் காணவேண்டிய நீ முழுமையாகக் காணாது
ஆணாக விஸ்வரூபம் எடுக்கிறாய்"
பிழைத்துப்போன நிமிடத்தை வெறுக்கிற உணர்வை எழுதியது இந்த அடிகள் கவிதையை வெளியில் இடுகிறது. குறையாய் கிடைக்கையில் ஆண் உருவம் வெளி எழும்புகிற அதன் அலத்தை எழுதுகிற போது விட்டெழும்புகிற வேகமும் வெறுப்பையும் சட்டென வெளியே சொல்லுகிறது.

"ஒரு நாள் மறந்துவிடலாம்
இரு நாள் மன்னித்து விடலாம்ஒவ்வொரு நாளும்
பைத்தியமாகிறது உறவு"
பகலின் இடைவெளியில் முகமிழந்து துடிக்கிற மொழியினையும் மறைந்துகிடக்கிற குறியின் முகத்தையும் சரிசெய்ய முடியாத கலவியையும் கேள்விக்குள்ளாக்கின்றன. பைத்தியமான அல்லது குழப்பமான பொழுதுகளை நிறைத்துவிடுகிற உறவாய் நாள் அமைந்துவிடுகிறதை வெளிப்படுத்துகிறது.

"நீ எழுதுகிறாய் பேசுகிறாய்
இதில் பெண்ணுரிமை வேறு
எதையுமே நீ புரிந்ததில்லை
எப்படி முடிகிறது உங்களால்"
வீட்டுக்குளிலிருந்து வெளியில் வந்து கேள்விகளாய் முகத்தில் அறைகின்றன இந்தச் சொற்கள். எதையுமே புரியாத நீ என்பதில் புரிந்துகொள்ளபடாது தள்ளிப்போன நிலையையும் உடைந்த முகத்தையும் கொண்டிருக்கிறது. எப்படி முடிகிறது என்பதில் தனி ஒரு கேள்வி பெரிதாய் விரிந்து எழுவதை காணமுடிகிறது.

"என்னால் முடியவில்லை விட்டுவிடு
எல்லாத்தையுமே"
கவிதையின் கடைசியில் இருக்கின்ற இந்த வரிகளுடன் இரவும் படுக்கையும் கலவியும் பகல்களும் முடிந்துவிடுகின்றன. அதன் கடைசி அடியில் இருந்து வெளி புறப்படுகின்றது அல்லது உருவாகிறது. சொற்கள் அலையத் தொடங்குகின்றன. காற்றை அறிகிற ஒளியை அறிகிற கடைசி அடிக்குப்பிறகான வெளியில் புரிந்து கொள்ள முடியாத எப்போதுமே புரிந்து கொள்ள முடியாதுபோன உணர்வு தொடர்ந்து துடித்துக்கnhண்டிருக்கிறது.


கடைசி அடியின் பிறகான வெளியில் துடிக்கின்ற வெளியில் புரிவதற்கன அவலமும் வெளியும் இருக்கிறது. இந்தப்போதாமையினையும் இடைவெளியினையும் புரிதலின் அவலத்தில் றஞ்சனி நிரப்பியுள்ளார். இந்தக்குறைநிலையினை வெளியில் வந்துபேசுவது றஞ்சனியின் மொழியின் சிறப்பாகவும் அடையாளமாகவும் படுகிறது. புரிதலின் குழப்பம் பற்றி இவர் நிறையக் கவிதைகள் எழுதியபோதும் எப்பொழுதும் கொதித்துக்கொண்டிருக்கும் நிமிடத்துளியையும் குருதியையும் இரவையும் இந்தக் கவிதை சிறப்பாக போர்வையிலிருந்து வெளியிலெடுத்துக் காட்டுகிறது. காத்திருத்தலை உடைத்து வெளியில் அலையும் எண்ணற்ற சொற்களும் இருக்கின்றன. உண்மையில் நினைவுக்கு வரும்பொழுதெல்hலாம் இந்தக் கவிதை முகத்தில் அறைந்து கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------
('பெயல் மணக்கும் பொழுதுகள்' என்ற ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுதியில் றஞ்சனியின் புரிதலின் அவலம் கவிதை இடம்பெறுகிறது)

Monday, August 25, 2008

"தாயகம்" அதிகாரங்களைப் பேசுகிறது

--------------------------தீபச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------------------------
தாயகம் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் ஜீலை-செப்ரம்பர்2008 வெளிவந்திருக்கிறது. அதிகாரங்களிடமிருந்து சுயங்களைக் காக்கும் தன்மையும் அதிகாரத்தின் பல்வேறு கூர்மையான முகங்களையும் அதிலிருந்தான எழுச்சியையும் தாயகம் பேசுகிறது. தாயகம் இதழ் தொடர்ந்து தனது முகத்தை வலிமைப்படுத்தி புதிய வாழ்வு ஒன்றை உருவாக்க முனைகிறது. சமூகத்தில் அரசியல் பொருளாதார தன்மைகளை மிக எளிமையாக எடுத்து பேசுகிறது. உலக அரசியல் அதிகாரங்கள் எமது சுயங்களையும் உரிமைகளையும் விழுங்கும் தன்மையும் அது கல்வி பொருளாதாரம் சமயம் என்று தனது மேலாதிக்கம் கையாளும் மயங்களையும் துணிந்து பேசுகிறது.

அதன்படி 'இரும்புத்திரையும் மாயத்திரையும்' எனவும் 'உதவுங் கரங்களும் உதைக்கும் கால்களும்' எனவும் ஆசிரியர் உரைகள் எழுதப்பட்டுள்ளன.

கவிதைகள்
------------------------------------
சு.சுகனேசன்-அவர்கள் பார்வையில்
வே.மகேந்திரன்-மீள வருவோம்
ம.பா.மகாலிங்கசிவம்- எலிச் சுத்திகரிப்பு
கிருஷ்ணா- ஒளிந்து கொள் அல்லது எழுந்து நில்
தீபச்செல்வன்- பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்
நச்சீயாதீவு பர்வீன-; நான் நீ அவன் நிஜம்
கலைச்செல்வி- ஏனிந்த வம்பு
எளியோன்- மனிதத்தை விடுத்து..
எல்.வஸீம்.அக்ரம்- நிறங்களைக் காழ்பவன்
ஜி.இராஜகுலேந்திரா- ஆய்ந்து சொல்வீர்
இராகலைமோகன்- சுகம் விசாரிப்போம்
தி.காயத்திரி- கவலையின் முடிவிலி
இதயராசன்- முரண்பாடு

மொழிபெயர்ப்புக்கவிதை
----------------------------------------------------------
மஹ்முட்டர்வீஷ் -மண்ணின் கவிதை (தமிழில் மணி)
ஸீகன்த பிராச்சார்ய லால் ஸலாம்-செவ்வணக்கம் (தமிழில் சிவானந்தம்)

சிறுகதைகள்
--------------------------------------------------
ஸ்ரீ- எப்போதோ நடந்த போர் பற்றி எங்கேயோ ஒரு உரையாடல்
செவ்வந்தி- ஒரு ஓப்பதல் வாக்கு மூலம்
சோ.ஆதர்சனன்- சோமு பொடி
ச.முருகானந்தன்- தாய்


தொடர்நடைச்சித்திரம்
-------------------------------------------------------------------------
மாவை.வரோதயன்- வலிகாமம் மண்ணின் மைந்தர்கள் குழந்தை குமாரசாமி


விந்தை மனிதர்
---------------------------------
புவன ஈசுவரன்- குருநாதர் குஷ்வந்த்சிங்
ஆதவா.சு.சிந்தாமணி- அட்சய பாத்திரம் எங்கே?

சிங்கள மொழி பெயர்ப்புக்கதைகள்
-------------------------------------------------------------------
எரிக் இளையப்பாராச்சி- ஆசிரியர் ஒருவரின் காதல் (தமிழில் சி.சிவசேகரம்)

பின் வரலாற்றியல் தொடர்கதை
----------------------------------------------------------
ஜெகதலப்பிரதாபன்- ஆங்கிலேயனின் பரிசு 8 நாடு திரும்பற் படலம்

கட்டுரை
------------------------------
க.கைலாசபதி- ஏனிந்த தமிழுணர்ச்சி
சி.சிவசேகரம்- பாட்டும் பயனும் ( பாட்டும் செய்யுளும்)

விமர்சனம்
--------------------------------------
செ.சக்திதரன்- இப்சனின் 'தலைமைக் கட்டடக்காரன்'

முன் அட்டை ஓவியம் நசியும் வெளியை விடுவிக்கும் விதமாய் அதிகாரங்களைச் சாடுகிறது. மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல்வேறு செய்திகளை தருகின்றன. கூடுதலாகன தமிழ்க் கவிதைகள் அதிகாரங்களை சாடுகின்றன. புத்தக வடிவமைப்பில் இன்னும் செம்மையை ஏற்படுத்தலாம். எழுத்தருக்களின் அளவுகள் எழுத்துருக்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாள்கள் முகப்பு மற்றும் பின் பக்கம் என்பன நேர்த்தியுடன் இருக்கின்றன. எளிமையான வாசிப்புத் தளத்தில் பயணிக்கும் தன்மையுடன் தாயகம் வருகிறது. அதன்படி தொடர்ந்து தாயகம் இதழின் சீரான வருகையும் வலிமையான குரலும் தனித்து தெரிகிறது
----------------------------------------------------